முப்பது வருடங்கள் கழிந்தும், “கட்டாயம் உன்ர பிரதாப்பா, உனக்காக மட்டுமே வாழுற பிரதாப்பா நான் வருவன். அதுக்குப் பிறகு, நீ ஆசைப்படுற மாதிரியே நாங்க சந்தோசமா வாழுவோம்!” என்ற வார்த்தைகள் யாதவியின் செவிகளில் ரீங்காரமிட சிலிர்த்தது தேகம்.
சொன்ன சொல் தவறவில்லை கணவர்!
அருமையான மனிதன்! புரிதல் மிகுந்தவர். விட்டுக்கொடுத்துப் போகிறவர். இவ்வுலகிலேயே ஒரேயொரு சொந்தமாக இருந்த கூடப்பிறந்த தமையனை விட்டு, சொந்த நாட்டை விட்டு, அவரை மட்டுமே நம்பி வந்ததற்காக யாதவி இன்றுவரை கலங்கியதே இல்லை.
பிரதாபன் கலங்க விட்டதில்லை. அதுதான் மெய்! நிறைவான மனதொப்பிய ஒரு வாழ்க்கையை அவர்களைப்போல இன்னொருவரால் வாழ்ந்திருக்கவே முடியாது!
அப்படியானவரின் மனதில் அப்பாவுக்கும் தங்கைக்கும் தவறிழைத்து விட்டோமோ என்கிற கவலை இருப்பதை அறிவார்தான்.
என்றாலும், இப்படி உயிருக்கே ஆபத்தைக் கொண்டுவரும் அளவுக்கு அது குற்றவுணர்ச்சியாக மாறி அவரின் நெஞ்சைச் செல்லரிப்பது போன்று அரித்திருக்கிறது என்பதை அறியாமல் போனோமே என்பதைத்தான் யாதவியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
கணவரின் உள்ளும் புறமும் முற்றிலுமாக அறிந்தவள் நான் என்கிற கூற்று அங்கு உடைந்து போகிறதே!
இதையே எண்ணிக்கொண்டு இருந்தால் எதுவுமே சரியாகாது என்று ஒரு பெரு மூச்சுடன் கணவரின் அலுவலக அறைக்குள் நுழைந்தார். கணனியின் முன்னே அமர்ந்து, கணக்கு வழக்குகளை ஆராயத் தொடங்கினார். இத்தனை நாட்கள் இதற்குத் தேவையிருக்கவில்லையே தவிர, அவரும் வர்த்தகம் படித்துப் பட்டம் பெற்ற பெண் தானே?
முதலில் தலை எது வால் எது என்று புரியவேயில்லை. நினைவடுக்குகளில் கற்றவற்றைக் கொஞ்சம் தூசு தட்டவேண்டி இருந்தாலும் போகப்போகப் பிடித்துவிட்டார். பிடித்ததும் வேகம் தான்.
முதலில் அவர்களது வங்கிக்கணக்கை ஒன்லைனில் லொகின் செய்து அன்றைய நிலவரத்தை ஆராய்ந்தார். பதினையாயிரம் யூரோவுக்கு மேலே மைனஸில் நிற்கக் கண்டு அதிர்ந்துபோனார்.
இவ்வளவுக்கு மைனஸா? கடந்த இரண்டு மாத நிலவரங்களை ஆராய, மேலதிகமாக இருபதாயிரம் யூரோக்கள் வங்கியில் இருந்து அதுவும் இலங்கையில் இருந்து தினமும் பகுதி பகுதியாக எடுக்கப்பட்டிருந்தது.
சொத்து மேலாண்மையைக் கவனிப்பது அதாவது இடைத் தரகரைப் போன்றதுதான் பிரதாபனின் இன்னொரு சிறுதொழில். மாதா மாதம் நிலையான வருமானம் ஒன்று வரவேண்டும் என்பதற்காக அதையும் செய்துகொண்டிருந்தார்.
அதாவது, பல வீடுகளைக் கொண்ட அப்பார்ட்மெண்ட்களுக்குச் சொந்தக்காரர்கள் ஒரு வீட்டுக்கு இவ்வளவு பணம் என்று பிரதாபனுடன் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். அதன்பின், அப்பார்ட்மெண்ட் சொந்தக்காரருக்கு எந்தத் தலையிடியும் இருக்காது. அதன்மூலம் வருகிற வீட்டு வாடகை மட்டும் மாதா மாதம் வந்து சேரும்.
அப்படி ஒப்பந்தம் செய்த பின், அந்த அப்பார்ட்மெண்ட் சம்மந்தமான அத்தனை பிரச்சனைகளையும் பிரதாபன் தான் கவனிக்க வேண்டும்.
வீட்டில் ஏதாவது உடைந்தால் உடனே வேலையாட்களைப் பிடித்துத் திருத்திக் கொடுப்பது, வாடகை தராவிட்டால் ‘நினைவுறுத்தல்’ கடிதங்கள் அனுப்புவது, அப்படியும் வைப்புச் செய்யாவிட்டால் அந்த வீட்டுக்காரரை எழுப்புவது, அதன்பின் அந்த வீட்டுக்குப் புதிதாக ஒருவரை வாடகைக்கு அமர்த்துவது, குளிர் காலத்தில் ஸ்னோ அள்ளுவதற்கு ஆட்களை நியமிப்பது, வெயில் காலத்தில் புற்கள் வெட்டுவது என்று அனைத்தையும் பொறுப்பாக இவர்தான் கவனிக்க வேண்டும்.
வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதும் பிரச்சனைகள் என்றாலும் இவரைத்தான் தொந்தரவு செய்வார்கள். எல்லாவற்றையும் உடனுக்குடன் கவனித்து முடிக்கவேண்டும். இதனால் கிடைக்கிற அந்த மாத வருமானங்கள் கூட இலங்கையில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது.
அவரின் புருவங்கள் சுருங்கிற்று! இலங்கையில் இருந்து யார்? ‘ரட்ணம் அண்ணா எடுப்பதாக இருந்தால் கூட அவர் தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் தானே போனார்?’ யாதவிக்குப் பெரும் குழப்பம்!
அதோடு போட் வாங்குவதற்காக எடுக்கப்பட்ட லோன் 30000 யூரோக்களையும் காணவில்லை. கடந்த இரு மாதங்களாக வீட்டு லோனும் கட்டப்படவில்லை. அது ஒரு 5000 யூரோக்கள். அதைவிடப் பத்தாயிரம் யூரோக்களுக்கு மேலே கட்டவேண்டிய பில்லுகள் திரும்பி இருந்தன.
இதைவிட மாதா மாதம் கட்டும் மின்சார பில் முதற்கொண்டு ஹீட்டர் பில் என்று அனைத்தும் திரும்பி இருந்தது. கிட்டத்தட்ட 80000 யூரோக்கள். பெரிய தொகைதான். அதைவிட, குறுகிய காலத்தில் இதெல்லாம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இன்னுமே சிந்திக்க வைத்தது.
அதனால்தான் வங்கியும் வீட்டைப் பறிக்கப்போவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
சாதாரணமாக என்றால், தொடர்ந்து பணம் எடுக்கப்படும் சில நாட்களிலேயே வங்கி வங்கிக்கணக்கை முடக்கி இருக்கும். இவர்கள் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அது வியாபாரக் கணக்கு என்பதாலும், வங்கிக் கணக்கினை நெடுங்காலமாக இவர்கள் முறையாகப் பராமரித்ததாலும் தான் மைனஸில் கூட அதுவும் இவ்வளவு பெரிய தொகை எடுப்பதற்கு அனுமதித்து இருக்கிறது.
அதனால் தான் இரண்டு மாதங்கள் பொறுத்தும் இருந்திருக்கிறது. கடைசியில் எடுக்கப்பட்ட பணங்கள் மீள வைப்புச் செய்யப்படாமல் போகவே கணக்கை முடக்கி இருக்கிறார்கள்; கூடவே வீட்டைப் பறிக்கப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார்கள்.
ஆனால், பிரதாபனுக்கு இது பெரிய தொகையா? சமாளிக்கவே முடியாத அளவுக்கு? அவரால் நம்பமுடியவில்லை.
‘வேறு நாடுகளில் இருந்து பணம் எடுத்தாலோ வைப்புச் செய்தாலோ கணவரின் ஃபோனுக்குச் செய்தி வருமே…’ என்று நினைக்கையிலேயே அதையெல்லாம் கவனிப்பது ரட்ணம் அண்ணா என்பது நினைவு வந்தது.


