ஆதார சுதி 12 – 3

சஹானாவுக்கு அதற்குமேல் வார்த்தைகள் குத்தும் வலியைப் பொறுக்க முடியவில்லை. “அப்பா செய்தது பிழையாவே இருந்திட்டு போகட்டும். அவரை நீங்க மன்னிக்கக் கூடாதா அப்பம்மா?” வேதனையோடு கேட்டாள் அவள்.

“அவனை ஏன் நான் மன்னிக்க வேணும்? அவன் ஆர் எனக்கு? பெத்த தாயின்ர மனம் குளிர நடக்காதவன் எனக்கு மகனுமில்ல. குடும்ப மானத்த சந்தி சிரிக்க வச்சவனுக்கு நான் தாயுமில்ல! குலம் கோத்திரம் தெரியாவள் பெத்தவளுக்கு இந்த வீட்டில இடமுமில்லை!” வார்த்தைகளை நெருப்பெனக் கொட்டினார் அவர்.

“ஏன் அப்பம்மா இப்பிடி கோபப் படுறீங்க? அப்பா அப்பிடி என்ன பிழை செய்தவர்? தன்ர மனதுக்கு பிடிச்ச அம்மாவைக் கட்டினவர். அவ்வளவுதானே?”

“அவ்வளவு தானோ? பிறகு என்னத்துக்கு ஓடிப்போனவன்? என்னத்துக்கு இவ்வளவு காலமும் ஒளிஞ்சு வாழ்ந்தவன்? முதல் நீ இங்க என்னத்துக்கு வந்து நிக்கிறாய். நாங்க யாரும் உங்களைத் தேடி வந்தோமா? இல்லையே! எங்களுக்கு நீயோ உன்ர அப்பனோ தேவையே இல்ல. எங்கட வீட்டு நிம்மதியையும் சந்தோசத்தையும் கெடுக்காம போய்த் தொலை!” என்றார் ஈவு இரக்கமற்று!

அவளுக்குக் கண்கள் கலங்கிப் போயிற்று. தன்னைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள் என்று நம்பி வந்தவர்களின் வார்த்தைகள் மிக ஆழமாகக் காயப்படுத்திற்று!

“நான் ஏன் போக வேணும்? என்ர அப்பாக்காக வந்தனான். அவர்ல பிழை இல்லை எண்டு சொல்ல வந்தனான். அவரின்ர குடும்பத்தைத் திரும்ப அவரிட்ட சேர்க்கவேணும் எண்டு வந்தனான்.” அவள் பேசிக்கொண்டு இருக்கையில் சஞ்சயனின் பைக் வீட்டுக்குள் நுழைந்தது.

அதுவரை நேரமும் அம்மன் இறங்கியது போன்று ஆடிக்கொண்டிருந்த தெய்வானையைக் கலவரம் பற்றிக்கொண்டது. இது நல்லதற்கான அறிகுறியாகப் படவில்லை. நேற்றுத்தான் அப்பாவும் மகனும் மோதப் பார்த்தார்கள். இன்றும் அப்படி எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று அஞ்சினார்.

சீறிக்கொண்டு வந்த வண்டியை நிறுத்திய கணத்திலேயே, “கண்டதுகளையும் என்னத்துக்கு வீட்டுக்கு எடுக்கிறீங்க அம்மம்மா?” என்று எரிந்து விழுந்தான் சஞ்சயன்.

“நாங்க வெளில போகத்தான் சொன்னது. உன்ர அப்பாதான் கூப்பிட்டு இருத்தினவர்.” அவன் இருக்கும் தைரியத்தில் தாயை முந்திக்கொண்டு பதில் சொன்னார் பிரபாவதி.

“நேற்று வாங்கிக் கட்டினது காணாது போல! எவ்வளவு தைரியம் உனக்கு!” வேகமாகச் சஹானாவை நெருங்கினான் அவன்.

அவனைவிட வேகமாக அவளுக்கு முன்னால் வந்துநின்று அவனைத் தடுத்தார் அரவிந்தன். அவரோடு அகிலனும் சேர்ந்துகொண்டான். “தம்பி நீங்க படிச்ச பிள்ளை. கொஞ்சம் பொறுமையா இருங்கோ. அவசரப்பட்டுப் பிழை செய்யாதீங்கோ!” தன்மையாகச் சொன்னார் அரவிந்தன்.

“இங்க ஒருத்தரும் உங்கட அறிவுரைக்காகக் காத்திருக்கேல்ல! நடவுங்க வெளில! இனிமேல் இந்தப் பக்கம் வரக் கூடாது!” முகத்தில் அடித்தாற்போல் சொன்னான் அவன்.

“ஏன் வரக் கூடாது? முதல் அதைச் சொல்ல நீ ஆரு? உனக்கு இந்த வீட்டுல என்ன உரிமை இருக்கோ அதேயளவு உரிமை அவளுக்கும் இருக்கு.” என்றார் அவ்வளவு நேரமாக அமைதியாக இருந்த சிவானந்தன்.

“குடும்ப மானத்தையே வாங்கிக்கொண்டு எவளோ ஒருத்தியை கூட்டிக்கொண்டு ஓடிப்போன அந்த ஆளின்ர மகளும் நானும் உங்களுக்கு ஒண்டா தெரியுதோ?” அவனின் சீற்றம் பெருகிப் போயிற்று.

“என்ன வித்தியாசம்? அதைச் சொல்லு!” இருந்த இடத்திலிருந்து அசையாமல் கேட்டவரைப்பார்த்து ஏளனமாகச் சிரித்தான் அவன். “அதுசரி! அவர் ஓடினதால தானே நீங்க இங்க குந்தியிருந்து ராஜாங்கம் பண்ணுறீங்க! அதால நீங்க இவளுக்காகக் கதைக்கத்தான் வேணும். கதைங்க!” என்றான் நக்கலாக.

நொடியில் விழிகள் இரண்டும் இரத்தமெனச் சிவந்துவிட, தன் கட்டுப்பாட்டை இழந்துபோனார் சிவானந்தன். “யாரப்பாத்து என்னடா கதைக்கிறாய்?” என்று கர்ஜித்தபடி எழுந்த வேகத்தில் அவர் அமர்ந்திருந்த நாற்காலி பின்னால் பறந்தது. நேற்று நடக்காதது இன்று நடந்தேறிவிடுமோ என்று நடுங்கியே போனார் தெய்வானை.

பிரபாவதிக்கும் மகனை வரவழைத்தது தவறோ என்று இப்போது ஓட, “தம்பி! பேசாம இரு!” என்றார் அவசரமாக.

“அத அந்தாளிட்ட சொல்லுங்க! கண்டதுகளுக்கும் முன்னால பெத்த பிள்ளையைக் கேவலப்படுத்துறார்!” எரிந்து விழுந்தான் அவன்.

“என்னடா அந்த ஆள்? நான் இல்லாமத்தான் நீ வந்தியா இல்ல குந்தி பெத்த மாதிரி உன்ன பெத்தவளா உன்ர அம்மா?” எனும்போதே, “ஐயோ தம்பி! வார்த்தைகளை விடாதீங்கோ!” என்று மருமகனிடம் ஓடிப்போய்க் கெஞ்சினார் தெய்வானை.

நொடியில் முகம் அவமானத்தில் சிவந்துவிட, விழிகளால் அவரை எரித்தவனைப் பொருட்டிலேயே எடுக்காது, “எல்லாத்துக்கும் நீங்கதான் மாமி காரணம்! நீங்க குடுத்த செல்லம் தான் இண்டைக்கு இந்தளவுக்கு வளந்து நிக்குது!” என்று அவரிடமும் காய்ந்தார் சிவானந்தன். “மாமாக்காகப் பாக்கிறன்! இல்ல… நடக்கிறதே வேற!”

தெய்வானைக்கு வெளிப்படையாகவே கைகால்கள் நடுங்கத் துவங்கிற்று! எல்லாம் இவளால் என்று அவரின் கோபம் முழுமையாகச் சஹானாவிடம் திரும்ப,

“அம்மா தாயே! போதுமடியம்மா போதும்! உன்ர அப்பன் முப்பது வருசத்துக்கு முதல் என்ர மகளின்ர வாழ்க்கைய கெடுத்தான். இப்ப நீ வந்து என்ர பேரன்ர வாழ்க்கையை நாசமாக்கிப் போடாத! நீ எதுக்கு வந்தியோ ஏன் வந்தியோ எனக்குத் தெரியாது. ஆனா என்ர குடும்பத்த குலைச்சுப் போடாத! உன்ன கெஞ்சிக் கேக்கிறன் எங்களை விட்டுடு!” என்று அவர் கையெடுத்துக் கும்பிடவும் அப்படியே நின்றுவிட்டாள் சஹானா.

மளுக்கென்று விழிகளில் நீர் சூழ்ந்தது. என்ன வார்த்தைகளைச் சொல்லிவிட்டார்? அவரின் குடும்பத்தைக் குலைக்க வந்தாளா அவள்? அது அவரின் குடும்பம் என்றால் அவள் யார்?

அரவிந்தனுக்கு மனது விட்டுப்போயிற்று. ஒரு சிறு பெண்ணை எந்தளவுக்குத்தான் காயப்படுத்துவார்கள்? “வாம்மா போவம்!” என்று சஹானாவை அழைக்க, “ஒரு நிமிசம்!” என்றார் சிவானந்தன்.

அப்படி அவர்களைத் தடுத்தவரின் முகத்தில் ஏதோ முடிவெடுத்துவிட்ட தீர்க்கம்.

தெய்வானை அம்மாவை நிதானமாக நோக்கி, “அவள் இங்க இருக்கிறவரைக்கும் இந்த வீட்டுக்கு வந்து போவாள். அத யாரும் தடுக்கக் கூடாது! தடுத்தால், என்ர சொல்லுக்கு மதிப்பில்லாத இந்த வீட்டில இருக்கிறதைப் பற்றி நான் யோசிக்கவேண்டி வரும்!” என்று அறிவித்துவிட்டு, வீட்டுக்குள் சென்று மறைந்தார்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock