“அதெல்லாம் சரியா வராது. அப்பா இந்த நிலையில இருக்கேக்க உன்ன அங்க அனுப்ப ஏலுமா? முதல் நீ எப்பிடித் தனியா அதுவும் முன்ன பின்ன பாக்காத ஊருக்கு போவாய்?” அவள் சொல்வதை ஏற்கவே இல்லை யாதவி.
“அப்பாக்கு இந்த நிலை வந்ததே அவே கோவமா இருக்கினம் எண்டுதானே அம்மா. சொந்தம் எல்லாரும் கோபத்தை விட்டு சேர்ந்திட்டா அப்பாக்குச் சந்தோசமா இருக்கும். பிறகு ஒரு வருத்தமும் வராது!” என்று அடித்துச் சொன்னாள் பெண்.
அவளின் ஆணித்தரமான பேச்சில் யாதவி வாயடைத்து நிற்க, “அதென்ன முன்ன பின்ன பாக்காத ஊர்? எங்கட சொந்த நாடு. மாமா இருக்கிறார். அதைவிட அவேயும் எங்கட சொந்தம் தானேம்மா? கோபம் எல்லாம் உங்களோட. எனக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்?” இதைச் சொல்லி முடிக்கும்போது சஹானா முடிவே செய்து முடித்திருந்தாள்.
தாய் எவ்வளவு சொல்லியும் மாறவில்லை. அவர்களைச் சமாதானம் செய்து அப்பாவைச் சேர்த்தே ஆகவேண்டும்! அவளின் அப்பாவுக்கு அதற்குப் பிறகு கவலை என்பதே கிடையாது. எவ்வளவு சொல்லியும் அடம் பிடித்த மகளை என்ன செய்வது என்று தெரியாது திணறினார் யாதவி. அன்னையும் மகளும் பேசியத்தைக் கேட்டிருந்த அரவிந்தன் முடிவைச் சொன்னார்.
“விடு யாதவி. நான் இருக்கிறன் தானே. வரட்டும். இவ்வளவு நாளும் வராத பிரதாபன் இனியும் வருவார் எண்டு நம்பிக்கை இல்லை. சஹானா மூலம் ஒன்றுசேர்ந்தா சந்தோசம் தானே.” என்று சொல்ல, மெல்ல இறங்கிவந்தார் யாதவி.
அவரையும், ‘கோபம் உங்களோட தானேம்மா. நான் என்ன செய்தனான்?’ என்று கேட்டது அசைத்திருந்தது. அதைவிட அவள் அவர்களின் அருமைப் பேத்தி. அவளைப் பார்த்தபிறகும் பாசம் வராமல் இருப்பதுதான் அதிசயம். எனவே சம்மதித்தார்.
————
பிரதாபனும் யாதவியும் தங்களது எதிர்கால வாழ்க்கையை நோக்கி முதன் முதலாக இலங்கையிலிருந்து விமானமேறியபோது, அவர்களுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தவர்கள்தான் தருமரட்ணமும் நிவேதாவும். இவர்களைப்போலவே ஏஜென்சி மூலம் பொய்யான கடவுச்சீட்டுடன் விமானமேறியவர்கள். பயந்துபோய் நின்ற தருணத்தில், ‘தமிழர்’ என்பது இணைத்துவைக்க ஒருவருக்கு இன்னொருவர் துணை என்பதுபோல, ஒவ்வொரு நாடாகத் தங்கித்தங்கி வந்தபோது பெண்கள் தனியாக, ஆண்கள் தனியாக என்று தங்க இடம் கொடுக்கப்பட்டபோது இன்னுமே நெருங்கிப் போயினர். நிவேதா அப்போதே நான்குமாதக் கருவுடன் இருந்ததில் பெண்கள் கூடுதலாக ஒட்டிப்போயினர்.
நெதர்லாந்துக்கு வந்து இறங்கி, அகதிகள் முகாமில் ஒன்றாக இருந்தபோது பிரதாபனின் குடும்பம் தான் முதன் முதலில் விசா கிடைத்து வெளியேறினார்கள். அதன்பிறகும், ஒருவருடம் முகாமில் இருந்த ரட்ணத்துக்குப் பிரதாபன் உதவியாகவே இருந்தார். நித்திலன் பிறந்தபோது, முற்றிலும் பார்த்துக்கொண்டது யாதவிதான். அவர்களுக்கும் விசா கிடைக்க, தங்களின் வீட்டுக்கு அருகிலேயே வீடு பார்த்து இருத்தி, அப்போது தான் வேலை பார்த்த இடத்திலேயே வேலையும் வாங்கிக்கொடுத்து, சற்றே முன்னேறியதும் இருவருமாகச் சேர்ந்து, ‘ரியல் எஸ்டேட்’ தொழில் துவங்கி என்று அனைத்தையுமே நண்பர்கள் இருவரும் சேர்ந்தே செய்தனர்.
நெதர்லாந்து வந்து ஐந்தாவது வருடம் சஹானா பிறந்தபிறகு அவர்கள் வாழ்வில் எல்லாமே ஏறுமுகம் தான்.
இப்படி அவர்களின் நட்பு முப்பது வருட நட்பு. இதுவரை இரு குடும்பத்துக்குமிடையில் களவு பொய்யில்லை. இருவருமே ஒரே செல்வநிலை. தொழில் ஒன்று என்பதில் அனைத்து லாப நட்டங்களையும் சமமாகவே பகிர்ந்தவர்கள். நித்திலனுக்கு இவர்கள் மாமா மாமி என்றால், சஹானாவுக்கு அவர்கள் மாமா, மாமி. சம்மரில் இரண்டு மாத விடுமுறையில் இந்தக் குடும்பம் ஒரு வருடம் டூர் போனால் அடுத்த வருடம் மற்றக் குடும்பம் போகும். போனவருடம் இவர்கள் தாய்லாந்து போய் வந்தார்கள். இந்த வருடம் நித்திலனுக்கு வேலை இருந்ததோடு, அவன் ஏற்கனவே நண்பர்களோடு போய்வந்துவிட்டதில் அவன் நின்றுவிட்டான். முப்பதை நெருங்கும் முழுமையான இளைஞன் என்பதில் துணிந்து கணவனும் மனைவியுமாகப் புறப்பட்டுவிட்டார்கள்.
தாய்லாந்துக்குப் போய்விட்டு அப்படியே நேர்த்திக்கடன் தீர்க்க இந்தியாவும் போய்வருவதாகத்தான் சொல்லி இருந்தார்கள். அப்படியானவர்கள் திடீரென மறைந்து போனார்கள் என்பதை சஹானாவால் நம்பவே முடியவில்லை.
அப்பாவுக்கு மாரடைப்பு, வீடு பறிபோகும் நிலை. மாமா மாமியைக் காணவில்லை. அவர்களுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. இதில் நித்திலனையும் காணவில்லை.
நேற்றைக்கு முதல்நாள் பெற்றவர்கள் இல்லை என்கிற துணிச்சலில் ஒரு பியரை உள்ளே தள்ளிவிட்டு நண்பனின் வீட்டிலிருந்து அவளை அழைத்திருந்தான் நித்திலன். மண்டையில் குட்டு குட்டு என்று குட்டிவிட்டு, அப்பாவுக்குத் தெரிந்தால் பேசுவார் என்று அவள்தான் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனாள். நேற்று மட்டும்தான் அவனைக் காணவில்லை. தோழிக்குப் பிறந்தநாள் என்று ஜேர்மன் போய்விட்டு வர இரவாகிப் போயிற்று. அம்மா வேறு முறைக்கவும், ‘நாளைக்கு எங்கயாவது போவமாடா?’ என்று அவனுக்கு ஒரு செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு நல்லபிள்ளையாக வீட்டில் இருந்துவிட்டாள். அதற்குள் எங்கே போனான்?
நித்திலனின் வீட்டுக்குப் புறப்பட்டு வந்திருந்தாள் சஹானா. இரு வீட்டுத் திறப்பும் இரு குடும்பங்களிடமும் உண்டு. எனவே திறந்துகொண்டு போய்ப்பார்த்தாள்.
யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லை. நித்திலனுக்கு எத்தனையோ முறை அழைத்தும் பிரயோசனமில்லை. அவன் இருந்தால் அவனையாவது அம்மாவுக்குத் துணையாக இரு என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று பார்த்தால், காணோமே. அவன் அறைக்குச் சென்று, “எங்கயடா போய்ட்டாய்? வந்தால், அம்மாட்ட போ. அப்பா ஹொஸ்ப்பிட்டல்ல இருக்கிறார்.” என்று, அவன் பார்க்கும்படி மேசையில் எழுதிவைத்துவிட்டு இறங்கிவந்தாள்.
அங்கே, ஹாலில் எத்தனையோ புகைப்படங்கள். அதில் ஒன்றுமட்டும் இருவருக்குமே மிகவும் பிடித்த படம். வயதெல்லைக்கு அப்பாற்பட்ட டென்னிஸ் இரட்டையர் ஆட்டத்தில் அவனோடு இணைந்து கோப்பையை வென்றிருந்தாள் சஹானா. தனியாக இருவரும் எத்தனையோ கோப்பைகளை வாங்கி இருந்தாலும் இருவரும் இணைந்து வாங்கிய ஒரேயொரு கோப்பை அதுதான்.
சந்தோசத்தின் உச்சத்தில் அவளைத் தூக்கியபடி அவன் நிற்க, கோப்பையை உயர்த்திப் பிடித்தபடி சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். அது வந்த நாளிலிருந்து இருவருக்கும் சண்டைதான். ஒருமாதம் அவன் வீட்டில் இருந்தால் மறுமாதம் அவள் வீட்டில் இருக்கவேண்டும். இதில் நாட்கணக்குப் பார்த்துச் சண்டை பிடிப்பாள் சஹானா.
“இந்தமுறை உன்ர மாதம் முப்பத்தியொரு நாள் என்ர மாதம் முப்பது நாள்தான். அதால முதலாம் திகதிதான் தருவன்.” என்பாள் அவள்.


