ஆதார சுதி 19

அகிலன் கசூரினா பீச்சுக்கு அவளை அழைத்து வந்ததே அவளின் மனநிலையை மாற்ற எண்ணித்தான். இப்போதோ உள்ளதும் கெட்டுவிட்ட நிலை.

வண்டியில் வீட்டுக்குச் செல்கையில், “அவர் சொன்னதை பெருசாக எடுக்காத சஹி!” என்று சமாதானம் செய்தான்.

இதை விடவும் மோசமாக அவர்களின் வீட்டில் வைத்துப் பேசியதையெல்லாம் அவன் அறிந்திருக்கவில்லையே! கசந்த முறுவல் ஒன்று உதட்டினில் நெளிய, “விடுங்க மச்சான்! என்ன, இவேயெல்லாம் என்ர அப்பான்ர சொந்தம் எண்டுறதைத்தான் என்னால இன்னும் நம்ப முடியேல்ல.” என்றாள் அவள்.

“அப்பாக்குக் கோவமா கதைக்கத் தெரியுமா எண்டுகூட எனக்குத் தெரியாது மச்சான். இதுவரைக்கும் நான் பாத்தது இல்ல. அப்பிடியானவரைப்போய்..” அதற்குமேல் பேசவராமல் அவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது.

சற்று நேரம் அமைதியாக வண்டியைச் செலுத்திவிட்டு, “முழுசா கூடாத மனுசர் எண்டு சொல்லக்கூடாது சஹி. இப்பவும் சஞ்சு அண்ணா நிறையப்பேருக்கு உதவி செய்றார். வறிய குடும்பங்களுக்குச் சாப்பாட்டுப்பொருட்கள் குடுக்கிறது, ஏழைப் பிள்ளைகளுக்குப் படிக்க உதவி செய்றது, வேலை கிடைக்காம இருக்கிறவைக்குத் தன்னால முடிஞ்ச வேலை வாங்கிக் குடுக்கிறது, இப்பவும் வெளிநாட்டுக்கு போற ஆட்களுக்கு உதவி செய்றது இப்பிடி நிறைய. இண்டைக்குப் பாத்தாய் தானே, குப்பைகளப் பொறுக்கத்தான் அங்க வந்து இருக்கினம். பனைகள் அழியாம காக்கிறது எண்டு நிறையச் செய்வார். உண்மையாவே பெருமைக்குரிய மனுசன்.” சஞ்சயனின் செய்கையால் மிகுந்த சினமும் அதிருப்தியும் உண்டாகியிருந்த இந்த நேரத்திலும் உண்மையைப் பேசினான் அகிலன்.

“அப்பிடியானவர் உன்ர விசயத்தில மட்டும் ஏன் இப்பிடி நடக்கிறார் எண்டு விளங்குதே இல்ல. சின்ன வயசில இருந்து அந்தத் தாய்க்கிழவி ஏத்தி விட்டே வளத்திருக்கும் போல!” தகப்பன் அருகில் இல்லாத தைரியத்தில் பிரபாவதியை மரியாதையற்று விழித்தான் அவன். “எனக்கு அதைப் பாத்தாலே அறையவேணும் மாதிரி வரும்!”

“சஞ்சு அண்ணாக்கு சொத்தில ஆசை இருக்காது. ஆனா, அந்தச் சூனியக்கிழவிக்கு இருக்கும். அதாலேயே உன்னைச் சேர விடாது! பெத்த மகனுக்கும் பொய்யைச் சொல்லி வெறுப்பை வளத்து வச்சிருக்கு.” வெறுப்பில் மண்டிய குரலில் அவன் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டிருந்தான்.

சஹானா ஒன்றுமே சொல்லவில்லை. அவன் சொன்னதை மட்டும் கேட்டுக்கொண்டு வந்தாள். இந்த ஊர் அறிந்துவைத்திருக்கிற அந்த மிகுந்த நல்லவன் முகத்துக்கும் அவளிடம் காட்டுகிற இரக்கமற்ற முகத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத தூரம் தெரிந்தது. இது எப்படிச் சாத்தியம்? ஒருவனே மிகுந்த நல்லவனாகவும் மிகவுமே பொல்லாதவனாகவும் இருக்க முடியுமா என்ன?

இவ்வளவு நாட்களும் அவர்கள் முகம் கொடுக்காதபோதும், எத்தனையோ கடுமையான வார்த்தைகளை உதிர்த்தபோதும் அங்கு போவதற்கு சஹானா தயங்கியதே இல்லை. இப்போது, சஞ்சயனின் தொடர் கடுமையால் அவளுக்குக் கால்கள் அந்தப் பக்கம் திரும்பவே மறுத்தது. ஆனால், அவள் புறப்படுகிற நாள் நெருங்கிவிட்டதே. இன்று கடைசி முறையாக எப்படியாவது அப்பம்மாவுடன் பேசிவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு போனாள்.

பிரபாவதி எங்காவது போனால் அப்பம்மாவைத் தனியாகப் பிடிக்கலாம் என்றால் இவளைக் கணித்தோ என்னவோ பிரபாவதியும் அன்னையை விட்டு அகலவே இல்லை. சற்று நேரத்தில் சஞ்சயனும் வந்தான். இவளை முறைத்துவிட்டுப் போனான்.

வேறு வழியற்று தெய்வானையின் அருகில் சென்று அமர்ந்தாள் சஹானா. “இன்னும் ஒரு நாள்தான் அப்பம்மா இருக்கு. பிறகு நான் போயிடுவன். அப்பாக்கு ஏதும் சொல்லிவிட விருப்பமா?” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.

அதற்குள் வேகமாக வந்து தானும் அமர்ந்துகொண்டார் பிரபாவதி. “உன்ர கொப்பருக்கு என்ர அம்மா என்ன சொல்லக் கிடக்கு. நீ எப்ப இங்க இருந்து போய் தொலைவாய் எண்டு தவிச்சுக்கொண்டு இருக்கிறம் நாங்க. அதுக்குப் பிறகுதானே எங்களுக்கு நிம்மதி.”

செய்வதை எல்லாம் அவர் செய்துவிட்டு என்னவோ நல்லவர் மாதிரி நடிக்கிறாரே என்று சஹானாவுக்கு மெல்லிய கோபம் உண்டாயிற்று. “அப்பா இப்பிடியெல்லாம் நடக்க காரணமே நீங்கதான் அத்தை. அதை மறந்திட்டு கதைக்காதீங்கோ.” என்றாள் நேராக.

அதற்கே கொதித்துப் போனார் பிரபாவதி. “பாத்தியா தம்பி இவளின்ர கதையை!” என்று மகனையும் இங்கே இழுத்தார். “உன்ர கொப்பரை அவளை பிடிக்க சொல்லி நான் சொன்னனானோ இல்ல அவளை கூட்டிக்கொண்டு ஓட சொல்லி சொன்னனானோ? எவ்வளவு தைரியமடி உனக்கு! என்ர வீட்டுக்கே வந்து என்னையே குறை சொல்ல. என்னம்மா நீங்க, நீங்களும் அமைதியா இருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறீங்க?” என்று அன்னையிடமும் பாய்ந்தார்.

“ப்ச்! பேசாம போ பிள்ளை. அவள் தான் என்னவோ அலட்டிக்கொண்டு இருக்கிறாள் எண்டா நீயும் பதிலுக்கு பதில் கதைச்சுக்கொண்டு..” என்று சலித்துவிட்டு அங்கேயே சரிந்துகொண்டார் அவர்.

“சரி அத்தை எல்லாம் அப்பா செய்ததாவே இருக்கட்டும். இந்தக் கோபம் எல்லாத்தையும் விட்டுட்டு திரும்பச் சேர்ந்தா என்ன? அப்பாவைப் பாத்தா தாத்தாவும் சந்தோசப் படுவார் தானே.” தன்மையாகவே கேட்டாள் அவள்.

அதற்குள் அங்கு வந்த சஞ்சயன், “அவர் இப்பிடி படுக்கிறதுக்கு காரணமே உன்ர அப்பாதான். பிறகு எதுக்குச் சேரவேணும்? உங்களை எல்லாம் சேர்த்து எங்களுக்கு என்ன வரக்கிடக்கு? எங்களைப் பொறுத்தவரைக்கும் அந்தாள் எப்பவோ செத்திட்டார்!” என்றவனின் வார்த்தைகளில், “ஐயோ! அப்பா!” என்று துடித்து நிமிர்ந்தாள் சஹானா.

ஏன்? ஏன் இப்படிச் சொன்னாய் என்று தவிப்புடன் அவனைப் பார்த்தவளுக்குப் பேச்சும் மூச்சும் வரமறுத்தது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள். சாதாரணமாக நகர்ந்த பேச்சு வார்த்தையில் இவ்வளவு கொடிய வார்த்தையை உதிர்க்க இவனுக்கு எப்படி மனம் வந்தது? சொல்லொணா வேதனையைத் தாங்கி அவனைப் பார்த்தாள் சஹானா.

‘அப்பா.. அப்பா…’ மனம் ஊமையாய்க் கதறியது! மார்புக்கூடு அதிவேகமாய் ஏறி இறங்கியது. அவள் மூச்சுக் காற்றுக்காகத் தவிக்கவும், ஓடிவந்து அரவணைத்துக்கொண்டாள் சஞ்சனா. “மச்சி! ஒண்டுமில்ல. ஒண்டுமில்ல. அமைதியா இருங்கோ!” என்றவள் தமையனைத் தீ விழி விழித்தாள்.

“எதுக்கும் ஒரு அளவு இருக்கு அண்ணா. இவ்வளவு மோசமா கதைப்பீங்க எண்டு நானே எதிர்பார்க்க இல்ல.” சஹானா துடிக்கும் துடிப்பைப் பார்த்து அவளுக்கே கண்கள் கலங்கிப் போயிற்று.

ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள் சஞ்சனா. அதைப் பற்றிப் பருக கூட இயலாதவளாகக் கைகள் நடுங்கியது. தானே பருக்கினாள் சஞ்சனா. மற்றக் கையால் மார்பை நீவி விட்டாள். ஓரளவுக்குப் பேச்சும் மூச்சும் வந்ததும், கலங்கிய விழிகளால் மூவரையும் பார்த்தாள்.

யார் ஒருவரும் அவனுடைய பேச்சைக் கண்டிக்கவில்லை. அப்படியென்றால் அவன் சொன்னதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றுதானே பொருள்! அதற்குமேல் சிந்திக்கும் தைரியமற்று, “நன்றி மச்சாள்!” என்பதோடு அங்கிருந்து வெளியேறினாள்.

இனி அந்த வீட்டில் இருப்பதே பாவம்! மாமரத்தின் கீழே நிறுத்திவைத்திருந்த சைக்கிளைத் தொடமுதல் இடையில் வந்து நிறுத்தினான் சஞ்சயன்.

“என்னவோ ஒரு வார்த்த சொன்னதும் உயிரே போனமாதிரி நல்லாத்தான் நடிக்கிறாய்.” நக்கல் தெறித்த அவனுடைய பேச்சில் விளைந்த கொதிப்பை, விழிகளை இறுக்கி மூடி அடக்கப்பார்த்தாள். முடியாமல் மனம் கொந்தளித்தது. அவன் சொன்ன வார்த்தையே திரும்பத் திரும்ப எதிரொலித்தது. பொறுத்தது போதும் என்று முடிவு செய்து விழிகளைத் திறந்தவளின் பார்வையில் சினம் மிகுந்திருந்தது.

“இவ்வளவு நாளும் இதையெல்லாம் சின்னப்பிள்ளை நான் கதைக்கக் கூடாது; அது அழகில்லை; அத்தைக்கு மரியாதை இல்லை எண்டுதான் நினைச்சிருந்தனான். ஆனா அந்த எண்ணம் உங்களுக்கு என்ர அப்பா அம்மாவில இல்லாதபோது நான் மட்டும் ஏன் அப்பிடி இருக்கோணும். அதைவிட உங்களுக்கும் விளங்கத்தானே வேணும். அப்பாவை ஓடிப்போனவர் எண்டு சொல்லுறீங்களே, வேண்டாம் உன்ன பிடிக்கேல்ல எண்டு சொன்னவருக்குப் பின்னால அலைஞ்ச உங்கட அம்மாக்கு என்ன பெயர் வைக்கலாம்?” என்று, கேட்டாள் அவள்.

நொடியில் கண்கள் சிவக்க, “ஏய்! என்னடி..” என்றவனை, “கத்தாதீங்க!” என்று அடக்கினாள் சஹானா.

“அதுவும் இன்னொருத்தியைக் காதலிக்கிறார் எண்டு தெரிஞ்சும் அவர்தான் வேணும் எண்டு நிண்டாவாமே உங்கட அம்மா. வெக்கமா இல்ல? அவருக்காக நஞ்சு குடிச்சுப்போட்டு பிறகு என்னெண்டு உங்கட அப்பாவைக் கட்டி உங்களைப் பெத்தாவாம்?”

இனி சொல்லிப் பார்க்கட்டும் ஓடிப்போனவர்கள் என்று. அவளுக்கு ஆத்திரம் அடங்க மறுத்தது. இத்தனை நாட்களாகக் கட்டுப்படுத்தியது எல்லாம் இன்று அவன் விட்ட வார்த்தைக்குப்பிறகு கட்டுக்கடங்காமல் வெடித்துக்கொண்டு வந்தது.

“என்ர அம்மா யாரையுமே விரும்பாத ஒருத்தரைத்தான் விரும்பினவா. உங்கட அம்மா இன்னொருத்தியின்ர காதலனை பறிக்க நினைச்சவா. இதுல எது அசிங்கம் கேவலம் எண்டு நீங்களே கண்டு பிடிங்க! இவ்வளவு நாளும் என்ர அம்மாவையும் அப்பாவையும் நீங்க எவ்வளவோ கேவலமா கதைச்சும் வாயை மூடிக்கொண்டு போனதுக்குக் காரணம், சரி கோபம் போகிற வரைக்கும் கொட்டட்டும். அதுக்குப்பிறகு ஆறி வருவினம். நாம சேரலாம் எண்டு நம்பினான். சொந்த பந்தத்துக்க நீயா நானா எண்டு போட்டி போடக்கூடாது எண்டு நினைச்சன். ஆனா நீங்கள் எல்லாம் மனுசர் கூட்டமில்லை! முட்டாள் கூட்டம்!” அடக்கமுடியாத வெறுப்புடன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு சைக்கிளில் ஏறிப் பறந்தாள் அவள்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock