வழமையாகப் பிரதாபன் போட்டுகளை விற்பனைக்குப் போடும் இணையத்தளத்தில் வாங்கிய போட்டினை ஏற்கனவே அதே விலைக்குப் போட்டிருந்தார் யாதவி.
தற்போதைய நிலையில் அவருக்கு இலாபத்தைவிட, அதை விற்றால் வரும் 30000 யூரோக்களே அதிமுக்கியமாகத் தெரிந்தது.
இன்று, ஒருவர் விலை பற்றிப் பேசவேண்டும் என்று தகவல் அனுப்பியிருக்க, உடனேயே அவரோடு கதைப்பதற்கு நேரத்தைக் குறித்துவிட்டு அந்த நேரத்துக்கு அழைத்தார்.
சற்றுநேரம் இவர் இறங்கி வராமலும் அவன் ஏறி வராமலும் என்று விலை நிர்ணயிப்பு இழுபறிப் பட்டது. ஒருவழியாக அவன் சொன்ன தொகையிலிருந்து சற்றே ஏறி வர, இவரும் இறங்கிவர தன் அவசரத்தைக் காட்டிக்கொள்ளாமல் சாதுர்யமாக 28000 யூரோக்களுக்குப் பேசி முடித்தார். ஒன்லைன்(online) வாயிலாக வங்கியில் முற்பணம் உடனடியாக வைப்பும் செய்யப்பட, பத்திரப் பெயர் மாற்றத்துக்காக நாளையும் குறித்து முடித்தார் யாதவி.
அவரின் வாழ்வில் அவரே தனியாக நடாத்தி முடித்த முதல் வெற்றிகரமான வியாபாரம். இரண்டாயிரம் யூரோக்கள் நட்டம் என்றாலுமே அதைக்காட்டிலும் வரப்போகிற 28000 யூரோக்கள் இன்றைய நிலையில் மிகப்பெரிய வரவாகவே தெரிந்தது. ஒன்றில் விட்டு இன்னொன்றில் பிடிப்பதுதானே வியாபாரத்தின் தாரக மந்திரமே!
உடனேயே வங்கி மனேஜருக்கும் அழைத்து அதைத் தெரியப்படுத்தியபோது, “திருமதி பிரதாபன்! நீங்கள் மிகவுமே புத்திசாலிப் பெண்மணி! சமாளித்துவிடுவீர்கள்!” என்று அவர் வாழ்த்தியது நிறைவையும் தெம்பையும் தந்தது.
அடுத்த வாரத்தில் போட் வாங்கியவன் முழுப்பணத்தையும் வைப்புச் செய்துவிடுவான். இன்னும் ஒரு காரையோ அவர்களின் போட்டையோ விற்றுவிட வேண்டியதுதான். இல்லை என்றாலும் பரவாயில்லை. பிரதாபன் வாங்கிப்போட்டிருக்கும் அப்பார்ட்மெண்ட்டுகளில் ஒன்றை என்றாலும் கொடுத்துவிடலாம். இனிச் சமாளித்துவிடலாம். பணச்சிக்கல் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட நிம்மதியோடு கணவரைப் பார்க்கச் சென்றார் யாதவி.
—————————-
இரவு நன்றாக நேரம் சென்ற பிறகுதான் வீட்டுக்கு வந்தான் சஞ்சயன். அவனைப் பாராமல் கதவைத் திறந்துவிட்டாள் சஞ்சனா. அவன் விழிகளோ தடுமாற்றத்துடன் அவளின் முகத்தை ஆராய்ந்தது.
அடையாளம் எதுவும் இல்லாதபோதும் அந்தப் பக்கத்துக் கன்னம் அதைத்திருந்தது. ‘பாவம்..’ இதுவரை இப்படிக் கை நீட்டியதில்லை. வேறு ஒரு எரிச்சலை, கோபத்தை இவள் மீது காட்டியிருக்கிறான். அதுவும் நியாயமே இல்லாமல்! வளர்ந்ததில் இருந்து அவனின் முகம் பார்த்துப் பசியாற்றுகிறவள். அப்படியானவளைப்போய் ப்ச்! தலையைக் கோதிவிட்டு, “இந்தா!” என்றான் ஒரு பார்சலை நீட்டி.
வாங்காது முகத்தைத் திருப்பிக்கொண்டு சமையலறைப் பக்கமாக நடந்தவளின் கையைப்பற்றி, “தொதல் இருக்குச் சாப்பிடு! உனக்கு விருப்பம் எல்லா!” என்று அவளின் கையில் அதைத் திணித்தான்.
அவன் சமாளிப்பது புரிந்தது. இன்னுமே அழுகை வரப்பார்த்தது அவளுக்கு. தமையன் தன் முகம் பார்த்துத் தயங்கி நிற்பதைப் பார்க்கவும் முடியவில்லை. ஆனாலும் இறுக்கத்துடனேயே அவனை நோக்கி, “இது எனக்கு. அவளுக்கு?” என்றாள்.
“அவளுக்கு நான் அடிக்கேல்ல!”
“அடிக்காட்டியும் அதுக்குச் சமனா ஏதாவது செய்து இருப்பீங்க!” குற்றம் சாட்டினாள் கூடிப்பிறந்தவள்.
தங்கையின் கோபத்துக்குப் பணிந்து பேசாமல் நின்றான் அவன்.
“ஜீன்ஸ் வெறும் உடுப்பு. அது போடுறதில என்ன இருக்கு? கை நீட்டி அடிக்கிறீங்க? அப்பான்ர குணம் உங்களுக்கும் வருதோ?”
அவன் முகம் அப்படியே கருத்துப் போயிற்று. இந்தக் கேள்வியைக் கேட்டுவிடுவாள் என்று பயந்துதான் நேரம் செல்லும்வரை வெளியே சுற்றிவிட்டு வந்தான். கேள்வி கேட்பதற்காகவே முழித்திருந்தவள் ஆயிற்றே அவள்.
“சொல்லுங்க அண்ணா!” என்று நின்றாள்.
அதற்குமேல் பொறுக்க மாட்டாமல், “எண்டைக்காவது உனக்கு நான் அடிச்சிருக்கிறேனா? இண்டைக்கு ஏதோ கோபத்தில.. அதுக்கு அப்பா மாதிரி எண்டு சொல்லுவியா?” என்றான் கோபமாக.
“வேற எப்பிடிச் சொல்லுறது? வெளில உங்களுக்கு ஆயிரம் பிரச்சனை எண்டா அது வெளியோட இருக்கோணும். வீட்டுக்க கொண்டு வாறதே பிழை. இதுல அடிக்கிறீங்க?”
“இனி செய்யமாட்டன். விடு!” என்றான் இறங்கிவிட்ட குரலில்.
நம்ப முடியாமல் தமையனைப் பார்த்தாள் சஞ்சனா. தன் இயல்படியே தொலைக்கும் அளவுக்கு என்ன நடக்கிறது இவனுக்குள்? “என்ன செய்றீங்க, உங்களுக்கு என்ன நடந்தது எண்டு ஒண்டும் விளங்கேல்ல அண்ணா. ஆனா, நடக்கிற எதுவுமே நல்லதுக்கு இல்ல. அது மட்டும் நல்லா தெரியுது.” என்றுவிட்டுப் போனாள் அவள்.
அவனுக்கும் புரிந்தது. ஆனால் அவன் என்னவோ நினைத்திருக்க நடந்துகொண்டிருப்பது என்னவோவாக இருந்து அவனின் நிதானத்தைப் பறிக்கிறதே!


