அன்று மாலையே திரும்பவும் தன் தந்தையின் வீட்டுக்கு வந்தாள் சஹானா. அகிலனும் கூடவே வர, “நானே போவன் மச்சான்.” என்று மறுத்தாள்.
தனியாக அனுப்புவதற்குப் பயந்தார் அரவிந்தன். “மாமா! உங்கட மருமகளைப்பற்றி அவ்வளவு மோசமா நினைக்காதீங்க. இந்தச் சந்தியால திரும்பி மெயின் ரோட்டுக்குப்போய் அதுல இருக்கிற பிள்ளையார் கோவில் ரோட்டால திரும்பி..” என்று ஆரம்பித்தவள் அவர்களின் வீட்டுக்குச் செல்லும் பாதையை மிகத் துல்லியமாகச் சொல்லிமுடித்தபோது புருவங்களை உச்சிமேட்டுக்கு உயர்த்தியிருந்தார் அவர்.
“அகிலன் பாவம் தானே மாமா. என்னை விட்டுட்டுத் திரும்பி வரவேணும். பிறகு கூட்டுறதுக்கும் வரவேணும். வீண் அலைச்சல். வேலைக்கும் போகாம எனக்காக நிக்கிறார். நான் அங்கபோனதும் உங்களுக்கு மெசேஜ் அனுப்புறன்.” என்றுவிட்டு, ராகவியின் சைக்கிளில் தனியாகவே புறப்பட்டுச் சென்றாள்.
அவளின் தன்னம்பிக்கையை உடைக்கப் பிரியப்படவில்லை அரவிந்தன். கூடவே இது அவர்களின் ஊர். அவள் யார் வீட்டுப்பிள்ளை என்பதும் எல்லோரும் அறிந்ததே. வீண் பயம் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டவர், அவள் போய்ச்சேரும் நேரம் கணித்து அழைத்துக்கேட்டு அவள் போய்விட்டதை உறுதிப்படுத்திவிட்டே தன் வேலைகளைப் பார்க்கச் சென்றார்.
அங்கே வந்த இரண்டு முறைகளும் கிடைத்த மோசமான அனுபவத்தில் கால்கள் தயங்கின. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு உள்ளே நடந்தாள். “சஞ்சனா..” என்று மெல்லக் குரல் கொடுத்தாள்.
தொலைக்காட்சியில் மூழ்கி இருந்த சஞ்சனா குரலை இனம் கண்டு வெகு வேகமாக ஓடிவந்தாள். இவளைக் கண்டதும் முகம் மலர, “மச்சாள்! வாங்கோ வாங்கோ!” என்று வரவேற்றபடி கையைப்பற்றி உள்ளே அழைத்துப்போனாள்.
அந்த வீட்டில் விரும்பி வரவேற்கும் ஒரே ஒருத்தி. காலையில் இவளுக்காகத்தானே அவள் அடிவாங்கினாள். அந்த நினைவில், “சொறி மச்சாள்!” என்றாள் மன்னிப்பைக் கோரும் குரலில்.
கலகலவென்று சிரித்தாள் சஞ்சனா. “என்னவோ இதுக்கு முதல் நான் அடி வாங்கினதே இல்லை மாதிரி கதைக்கிறீங்க மச்சாள். இதெல்லாம் இங்க சாதாரணமப்பா!” என்று, நடந்ததைத் தூசுபோல் ஊதித் தள்ளினாள் அவள்.
“அத்தை, மாமா, அப்பம்மா எங்க?” கேள்வியாக இழுத்தபடி அவள் விழிகளைச் சுழற்ற, “எல்லா வில்லனும் வில்லியும் தோட்டத்துக்குப் போய்ட்டினம்!” என்று, ரகசியக்குரலில் விழிகளை உருட்டியபடி சொன்னாள் அவள்.
பொங்கிய சிரிப்பை அடக்கியபடி, “எல்லாரும் வரட்டும் பொறு போட்டுக்குடுக்கிறன்!” என்று இவளும் விழிகளை உருட்டினாள்.
“ப்பூ!” என்று கையாளும் முகத்தாலும் செய்து காட்டிச் சிரித்துவிட்டு வீட்டைச் சுற்றிக் காட்டினாள் சஞ்சனா.
பெரியவர்கள் இல்லாத அந்த வீடு இரு இளையவர்களுக்கும் மிகுந்த சந்தோசத்தைக் கொடுக்கவே அது அவர்களுக்குள் மிகுந்த நெருக்கத்தையும் உருவாக்கியது. சஹானாவும் அப்பா பிறந்து வளர்ந்த வீட்டை மனம் நிறையப் பார்த்தாள்.
முன்பக்கமாக இருந்தது பழையகாலத்து வீடு. அந்த வீட்டிலிருந்தே போகக்கூடியமாதிரி கொரிடோர் ஒன்றினை அமைத்துப் பின்பக்கம் இன்னொரு வீடு. அது மாடியுடன் புதிதாகக் கட்டப்பட்டிருந்தது.
“இதுதான் எங்கட வீடு மச்சாள். இங்க அம்மாவும் அப்பாவும் மட்டும்தான் இருக்கிறது. எங்களுக்கும் அறைகள் இருந்தாலும் நானும் அண்ணாவும் அம்மம்மாவோடதான் இருப்போம்.” என்று சுற்றிக் காட்டினாள்.
“அப்பப்பா?” உள்ளம் பரபரக்க வினவினாள் சஹானா.
“அமைதியா அவர் நித்திரை கொண்டு எழும்புறதுக்காகப் பின்னுக்கு இருக்கிற அறையில இருக்கிறார்.” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் அவளின் முகம் பார்த்து, “அதுதான் மாமா பாவிச்ச அறை.” என்றாள்.
“மாமா? அப்பாவ சொல்லுறியா?” என்றவளுக்குக் குரல் கமறிப்போயிற்று. அந்த வீட்டில் அவரை உறவாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு உறவு அல்லவா. “உனக்கு என்ர அப்பாவில கோவம் இல்லையா சஞ்சு?”
“அச்சோ மச்சாள்! என்ன இது?” என்று அவளை அணைத்துக்கொண்டு, “எனக்கு என்ர மாமாவில என்ன கோவம்? நான் அவரை இதுவரைக்கும் பாத்ததே இல்லையே எண்டுதான் கவலை. மாமா எப்பிடி இருப்பார்? அத்தை எப்பிடி இருப்பா? அவேக்குப் பிள்ளைகள் இருக்கா எண்டு நிறையநாள் யோசிச்சு இருக்கிறன். உங்களை எல்லாம் பாக்க ஆசையா இருக்கும். அந்தளவுக்கு இந்த ஊர்ல மாமாவைப்பற்றி யாரை கேட்டாலும் அருமையானவர் எண்டுதான் சொல்லுவினம்.” என்று அவள் சொன்னதைக் கேட்டவளுக்கு மிகுந்த நிறைவாய் போயிற்று.
“அவே சொன்னது எல்லாமே உண்மைதான் சஞ்சு. அப்பாவ மாதிரி பாசமான ஒரு ஆளை நீ பாக்கவே ஏலாது தெரியுமா?” என்றவள் வேகமாகத் தன் ஃபோனில் இருக்கும் தந்தையின் புகைப்படங்களை எடுத்துக் காட்டினாள்.
பார்த்தவள் நெஞ்சில் கையை வைத்து அதிர்ந்தாள். “அப்பிடியே அண்ணா. அம்மாடி…” நம்பமுடியாமல் திகைத்து நின்றுவிட்டாள் சஞ்சனா. “அண்ணா நிறமா இருந்தா மாமாவேதான்.” எப்படி இது சாத்தியம்? சிலருக்கு சாயல் இருக்கும் தான். அதற்கென்று இப்படியா? நம்பவே முடியாமல் அதையே திரும்பத் திரும்பச் சொல்லியபடி ரகுவரமூர்த்தி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.
கட்டிலில் படுத்திருந்தவரைக் கண்டவளுக்கோ நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. மின்னலாக வைத்தியசாலையில் இருக்கும் தந்தையின் நினைவுகளும் வந்துபோயிற்று. பஞ்சுப் பொதிகளைத் தலையில் சுமந்தபடி மிகுந்த வயோதிபத்தில் சுருண்டிருந்த உடலில் கூடாகிப்போயிருந்த நெஞ்சுப்பகுதி மட்டும் ஏறி இறங்கியது.
மெதுவாகச் சென்று அவரின் அருகில் அமர்ந்துகொண்டாள். மெல்ல அவரின் கரம் பற்றி வருடினாள். கண்ணீர் அது பாட்டுக்கு அரும்பிற்று! என்ன நோய் என்று கேட்டால் சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே இல்லை. வயோதிபமும் மனநோயும் தான் காரணம் என்றாள் சஞ்சனா.
“கதைக்கவே மாட்டாரா?” அறையை விட்டு வெளியே வந்து கேட்டாள் சஹானா.
“எனக்குத் தெரிஞ்சு முந்தியுமே தாத்தா பெருசா கதைக்கமாட்டார் மச்சாள். அம்மாவும் அம்மம்மாவும் சொல்லுவினம், மாமா ஓடி..” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் சஹானாவின் அடிபட்ட பார்வையில் துடித்து, “ஐயோ மச்சி! சொறி சொறி எல்லாரும் அதையே சொல்லிச் சொல்லி அதுவே என்ர வாயில வரப்பாத்திட்டுது போல. இனி சொல்லவே மாட்டன். சொறி மச்சி.” என்றவளை, “பரவாயில்ல. மேல சொல்லு!” என்றாள் சஹானாவும் தன்னைச் சமாளித்துக்கொண்டு.
“மாமாதான் எல்லாத்தையும் பொறுப்பா கவனிச்சு இருக்கிறார் போல. அப்பிடியான மாமா ஒருநாள் திடீரெண்டு இல்லை எண்டதும்.. தாத்தா தடுமாறிப்போனார் போல. அந்தக் கவலைதான் காரணம் எண்டு.. மாமாவில கோவிக்க அதுவும் ஒரு காரணமா போச்சுது.” இதெல்லாம் அவளை வருத்தும் என்று தெரிந்தாலும் தனக்குத் தெரிந்ததைத் தயங்கித் தயங்கிச் சொன்னாள் சஞ்சனா.
அதுவரை அப்பாவுக்காக மட்டுமே யோசித்தவளுக்கு அவர்களின் பக்கமும் புரிவது போலிருந்தது. ஆனபோதிலும், இளநீர் குடித்தவனை விட்டுவிட்டு கோம்பையைச் சூப்பியவனைத் தண்டிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
மாலைத் தேநீருக்கு நேரமாகிவிட்டதை உணர்ந்து, “மச்சி, தோட்டத்தில வேலை செய்ற எல்லாருக்கும் தேத்தண்ணி ஊத்தவேணும். வாங்கோ, ரெண்டுபேரும் செய்வம்.” என்று அழைத்தாள் சஞ்சனா.
“நீ போ சஞ்சு. எனக்கு அப்பப்பாக்குப் பக்கத்தில இருக்கவேணும் மாதிரி இருக்கு. இருந்திட்டு வாறன்.” என்றவள் அறைக்குள் சென்று அவரின் அருகில் அமர்ந்துகொண்டாள்.
அப்பா வாழ்ந்த அறையாமே. அதன் அடையாளங்கள் எதையுமே சுமந்திராமல் அப்பப்பாவின் மருத்துவப் பொருட்களோடு அவரை மட்டும் சுமந்தபடி வெறிச்சோடிப்போய்க் கிடந்தது அந்த அறை. தன்னை விட்டுவிட்டுப் போன மகனின் நினைவாகத்தான் அதே அறையில் இருக்கிறாரோ? இரண்டு நல்ல உள்ளங்கள் மிக ஆழமாகக் காயப்பட்டுப்போய் நிற்கிறார்கள். யாரும் புதிதாகக் காயப்பட்டுவிடாமல் இந்தக் காயத்தை எப்படி ஆற்றப்போகிறாள். ஆற்றியே ஆகவேண்டும் என்று மட்டும் எண்ணிக்கொண்டாள்.


