“ஓம் ஓம்! அப்பிடித்தான் செய்யோணும்.” என்றவர், மீண்டும், “ரட்ணம் வந்திட்டானா?” என்று கேட்டு, இருக்கிற அத்தனை கவலைகளையும் தேடிப்பிடித்துத் தன்னை வருத்திக்கொண்டிருந்தார்.
“பிரதாப்! அண்ணா கட்டாயம் வருவார். அவருக்கு ஒண்டும் நடந்திருக்காது. சும்மா, தேவையில்லாத விசயத்தை எல்லாம் நினச்சு கவலைப்பட்டு உடம்பை இன்னும் கெடுக்காதிங்கோ. சுவர் இருந்தாத்தான் சித்திரம் வரையலாம். நீங்க நல்லா இருந்தாத்தான் திரும்பவும் பழையமாதிரி வரலாம். நாங்க இந்த நெதர்லாந்துக்கு வரேக்க என்ன கொண்டு வந்தனாங்க? ஒரு ஷொப்பிங் பேக்ல உடுப்பு மட்டும் தானே. அதுல இருந்துதானே வீடு, வாசல், கார், காசு, நகை எண்டு எல்லாம் சேர்த்தனாங்க. அதே மாதிரி திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம். நான் இருக்கிறன். சஹியும் இப்ப இருக்கிறாள். இதெல்லாம் ஒரு விசயமே இல்லை! இப்பிடி நீங்க யோசிக்க யோசிக்க உங்கட இதயத்துக்கு நல்லமில்லை. நீங்க சுகமா எழும்பி வந்தாத்தான் ஊருக்குப் போகலாம்; எல்லாரையும் பாக்கலாம்; சந்தோசமா இருக்கலாம். சஹிய நினைங்கோ. உங்களை இப்பிடிப் பாத்தா அவள் தாங்கமாட்டாள்.” கனிவோடு சொன்னாலும் நிதானமாக ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி மனதில் படும்படியாகச் சொன்னார் யாதவி.
“எங்க.. எங்க.. என்ர செல்லம்? பிள்ளை பயப்படப்போறாள்..” மகளைத் தேடி அரற்றியவரை மயக்கம் சூழ்ந்தது. சற்றுமுன் வழங்கப்பட்ட மருந்தும் அவரைத் தனக்குள் இழுத்துக்கொள்ள அப்படியே உறங்கிப்போனார். யாதவி கண்களைத் துடைத்துக்கொள்ள, தன்னைத் தேடிய தந்தையின் பாசத்தில் விம்மல் வெடிக்க வெளியே ஓடிவந்துவிட்டாள் சஹானா.
அம்மா வெளியே வருவார் என்று புத்தி உணர்த்த, அந்த நீண்ட கொரிடோரின் கடைசியில் இருந்த பாத்ரூமுக்குள் ஓடிப்போய் மறைந்துகொண்டாள்.
அவளின் தந்தை சோர்ந்து அமர்ந்து இருந்தே பார்த்ததில்லை. இப்படி முற்றிலுமாகத் தொய்ந்து, பலவயதுகள் ஒரே நாளில் மூத்துப்போய், சுயநினைவு கூட இல்லாமல், அவநம்பிக்கை முழுவதுமாக ஆட்கொள்ள, ‘அப்பா..’ சட்டென்று அவளிடமிருந்து ஒரு விசிப்பு வெளிப்பட்டது. கன்னங்களில் வழிந்த சூடான கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டாள்.
அப்பா, அம்மா, அவள் இதுதான் அவர்களின் அழகிய தூக்கணாங் கூடு. துன்பம் என்பதே சிறிதுமில்லாத சந்தோசமான வாழ்க்கை. அப்படித்தான் நினைத்திருந்தாள். ஆனால், அப்பா தனக்குள் தன் கவலைகளை ஏக்கங்களைப் புதைத்து வைத்திருந்திருக்கிறார். ஊரிலுள்ள சொந்தங்கள் சேர்ந்தால் மட்டுமே பாசமான அந்த இதயத்திலிருக்கும் பாரமிறங்கும்! அதைவிட அவரின் மனதில் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சியும் கிடந்து அரித்துக்கொண்டிருக்கிறது. அதையும் தீர்க்கவேண்டும்.
நினைக்க முதலே அனைத்தையும் அவளுக்காகச் செய்து முடிக்கிற தந்தையின் மனதிலிருந்த ஆசையை அவள் அறியவில்லை. அவள் மீதே அவளுக்குக் கோபமெழுந்தது. எவ்வளவு சுயநலமாய் வாழ்ந்திருக்கிறாள்?
அப்பாவும் அம்மாவும் காதலித்து மணந்தவர்கள் என்று மட்டும் தெரியும். அப்பா அதைச் சொல்லும்போதெல்லாம் அவளுக்குச் சிரிப்புத்தான் வந்திருக்கிறது. பாசமான அப்பாவை சினிமாவில் காட்டுகிற ஒரு காதல் நாயகனாகக் கற்பனை செய்ய முடிந்ததில்லை. அப்பா அம்மாவை எப்படியெல்லாம் சைட் அடித்திருப்பார் என்று கற்பனையில் நினைத்துப்பார்த்து, எதுவுமே பொருந்தாமல் விழுந்து விழுந்து சிரித்து அவரைப் பகிடி செய்திருக்கிறாள்.
அப்பாவுக்கு நிறையச் சொந்தங்கள் என்றும், பெரும்பாலும் அவர்கள் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்வார்களாம் என்றும் யாதவி சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதனால்தான் சொந்தமே இல்லாத அம்மாவை அப்பா காதலித்துக் கட்டினார் என்று அவர்கள் கதைப்பதில்லையாம். அதைக் கேட்டும் சிரித்திருக்கிறாள். திருமணம் என்பது அவரவர் விருப்பம். மனத்துக்குப் பிடித்தவரைத்தானே மணக்க முடியும்? அதற்கு எதற்குச் சின்னப்பிள்ளைகள் போல் கோபப்படவேண்டும்? இவ்வளவுதான் அவள் அறிந்தது.
அதேபோல இலங்கையில் அம்மாவுக்கு ஒரு அண்ணாவும் அவருக்கு ஒரு மகனும் இருப்பது தெரியும். அவர்களோடு இவளுக்கு நல்ல பழக்கமே. மாமா ஒவ்வொரு வருடமும் ஊருக்கு அழைப்பார். அவளும் இலங்கையைப் பார்க்கும் ஆவலில் தகப்பனைக் கேட்பாள். அவரும் சம்மதிப்பார். ஆனால், ஒவ்வொரு வருடமும் தட்டிப்போய்விடும்.
“அது என்னப்பா? இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து எண்டு எங்க போறது எண்டாலும் போட்ட பிளான் மாதிரியே போய்வாறம். இலங்கைக்கு மட்டும் எப்ப பிளான் செய்தாலும் ஏதோ ஒரு தடங்கல் வருது. அது எப்பிடியப்பா?” என்று அவள் கேலியாகக் கேட்பதுண்டு.
“உனக்கு மச்சான்மாரை பாக்கேல்லை எண்டு கவலையோ?” என்று கேட்டுச் சிரிப்பார் அவர்.
“பின்ன, உங்களை மாதிரி நானும் சைட் அடிக்க வேண்டாமா?”
அப்படியே அந்தப் பேச்சு கேலியிலேயே முடிந்துவிடும். அப்பாவாகத் தவிர்த்திருப்பார் என்று எண்ணியதே இல்லை. இன்று யோசித்துப்பார்த்தால் அவராகத்தான் தவிர்த்திருக்கிறார் என்று புரிந்தது.
ஆனால், அவர் சொன்னதுபோல நம்பிக்கைத் துரோகம் செய்யும் அளவுக்கு வன்மையான மனம் அவளின் அப்பாவுக்கு இல்லவே இல்லை. என்ன நடந்தது என்று தெரியாத இப்போதே அவளால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஆனாலும், என்னவோ நடந்திருக்கிறது. அவருக்கு அவரின் அம்மா அப்பா முன் போய் நிற்கப் பயம். அதற்குக் காரணமும் அவள்தான். அவளும் சேர்ந்து தலைகுனிய வேண்டிவரும் என்று நினைத்தாரோ? அப்படித்தான் இருக்கும். இந்த அப்பாக்கு எல்லாவற்றையும் விட எல்லோரையும் விட அவள்தான் முக்கியம்.
பாசத்தில் கனிந்துருகிய உள்ளத்திலிருந்து வடிந்த கண்ணீர் கன்னங்களை மீண்டும் நனைத்தது.
‘என்ர செல்ல அப்பா! உங்களுக்கு நான் முக்கியம் எண்டால் எனக்கு நீங்க முக்கியம். உங்கட ஆசையை நான் நிறைவேத்தி வைக்கிறன்.’ மனதோடு தகப்பனுக்குச் சொன்னவள், முகத்தைக் கழுவித் துடைத்துக்கொண்டு வேகமாக வைத்தியரை நாடிச் சென்று தகப்பனின் நிலை பற்றி விசாரித்தாள்.
மன அழுத்தம் தான் முக்கியக் காரணமென்றார் அவர். அதோடு, முதல்முறை மாரடைப்பு வந்ததிலிருந்து, ‘தனக்கு ஏதும் நடந்துவிடுமோ’ என்கிற பயமும் சேர்ந்து இன்னும் அதிகமாகப் பாதித்திருக்கிறதாம். இப்போது ரத்தக்குழாயிலும் அடைப்பு இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அவர் சொல்ல சொல்லக் கலவரத்துடன் பார்த்தாள் அவள்.
அவளின் தோளில் தட்டிக்கொடுத்த்துவிட்டு, “இப்போதைய அவரின் நிலை அறுவைச் சிகிச்சைக்கு ஏற்றது அல்லதான் என்றாலும் அவரைத் தேற்றி அறுவைச் சிகிச்சை செய்தபிறகு நலமாவார்.” என்றார் நம்பிக்கையோடு.


