அப்போதுதான் வயிறு கடிப்பதே தெரிந்தது. உண்ணப் பிடிக்காதபோதும் அவர் உசாராக இருக்கவேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்து எளிமையாக சூப் மாதிரித் தயாரித்து எடுத்துக்கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தார்.
மகளும் இல்லாமல் கணவரும் இல்லாமல் உறக்கம் நெருங்குமா அவரை? இரவிரவாக மீண்டும் அத்தனையையும் கரைத்து முடித்திருந்தார். அன்றே, இரவே, இன்னும் பணம் வரவேண்டியவர்களுக்கு எல்லாம், பிரதாபனின் கம்பனி இலட்சினை தாங்கிய மெயில்கள் பறந்தன. ஏற்கனவே பிரதாபன் பணத்தைச் செலுத்தும்படி அனுப்பியிருந்த மெயில்களும் அதற்குக் கால அவகாசம் கேட்டு அனுப்பப்பட்ட மெயில்களும் என்று நிறைந்து வழிந்தன.
அவர்களுக்கு எல்லாம் அழுத்தம் திருத்தமாக, ‘பணம் வைப்புச் செய்யப்படவேண்டும். இல்லையானால், சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!’ என்று அனுப்பிவைத்தார்.
வரவேண்டிய காசுகளின் தொகையை அதற்கான ஆதாரங்களுடன் தனியாக எடுத்து வைத்தார். வங்கியில் இதையெல்லாம் காட்டி வரவுகளாகப் பேசலாமே. என்னவெல்லாம் கேட்கவேண்டும் கதைக்கவேண்டும் என்று சின்னத் துண்டு ஒன்றில் குறித்து வைத்துக்கொண்டார். அனைத்தையும் தயார் செய்து வைத்தபிறகுதான் அவரது மூளையும் உடலும் தளர்ந்தது.
இத்தனையையும் முடித்தபோது அதிகாலை நான்கு மணியாகி இருந்தது. அந்த நேரத்துக் குளிருக்கு இதமாக, தரையிலேயே பொருத்தப்பட்டிருந்த கணப்பு அந்த வீட்டைப் பதமான வெப்பத்தில் வைத்திருக்க, இதமான சூட்டில் ஒரு தேநீரை ஊற்றிப் பருகினார்.
சூழ்ந்திருந்த இருளுக்குள்ளிருந்து மெல்லிய வெளிச்சப்புள்ளி ஒன்று தொலைதூரத்தே தெரிந்தது. அதன் மீதே விழிகள் இருக்கத் தொண்டைக்குள் இதமாக இறங்கிய தேநீருடன் அவரின் நினைவுகள் கணவரையே சுற்றி வந்தது.
அவர்களின் போட்டை விற்றுச் சமாளித்து இருக்கலாம். கார்களை விற்றிருக்கலாம். வீட்டை விற்கவேண்டிய கட்டாயம் இல்லவே இல்லை. நிதானமாக யோசிக்கையில் நேற்றுப்பிறந்த மீன் குஞ்சான யாதவிக்கே இத்தனை வழிகள் புலப்படுகையில் திமிங்கிலமான பிரதாபனுக்கு இதெல்லாம் ஒரு விடயமா?
அவர் கணவரைப் புரிந்து வைத்திருப்பது சரியென்றால், இந்த இக்கட்டிலும் மனைவி மகளின் நகைகளையோ, மகளுக்கான சேமிப்பையோ தொட்டே இருக்கமாட்டார். அந்த நேசத்தை எண்ணி நெகிழ முடியாமல் மனம் வேதனையில் உழன்றது. அந்தப் பாசம் தானே இன்றைக்கு ஆபத்தில் நிறுத்தியிருக்கிறது.
பிரதாபனுக்கு வேண்டுமானால் மனைவி மகளின் நகை முக்கியமாக இருக்கலாம். யாதவிக்கு? கணவருக்கு முன்னால் அத்தனையும் வெறும் தூசு!
இலங்கையில் விடிந்திருக்கும் என்றபடியால் தமையனுக்கு அழைத்து, சஹியின் நலன் விசாரித்தார்.
வைத்தியரிடம் அழைத்துச் சென்று மருந்து எடுத்ததைக் குற்றவுணர்ச்சியோடு பகிர்ந்துகொண்டார் அரவிந்தன். அவரைத் தேற்றினார் யாதவி.
பிரபாவதியைப் பற்றி யாதவிக்கா தெரியாது? ஆனால், அடுத்த இளைய தலைமுறையுமா இந்தக் கோபத்தைச் சுமந்தபடி வளர்ந்திருக்கிறது. இல்லை.. வளர்க்கப்பட்டிருக்கிறது. அப்போ தவறு யார் மீதில்?
“சஹியோட கதைக்கப் போறியா?”
“இல்ல அண்ணா. என்னோட கதைச்சா அழுவாள். நானும் அழுதிடுவன். ஊசி போட்டாலே காய்ச்சல் வரும். கொஞ்சம் பாத்துக்கொள்ளுங்கோ. நெடுக(எப்போதும்) தலைக்குக் குளிக்க விடவேண்டாம். குளி எண்டு விட்டாலே தலையைத்தான் கொண்டுபோய்க் குடுப்பாள். கவனம் அண்ணா.” என்றுவிட்டு வைத்தவர், ஒன்பதுக்குத்தான் வங்கி திறக்கும் என்பதால் மனதில் காசு கணக்கு வழக்குகளைப் பார்த்தபடி உறங்கிப் போனார்.
காலையில் சிவந்து சோர்ந்திருந்த விழிகளுடன் மெல்லிய உடல் சூட்டுடனும் எழுந்துவந்த சஹானாவைப் பார்க்க ராகவிக்கு மனமே ஆறவில்லை. பிரதாபனின் குடும்பத்தினரை மனதுக்குள் திட்டித் தீர்த்தார்.
அதுநாள் வரை அகிலனுக்கு சஞ்சயனை மிகவும் பிடிக்கும். ஒருவகை நாயக விம்பம் எப்போதுமே உண்டு. அவன் நினைத்தால் பன்னாட்டு நிறுவனத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்கும் வேலை பார்க்கலாம். அதை விட்டுவிட்டு விவசாயம், தோட்டம், இயற்கை என்று வாழ்கிறான். அந்தளவுக்குத் தமிழ், தமிழர், தமிழரின் பாரம்பரியம், முன்னேற்றம் என்று பாடு படுகிறவன்.
பனைகளைக் காப்பான், விவசாயம் செய்வான், கல்லூரிகளுக்கு நல்லுரையாற்றச் செல்வான். குளங்களைத் தூர் வருவான். மரக்கன்றுகள் நட்டு நாட்டை வளம் செய்வான். ஆறுகளில் இருக்கும் பிளாஸ்ட்டிக் கழிவுகளை அகற்றுவான். அவனுடைய உயிர் மூச்சு அந்த ஊரும் மண்ணும்.
இதுவரை அவனோடு கதைத்ததில்லை. ஆனால், ஒருவகையிலான ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்திருக்கிறது. இன்றைக்கோ எல்லாம் தலைகீழாகிப் போயிற்று.
அவளின் அருகே அமர்ந்து, “இப்ப எப்பிடியிருக்கு?” என்று கனிவுடன் விசாரித்தான்.
சோர்வுடன் முறுவலித்துத் தலையசைத்தாள் சஹானா. அவளின் கைகளைப் பற்றி, வைத்தியர் கொடுத்த களிம்பினைத் தடவி ஒவ்வொரு விரலாக நீவி விட்டான்.
“வீட்டுல ஒரு வேல கூடச் செய்றேல்ல போல.”
அவனது கேள்வியில் அவள் முகத்தில் முறுவல் அரும்பியது.
“அம்மா சொல்லுவாதான். நான் செய்யமாட்டன்.”
“அதுதான் இவ்வளவு பாதிப்பு!”
உண்மைதான்! யோசித்துப் பார்த்தால் சாப்பிடுவதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்த நினைவு இல்லை. எப்போதாவது அப்பா இல்லாத பொழுதுகளில் அம்மாவிடம் மாட்டிக்கொண்டால் மாத்திரமே செய்வாள். அப்போதும் கெஞ்சிக் கொஞ்சிச் சமாளித்துவிடுவாள்.
அப்படியானவர்களுக்காக இதைக்கூடத் தாங்காவிட்டால் எப்படி? தான் மீண்டு வருவேனா இல்லையோ என்கிற நிலையில் கூடத் தனக்காகச் சிந்தித்த தந்தைக்காக இதைச் செய்தே ஆகவேண்டும்! அதற்கு வீட்டில் குந்திக்கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.
“என்ன?” அவளையே பார்த்திருந்தவன் கேட்டான்.
“அப்பப்பாவை பாக்கிறது எப்பிடி?”
அவன் முறைக்க மறுத்துத் தலையசைத்தாள். “நான் நிறைய நாளுக்கு இங்க நிக்கேலாது மச்சான். இன்னும் ஒரு கிழமை தான் இருக்கு. அம்மா பாவம். அங்க தனியா. கெதியா நான் வேலையை முடிக்கோணும்.” தெளிவாகச் சொன்னாள் அவள்.
“இனி என்ன மாமா செய்றது?”
சஞ்சயனைப் பற்றி அவருக்கும் நல்ல அபிப்பிராயம் தான். அவனிடம் கதைக்கலாம் என்றுதான் இதுவரை நினைத்திருந்தார். அவனே முதன்மையாக நின்று அவளை வெளியே தள்ளியதில் என்ன செய்வார்?
“வீட்டுக்கே போய்க் கதைப்பம்.” வேறு வழி? சிங்கத்தை அதன் கூட்டிலேயே சந்திக்கத்தான் வேண்டும்.
“எனக்கு என்னவோ அப்பப்பாவோட கதைச்சா நல்லம் மாதிரி இருக்கு மாமா.” என்றாள் சஹானா.
“உண்மைதானம்மா. உன்ர அப்பாவும் அம்மாவும் இங்கேயிருந்து போன புதுசுல அவர் அமைதியா இருந்ததுக்குக் காரணமே மகன்ர மனதை விளங்கிக்கொண்டிருக்கிறார் எண்டு நினைச்சிருக்கிறன். எதையும் அவர் வெளிப்படையா சொன்னது இல்லையே தவிர என்னட்ட கோபப்பட்டும் கதைச்சது இல்லை. நான் கதைக்கப் போன நேரமும், ‘தயவு செய்து விலகி இருங்கோ. அதுதான் எல்லாருக்கும் நல்லது’ எண்டு மட்டும் தான் சொன்னவர். இப்ப அவருக்கு நோய் எண்டுதான் கேள்விப் பட்டனான். என்ன எண்டாலும் நேர்ல போய் கதைக்கிறதுதான் சரி.” என்றவர் சஹானாவோடு புறப்பட்டார்.
“நானும் வாறன் அப்பா!” ஒருவிதப் பிடிவாதத்தோடு சொன்னான் அகிலன்.
‘நீ எதற்கு?’ என்பதாகப் பார்த்தார் அரவிந்தன்.
நிச்சயமாக அங்கே அவமானம் தான் கிட்டும். அது தெரிந்தும் தந்தையைத் தனியே விட மனம் ஒப்பவில்லை. தனயனாகத் தன்னால் முடிந்த பாதுகாப்பைக் கொடுக்க எண்ணினான்.
மகனின் மனதை விளங்கிக்கொண்ட அரவிந்தனின் உதட்டோரம் மெல்லிய புன்சிரிப்பு மலர, மனைவியிடம் பார்வையைப் பரிமாறிவிட்டு அவனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.