அவர்கள் வீட்டு வாசலைத் தொட்டதும் என்ன முயன்றும் முடியாமல் சஹானாவின் கால்கள் தடக்கியது. நேற்றைய தினம் ஒரு வினாடி கண்களில் வந்துபோக, அரவிந்தனைத் திரும்பிப் பார்த்தாள்.
“மாமா நான் பக்கத்தில நிக்கிறன். என்ன பயம்? வா, அப்பிடி என்னதான் செய்வினம் எண்டு பாப்பமே!” அவளின் கரம் பற்றி அழைத்துக்கொண்டு நடந்தார் அரவிந்தன்.
நேற்றுப்போன்று யாரையுமே வீட்டின் வெளியே காணவில்லை. எனவே, “வீட்டுக்காரர்!” என்று குரல் கொடுத்தார்.
சற்று நேரத்திலேயே, “ஓம்…! ஆரு?” என்ற இளங்குரலைத் தொடர்ந்து வந்து கதவைத் திறந்தாள், சஞ்சனா.
இவர்களைக் கண்டதுமே ஒருகணம் தடுமாறினாலும் முகம் பூவாக மலர்ந்துபோயிற்று. சஹானாவின் சோர்ந்து வீங்கியிருந்த முகத்தையும், தடித்துச் சிவந்திருந்த கழுத்தையும், கைகளில் தெரிந்த சிராய்ப்பையும் கண்டு வேதனை கொண்டாள். தமையனின் செய்கைக்குக் கண்களாலேயே வருத்தம் தெரிவித்தபடி, “வாங்கோ! உள்ளுக்கு வாங்கோ!” என்று வரவேற்றபடி கதவுகள் இரண்டையும் விரியத் திறந்தாள்.
இவள் யாரை இப்படி விழுந்தடித்துக்கொண்டு வரவேற்கிறாள் என்று யோசித்தபடி வந்த பிரபாவதி, அங்கே அரவிந்தனைக் கண்டதும் ஒருகணம் அப்படியே நின்றுவிட்டார்.
வாழ்க்கையில் என்றைக்குமே பார்த்துவிடக்கூடாது என்று நினைத்த ஒரு முகம்! மனதின் அடியாலத்திலிருந்து சபிக்கும் ஒருவன்! காலங்கள் கரைந்து போயிருந்தபோதும் மாறிவிடாமல் அவருக்குள் கணகணத்துக்கொண்டிருக்கும் நெருப்புக்குத் தீமூட்டிவைத்தவன்!
விழிகளில் கோபச்சிவப்பு ஏற, ஆத்திரமா ஆவேசமா இல்லை வெறுப்பா என்று பிரித்தறிய முடியாத ஆங்காரம் ஒன்று கிளம்பிற்று! படார் என்று மகளின் முதுகில் ஓங்கி ஒன்று போட்டார்.
“அம்மாஆ..!” அதைச் சற்றும் எதிர்பாராமல் முதுகை வளைத்துக்கொண்டு அலறியவளுக்கு வீட்டுக்கு வந்தவர்களின் முன்னே அன்னை செய்த அநாகரீகச் செயலில் கண்ணீர் பொங்கிற்று!
“ஐயோ அத்த..!” தன்னை மறந்து பதறினாள் சஹானா. இதெல்லாம் அவளுக்குப் பழக்கமேயில்லாதவை. திகைப்புடன் பிரபாவதியைப் பார்த்தாள்.
“ஏழு கழுதை வயசாகிட்டுது எருமை! இன்னும் ஆரை(யாரை) வீட்டுக்க விடவேணும் யாரை வாசலுக்கு வெளில நிப்பாட்டவேணும் எண்டு தெரியாது! கூப்பிட்டு நடுவீட்டுக்க இருத்துவியோ அறிவு கெட்டவளே!” என்று ஆங்காரத் தொனியில் கத்தியவர் இவர்களிடம் திரும்பினார்.
“திறந்த வீட்டுக்க நாய் நுழைஞ்ச மாதிரி கதவு திறந்திருந்தா கேட்டுக்கேள்வி இல்லாம நுழையிறதே? அநாதை கூட்டத்துக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்காதா? அதுதான் நேற்றே வெளில அடிச்சு துரத்தினது எல்லோ! பிறகும் என்னத்துக்கு வந்து நிக்கிறாய்?”
அவரின் பேச்சை அகிலனால் பொறுக்க முடியவில்லை. “யாரை பாத்து அநாதை எண்டு சொல்லுறீங்க? எங்கட அம்மா அப்பாக்கு மகன் நான் இருக்கிறன். கூடப்பிறந்த தங்கச்சி குடும்பம் இருக்கு. இண்டுவரைக்கும் சொந்தத்தைக் கைவிடாம சேர்ந்து சந்தோசமா வாழுறோம். உங்களை மாதிரி கூடப்பிறந்த சகோதரத்தை நாட்டைவிட்டு ஓட வைக்கேல்ல!” சினத்துடன் திருப்பிக்கொடுத்தான்.
“டேய்! என்னடா? நேற்று என்ர மகனுக்கு முன்னால பம்மிக்கொண்டு நிண்டுபோட்டு இண்டைக்குப் பொம்பிளைட்ட உன்ர வாய் வீரத்தை காட்டுறியோ? இப்ப என்ர மகன் வருவான். தைரியம் இருந்தா அவனிட்ட இதைச் சொல்லிப்பார்!” என்றார் எள்ளலாக.
அதற்கும் பதில் கொடுக்கப்போனவனின் கையைப்பற்றி அரவிந்தன் தடுத்தபோது, சிவானந்தனின் மோட்டார் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது.
‘கடவுளே.. இந்த நேரம் பாத்தா இந்த மனுசன் வரவேணும்..’ கணவரைக் கண்டதும் நடுக்கம் பிடித்தது பிரபாவதிக்கு.
எல்லோரும் அவர் பக்கமாகத் திரும்ப, சஹானாவும் வேகமாகத் திரும்பினாள். ‘அப்பாவின் ஆருயிர் நண்பர் இவர்தான்’ என்று மனது ஆர்ப்பரிக்க விழிகள் நெகிழ்வுடன் அவரையே மொய்த்தது.
வண்டியை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றிய சிவானந்தன் அரவிந்தனைக் கண்டுகொண்டார். ஒருவித இறுக்கத்துடன் கேள்வியாக நோக்கினார்.
தன் வரவை அவரும் விரும்பவில்லை என்று உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல், “இவள் பிரதாபன்ர மகள் சஹானா. உங்க எல்லோரோடையும் கதைக்கிறதுக்காகக் கூட்டிக்கொண்டு வந்தனான்.” என்றார் அரவிந்தன்.
சிவானந்தனின் பார்வை தன் புறம் திரும்பவும் உள்ளே ஒருவிதப் பயமும் படபடப்புமாக உணர்ந்தாள் சஹானா. மெல்லப் புன்னகைத்தாள். ‘அப்பாவைப் பற்றி ஏதாவது கேட்பாரா?’ ஆவலும் ஏக்கமும் பிறந்தது.
‘உன்ர அப்பா’ என்று மட்டும் அவர் ஆரம்பித்தாலே போதும். ‘அது மாமா’ என்று தொடங்கி அனைத்தையும் ஒப்பித்துவிட்டுத் தேம்பித் தேம்பி அழுதுவிட அவள் ஏங்க, மௌனத்தைக் கடைப்பிடித்து அவளின் எதிர்பார்ப்பை அவரும் பொய்யாக்கினார்.
அவளின் அப்பா இங்கு யாருக்குமே பொருட்டில்லையா? நெஞ்சை அடைக்கும் தன் வேதனையை அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள் சஹானா.
சிவானந்தனோ, திரும்பிப் பிரபாவதியைக் கண்டிப்புடன் நோக்கினார்.
நேற்றைய நாளின் நினைவில் பிரபாவதிக்குக் கைகால்கள் எல்லாம் நடுங்கியது. ‘என்ன நரக வாழ்க்கையடா!’ என்றுதான் அந்த நொடியில் நினைத்தார். இறந்தகாலத்தில் மனதில் நினைத்தவனும் நிகழ் காலத்தின் கணவனும் கண்முன்னே அருகருகே!
கருத்தொருமித்த இல்லறம் அமைந்திருக்க இதையெல்லாம் சில விரும்பத்தகாத நினைவுகளாக ஒதுக்கித் தள்ள முடிந்திருக்குமாயிருக்கும். ஆனால், இன்றுவரை அதன் எச்சங்கள் இருக்கையில் மிகுந்த வெறுப்பாய் உணர்ந்தார்.
முற்றத்தில் ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்துப் போட்டு, “இருங்கோ!” என்று பொதுவாகச் சொன்னார் சிவானந்தன். மகளின் புறமாகத் திரும்பி, “குடிக்கிறதுக்கு ஏதாவது கொண்டு வாம்மா!” என்றுவிட்டுத் திரும்பியவரின் விழிகள் சஹானாவிடம் நிலைத்தது.
“சுகமா இருக்கிறீங்களா மாமா?” கரகரத்துப்போன குரலில் வினவினாள் சஹானா. அப்போதாவது ஏதாவது கேட்டால் அப்பாவைப் பற்றிச் சொல்லிவிடலாமே.
அவரின் தலை ஒருவித இறுக்கத்துடன் மேலும் கீழுமாக அசைந்ததே தவிர வார்த்தைகள் வெளிவரவில்லை. அவளின் சின்ன இதயம் ஏமாற்றத்தில் சுருண்டது.
பிரபாவதிக்கு வந்தவள் அந்தநாள் நினைவுகளைத் தட்டி எழுப்பி கணவருக்குள் புதைந்துகிடக்கும் பாசத்தைக் கிளறிவிடுவாளோ என்று பயம் வந்தது. அன்னையிடம் ஓடினார்.
‘உடையவன் பாராவிட்டால் ஒருமுழம் கட்டை’ என்பதில் தினமும் காலையில் தோட்டத்துக்குச் சென்று மேற்பார்வை பார்த்து, தன் வெண்கலக் குரலினால் வேலையாட்களை எல்லாம் அதட்டி உருட்டிவிட்டு வந்து உணவை முடித்துக்கொண்டு சும்மா தரையில் சரிந்த தெய்வானை அப்படியே உறங்கிப் போயிருந்தார்.
“அம்மா! எழும்புங்கம்மா!” வேகமாகத் தட்டி எழுப்பினார் பிரபாவதி.
“என்ன பிள்ளை?” நல்ல உறக்கத்தைக் கெடுக்கிறாளே என்கிற மெல்லிய சினத்துடன் சோம்பலாகக் கேட்ட அன்னையிடம் கணவனிடம் காட்டமுடியாத கோபத்தைக் காட்டினார் பிரபாவதி.
“என்னவோ? அதுசரி! உங்களுக்கு என்ன, நல்லா வாழ்ந்த சீமாட்டி நீட்டி நிமிந்து படுத்து எழும்புவீங்க! எனக்கு அப்பிடியா? கூடப்பிறந்தவனும் சீரில்ல நீங்க பாத்துக் கட்டிவச்சவனும் ஒழுங்கில்ல. வாழ்ந்த நாள்தான் நரகமா போச்சுது எண்டு பாத்தா இனி வாழப்போற நாளையும் நரகமாக்க வந்து நிக்கிறான் என்ர சந்தோசத்தையே அழிச்சவன். இந்த நேரம் பாத்து இவரும் வந்திட்டார். எனக்கு மட்டும் ஏன்தான் இப்பிடி எல்லாம் நடக்குதோ? சாகேக்க கூட என்னை நிம்மதியா சாக விடமாட்டானா அந்தக் கடவுள்.” என்று கண்ணைக் கசக்கவும் அன்னையின் மனது துடித்துப் போயிற்று!
“அறுவான்! என்னத்துக்கு வந்தவனாம்?” அந்த வயதிலும் விருட்டென்று எழுந்து அவிழ்ந்து விழுந்திருந்த கொண்டையை வேகமாக முடிச்சிட்டபடியே விறுவிறு என்று முற்றத்துக்கு நடந்தார்.
“டேய் முத்து! அறிவு கெட்டவனே! என்னத்துக்கு அந்தக் கேட்டை திறந்து வச்சிருக்கிறாய்? றோட்டால போற கண்ட கழிசடையும் வளவுக்க(காணிக்கை) நுழையிறது தெரியேல்லையே உனக்கு? இனி பூட்டிவச்சு யார் என்ன எண்டு விசாரிச்சு உள்ளுக்கு விடு!” அங்கே சற்றுத் தள்ளி ஆட்டுக்குத் தீனி வைத்துக்கொண்டிருந்த முத்துவை அதட்டினார்.
முகம் கருத்துப் போனது அரவிந்தனுக்கு. விழிகளில் சேர்ந்துவிட்ட நீருடன் தன்னைப் பார்த்த சஹானாவை பார்வையாலேயே அடக்கினார்.
“ஏன் மாமி உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது?” அமர்த்தலாகக் கேட்டார் சிவானந்தன்.
சட்டென்று நிதானித்தார் தெய்வானை. புலி பதுங்குவது பாயத்தான் என்று பழுத்த கிழவி அவருக்குத் தெரியாதா? என் மகளை வேண்டாம் என்றுவிட்டு இன்னொருத்தியைக் கட்டியவனை மதிக்கச் சொல்கிறாயா என்று கேட்க முடியாது. கேட்டால், இன்னும் அதை மறக்கமுடியவில்லையோ என்று கேட்பார். அது ஆபத்தில் முடியும்.
“கோவப்படாம? கொஞ்சச் சொல்லுறியளே? இந்த அநாதை கூட்டம் செய்த வேலையால உங்கட பெரியமாமா பட்ட பாட்டை எல்லாம் மறந்திட்டீங்க போல! இண்டு வரைக்கும் அவர் அனுபவிக்கிற துன்பத்தை தினம் தினம் பாத்துக்கொண்டுதானே இருக்கிறீங்க. பிறகும் இப்பிடி கேட்டா எப்பிடித் தம்பி?” ஆனானப்பட்ட சிவானந்தனையே மடக்கிப்போடும் வல்லமை தெய்வானை அம்மாவின் சாதுர்யம் மிகுந்த வார்த்தைகளுக்கு இருந்தது.


