அறைக்குள் இருந்த சிவானந்தன் மகளை அழைத்தார்.
“என்னப்பா?”
“அம்மாவை வரச் சொல்லு!”
“அம்மா! அப்பா வரட்டாம்.” அவளும் வந்து சொல்ல, கலவரத்துடன் அன்னையையும் மகனையும் நோக்கினார் பிரபாவதி. மகன் நின்றதில் அழுகையும் வந்தது.
அன்னையின் கண்ணீர், ‘என்ன மனிதன் இவர்’ என்கிற வெறுப்பை உருவாக்க, “போகாதீங்கம்மா. என்ன செய்றார் எண்டு நானும் பாக்கிறன்!” என்றான் அவன்.
கொஞ்ச நாட்களாகவே தகப்பனிடம் முட்டிக்கொள்ளப் பார்க்கும் பேரனை எண்ணி மிகுந்த கவலையும் பயமும் கொண்டிருந்தார் தெய்வானை. அதற்கு வலுச் சேர்க்கிற விதமாக இன்றும் அவன் நடக்க, “தம்பி பேசாம போய்ப் பாக்கிற வேலையைப் பார்! அவேன்ர விசயத்துக்க நீ தலையிடாத!” என்று அவனை அங்கிருந்து விரட்டினார்.
சினம் பொங்க, “இப்பிடியே அவரை வச்சு ஓராட்டுங்கோ! கண்டறியாத மருமகன்! இண்டைக்கு மாதிரியே எல்லா நாளும் இருக்காது அம்மம்மா!” என்று எச்சரித்தான் அவன்.
நடுங்கிப்போனார் மூதாட்டி. “கோவப்படாத குஞ்சு! அவே மனுசனும் மனுசியும். இண்டைக்கு அடிபட்டாலும் நாளைக்கு ஒட்டிக்கொள்ளுவினம்! நாங்க அதுல எல்லாம் தலையிடக்கூடாது!” தகப்பனையும் மகனையும் சரிக்கட்டியே ஓய்ந்துபோனார் தெய்வானை.
இன்னும் அங்கேயே நின்ற பிரபாவதியைக் கண்டு, “நீ ஏன் இன்னும் நிக்கிறாய்? போய் என்ன எண்டு கேளு. கோபப்பட்டாலும் ஒண்டும் கதைக்காத.” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அறைக்குள் புகுந்த மனைவியிடம், “‘உன்ர அப்பன் என்ர மகளின்ர வாழ்க்கைய கெடுத்தான்’ எண்டு சொல்லுறா உன்ர அம்மா. அப்ப உன்ர சந்தோசம் நானோ பிள்ளைகளோ இல்ல. அவன்தான் போல..” என்று ஆரம்பித்தார் சிவானந்தன்.
வாயை இறுக்கி மூடிக்கொண்டு நின்றார் பிரபாவதி.
“அதுசரி! கல்யாணமான முதல் நாளே அவனை நினைச்சுக்கொண்டு என்னோட குடும்பம் நடத்தினவள் தானே நீ.”
அவரின் வார்த்தைகளில் குன்றிப்போனார் பிரபாவதி. என்ன, இதையெல்லாம் ஒருகாலத்தில் அவரே உதிர்த்தார் என்பதுதான் கசப்பான உண்மையாகப் போயிற்று!
“அது சரி! இத்தனை வருசமாகியும் எவனோ ஒருத்தனை மனதில வச்சிருக்கிறவள் தானே நீ! அதுதான் உன்ர அம்மா அப்பிடிச் சொல்லி இருக்கிறா. பிறகு என்னத்துக்கு என்னைக் கட்டி என்ர வாழ்க்கையையும் நாசமாக்கினாய்? அவனுக்காக நஞ்சை குடிச்ச மாதிரி எதையாவது செய்து இருந்தா நானாவது உன்னட்ட இருந்து தப்பியிருப்பன்!” என்று குதறத் தொடங்கியவரின் வார்த்தைகள் நாரசாரமாக அவரின் நெஞ்சை அறுத்தே போட்டது.
மகளை அனுப்பிவிட்டு வாசல் படியிலேயே அமர்ந்திருந்த தெய்வானை நொடியில் இன்னும் பலமடங்கு மூத்துப்போய்த் தெரிந்தார்.
“தெரியாத்தனமா இவனைக் கட்டி அவள் படுற பாடு இருக்கே ஆண்டவா உனக்குக் கண்ணில்லையா?” இரு கையையும் மேலே நோக்கி ஏந்தியவரின் மனமோ அந்த வயதிலும் ஆறாமல் கிடந்து பரிதவித்தது. “நானே என்ர பிள்ளையைக் கொண்டுபோய்ப் பாழும் கிணத்துல தள்ளிப்போட்டனே! அவள் எண்டைக்குச் சுகமா வாழ்ந்து நான் எண்டைக்கு அத பாக்கிறது?” சேலைத்தலைப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டார்.
“எல்லாம் அவனாலதான் வந்தது! இந்தக் குடும்பத்தின்ர சந்தோசத்தையே குழிதோண்டிப் புதைச்சிப்போட்டான்! அந்த மனுசன் நடக்கிற எதுவுமே தெரியாம கிடக்கிறார். என்ர பிள்ளை தினம் தினம் கண்ணீர் வடிக்கிறாள். பேரப்பிள்ளைகள் கல்யாண வாழ்க்கையையே வெறுத்துப்போய் வேண்டாம் எண்டுறாங்கள். இப்பிடி என்ர குடும்பத்தைச் சிதைச்சுப்போட்டு அவன் மட்டும் மனுசி பிள்ளை எண்டு சந்தோசமா வாழுறான். நாசமா போனவன் நல்லாவே இருக்கமாட்டான்!” அம்மம்மாவின் புலம்பலைப் பார்க்கமுடியாமல் ஆத்திரம் எல்லையைக் கடக்க, பெற்றவர் என்றும் பாராமல் தகப்பனுக்கு எதையும் செய்துவிடுவோமோ என்று பயந்து, விருட்டென்று அங்கிருந்து வெளியேறினான் சஞ்சயன்!
உள்ளம் மட்டும் வன்மம் கொண்டு வேட்டையாடும் வெறியோடு உறுமிக்கொண்டு நின்றது.
நிறைய நேரத்துக்குப் பிறகு வெளியே வந்த பிரபாவதியின் முகம் செத்துச் சுண்ணாம்பாகப் போயிருந்தது. எதையும் பேசும் திராணியற்றவராகக் கட்டிலில் விழுந்தார். பார்த்த தெய்வானையின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது.
இங்கே வீட்டுக்கு வந்ததும், “ஏன் சஹி பிரதாபனைப்பற்றிச் சொல்ல விடேல்ல?” என்று வினவினார் அரவிந்தன்.
“எவ்வளவுதான் கோபம் இருந்தாலும் அப்பா எப்பிடி இருக்கிறார் எண்டு அங்க இருந்த யாருமே ஒரு வார்த்தை கேக்க இல்லையே மாமா. சிவா மாமா கூடச் சஞ்சயன் மச்சானில இருந்த கோபத்திலதான் என்னை வரலாம் எண்டு சொன்னவரே தவிர அப்பாவுக்காக இல்ல. அப்பிடி இருக்க, அப்பாவைப்பற்றிச் சொல்லி அனுதாபம் தேட விருப்பமில்லை. அது என்ர அப்பாக்கு வேண்டாம். அவர் செய்தது பிழை இல்லை, சூழ்நிலைதான் அவரை அப்பிடி நடக்க வச்சது எண்டு தெரிஞ்சு அவே வரவேணும்.”
மெச்சுதலோடு நோக்கி, “என்ர தங்கச்சி அருமையாத்தான் பிள்ளை வளத்திருக்கிறாள். எனக்குப் பெருமையா இருக்கம்மா!” என்று அவளின் தலையை வருடிக்கொடுத்துவிட்டுச் சென்றார்.
அனைத்தையும் யாதவியிடம் பகிர்ந்துகொண்டவள் ரட்ணம் குடும்பம் பற்றியும் ஏதாவது தெரிந்ததா என்று கேட்டுக்கொண்டாள். இலங்கையில் இருந்துதான் பணம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்து அவளுக்கும் குழப்பம்.
“மாமா இங்க வந்தாரோ அம்மா?”
“என்ன எண்டு தெரிய இல்லையேம்மா? ஆனா அண்ணாக்குத் தெரியாம இந்தக் காசு எடுபட்டு இருக்காது.”
அப்படித்தான் என்று அவளுக்கும் புரிந்தது.
“நித்திய பற்றி ஏதும் தெரிய வந்ததாம்மா? அவன்ர மற்ற பிரெண்ட்ஸ விசாரிச்சனான். யாருக்குமே தெரிய இல்ல.” வாட்ஸ்அப் வழியாக விசாரித்ததைப் பகிர்ந்துகொண்டாள்.
அவன் பணிபுரிந்த அலுவலகத்தில் கேட்டும் யாரிடமும் தெளிவான பதில் இல்லை. அவசரமாக விடுமுறை எடுத்திருக்கிறான் என்று மட்டுமே தெரிவித்தனர்.
‘நித்தி, எங்கடா இருக்கிறாய்?’ பிறந்து, முகம் பார்க்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அரவணைத்துப் போன நண்பனின் அருகாமைக்காக அவளின் ஆழ்மனது மிகவுமே ஏங்கியது.
எங்கே இருக்கிறானோ? எப்படி இருக்கிறானோ? அவனுக்கும் ஏதும் இன்னல்களோ? அவள் உயிராய் நேசிக்கும் எல்லோருமே எங்கோ தொலைவில் இருந்து அவளை வதைத்துக்கொண்டிருந்தனர். தேடிவந்த சொந்தம் கூடத் துரத்தியடிக்கிறது. விழியோரம் அரும்பிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். கண்ணீர் எதற்கும் மருந்தல்லவே!
மகளுடன் அனைத்தையும் பகிர்ந்துகொண்டது யாதவிக்குச் சற்றே தெம்பளிக்க வங்கியில் அன்றைக்கே அப்பொய்ன்மெண்ட் வாங்கிவிட்டு மெயில்களைச் சரிபார்த்தார். பலர் பணம் வைப்புச் செய்துவிட்டதை அறிவித்துப் பதில் அனுப்பி இருந்தனர். மிகுதிப்பேர் வரும் நாட்களில் வைப்புச் செய்யப்படும் என்று தகவல் தந்திருந்தனர். ஒருசிலரிடம் இருந்து மட்டுமே பதில் இல்லை. அனைத்துத் தரவுகளையும் தனித்தனியே எடுத்து வைத்துக்கொண்டு, கணவரைச் சென்று பார்த்து வைத்தியரோடும் கதைத்துவிட்டு நேராக வங்கிக்குச் சென்றார்.
கணவரின் நிலையையும் சொல்லி, வைப்புச் செய்யப்பட்ட பணத்தையும் சுட்டிக்காட்டி, வைப்புச் செய்வதாகச் சொன்ன மெயில்களையும் காட்டினார். கூடவே, பணத்துக்கு விரைவாக ஏற்பாடுகள் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லி மேலும் கொஞ்ச நாட்கள் அவகாசம் தரும்படி கேட்டுக்கொண்டார்.
அவர்கள் நெதர்லாந்துக்கு வந்த நாட்களில் இருந்தே அதே வங்கி என்பதாலும் வங்கி மேலாளரைத் தனியாகக் கணவருக்கு நன்கு பழக்கம் என்பதிலும், “உங்களின் கணவரின் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தபோதும், வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் என்னால் இயங்க முடியும் திருமதி பிரதாபன்.” என்று தன்மையாகவே தன் நிலையை எடுத்துரைத்துவிட்டு,
“உங்களுக்கு வரவேண்டிய வரவுகளை உங்களின் பிரைவேட் எக்கவுண்டுக்கு வருகிறபடிக்கு அந்த எக்கவுண்ட் நம்பரை அவர்களுக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள். அந்தப் பணத்தோடு தேவையான மிகுதிப் பணத்தையும் பிரட்டி அதே பிரைவேட் எக்கவுண்டில் இருந்து முதலில் எப்படியாவது வீட்டு லோனை அடையுங்கள். அப்படிச் செய்தால் வீட்டுக்கு ஆபத்து வராது.” என்று ஒரு வழியைக் கண்டுபிடித்துச் சொன்னார் அவர்.
‘அட ஆமாம்! அப்படிச் செய்யலாமே!’ என்றுதான் யாதவியும் அந்த நிமிடத்தில் நினைத்தார். “நிச்சயமாக! அப்படியே செய்கிறேன்!” என்று, ஒரு வழி கிடைத்த ஆசுவாசத்தோடு உரைத்தார்.
“ஆனால், உங்கள் கணவரின் வங்கிக்கணக்கு மைனஸ் இல்லாது போகிறவரைக்கும் முடக்கப்பட்டுத்தான் இருக்கும். அப்படியே இனி வருகிற ‘பில்’களையும் கட்டமுடியாது. நீங்கள் தான் உங்களின் பிரைவேட் எக்கவுண்ட் மூலம் அவற்றைக் கட்டவேண்டும். போட்டுக்காக வாங்கிய லோனும் மாதா மாதம் கட்டவேண்டிய தொகைதான். அதையும் கவனித்துக்கொள்ளுங்கள்.” என்று அவர் சொன்னபோது கேட்டுக்கொண்டார்.
எந்தக் கடனையும் வங்கி தள்ளிப்போடவில்லைதான். ஆனால், எல்லாம் கைமீறிப் போய்விட்டதோ என்கிற பயத்தையும் பதட்டத்தையும் நீக்கி, இந்தப் பணப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்று நிதானமாகச் சிந்திக்கும் நிலைக்கு யாதவியைக் கொண்டுவந்தார்.
“அடுத்த மாதமும் பிறக்கப் போகிறது!” என்பதையும் நினைவூட்டி அனுப்பிவைத்தார் வங்கி மேலாளர். அதாவது, அடுத்த மாதத்துக்கான மின்சார பில்லில் இருந்து மாதாந்த தவணையாகக் கட்டவேண்டிய செலவுகளும் சேர்ந்துகொள்ளப் போகிறது என்கிறார்.