“சுகமா இருக்கிறீங்களா மாமா?” கரகரத்துப்போன குரலில் வினவினாள் சஹானா. அப்போதாவது ஏதாவது கேட்டால் அப்பாவைப் பற்றிச் சொல்லிவிடலாமே.
அவரின் தலை ஒருவித இறுக்கத்துடன் மேலும் கீழுமாக அசைந்ததே தவிர வார்த்தைகள் வெளிவரவில்லை. அவளின் சின்ன இதயம் ஏமாற்றத்தில் சுருண்டது.
பிரபாவதிக்கு வந்தவள் அந்தநாள் நினைவுகளைத் தட்டி எழுப்பிக் கணவருக்குள் புதைந்துகிடக்கும் பாசத்தைக் கிளறிவிடுவாளோ என்று பயம் வந்தது. அன்னையிடம் ஓடினார்.
‘உடையவன் பாராவிட்டால் ஒருமுழம் கட்டை’ என்பதில் தினமும் காலையில் தோட்டத்துக்குச் சென்று மேற்பார்வை பார்த்து, தன் வெண்கலக் குரலினால் வேலையாட்களை எல்லாம் அதட்டி உருட்டிவிட்டு வந்து உணவை முடித்துக்கொண்டு சும்மா தரையில் சரிந்த தெய்வானை அப்படியே உறங்கிப் போயிருந்தார்.
“அம்மா! எழும்புங்கம்மா!” வேகமாகத் தட்டி எழுப்பினார் பிரபாவதி.
“என்ன பிள்ளை?” நல்ல உறக்கத்தைக் கெடுக்கிறாளே என்கிற மெல்லிய சினத்துடன் சோம்பலாகக் கேட்ட அன்னையிடம் கணவனிடம் காட்டமுடியாத கோபத்தைக் காட்டினார் பிரபாவதி.
“என்னவோ? அதுசரி! உங்களுக்கு என்ன, நல்லா வாழ்ந்த சீமாட்டி நீட்டி நிமிந்து படுத்து எழும்புவீங்க! எனக்கு அப்பிடியா? கூடப்பிறந்தவனும் சீரில்ல நீங்க பாத்துக் கட்டிவச்சவனும் ஒழுங்கில்ல. வாழ்ந்த நாள்தான் நரகமா போச்சுது எண்டு பாத்தா இனி வாழப்போற நாளையும் நரகமாக்க வந்து நிக்கிறான் என்ர சந்தோசத்தையே அழிச்சவன். இந்த நேரம் பாத்து இவரும் வந்திட்டார். எனக்கு மட்டும் ஏன்தான் இப்பிடி எல்லாம் நடக்குதோ? சாகேக்க கூட என்னை நிம்மதியா சாக விடமாட்டானா அந்தக் கடவுள்.” என்று கண்ணைக் கசக்கவும் அன்னையின் மனது துடித்துப் போயிற்று!
“அறுவான்! என்னத்துக்கு வந்தவனாம்?” அந்த வயதிலும் விருட்டென்று எழுந்து அவிழ்ந்து விழுந்திருந்த கொண்டையை வேகமாக முடிச்சிட்டபடியே விறுவிறு என்று முற்றத்துக்கு நடந்தார்.
“டேய் முத்து! அறிவு கெட்டவனே! என்னத்துக்கு அந்தக் கேட்டை திறந்து வச்சிருக்கிறாய்? றோட்டால போற கண்ட கழிசடையும் வளவுக்க(காணிக்கை) நுழையிறது தெரியேல்லையே உனக்கு? இனி பூட்டிவச்சு யார் என்ன எண்டு விசாரிச்சு உள்ளுக்கு விடு!” அங்கே சற்றுத் தள்ளி ஆட்டுக்குத் தீனி வைத்துக்கொண்டிருந்த முத்துவை அதட்டினார்.
முகம் கருத்துப் போனது அரவிந்தனுக்கு. விழிகளில் சேர்ந்துவிட்ட நீருடன் தன்னைப் பார்த்த சஹானாவை பார்வையாலேயே அடக்கினார்.
“ஏன் மாமி உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது?” அமர்த்தலாகக் கேட்டார் சிவானந்தன்.
சட்டென்று நிதானித்தார் தெய்வானை. புலி பதுங்குவது பாயத்தான் என்று பழுத்த கிழவி அவருக்குத் தெரியாதா? என் மகளை வேண்டாம் என்றுவிட்டு இன்னொருத்தியைக் கட்டியவனை மதிக்கச் சொல்கிறாயா என்று கேட்க முடியாது. கேட்டால், இன்னும் அதை மறக்கமுடியவில்லையோ என்று கேட்பார். அது ஆபத்தில் முடியும்.
“கோவப்படாம? கொஞ்சச் சொல்லுறியளே? இந்த அநாதை கூட்டம் செய்த வேலையால உங்கட பெரியமாமா பட்ட பாட்டை எல்லாம் மறந்திட்டீங்க போல! இண்டு வரைக்கும் அவர் அனுபவிக்கிற துன்பத்தைத் தினம் தினம் பாத்துக்கொண்டுதானே இருக்கிறீங்க. பிறகும் இப்பிடி கேட்டா எப்பிடித் தம்பி?” ஆனானப்பட்ட சிவானந்தனையே மடக்கிப்போடும் வல்லமை தெய்வானை அம்மாவின் சாதுர்யம் மிகுந்த வார்த்தைகளுக்கு இருந்தது.
அவர் எதிர்பார்த்ததுபோல் பிரதாபன் சென்றபிறகான நாட்களில் உடைந்துபோய் நின்ற பெரிய மாமாவின் நிலை கண்முன்னே வந்து நிற்கச் சிவானந்தனின் முகம் இறுகிப் போயிற்று.
சிவானந்தனின் தாய்க்குப் பத்துச் சகோதரங்கள். அவர்களுக்கு எல்லாம் மூத்தவர் தான் தெய்வானையின் கணவர் ரகுவரமூர்த்தி. சிவானந்தனுக்குப் பெரிய மாமா.
சிவானந்தனின் அன்னை உற்பட, அனைத்துச் சகோதரிகளையும் கரைசேர்த்தவர். அந்த மாமா, பிரதாபன் ஓடிப்போய்விட்டானாம் என்பதை நம்பமாட்டாமல், ‘என்ர மகன் வருவான்’ என்று பல நாட்களாக நம்பிக்கொண்டு இருந்ததும், பொம்பிளையை கூட்டிக்கொண்டு நாட்டை விட்டே போய்விட்டானாம் என்று அறிந்து இடி விழுந்தாற் போன்று சமைந்து போனதும், அதன் பிறகான நாட்களில் யாருக்கும் தெரியாமல் தன்னிடம் தனியாக வந்து, ‘என்ர மகளுக்கு வாழ்க்கை குடய்யா’ என்று கை கூப்பியதும், தான் பிரபாவதியைத் திருமணம் முடித்ததும் என்று எல்லாமே வலம்வர, விழிகளில் கடினத்துடன் சஹானாவை நோக்கினார் அவர்.
அரவிந்தனுக்கு தெய்வானை அம்மாவின் போக்குப் புரிந்து போயிற்று. வெண்ணை திரண்டு வருகிறபோது தாழியை உடைக்க விட்டுவிடக் கூடாது என்று உணர்ந்து, “பிரதாபன் உங்கட மகளைப் பற்றி யோசிக்கவே இல்லையா அம்மா?” என்று நிதானமாகக் கேட்டார். “அவர் முழு மூச்சா நிண்டு உங்கட மகளுக்கு மாப்பிள்ளை பார்த்ததைப் பக்கத்தில இருந்து பாத்தவன் நான்.”
‘அதுதானே…’ அரவிந்தனின் கெட்டித்தனம் மிகுந்த கேள்வியில் தெளிந்தார் சிவானந்தன். கூடவே தன் மாமியாரின் திட்டமும் புரிந்து போயிற்று!
“ஓமோம்! நீ பாத்துத்தான் இருப்பாய்! தங்கச்சியையே குடுத்..து பக்கத்தில வச்சு பாத்தவன் தானே நீ!” என்றார் மிகக் கேவலமாக.
“அம்மா! கதைக்கிறதை நிதானமா கதையுங்கோ!” நிதானம் தவறாத அரவிந்தனே சீறினார்.
“இது என்ர வீடு! நான் எப்பிடியும் கதைப்பன்! உனக்குக் கேக்க விருப்பம் இல்லாட்டி வெளில போ! இங்க வந்து என்னை நீ அதிகாரம் செய்யாத. விளங்கிச்சோ! எங்களை எல்லாம் வேண்டாம் எண்டு தானே உன்ர தங்கச்சிய இழுத்துக்கொண்டு ஓடினவன். பெத்த மனம் பித்துப் பிள்ளை மனம் கல்லாம் எண்டு நாங்க அந்தரிச்சது போதும்! இப்ப என்ர மனமும் கல்லா போச்சு! அவனுக்கும் இந்த வீட்டுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல. அவன்ர பெயரைச் சொல்லிக்கொண்டு வாறவளுக்கும் இடமில்லை.” என்று அறிவித்தார் அவர்.
அந்த வயதிலும் அவரின் ஆளுமையான பேச்சு அரவிந்தனின் வாயைக் கட்டிப்போட்டது.


