சஹானா முற்றிலும் மனமுடைந்து போயிருந்தாள். காயம் பட்டிருந்த கன்னம் வேறு விண் விண் என்று வலித்தது. திரும்பிய பக்கமெல்லாம் தோல்வி மாத்திரமே கிட்டியதில் தன் இயல்பைத் தொலைத்திருந்தாள்.
எப்போதும் விடிந்ததும், “அத்தை, அப்பா வீட்டுக்கு போயிட்டு வாறன்!” என்றுவிட்டு ஓடிவிடுவாள். இன்றோ அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். ராகவி அழைத்தும் வெளியே வரவில்லை. அம்மா அப்பாவிடம் போய்விடப் பிள்ளைமனம் துடியாய்த் துடித்தது.
“ஹல்லோவ்..! அறைக்க இருந்து முட்டையா இடுறாய்? வெளிக்கிடு வெளிக்கிடு வெளில எங்கயாவது போவம்!” என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தபடி வந்தான் அகிலன்.
அவளிடம் பதிலே இல்லை என்றதும், “காதும் போச்சா?” என்றான் குறும்புடன்!
அப்போதும் அசைய மறுத்தவளிடம், “எழும்பி வெளிக்கிடு சஹி!” என்றான் சற்றே அழுத்தி.
“நான் வரேல்ல!”
“ஏன்? ஏன்? ஏன்? வந்தா என்ன? வராம எப்பிடி இருக்கிறாய் எண்டு நானும் பாக்கிறன்! என்னோட அதுவும் இந்த அகிலனோட வரமாட்டன் எண்டு சொல்லுறதுக்கு உனக்கு எவ்வளவு தைரியம்?” அவனின் அதிகப்படியான பேச்சில் மெல்லிய சிரிப்பு ஒன்று உதயமாக, “மச்சான்!” என்றாள் அதட்டல் போன்று.
“மச்சான்தான்! உன்ர அகில் மச்சானே தான்! இந்த மச்சான் தான் சொல்லுறன், ஓடிப்போய்க் குளிச்சிட்டு வா. அறைக்குள்ள வரவே நாறுது!” என்று மூக்கைப் பொத்தினான் அவன்.
முறைத்தாள் அவள். “என்ன நக்கலா? நாங்க எல்லாம் ஒரு நாளைக்கு ரெண்டுதரம் குளிக்கிற ஆக்கள். உங்களை மாதிரி மாதத்துக்கு ஒருக்கா உடம்புக்குத் தண்ணி காட்டுற ஆக்கள் எண்டு நினைச்சீங்களா?” என்று சண்டைக்குப் போனாள் அவள்.
“ஓமோம்! நாறுற நாத்தத்திலேயே நீ சொல்லுறது எவ்வளவு உண்மை எண்டு தெரியுது!” விடாமல் வம்பு செய்தவனுக்குத் தலையணையை எடுத்து எறிந்தாள் சஹானா.
லாவகமாக அதைப் பற்றிக்கொண்டு அவளருகில் சென்று அமர்ந்தான். “மகாராணி எதைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கிறீர்கள்?” தணிவான அவன் குரலில் அவளின் பொய் முகமூடி அவிழ்ந்து விழுந்தது. கண்கள் தழும்பிவிட, “அம்மாட்ட போப்போறன்!” எனும்போதே கண்ணீர் மணிகள் உருண்டு விழுந்தன.
அவளின் தலையைப் பிடித்துச் செல்லமாக ஆட்டினான் அவன். “இன்னும் மூண்டு நாள்ல அங்கதான் நிக்கப்போறாய். சாவகச்சேரி லேடி டான் தெய்வானை ஆச்சியையே ஒரு ஆட்டு ஆட்டுற சஹி இப்பிடி சின்னப்பிள்ளை மாதிரி அழுறது பாக்க நல்லாவா இருக்கு? ம்? கண்ணைத் துடை! அங்க இருந்து இங்க தனியா வந்து, மாமாக்காக அவரின்ர வீட்டிலேயே போய்த் தைரியமா கதைச்சு இருக்கிறாய். அவே சமாதானம் ஆகுவீனமோ இல்லையோ ஆனா மனம் குத்தும். எண்டைக்கோ ஒரு நாளைக்குத் தாங்க செய்தது பிழை எண்டுறதை நிச்சயம் உணருவீனம் சஹி. உணர்ந்து அவேயே கதைக்க வருவீனம். என்ன, அதுக்கு நாங்க கொஞ்சம் டைம் குடுக்க வேணும். அவ்வளவும் தான்! இனி அழுறேல்ல. சும்மாவே இந்த முகத்தைப் பாக்கேலாது. இதுல அழுதா மெகா கன்றாவியா இருக்கு. பிளீஸ் போய்க் குளிச்சிட்டு வா!” மனதை இலேசாக்கும் வகையில் இதமாகப் பேசிக்கொண்டு வந்தவன் கடைசியில் மீண்டும் அவளைச் சீண்ட முறைக்க முயன்று முடியாமல் அழுத விழிகளோடு சிரிப்புப் பொங்க அவனுக்கு அடித்தாள் சஹானா.
“இதுதான் எங்கட சஹிக்கு நல்லாருக்கு! ஓடு ஓடு!” என்று துரத்தி, குளித்துத் தயாராகி வந்தவளை அழைத்துக்கொண்டு அவன் தன் பைக்கின் புறமாக நடக்க கண்களை விரித்தாள் சஹானா.
“இண்டைக்கு என்ன மச்சான் நடந்தது உங்களுக்கு?”
“ம்.. அத்தை மகள் ரத்தினம் சைக்கிள் ஒட்டியே களைச்சுப் போறாளே எண்டு பாவமா இருந்தது. அதுதான்!” என்றபடி வண்டியில் ஏறி அமர்ந்து ஹெல்மெட்டை எடுத்து மாட்டினான் அவன்.
கண்களில் குறும்பு மின்ன அவன் காதோரமாகக் குனிந்து, “உங்கட பெட்டை பாத்திட்டு சண்டைக்கு வரமாட்டாவா?” என்று, ரகசியக்குரலில் வினவினாள் அவள்.
அவளின் மண்டையிலேயே ஒன்று போட்டான். “பேசாம ஏறு! இல்லாத காதலி ஒண்டும் சொல்லமாட்டாள்!” என்றபடி அவள் ஏறியதும் வண்டியை எடுத்தான் அவன்.
முதல் நாள் நண்பர்கள் கேலி செய்வார்கள் ஏற்றமாட்டேன் என்றவன் இன்று அதைப்பற்றி எந்தக் கவலையும் கொள்ளாது ஏற்றிப்போகிறான். அவள் காயப்பட்டிருக்கிறாள்; அந்தக் காயத்துக்கு மருந்தாக இதமாக நடக்க முனையும் அவனது அன்பு அவளை நெகிழ்த்தியது.
“என்னில நீங்க பாசமா மச்சான்?” காதோரமாக அவள் கேட்ட கேள்வியில் சிரித்தான் அவன்.
“நீ என்ன நினைக்கிறாய்?”
“பாசம் எண்டுதான் நினைக்கிறன்.”
“பிறகு என்னத்துக்கடி கேக்கிறாய், விசரி?”
“அப்பிடித்தான்டா மச்சான் கேப்பன். நீ பதில் சொல்லோணும்!” என்றவளை, “அடிங்! என்ன தைரியம் உனக்கு? டா போடுறாய்!” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
அடங்காமல், “விடுடா விடுடா மச்சான்! வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்டா!” என்றபோது, பழைய சஹானாவாக மாறியிருந்தாள்.
அகிலன் அழைத்துச் சென்றது கசூரினா கடற்கரைக்கு. பெரிய அலைகள் இல்லாமல் கரையோரத்தில் மிகுந்த ஆழமும் இல்லாத அழகிய கடற்கரை என்பதால் மக்கள் அலைமோதினர். கூடவே ஓலையால் வேயப்பட்ட கூடாரங்கள் நிறைந்திருக்க, வெயிலில் நிற்கவேண்டிய அவசியமற்று மணற்பரப்பிலிருந்து சற்றுத் தள்ளி அடர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்கள், சற்றே தள்ளி இருக்கும் பனைமரங்கள் என்று முற்றிலும் இயற்கை கொட்டிக்கிடந்து கண்களைக் கவர்ந்துகொண்டிருந்தது.
பார்த்த சஹானா புருவங்களை உச்சி மேட்டுக்கே உயர்த்தினாள். “சொல்லியிருந்தா குளிக்கிறதுக்கு ரெடியா வந்திருக்கலாமே மச்சான்!”
அலைகளின் உற்சாகம் அவளையும் தொற்றிக்கொண்டதில் ஓடிப்போய்க் கால்களை நனைத்தாள்.
“மச்சான், நீங்களும் வாங்கோ!” அவளின் ஆர்ப்பரிப்பை சின்ன முறுவலோடு ரசித்தபடி அவளருகே சென்று நின்றுகொண்டான் அவன்.


