பிரதாபனின் வீட்டில் சஹானாவுக்கு நாளாந்தம் வெறுப்பும் உதாசீனமும் சுடுசொற்களும் மாத்திரமே கிடைத்தது. தன் தந்தை பக்கத்து நியாயத்தை எவ்வளவோ எடுத்துச் சொல்ல முயன்றும் யாருமே அசைய மறுத்தனர். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று காது கொடுத்துக் கேட்பதற்குக் கூடத் தயாராயில்லை.
அப்பா அந்த முடிவை விரும்பி எடுக்கவில்லை. அந்த நிலைக்குத் தள்ளப்பட்டார். அத்தை நடந்தவற்றை விளங்கிக் கொண்டிருந்தால் அப்பாவும் இங்கே இருந்திருப்பார். அவரும் உங்களை எல்லாம் விட்டுப் பிரிந்துசென்று அங்கு ஒன்றும் சந்தோசமாக இல்லை; அவரும் வருந்துகிறார் என்று என்ன சொல்லியும் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகத்தான் போயிற்று.
இதற்குமேலும் எதை எப்படி விளக்குவது என்று தெரியாது திகைத்தாள் சஹானா. அழுகை, கெஞ்சல், மன்னிப்பு, யாசகம் என்று அவளுக்குத் தெரிந்த எந்த வழியில் சென்றாலும் முகத்திலேயே கதவடைத்தனர்.
தெய்வானையை அவளால் தனியாகப் பிடிக்க முடிவதே இல்லை. கிட்டத்தட்ட அன்னையை அடை காத்தார் பிரபாவதி. அப்படியும் அவர் சாப்பிட வீட்டுக்கு வந்த ஒரு பொழுது தோட்டத்துக்கு நடந்துகொண்டிருந்தவரிடம் ஓடிவந்து நின்றாள் சஹானா. “அத்தையைப் பற்றி உங்களுக்கே தெரியும் தானே அப்பம்மா. தான் நினைச்சது நடக்கோணும் எண்டுறதுக்காக என்னவும் செய்வா. அப்பா அம்மாவை கட்டி இதே ஊர்ல இருந்தா அந்தக் கோபத்தில தன்ர உயிருக்கே ஏதும் செய்தாலும் செய்துபோடுவா எண்டுற பயமும் தான் அப்பா போக க் காரணம். சிவா மாமாட்டையும் அத்தையை கட்டவேணும் எண்டு சொல்லிப்போட்டுத்தான் போனவாரம். இதையெல்லாம் சொல்லி அத்தையை இன்னும் நோகடிக்க எனக்கு விருப்பம் இல்லை அப்பம்மா. அதுதான் உங்களிட்ட மட்டும் சொல்லுறன். அப்பாவை மன்னிக்க மாட்டீங்களா அப்பம்மா. அவர் அவர் அங்க ஹொஸ்..”
“ஏய்! நிப்பாட்டடி உன்ர கதையை! உன்ர அப்பனுக்கு கூடப்பிறந்தவளின்ர சந்தோசத்தை விட உன்ர ஆத்த முக்கியமா பட்டிருக்கிறாள். அத வந்து நீ என்னட்ட சொல்லுறியா? ஒழுங்கான அண்ணனா இருந்தா தன்ர சந்தோசத்தை தூக்கி எறிஞ்சிபோட்டு தங்கச்சிக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு குடுத்திருப்பான். அவன் கெட்டவன். பொம்பிளைக்கு பின்னால ஓடினவன். அவனை பத்தி என்னட்ட வந்து கதைக்காத!” என்று அவளைத் தள்ளி விட்டுவிட்டு விறுவிறு என்று நடந்துபோனார் தெய்வானை.
சஹானாவுக்கு என்ன செய்வது என்று தெரியவே இல்லை. கலங்கி நின்றாள்.
‘பிரதாபன் துரோகம் இழைத்துவிட்டான்’ என்கிற அவர்களின் முடிவிலிருந்து மாற மறுத்தனர். அதுவும் பிரபாவதி தன் வாழ்க்கையை அழித்த நாசக்காரன் என்றே குறிப்பிட்டார். இத்தனை பிடிவாதம் கூடாது என்று சின்னப்பெண் அவளே நினைக்கிற அளவில் அவர்களின் கோபமும், பிடிவாதமும் இருந்தது.
சிவானந்தனோடு பேசலாம் என்றால், அன்றைக்குப் பிறகு அவரை அவள் பெரிதாகச் சந்திக்கவே இல்லை. தினமும் காலையில் நான்கு மணிக்கே தோட்டத்துக்குப் போகிறவர், மத்தியானத்தில் உணவை முடித்துக்கொண்டு சற்றுநேரம் ஓய்வு எடுத்துவிட்டு மருந்து வாங்க, உரம் வாங்க என்று புறப்பட்டால் மீண்டும் தோட்டத்தைக் கவனித்து வீடு வரும்போது இரவு பத்தைத் தாண்டிவிடுமாம் என்று சஞ்சனா சொல்லக் கேட்டு இருக்கிறாள். எப்போதாவது எதேர்ச்சையாகச் சந்திக்க நேர்ந்தாலும் அவரின் முகத்தில் இருக்கும் கடினம், அந்த விழிகளில் தெரியும் விலகல், அவள் இருக்கிறாள் என்று பொருட்படுத்தாமல் கடந்துபோகும் பாங்கு எல்லாமே அவளையும் அவரை நெருங்கவிடாமல் தயங்க வைத்தது.
இருந்தாலும் ஒரு நாள் அவரின் முன்னே சென்று நின்று, “மாமா, அப்பா..” என்று ஆரம்பிக்கையிலேயே கையை நீட்டித் தடுத்தார் அவர்.
“நீ சின்னப்பிள்ளை. உன்னட்ட என்ன கதைக்கிறது எண்டு எனக்கு ஒண்டும் விளங்க இல்ல. கதைக்கவும் ஏலாது. இங்க நிக்கிற வரைக்கும் சந்தோசமா நிண்டுட்டு போ!” என்றுவிட்டுப் போனார் அவர்.
சஞ்சனா ஒருத்திதான் இவள் மீது அன்பைப் பொழிகிறவள். இருவருமே நன்றாக அரட்டை அடிப்பார்கள்; அலுக்கும் வரை ஊரைச் சுற்றுவார்கள். இளநீர் பிடுங்கிக் குடிப்பதாகட்டும், சமைக்கிறோம் என்று பாத்திரங்களைப் போட்டுப் பந்தாடுவதாகட்டும், முற்றம் கூட்டுகிறோம் என்று விளக்குமாற்றினால் அடிபடுவதாகட்டும் என்ன என்று இல்லாமல் விளையாட்டும் குதூகலமுமாகப் பொழுதுகள் நகரும்.
அயலட்டை மனிதர்களும் அவளைக் கண்டு ஆவலாக விசாரித்தனர்.
“பிரதாபனின்ர மகளாம்மா நீ?” என்று குறுகுறுப்புடன் விழிகளால் அவளையே மொய்ப்பது,
“பிரதாபனுக்கு நீ மட்டும் தானா?” என்று குடும்ப விபரம் அறிவது,
“ஃபோட்டோ காட்டுப் பாப்பம், அவனைப் பாத்து எத்தனை வருசமாச்சு?” என்று ஆவலாகப் பார்ப்பது,
“உன்ர அம்மாவை ஒருக்கா கண்ணில காட்டு” என்பது,
“அவன் எல்லாம் இப்பிடி செய்வான் எண்டு கனவில கூட நினைக்கேல்ல நாங்க. எங்க எண்டாலும் நல்லா இருந்தா சரிதான்!” என்று வாழ்த்துவது,
“பொம்மைக் குட்டி மாதிரியே இருக்கிறாயம்மா. ஏன் உன்ர அம்மாவும் அப்பாவும் வரேல்ல?” என்று விசாரிப்பது,
பிரதாபனின் இளமைக்காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை அவளிடம் பகிர்ந்துகொள்ளும்போது அவர்களும் இரைமீட்டுவது என்று சுற்றியிருந்தவர்களின் மத்தியில் அவளுக்கு மிகுந்த வரவேற்புத்தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக அப்பாவுக்குத் தங்கை முறையான ஒரு பெண்மணி, “நான் உனக்கு அத்தை முறையம்மா. என்ர சின்ன மகளுக்குச் சாமத்தியவீடு(பூப்புனித நீராட்டுவிழா) வச்சிருக்கிறன். நீயும் வரவேணும்!” என்று அன்புடன் அழைத்தபோது, நெகிழ்ந்தே போனாள் சஹானா.
அப்பாவின் பிறந்தவீடு வெறுத்து ஒதுக்கினாலும் சுற்றியிருக்கும் சொந்தங்கள் ஒதுக்கிவிடவில்லை. எப்போது என்று விசாரித்து, அவள் கொழும்பு புறப்படும் நாள் என்றதும் வருவதாக முகம் மலரத் தெரிவித்தாள்.
மனதுக்குள் ஒரு உற்சாகம் குமிழியிட்டது. பின்னே, அவளின் வாழ்நாளில் இரத்த உறவு ஒன்றின் விழாவில் கலந்துகொள்ளப் போகிறாளே!
அதற்கு அணிந்துகொள்ளச் சேலை இல்லை என்றதும், என்ன செய்யலாம் என்று சஞ்சனாவிடம் விசாரித்தாள் சஹானா.
“யாழ்ப்பாண டவுனில சாரி வாங்கலாம் மச்சாள். இன்றைக்கே வாங்கி சாரிபிளவுஸ் தைக்கக் குடுத்தா நாளைக்கு விடிய தைச்சுத் தருவினம்.” என்றாள் அவள்.
“அப்ப அத்தையைத்தான் பிடிக்கவேணும்.”
“ஏன்? நாங்களும் தான் செலக்ட் பண்ணுவோம். எங்களை எல்லாம் கூட்டிக்கொண்டு போகமாட்டீங்களோ?” கேலிபோல் கேட்டாள், சஞ்சனா.
சந்தோசமாகக் கண்களை விரித்தாள் சஹானா. “என்னோட வருவியா? பிறகு உன்ர அண்ணா, அந்தக் கொம்பு முளைச்சவர் கத்த மாட்டாரா?”
அப்படிச் சொன்னவளை முறைத்தாள் சஞ்சனா.
“என்ன முறைப்பு?”
“அவர் என்ர அண்ணா!”
“இந்த டவுட் எனக்கும் இருக்கு!” என்றாள் பொங்கிய சிரிப்பை அடக்கியபடி. “உன்னை மாதிரி ஒருத்திக்கு அவரை மாதிரி ஒரு முரட்டுப் பீஸ் எப்பிடி அண்ணனா பிறந்தவர்? ம்ம்.. எங்கயோ பிழை நடந்திருக்கு!” என்றவள் பெரிதாக யோசித்து அதற்கும் விடையைக் கண்டுபிடித்தாள். “ஹொஸ்பிட்டல்ல உன்னை மாத்தியிருக்கோணும் இல்ல அவரை மாத்தி இருக்கோணும்!” என்றவளை அடிக்கத் துரத்தினாள் சஞ்சனா.
“எவ்வளவு தைரியமடி மச்சாள் உனக்கு! என்னையும் என்ர அண்ணாவையும் சொந்தமே இல்லை எண்டு ஆக்கப்பாக்கிறியா? உன்ன..”


