வருடம் தான் கழிந்ததே ஒழிய மாற்றம் எதுவும் நிகழவேயில்லை. இதில் அரவிந்தன் குடும்பம் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கவில்லை என்பதையும் யாதவி மூலம் அறிந்துகொண்டவனின் இதயத்தில் பாரம் தான் ஏறிற்று!

மெல்ல மெல்ல அவனுக்கும் மனம் சலிக்கத் துவங்கியது. ‘நமக்கு எப்ப கல்யாணம் பிரதாப்?’ என்று கேட்காத யாதவியின் நேசம் வேறு அவனைக் குற்ற உணர்வில் தள்ளியது. அவள் மட்டுமல்ல, அரவிந்தன்கூட அதைப்பற்றிப் பேசவேயில்லை. புரிந்துணர்வோடு தோழனாக மாறிக் கைதான் கொடுத்தான்.

கிட்டத்தட்ட இரண்டு வருடத்துக்குமேல் ஓடிற்று!

யாரைக் காட்டினாலும் இவள் சம்மதிக்க மாட்டாள் என்கிற எண்ணம் அவனுக்கே வரத் துவங்கிற்று. ரகுவரமூர்த்திகூட, “என்னப்பா இது? கடைசிவரைக்கும் கட்டாமையே இருக்கப்போறாளா?” என்று அவனிடம் கவலைப்பட்டார்.

அன்றும் ஒரு மாப்பிள்ளையின் படத்தைக் காட்ட, பிடிக்கவில்லை என்றாள்.

“என்னம்மா இது? இனியும் எங்கதான் போய் அவனைத் தேடச் சொல்லுறாய்?” சலிப்போடு ரகுவரமூர்த்தியே கேட்டார்.

“எனக்கு மனசுக்கு பிடிக்கவே இல்லயப்பா. என்னை என்ன செய்யச் சொல்லுறீங்க? பிடிக்காதவரோட எப்பிடியப்பா வாழுறது. அண்ணாக்கு அவசரம் எண்டா நான் யாரை எண்டாலும் கட்டுறன்.” கண்ணைக் கசக்கிக்கொண்டு அவள் சொன்னபோது தகப்பனால் எதுவுமே சொல்ல முடியாமல் போயிற்று.

மகன் முப்பதை நெருங்கிக்கொண்டிருந்தான். அவன் பொறுமையும் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்தது. மெய்யாகவே ஒரு குறை என்றால் அது வேறு. “எனக்கு என்னவோ இவள் மனதில எதையோ வச்சு நடக்கிற மாதிரி இருக்கப்பு!” என்றார் கவலையோடு பிரதாபனிடம்.

அவனுக்கும் சந்தேகம் தான். ஆனாலும், “சேச்சே! அப்பிடியெல்லாம் இருக்காதப்பா.” என்றுவிட்டு, என்னதான் பிரச்சனை என்று கேட்கலாம் என்று அவளின் அறைக்கே போனான்.

அங்கே கட்டிலில் தலையணையின் கீழே ஒரு டயரி. அதுவும் போனவருடத்து அவனது டயரியைப்போல ஒன்று மறைத்துவைத்தும் இலேசாகத் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கப் புருவங்களைச் சுருக்கினான். அந்த வீட்டில் அவன் மட்டும் தான் டயரி எழுதுவான். டயரி எழுதும் பழக்கமே இல்லாதவள் அறையில் டயரிக்கு என்ன அலுவல்? மனதிலிருந்த சந்தேகத்தால் அதனை எடுத்துப் பார்த்தான்.

அவனுடையதேதான்! பெரும் அதிர்வு அவனுக்கு! அனுமதி இல்லாமல் அடுத்தவரின் பொருளை எடுக்கும் அநாகரிக்கச் செயல், அந்த வீட்டில் யாரும் செய்யமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் அவனுடைய அறையில் பூட்டப்படாத அலமாரியினுள் கிடந்த போன வருடத்து டயரியேதான்!

யாதவியை நினைத்து அவன் எழுதிவைத்த கவிதையின் கீழ்,

‘அவளைக் கட்டவேண்டும் என்பதற்காக வேக வேகமாய் எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாயா அண்ணா? நான் கேட்டவனை எனக்கு மாப்பிள்ளை ஆக்காமல், நீ விரும்பியவளை உனக்கு மனைவியாக்கப் போகிறாயா? பார்ப்போம், நீ எப்படி அவளைக் கட்டுகிறாய் என்று. என்னைப்போலவே நீயும் அவளைப் பிரிந்து தவிக்கவேண்டும்.’ என்று எழுதியிருந்தாள்.

‘என் ஆசை எப்படி நிறைவேறாமல் போனதோ அப்படி அவளின் ஆசையும் நிறைவேறாது.’ அவன் மீதான வன்மத்தை நன்றாகவே வளர்த்து வைத்திருந்தாள். யது என்கிற பெயர் எங்கெல்லாம் அந்த டயரியில் இருந்ததோ அங்கெல்லாம் அந்தப் பெயரே தெரியாமல் பேனையால் கிறுக்கி வைத்திருந்தாள்.

தங்கையின் மனவிகாரத்தைக் கண்டு திகைத்துப்போனான் பிரதாபன்.

“என்ன இது?” குளியலறையில் இருந்து வந்தவளிடம் கோபத்துடன் காட்டிக் கேட்டான்.

ஒருமுறை அவளிடம் அதிர்வு தெரிந்தாலும், அலற்சியமாகத் தலையைச் சிலுப்பினாள்.

“டயரி!”

“சும்மா டயரி இல்ல. உன்ர அண்ணான்ர டயரி! அதை எடுத்துப் படிக்கிறது பிழை எண்டு தெரியாதா உனக்கு?” ஆத்திரத்தை அடக்கினாலும் சினத்துடன் வெளிவந்தன அவனது வார்த்தைகள்.

அவளோ அசையவே இல்லை.

“வேற எப்பிடி உன்னைப் பற்றியும் அவளைப் பற்றியும் நான் அறியிறது?” அவனை வைத்தே அனைத்தையும் உளவு பார்த்திருக்கிறாள்.

மனத்துக்குப் பிடித்த பெண்ணோடு மனதால் அவன் வாழ்ந்த வாழ்க்கையை எட்டிப் பார்த்திருக்கிறாள். சீச்சீ! அருவருத்துப்போனான். யாதவிக்கே சொல்லாத அவனுடைய ரகசிய பாகங்கள் அல்லவா அவை.

அண்ணனின் அந்தரங்கத்தை வாசித்தறிந்த இவள் என்ன பெண்? அவனுக்கு அவளின் முகம் பார்க்கக் கூசியது!

“எல்லாமே திட்டம் போட்டுத்தான் செய்திருக்கிறாய்! அப்ப இவ்வளவு காலமும் நான் நாயா அலஞ்சது வீண்!” ஆத்திரம் தாளாமல் வெடித்தான் பிரதாபன்.

எத்தனை நாள் அலைச்சல். எவ்வளவு பாடு. ஒருவனை மாப்பிள்ளையாகத் தேர்வு செய்ய முதல் அவனைப்பற்றி எத்தனை விசாரிப்பு? தங்கையின் வாழ்க்கையில் மீண்டும் எந்தப் பிசகும் நடந்துவிடக் கூடாது என்று என்ன பாடுபட்டான். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர்! மனம் ஆற மறுத்தது.

“நீ ஏன் அண்ணா நாயா அலையவேணும். நான் ஆசைப்பட்டவன் கைக்கு எட்டுற தூரத்தில இருந்தும் அவனைக் கட்டிவைக்க உன்னால முடியேல்ல. பிறகு என்னத்துக்குச் சும்மா ஊர் முழுக்க அலைந்தாய்?” நக்கலாய் கேட்டாள் அவள்.

“இன்னொருத்தியை விரும்பிறவன உனக்கு எப்பிடிக் கட்டிவைக்கச் சொல்லுறாய்?” பொறுமையை இழுத்துப்பிடித்துச் சொன்னான் பிரதாபன்.

“என்னைக் கட்டப்போறவனுக்கு நானும் இன்னொருத்தனை விரும்பினவள் தானே. நீயும் எப்பிடியும் விரும்பினவளை விட்டுவிட்டு இன்னொருத்தியை தானே கட்டப்போறாய். அப்பிடி அவன் என்னைக் கட்டியிருக்கலாம். நீ கட்டி வச்சிருக்கலாம்!” என்றாள் அவள்.

பிரதாபனுக்கு வெறுத்தே போயிற்று! நம்பிக்கை அறுந்தே போயிற்று! கடைசி முயற்சியாகத் தணிந்து போனான்.

“சரியம்மா. அவனுக்குக் கல்யாணம் முடிஞ்சுது. இனி ஒண்டும் செய்யேலாது. அதுக்காக நீ இப்பிடியே காலம் முழுக்க இருக்கப்போறியா? நான் செய்தது பிழையாவே இருக்கட்டும். உன்ர வாழ்க்கையைப் பற்றி யோசி? என்ன செய்யப் போறாய்?”

அவளிடம் எல்லாக் கேள்விக்கும் அவளுக்கேற்ற பதில்கள் இருந்தது.

“சிவா மச்சான் என்னை விரும்புறார் எண்டு எனக்கு ஐஞ்சு வருசத்துக்கு முதலே தெரியும். நான் கட்டாத வரைக்கும் வேற கலியாணம் அவரும் கட்டமாட்டார். எனக்கு அவர் இருக்கிறார். யாதவிக்கு வேற கல்யாணம் நடக்கிற வரைக்கும் நான் கட்டமாட்டன்!” வெகு இலகுவாகச் சொன்னவளை உணர்வுகள் அற்றுப் பார்த்தான் பிரதாபன்.

எவ்வளவு வன்மம்? எவ்வளவு வக்கிரம்? அவனுக்குப் புரிந்துபோயிற்று! இவளுக்கு எதையுமே விளங்கவைக்க முடியாது. நான் நினைத்தது மட்டுமே நடக்கவேண்டும். என் விருப்பம் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் இதயமே இல்லாதவளுக்கு எதைச் சொல்லியும் பிரயோசனமில்லை. இனியும் அவன் முயற்சித்தால், அவன்தான் முழு முட்டாள்!

தன் அத்தனை முயற்சிகளிலும் தோற்றுப்போய், சோர்ந்து, மனம் வலிக்க அங்கிருந்து வெளியேறியவனின் நடையில் பெரும் தளர்ச்சி!

போகிறவனின் முதுகைப் பார்த்து வெற்றிச் சிரிப்புச் சிரித்தாள் பிரபாவதி.

ஒருவாரம் அப்படியே கழிந்தது. குழப்பமான மனநிலையோடு நடமாடினான் பிரதாபன். அப்பாவிடம் இதைப்பற்றிப் பேசுவோமா என்று யோசித்தான். ஏற்கனவே மகளின் குணம், அவள் நஞ்சு அருந்தியது, அதனால் ஊரில் அவருக்குப் பின்னால் பேசும் பேச்சுகள் என்று உடைந்து போயிருப்பவர் அவர். என்ன இருந்தாலும் மகளை அப்படியே விட்டுவிட்டு அவனுக்கான வாழ்க்கையை பார் என்று அவரால் சொல்ல முடியாது. அவனும் இனி என்னால் முடியாது அப்பா என்று சொல்லி செய்வது அறியாத தர்மசங்கடமான நிலையில் அவரை எப்படி நிறுத்துவது?