அப்பாவுக்கு நிறையச் சொந்தங்கள் என்றும், பெரும்பாலும் அவர்கள் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்வார்களாம் என்றும் யாதவி சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதனால்தான் சொந்தமே இல்லாத அம்மாவை அப்பா காதலித்துக் கட்டினார் என்று அவர்கள் கதைப்பதில்லையாம். அதைக் கேட்டும் சிரித்திருக்கிறாள். திருமணம் என்பது அவரவர் விருப்பம். மனத்துக்குப் பிடித்தவரைத்தானே மணக்க முடியும்? அதற்கு எதற்குச் சின்னப்பிள்ளைகள் போல் கோபப்படவேண்டும்? இவ்வளவுதான் அவள் அறிந்தது.
அதேபோல இலங்கையில் அம்மாவுக்கு ஒரு அண்ணாவும் அவருக்கு ஒரு மகனும் இருப்பது தெரியும். அவர்களோடு இவளுக்கு நல்ல பழக்கமே. மாமா ஒவ்வொரு வருடமும் ஊருக்கு அழைப்பார். அவளும் இலங்கையைப் பார்க்கும் ஆவலில் தகப்பனைக் கேட்பாள். அவரும் சம்மதிப்பார். ஆனால், ஒவ்வொரு வருடமும் தட்டிப்போய்விடும்.
“அது என்னப்பா? இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து எண்டு எங்க போறது எண்டாலும் போட்ட பிளான் மாதிரியே போய்வாறம். இலங்கைக்கு மட்டும் எப்ப பிளான் செய்தாலும் ஏதோ ஒரு தடங்கல் வருது. அது எப்பிடியப்பா?” என்று அவள் கேலியாகக் கேட்பதுண்டு.
“உனக்கு மச்சான்மாரை பாக்கேல்லை எண்டு கவலையோ?” என்று கேட்டுச் சிரிப்பார் அவர்.
“பின்ன, உங்களை மாதிரி நானும் சைட் அடிக்க வேண்டாமா?”
அப்படியே அந்தப் பேச்சு கேலியிலேயே முடிந்துவிடும். அப்பாவாகத் தவிர்த்திருப்பார் என்று எண்ணியதே இல்லை. இன்று யோசித்துப்பார்த்தால் அவராகத்தான் தவிர்த்திருக்கிறார் என்று புரிந்தது.
ஆனால், அவர் சொன்னதுபோல நம்பிக்கைத் துரோகம் செய்யும் அளவுக்கு வன்மையான மனம் அவளின் அப்பாவுக்கு இல்லவே இல்லை. என்ன நடந்தது என்று தெரியாத இப்போதே அவளால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஆனாலும், என்னவோ நடந்திருக்கிறது. அவருக்கு அவரின் அம்மா அப்பா முன் போய் நிற்கப் பயம். அதற்குக் காரணமும் அவள்தான். அவளும் சேர்ந்து தலைகுனிய வேண்டிவரும் என்று நினைத்தாரோ? அப்படித்தான் இருக்கும். இந்த அப்பாக்கு எல்லாவற்றையும் விட எல்லோரையும் விட அவள்தான் முக்கியம்.
பாசத்தில் கனிந்துருகிய உள்ளத்திலிருந்து வடிந்த கண்ணீர் கன்னங்களை மீண்டும் நனைத்தது.
‘என்ர செல்ல அப்பா! உங்களுக்கு நான் முக்கியம் எண்டால் எனக்கு நீங்க முக்கியம். உங்கட ஆசையை நான் நிறைவேத்தி வைக்கிறன்.’ மனதோடு தகப்பனுக்குச் சொன்னவள், முகத்தைக் கழுவித் துடைத்துக்கொண்டு வேகமாக வைத்தியரை நாடிச் சென்று தகப்பனின் நிலை பற்றி விசாரித்தாள்.
மன அழுத்தம் தான் முக்கியக் காரணமென்றார் அவர். அதோடு, முதல்முறை மாரடைப்பு வந்ததிலிருந்து, ‘தனக்கு ஏதும் நடந்துவிடுமோ’ என்கிற பயமும் சேர்ந்து இன்னும் அதிகமாகப் பாதித்திருக்கிறதாம். இப்போது ரத்தக்குழாயிலும் அடைப்பு இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அவர் சொல்ல சொல்லக் கலவரத்துடன் பார்த்தாள் அவள்.
அவளின் தோளில் தட்டிக்கொடுத்த்துவிட்டு, “இப்போதைய அவரின் நிலை அறுவைச் சிகிச்சைக்கு ஏற்றது அல்லதான் என்றாலும் அவரைத் தேற்றி அறுவைச் சிகிச்சை செய்தபிறகு நலமாவார்.” என்றார் நம்பிக்கையோடு.
“பிறகு ஏன் மயக்கம் மாதிரி?” அப்பாவின் நிலையை எப்படிக் கேட்பது என்று தெரியாமல் தடுமாறினாள்.
“மனது நல்லா குழம்பிப்போய் இருக்கு. அதுதான் காரணம். கொஞ்ச நாட்கள் முறையான மருந்தும், நல்ல ஓய்வும், ஆழ்ந்த உறக்கமும் கிடைத்தால் மீண்டும் சமநிலைக்கு திரும்பிவிடுவார்.” என்றார் அவர்.
அவள் திரும்பி வரும்போது அறையிலிருந்து வெளியே வந்த யாதவி இவளைக் கண்டுவிட்டு, “வந்திட்டியா சஹி. வா அப்பாவப் பாத்துக்கொண்டு வருவம். உன்னைத் தேடினவர்.” என்று அழைத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தார்.
உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியும் என்கிற அளவில் தன் கண்ணீர் கறையை மகளிடம் மறைத்திருந்தார் யாதவி. தனக்காக, தான் கலங்கிவிடக் கூடாது என்பதற்காக, இந்த அம்மாவும் அப்பாவும் எவ்வளவு பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள். இதெல்லாம் இப்போதுதானே கண்ணிலும் கருத்திலும் படுகிறது.
“ஒண்டுக்கும் கவலைப்படக் கூடாது. அப்பாக்கு பெருசா ஒண்டுமில்ல. சுகமாகி வந்திடுவார், என்னம்மா?” கனிவோடு அன்னை தைரியம் தந்தபோது கட்டுப்படுத்த முடியாமல் விசித்தாள் மகள்.
“பயமா இருக்கம்மா!” அன்னையின் அணைப்புத் தேவையாய் இருக்கவே அவரைக் கட்டிக்கொண்டு அழுகையில் குலுங்கினாள்.
யாதவிக்கும் தன்னாலேயே கண்ணீர் மல்கியது. “செல்லம்மா! ஒண்டுக்கும் பயப்படாத. அப்பாக்கு ஒண்டும் நடக்காது. அவர் எப்பிடி எங்களை விட்டுட்டு..” அவராலும் முடியவில்லை. சட்டென்று உடைந்துபோனார்.
தானும் சேர்ந்து அழுவதைப் பிறகுதான் உணர்ந்தவராக வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு மகளுக்கும் துடைத்துவிட்டார். “அப்பிடி ஒண்டும் நடக்காது! நம்பிக்கையோட இருக்கவேணும்!” உறுதியான குரலில் சொன்னவரிடம் இப்போது திடம் மீண்டிருந்தது. “வா!” என்று கரம்பற்றி அழைத்துச் சென்றார்.
அங்கு மீண்டும் முழித்திருந்தார் பிரதாபன்.
“செல்லம்மா!” பெண்ணைக் கண்டதும் பூவாக மலர்ந்த முகத்தோடு அழைத்த தந்தை ஒரு கரத்தை நீட்டவும், அழுகையோடு ஓடிப்போய்ப் பற்றிக்கொண்டவளுக்கு நெஞ்சு அடைத்தது.
அவரது கண்களும் கலங்கிற்று. அதற்குமேல் அடக்க முடியாமல், “என்னப்பா இதெல்லாம்?” என்றவள் அவர் கரத்திலேயே முகத்தைப் புதைத்துக் கண்ணீர் விட்டாள்.
அவர் கண்களிலும் அடக்கமாட்டாத கண்ணீர். கணவர் இந்த நேரத்தில் உணர்ச்சிவசப்படுவது நல்லதல்ல என்று உணர்ந்த யாதவி, “சஹி, அப்பாக்கு ஒண்டுமில்ல. ஒரு சின்ன ஒப்பரேசன் செய்தா காணுமாம். சும்மா அழுறேல்ல!” என்று அதட்ட, அப்போதுதான் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்று விளங்க, அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள் சஹானா.
“மிஸ்டர் பிரதாபன். இதுதான் சாக்கு எண்டு வேலை செய்யக் களவுல வந்து படுத்திட்டீங்க என்ன? இப்பதான் டொக்டர பாத்திட்டு வாறன். பயப்பட ஒண்டும் இல்லையாம். கெதியா(விரைவாக) ஒப்ரேசனை செய்துபோட்டு வீட்ட வாற வழிய பாருங்க. ஓகே?” அவள் சொல்லசொல்ல அவர் முகமெங்கும் சிரிப்பில் மலர்ந்துபோயிற்று.
“என்ர செல்ல அப்பா! இப்பிடியே சிரிச்சுக்கொண்டு இருக்கவேணும்.” அவரின் கன்னங்களைப் பிடித்து ஆட்டினாள் மகள்.
அவரின் விழிகள் இமைக்கவும் விரும்பாது ஆசையோடு மகளையே வருடின. ‘இவளை நல்லவனின் கையில் பிடித்துக்கொடுத்து கரைசேர்க்காமலேயே போய்விடுவேனோ..’ என்று அழுதது அவரின் இதயம்.
அருகில் அமர்ந்து அவரின் மார்பைத் தடவி விட்டபடி, “உடம்புக்கு ஏதும் செய்யுதாப்பா?” என்று பாசத்தோடு கேட்டாள் சஹானா.
“இல்லயடா குஞ்சு. அப்பாக்கு ஒண்டுமில்ல. ஒண்டுக்கும் யோசிக்கக் கூடாது என்ன.” தழுதழுக்க குரலில் அவளைத் தேற்றினார்.
“அப்ப ஏன் இங்க வந்து படுத்து இருக்கிறீங்களாம்?”
“அது உன்ர அம்மா தருகிற தொல்லை தாங்காம கொஞ்ச நாளைக்காவது நிம்மதியா இருப்பம் எண்டு வந்திட்டன். ”
தன் சிரமத்தை மறைத்துக்கொண்டு உற்சாகமாகத் தன்னோடு பேச விழையும் அவரின் பாசத்தில் கண்ணீர் பொங்கியது. காட்டிக்கொள்ளாமல் சிரித்தாள். அவர்களின் ஆதார சுதியே அவள் அல்லவோ!
“அம்மா! அப்பா சொன்னதைக் கேட்டீங்களா? இதுல அப்பா உங்களை லவ் பண்ணி கட்டினவர் எண்டு உங்களுக்கு ஒரு நினைப்பு.” அவளின் விளையாட்டுப் பேச்சினை ரசித்துக்கொண்டிருந்தாலும், சற்று நேரத்திலேயே தந்தையின் கண்கள் சொருகுவதும், விடாப்பிடியாக முழித்துத் தன்னைப் பார்ப்பதையும் கண்டவளின் விழிகள் தளும்பிப் போயிற்று.
இந்த ஒப்பற்ற அன்புக்கு என்ன பரிகாரம் செய்யப் போகிறாள்?
கன்னத்தில் வழியும் கண்ணீரை ஒரு கையால் துடைத்தபடி, மற்றக் கையால் அவர் மார்பை மெல்ல மெல்ல வருடிக் கொடுத்தாள். சற்று நேரத்தில் உறங்கினாரா சுயநினைவை இழந்தாரா தெரியவில்லை, அவர் விழிகள் மூடியது.
அது மயக்கம் தான் பயமில்லை என்றார் வைத்தியர்.


