அப்படியானால் ரட்ணம் அண்ணாவுக்கு இது தெரியாமல் இருக்கச் சாத்தியமே இல்லை. அல்லது அவரே எடுத்திருக்க வேண்டும். ஆனால் அண்ணா அப்படியானவர் அல்ல! பிறகு? கணவர், ரட்ணம் பெயரைச் சொல்லி வருந்தியதும் நினைவில் வந்து போயிற்று.
பிரதாபன் கருப்புப் பணம் சேமிக்க விரும்பாதவர். எல்லாவற்றிலும் நேர்மைதான். மகளுக்கு நல்ல கல்வியையும் பழக்கவழக்கத்தையும் பண்பையும் வழங்கினால் போதுமென்று நினைப்பவர் தனியாக எதையும் பெரிதாகச் சேமிக்கவும் இல்லை.
நிலம் வாங்கிப் புதிதாகக் கட்டிய வீடு, ஆளுக்கொன்று என்று புதுக் கார்கள் மூன்று, அவர்களுக்கு என்று ஒரு போட், பெண்களுக்குப் போதுமான அளவு நகை நட்டுகள், அதைத்தாண்டி வருடா வருடம் போகும் டூர் இதுதான் அவர்களின் செல்வநிலை.
இன்றும் ஏதோ ஒரு பில் ஆயிரத்தில் போகாமல் திரும்பி இருந்தது. நாளாக நாளாக இது இன்னுமே அதிகரிக்குமே.
ஆக, தற்சமயம் தேவை 80000 யூரோக்களைத் தாண்டி நின்றது. இனி என்னென்ன பில்லுகள் வரும் என்பதையும் பார்க்கவேண்டும். ஆங்காங்கே சின்னச் சின்ன வரவுகளும் கண்ணில் பட்டது. இன்னும் வரவேண்டியதுகள் ஏதும் இருக்குமா?
முதலில் வங்கியோடு கதைத்து வங்கிக்கணக்கு முடக்கியிருப்பதை அகற்றவேண்டும். அதற்குமுதல் இனி வேறு யாரும் வங்கிக்கணக்கைக் கையாள முடியாமல் செய்யவேண்டும். இனியும் யார் எங்கிருந்து பணம் எடுப்பார்கள் என்று தெரியாதே.
உடனேயே வங்கியின் தலைமைக்கு அழைத்து, நிலமையைச் சொல்லி அதைச் செய்தார். இனி யாதவி அல்லது பிரதாபன் மட்டுமே கணக்கைக் கையாள முடியும். அதுவே தற்சமயம் பெருத்த நிம்மதியைக் கொடுத்தது அவருக்கு.
இப்போது பணச் சிக்கலை எப்படிச் சமாளிப்பது என்கிற யோசனை ஓடியது.
போட்டுக்காக எடுக்கப்பட்ட லோனுக்கு மாதா மாதம் கட்டினாலே போதும். ஆனால், அந்த போட்டை விற்றவனுக்கு உடனடியாகப் பணம் கொடுத்தாக வேண்டும். அவன், எப்போது வருகிறாய் என்று பிரதாபனின் கைபேசிக்குச் செய்திக்கு மேல் செய்தியாக அனுப்பிக்கொண்டிருந்தான்.
பணம் இன்னும் வந்து சேராத கோபத்தில் அவனது வார்த்தைகள் தடித்துக்கொண்டிருந்தது. பிரதாபன் இரண்டாயிரம் யூரோக்கள் கொடுத்து மறித்து வைத்திருந்திருக்கிறார்.
அவனுக்குக் கொடுக்க மிகுதிப்பணம் 28000 யூரோக்கள் வேண்டும். வேண்டாம் என்று சொல்ல முடியாது. அவன் கோர்ட், கேஸ் என்று போய்விடுவான். பத்திரம் பதிவாகி இருந்தது.
அவனை முதலில் சந்திக்க வேண்டும்! அதற்குமுதல் அவனுக்குக் கொடுப்பதற்குப் பணம் வேண்டும்.
மனதில் அடுத்துச் செய்யவேண்டிய காரியங்களை வரிசைப்படுத்திக்கொண்டு மாலையானதும் கணவரைப் பார்க்கச் சென்றார். செயற்கைக் சுவாசத்தோடு அசைவற்றுக் கட்டிலில் கிடக்கும் அவரைக் கண்கொண்டு காணமுடியவில்லை.
எப்படி இருந்த மனிதர்? இன்று தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல், தன் செல்ல மகள் என்ன செய்கிறாள் என்று அறியாமல் உணர்வற்றுக் கிடக்கிறாரே!
‘உங்களுக்காகத்தானப்பா, அங்க உங்கட மகள் கஷ்டப்படுறாள்.’ நெஞ்சை அழுத்திய பாரத்துடன் வீடு வந்தவர், மீண்டும் நேரே சென்றது கணவரின் அலுவலக அறைக்குத்தான்.
உணர்வற்றுக் கிடக்கும் அவரின் துன்பங்களை எல்லாம் நீக்கிப்போடும் வேகமும் வைராக்கியமும் நெஞ்சில் எழுந்து நின்றது!
கணவரின் கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றையும் மீண்டும் ஆராய்ந்தார். யாரெல்லாம் தருமதி இருக்கிறது என்று அத்தனை கோப்புகளையும் எடுத்துவைத்து, கணனியில் பிரதாபன் பதிவேற்றி வைத்திருந்த கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் சரிபார்த்தார்.
ஒன்றுக்குப் பலதடவை. எந்தத் தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாயிருந்தார். வேலை வேலை வேலைதான்! அந்த அறையே கோப்புகளின் காடாக மாறிப்போயிருந்தாலும், அன்றைய நாளின் முடிவில் முக்கால்வாசி விசயங்களைத் தன் மூளைக்குள் பதிவேற்றி இருந்தார் யாதவி.
அப்போதுதான் வயிறு கடிப்பதே தெரிந்தது. உண்ணப் பிடிக்காதபோதும் அவர் உசாராக இருக்கவேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்து எளிமையாக சூப் மாதிரித் தயாரித்து எடுத்துக்கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தார்.
மகளும் இல்லாமல் கணவரும் இல்லாமல் உறக்கம் நெருங்குமா அவரை? இரவிரவாக மீண்டும் அத்தனையையும் கரைத்து முடித்திருந்தார்.
அன்றே, இரவே, இன்னும் பணம் வரவேண்டியவர்களுக்கு எல்லாம், பிரதாபனின் கம்பனி இலட்சினை தாங்கிய மெயில்கள் பறந்தன.
ஏற்கனவே பிரதாபன் பணத்தைச் செலுத்தும்படி அனுப்பியிருந்த மெயில்களும் அதற்குக் கால அவகாசம் கேட்டு அனுப்பப்பட்ட மெயில்களும் என்று நிறைந்து வழிந்தன.
அவர்களுக்கு எல்லாம் அழுத்தம் திருத்தமாக, ‘பணம் வைப்புச் செய்யப்படவேண்டும். இல்லையானால், சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!’ என்று அனுப்பிவைத்தார்.
வரவேண்டிய காசுகளின் தொகையை அதற்கான ஆதாரங்களுடன் தனியாக எடுத்து வைத்தார். வங்கியில் இதையெல்லாம் காட்டி வரவுகளாகப் பேசலாமே.
என்னவெல்லாம் கேட்கவேண்டும் கதைக்கவேண்டும் என்று சின்னத் துண்டு ஒன்றில் குறித்து வைத்துக்கொண்டார். அனைத்தையும் தயார் செய்து வைத்தபிறகுதான் அவரது மூளையும் உடலும் தளர்ந்தது.
இத்தனையையும் முடித்தபோது அதிகாலை நான்கு மணியாகி இருந்தது. அந்த நேரத்துக் குளிருக்கு இதமாக, தரையிலேயே பொருத்தப்பட்டிருந்த கணப்பு அந்த வீட்டைப் பதமான வெப்பத்தில் வைத்திருக்க, இதமான சூட்டில் ஒரு தேநீரை ஊற்றிப் பருகினார்.


