சந்தோசமாகக் கண்களை விரித்தாள் சஹானா. “என்னோட வருவியா? பிறகு உன்ர அண்ணா, அந்தக் கொம்பு முளைச்சவர் கத்த மாட்டாரா?”
அப்படிச் சொன்னவளை முறைத்தாள் சஞ்சனா.
“என்ன முறைப்பு?”
“அவர் என்ர அண்ணா!”
“இந்த டவுட் எனக்கும் இருக்கு!” என்றாள் பொங்கிய சிரிப்பை அடக்கியபடி. “உன்னை மாதிரி ஒருத்திக்கு அவரை மாதிரி ஒரு முரட்டுப் பீஸ் எப்பிடி அண்ணனா பிறந்தவர்? ம்ம்… எங்கயோ பிழை நடந்திருக்கு!” என்றவள் பெரிதாக யோசித்து அதற்கும் விடையைக் கண்டுபிடித்தாள். “ஹொஸ்பிட்டல்ல உன்னை மாத்தியிருக்கோணும் இல்ல அவரை மாத்தி இருக்கோணும்!” என்றவளை அடிக்கத் துரத்தினாள் சஞ்சனா.
“எவ்வளவு தைரியமடி மச்சாள் உனக்கு! என்னையும் என்ர அண்ணாவையும் சொந்தமே இல்லை எண்டு ஆக்கப்பாக்கிறியா? உன்ன…”
அடக்கமுடியாமல் பொங்கிச் சிரித்தபடி ஓடியபடியே, “உன்ன மாத்தியிருக்கச் சான்ஸ் இல்ல. ஏன் எண்டால் நீயும் என்னை மாதிரி வடிவா இருக்கிறாய். அந்தக் கருவாயன் தான் மாத்துப்பட்டிருக்க வேணும். என்னா கறுப்புடா சாமி!” என்று, இன்னுமே அவளைக் கடுப்பேற்றினாள் சஹானா.
“மச்சாள் இதோட நிப்பாட்டு! இல்லையோ வெளுப்பன் சொல்லிப்போட்டன்! என்ர அண்ணா ஒண்டும் அவ்வளவு கறுப்பு இல்ல. மாநிறம் தான். அதுவும் வெயிலுக்கத் திரிஞ்சு லைட்டா நிறம் மாறிட்டார்.”
“ஹாலோஹலோ…! உன்ர அண்ணா மாநிறமா? மாநிறம், மங்கலான நிறம், களையான கறுப்பு என்றதை எல்லாம் தாண்டி உன்ர கொண்ணா அட்டைக் கறுப்பு. கறுப்பு எண்டால் கறுப்பு சும்மா வெயிலுக்குச் சைன் பண்ற கறுப்பு. இதுக்க மாநிறமாம். ஏனடி உனக்கு இந்தப் பொய். உன்ர மனசாட்சிய தொட்டுச் சொல்லு நீ சொல்றது பொய்யா இல்லையா எண்டு.”
அவள் சொல்வது உண்மையாகவே இருந்தபோதும், காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.
“என்ர அண்ணா கறுப்பு எண்டாலும் களை தெரியுமோ? அவர் மேடைல கதைச்சா ஒருத்தி விடாம ஜொள் விடுவாளவே. அவரைச் சைட் அடிக்கிறதுக்கு எண்டே இந்த ஊருக்க ஒரு கூட்டம் இருக்கு!”
“அது என்னவோ உண்மைதான். உன்ர அண்ணா எப்படிக் கதைப்பார் தெரியுமோ?”
அவள் அப்படிக் கேட்டதும் கண்களை விரித்தாள் சஞ்சனா. “நீ பாத்து இருக்கிறியா?”
“அதுதான் காசில்லாம பாக்கலாமே. உன்ர கொண்ணர் பேசுபுக்குல நான் அங்க கதைச்சனான் இங்க கதைச்சனான் எண்டு எல்லா வீடியோவையும் எடுத்துப் போட்டிருக்கிறாரே. பிறகு என்ன?”
“அடியேய் மச்சாள். உனக்கு எப்படியடி தெரியும். அவரின்ர பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல ஒரு பெட்டையளும் இருக்க மாட்டாளாவையே. சேர்க்கவே மாட்டார். அதையும் மீறி லிஸ்ட்ல இருக்கிறதுகள் எல்லாம் குறைஞ்சது அவரை விடப் பத்து வயசு கூடினதுகள் தான். பிறகு எப்பிடியடி உள்ளுக்க போனாய்?”
“அதெல்லாம் ரகசியம்!” கண்ணைச் சிமிட்டிச் சொன்னாள் சஹானா.
“சொல்லடி மச்சாள்.”
“அதுவா… அகிலன் இருக்கிறான் எல்லா. அவனுக்கு உன்ர அண்ணாவில ஒரு லவ்…”
“ச்சை!” லஜ்ஜையுடன் சஹானாவின் முதுகிலேயே ஒன்று போட்டாள் சஞ்சனா.
“அதுக்கு நீயேன் மச்சி வெக்கப்படுறாய்? இப்பதானே ஆம்பிளையும் ஆம்பிளையும் கல்யாணம் கட்டீனம். அப்பிடிக் கட்டிவைப்பம். மற்றும்படி உன்ர கொண்ணாக்குக் கல்யாணம் நடக்கச் சான்ஸே இல்ல.”
அவள் சொல்வது உண்மைதான். ஆனால் அவன் வேண்டாம் என்று மறுப்பதன் காரணம் மட்டும் வேறு. அந்த நினைவில் அதுவரை இருந்த இனிமையின் சுருதி குறைந்து போயிற்று.
அதைக் கவனிக்காத சஹானா, “உன்ர அண்ணா எப்பிடி ஆரம்பிப்பார் தெரியுமா? வந்தாரை வாழவைக்கும் வன்னிப்பூமியிலிருந்து பேசுகிற நான் ஈழத்தமிழன் இளிச்சவாயன் எண்டுவார். இதச் சொல்லேக்க உன்ர அண்ணா பாப்பார் பார் ஒரு பார்வை. ஐம் அமெரிக்கப் பிரசிடெண்ட் ஓ…பாமா! என்ற ரேஞ்சில இருக்கும்.” அவள் சொன்ன விதத்தில் சஞ்சனாவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
சிரிப்பினூடே, “அதென்னடி ஓ…பாமா?” என்று வினவினாள்.
“ஒபாமா எண்டு சொல்லுறதை விட ‘ஓ…! பாமா’ கிக்காருக்கா இல்லையா. அத மாதிரித்தான் உன்ர அண்ணாவும் தன்ர பெயரைச் சொல்லுவார். இத சொல்லேக்க இடுப்பில கைய வச்சுக்கொண்டு பின் பக்கத்தால காலத் தூக்கி ஒருக்கா உயர்ந்துட்டு பதிவார். ஒவ்வொரு வார்த்தை முடியேக்கையும் நெஞ்சை ஒருக்கா நிமித்திட்டு இறக்குவார். படபட எண்டு நெஞ்சுல அடிக்காததுதான் குறை. பிறகு ஆரம்பிப்பார் பார்; மூத்தவர் வாழ்ந்த மண்! முத்தமிழைக் காத்த மண்! ஆத்தையும் அப்பனும் ஆடிப்பாடி மகிழ்ந்த மண். நேற்று வந்தவனின் பிடியில் சிக்குவதோ எண்டு தொடங்கினார் எண்டு வை அதுக்குப் பிறகு அய்யய்யோ என்ர மொழி போச்சே, அய்யய்யோ என்ர கலாசாரம் போச்சே, அய்யய்யோ என்ர உடுப்பு போச்சே, அய்யய்யோ என்ர செருப்பு போச்சே, அய்யய்யோ நான் அம்மணமா நிக்கிறன் எண்டுற ரேஞ்சுல கட்டுப்பாடே இல்லாம கத்தத் தொடங்கிடுவார். பிறகு எவனாவது தண்ணிப் போத்தலோட போய், ‘தம்பி அமைதி அமைதி. இந்தாங்கோ தண்ணிய குடியுங்கோ’ எண்டு முதுகுல தட்டி மலையிறக்கிப்போட்டு மைக்கப் பறிச்சிடுவாங்கள். நீ பாத்திருக்கிறியா, உன்ர அண்ணா கதைக்கிற எந்தச் சபைலையும் சனம் இருக்காது. பயத்தில ஓடிருங்கள்.” என்றவள் பேச்சைக் கேட்டுச் சிரித்துச் சிரித்து வயிற்றுவலி வந்திருந்தது சஞ்சனாவுக்கு.
அவனுடைய உடல்மொழி அப்படித்தான் இருக்கும். நான் தமிழன் என்று சொல்வதில் கர்வம் கொள்கிறவன். தமிழ் அவமானம் அல்ல அடையாளம் என்பான். சாதாரணமாக நடையில் கூட நெஞ்சை நிமிர்த்தித்தான் நடப்பான். கையில் எப்போதும் கிடக்கும் காப்பை அவன் இழுத்துவிடும் அழகே தனிதான்!
இடையில் கையிரண்டையும் பொருத்தி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு மேடைகளில் பேசுகையில் அவனுடைய தோள்கள் இரண்டும் தினவெடுத்து நிற்கும்! அந்தளவு உணர்ச்சி மிக உரை ஆற்றுவான். இன்றைய இளம் தலைமுறை ஆங்கில மோகத்தின் பின்னும், மேலைத்தேய நாகரீகத்தின் பின்னும் முன்னரைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்கு வேகத்துடன் ஓடுவதாகச் சொல்கிறவன், அதையெல்லாம் முடிந்தவரை தன் உரையில் கொண்டுவந்து அவர்கள் விடுகிற தவறுகளைச் சுட்டிக்காட்டுவான்.
உணர்வு மிகுந்த ஆழமான பேச்சு என்பதால் அவன் பேச்சைக் கேட்பதற்குச் சனம் அலைமோதும். அதை எப்படியெல்லாம் கேலிபேசுகிறாள் இவள். என்ன, கோபத்திற்குப் பதிலாக அவள் சொன்ன அழகில் கண்ணீர் வரச் சிரித்துக்கொண்டிருந்தாள் சஞ்சனா.
நேரமாவதை உணர்ந்து, “சரிசரி வா. சாரி வாங்கப் போவோம்!” என்று துரிதப்படுத்தினாள் சஹானா. அந்தரம் அவசரத்துக்கு இருக்கட்டும் என்று அவளின் ஃபோன் கவருக்குள் அரவிந்தன் வைத்துவிட்ட ஐயாயிரம் ரூபாய் தாள் இரண்டு இப்போது கைகொடுத்தது. கூடவே, ராகவியிடம் அழைத்துச் சொன்னாள்.
“நானும் வரவாம்மா?” என்று அவளைத் தனியாக அனுப்பப் பிரியப்படாதவரிடம், “உங்களுக்கு ஏன் சும்மா அலைச்சல் அத்தை. டவுன் பக்கத்தில தானே. சஞ்சுவும் வாறாள். தப்பித்தவறி லேட் ஆனா சொல்லுறன் அப்ப அகில் மச்சான வரச் சொல்லுங்கோ.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
ஒரு டைட் டெனிம் பாவாடை முழங்கால் வரை நிற்க அதற்கு ஏற்ற குர்தி ஒன்றையும் மாட்டிக்கொண்டு முனியம்மாவின் உச்சிக்கொண்டையுடன் வந்தவளைக் கண்டு, “வாவ்! மச்சி சூப்பரா இருக்கிறாய்!” என்று கண்ணை விரித்தாள் சஹானா.
“காசு மிஞ்சினா இப்படி ஒரு ஸ்கேர்ட் நானும் பாக்கப்போறன்.” என்றவளிடம்,
“அப்ப இண்டைக்கு நீ இதையே போட்டுக்கொண்டு வா மச்சி. நான் உன்ர ஜீன்ஸ் போடுறன். எனக்கும் ஜீன்ஸ் போடச் சரியான விருப்பம். அண்ணா கண்டா கத்துவார் தான். ஒரு நாளைக்குத்தானே கத்தட்டும்!” என்று கண்ணைச் சிமிட்டி நாக்கை நீட்டிக் காட்டினாள் அவள்.
மின்னலே என்று இரு பெண்களும் உடையை மாற்றிக்கொண்டு கடைக்குச் சென்று, சஹானாவுக்குப் பிடித்த நிறத்தில் எளிமையும் அழகும் குவிந்திருந்த சேலையை எடுத்து அதற்கு உள்பாவாடை, பிளவுசுக்கு லைனிங் துணி, கூடவே அதற்குப் பொருத்தமான நகைகளும் பார்த்துப் பொறுக்கிக்கொண்டு வந்து அவர்களின் ஊரிலேயே இருக்கும் தையல் அக்காவிடம் அளவும் கொடுத்துவிட்டு நாளைக்கு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தனர்.


