தாய்லாந்துக்குப் போய்விட்டு அப்படியே நேர்த்திக்கடன் தீர்க்க இந்தியாவும் போய்வருவதாகத்தான் சொல்லி இருந்தார்கள். அப்படியானவர்கள் திடீரென மறைந்து போனார்கள் என்பதை சஹானாவால் நம்பவே முடியவில்லை.
அப்பாவுக்கு மாரடைப்பு, வீடு பறிபோகும் நிலை. மாமா மாமியைக் காணவில்லை. அவர்களுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. இதில் நித்திலனையும் காணவில்லை.
நேற்றைக்கு முதல்நாள் பெற்றவர்கள் இல்லை என்கிற துணிச்சலில் ஒரு பியரை உள்ளே தள்ளிவிட்டு நண்பனின் வீட்டிலிருந்து அவளை அழைத்திருந்தான் நித்திலன். மண்டையில் குட்டு குட்டு என்று குட்டிவிட்டு, அப்பாவுக்குத் தெரிந்தால் பேசுவார் என்று அவள்தான் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனாள். நேற்று மட்டும்தான் அவனைக் காணவில்லை. தோழிக்குப் பிறந்தநாள் என்று ஜேர்மன் போய்விட்டு வர இரவாகிப் போயிற்று. அம்மா வேறு முறைக்கவும், ‘நாளைக்கு எங்கயாவது போவமாடா?’ என்று அவனுக்கு ஒரு செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு நல்லபிள்ளையாக வீட்டில் இருந்துவிட்டாள். அதற்குள் எங்கே போனான்?
நித்திலனின் வீட்டுக்குப் புறப்பட்டு வந்திருந்தாள் சஹானா. இரு வீட்டுத் திறப்பும் இரு குடும்பங்களிடமும் உண்டு. எனவே திறந்துகொண்டு போய்ப்பார்த்தாள்.
யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லை. நித்திலனுக்கு எத்தனையோ முறை அழைத்தும் பிரயோசனமில்லை. அவன் இருந்தால் அவனையாவது அம்மாவுக்குத் துணையாக இரு என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று பார்த்தால், காணோமே. அவன் அறைக்குச் சென்று, “எங்கயடா போய்ட்டாய்? வந்தால், அம்மாட்ட போ. அப்பா ஹொஸ்ப்பிட்டல்ல இருக்கிறார்.” என்று, அவன் பார்க்கும்படி மேசையில் எழுதிவைத்துவிட்டு இறங்கிவந்தாள்.
அங்கே, ஹாலில் எத்தனையோ புகைப்படங்கள். அதில் ஒன்றுமட்டும் இருவருக்குமே மிகவும் பிடித்த படம். வயதெல்லைக்கு அப்பாற்பட்ட டென்னிஸ் இரட்டையர் ஆட்டத்தில் அவனோடு இணைந்து கோப்பையை வென்றிருந்தாள் சஹானா. தனியாக இருவரும் எத்தனையோ கோப்பைகளை வாங்கி இருந்தாலும் இருவரும் இணைந்து வாங்கிய ஒரேயொரு கோப்பை அதுதான்.
சந்தோசத்தின் உச்சத்தில் அவளைத் தூக்கியபடி அவன் நிற்க, கோப்பையை உயர்த்திப் பிடித்தபடி சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். அது வந்த நாளிலிருந்து இருவருக்கும் சண்டைதான். ஒருமாதம் அவன் வீட்டில் இருந்தால் மறுமாதம் அவள் வீட்டில் இருக்கவேண்டும். இதில் நாட்கணக்குப் பார்த்துச் சண்டை பிடிப்பாள் சஹானா.
“இந்தமுறை உன்ர மாதம் முப்பத்தியொரு நாள் என்ர மாதம் முப்பது நாள்தான். அதால முதலாம் திகதிதான் தருவன்.” என்பாள் அவள்.
“மாதம் தான் கணக்கு. நாள் இல்லை.” என்பான் அவன்.
நாளைதான் புது மாதம் ஆரம்பிக்கிறது. அவள் இன்றே கோப்பையைக் கொண்டுவந்து வைத்தாள். மனம் அழுதது. மலைபோல் தெரியும் அத்தனை துன்பங்களையும் அவன் அருகிருந்தால் இன்னும் கொஞ்சம் தென்போடு கடப்பாளே.
இப்போது, எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கவேண்டியவள் அவள். என்னவோ, இந்த ஒரே நாளில் தான் பெரியவள் ஆகிவிட்டது போலவும், தனக்கு நிறையப் பொறுப்புகள் வந்துவிட்டது போலவும் உணர்ந்தாள்.
கார் ஏதும் பிரச்சனை கொடுத்தால் கூட அவள் அழைப்பது நித்திலனைத்தான். “ஒருநாளைக்கு நீ கூப்பிட கூப்பிட ஃபோன் எடுக்கமாட்டன். அப்ப தெரியும். வேலை இருக்கு எண்டு சொன்னாலும் கேக்கிறியாடி?” என்று அவள் மண்டையில் குட்டிவிட்டுத்தான் என்ன என்றே விசாரிப்பான்.
“நான் கூப்பிட்டும் வராம இருப்பியா? அவ்வளவு தைரியம் இருக்காடா? அதையும் பாப்பமே!” என்று அவனிடமே சவால் விட்டிருக்கிறாள். இன்று.. கண்கள் கலங்கிற்று. ‘முதல் நீ நல்லா இருக்கிறாய் தானே?’ போட்டோவில் அவன் கன்னத்தைத் தடவியபடி கேட்டாள்.
அப்போது யாதவி அழைக்க, “மாமா வீட்ட வந்தனான் அம்மா. இந்தா வாறன்.” என்றவள் கதவை மறக்காமல் பூட்டித் திறப்பை எடுத்துக்கொண்டு காரில் கிளம்பினாள்.
—————–
“அய்யோம்மா எனக்கு ஊசி வேண்டாம்.” குட்டிபோட்ட பூனையாய் அவரின் பின்னே திரிந்தபடி சிணுங்கி, கெஞ்சி, அழுது, அடம்பிடித்து எது செய்தும் அதைக் காதிலேயே விழுத்தவில்லை யாதவி.
“நேரமாகுது சஹி. அப்பாவையும் போய்ப் பாக்கவேணும். நீ இலங்கை போற விசயத்த இன்னும் அவரிட்ட சொல்லவும் இல்ல. என்ன சொல்லுவாரோ எண்டு எனக்கு அதுவேற யோசனையா கிடக்கு. ஓடு! ஓடிப்போய் வெளிக்கிட்டுக்கொண்டு வா!” வீட்டுடையை மாற்றாமல் சுற்றிக்கொண்டிருந்தவளை விரட்டினார் யாதவி.
“எனக்கு ஒண்டும் வராதம்மா. மிஞ்சிப்போனா பத்து நாள் நிற்பனா இருக்கும். அதுக்கேன் ஊசி எல்லாம்?”
“உனக்கு ஒண்டு எண்டா பிறகு உன்ர அப்பாக்கு என்னால பதில் சொல்ல ஏலாது. கெதியா வா!” என்று அவளை விரட்டிவிட்டு, கணவருக்குத் தேவையான பொருட்களைப் பார்த்துப்பார்த்து எடுத்து வைத்துவிட்டு நிமிர அவளும் முகத்தை நீட்டிக்கொண்டு தொம் தொம் என்று படிகளில் இறங்கிவந்தாள்.
“கட்டாயம் போகத்தான் வேணுமாம்மா? போனவருசம் போட்டதே காணும்.” எதற்கும் அசையாத தாயிடம் மீண்டும் கெஞ்சிப்பார்த்தாள்.
“அத சொல்லித்தானே கேட்டனான். நீயும் பக்கத்தில இருந்தாய் தானே? பிறகு என்ன? வா!” என்றவர், வீட்டைப்பூட்டி வெளியே வந்து கார் திறப்பின் பொத்தானை அழுத்த, வீட்டுடனேயே அமைக்கப்பட்டிருந்த கராஜின் தானியங்கிக் கதவு நளினமாக மேலே எழும்பிற்று. அங்கே புதுப்பெண்ணைப் போலத் தூசு சற்றும் படாத சில்வர் நிற ‘பி எம் டபிள்யு’ மினி தயாராக நின்றது.
“கெதியா ஏறம்மா. ஊசி போட்டுட்டு அப்பாவையும் போய்ப் பாத்திட்டு, டொக்டரோட ஒருக்கா கதைக்கவேணும். வந்து சமைச்சு வச்சிட்டு பேங்க்குக்குப் போகவேணும். உனக்கு உடுப்புக் கொஞ்சம் வாங்கிப்போட்டு, அப்பாட ஒபீஸ் அலுவல்கள் பாக்கவேணும்.” அன்றைய நாளில் அவர் முடிக்க வேண்டிய வேலைகளை அவளுக்குச் சொல்வதுபோலத் தனக்கும் சொல்லிக்கொண்டு வந்து, கைப்பையினைப் பின்னால் வைத்துவிட்டு ஏறி சீட் பெல்ட்டை மாட்டிக்கொண்டு காரை வெளியே எடுத்தார்.
அவள் பெல்ட் மாட்டாமல் வேண்டுமென்றே அமர்ந்திருக்க, திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டு, காலை பிரேக்கில் வைத்து அழுத்தியபடி எட்டி அவளுக்கு பெல்ட்டைத் தானே மாட்டிவிட்டார். அசைந்தே கொடுக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள் சஹானா. மீண்டும் கீயை அழுத்தி கராஜின் கதவு இறங்கத்துவங்க, வெகு லாவகமாக வீதியில் மினியை மிதக்கவிட்டார் யாதவி.
“நோகும் மா. எனக்குக் காய்ச்சலும் வரும் எண்டு உங்களுக்குத் தெரியும்.” அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்த கணத்திலிருந்து சிணுங்கிச் சினமூட்டியவளை உள்ளே கூட்டிக்கொண்டு போவதற்குள் போதும் போதும் என்றாயிற்று. பிரதாபன் தான் அவளுக்கு ஏற்றபடி ஆடி வளைந்து கொடுப்பவர். யாதவி அதட்டி அடக்கிவிடுவார். கணவர் அருகில் இல்லாததில் அதட்ட மனம் வரவுமில்லை.
அவளைக் கண்டதுமே உதட்டோரம் கேலி மின்னிய சிரிப்புடன் யாதவியைத்தான் பார்த்தார் வைத்தியப்பெண்மணி. ஒவ்வொருமுறையும் நடப்பதுதானே! இவள் வயதினர் எல்லோருமே தனியாக வந்து தங்களின் நோய்நொடிகளைச் சொல்லி வைத்தியம் பார்ப்பார்கள். இவள் மட்டும் தான் அம்மா அப்பா சகிதம் வரும் ஒரே ஆள்.
கணனியில் அவள் பற்றிய விபரங்களை மீண்டுமொருமுறை மேய்ந்துவிட்டு, இலங்கையில் தொற்றக்கூடிய தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்தினை ஊசியில் ஏற்றிக்கொண்டு வந்து சரக்கென்று ஏற்றிவிட்டார்.
முகத்தில் சிணுக்கத்துடன் காரில் ஏறியதும், “எங்கம்மா என்ர ஃபோன்?” என்றவளைக் கண்டிப்புடன் நோக்கி, “இலங்கைக்குப் போகப்போறாய் பிள்ளை. பொறுப்பான காரியங்கள, ‘நான் செய்வன் அம்மா’ எண்டு சொல்லியிருக்கிறாய். ஆனா இன்னும் ஃபோனை கூட அம்மாதான் எடுத்துவைக்க வேண்டி இருக்கு. இப்பிடி இருந்துகொண்டு அங்கபோய் என்னம்மா செய்யப்போறாய்?” குரலில் கவலை தொனிக்கச் சொன்னார் அவர்.
அவளின் முகம் சுருங்கிப் போயிற்று! “எங்க எப்பிடி நடக்கோணும் எண்டு எனக்குத் தெரியும் அம்மா. அதெல்லாம் நீங்களும் அப்பாவும் சொல்லித் தந்துதான் வளத்து இருக்கிறீங்க!” என்றாள்.
பிரதாபன் அதன்பிறகு மெல்லிய மயக்கத்திலேயே இருந்தார். அவ்வப்போது, என்னென்னவோ சொல்லிப் புலம்பினார். அரற்றினார். நினைவு வருவதும் போவதுமாய் இருந்தது. உறக்கத்தில் இருப்பதே அவர் மனதுக்கான ஓய்வு என்று வைத்தியர் சொல்லவும் தான் தாயும் மகளும் சற்றே பயம் தெளிந்தனர். அவள் இலங்கை போவதை அப்போதைக்குச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அவராக மகளைத் தேடுகையில் சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணினார் யாதவி.
புறப்படுவதற்கு முன் தகப்பனின் கையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தாள் சஹானா.
‘அப்பா! எனக்காக உங்கட ஆசை, ஏக்கம், சந்தோசம் எல்லாத்தையும் மறைச்சிக்கொண்டு இருந்தீங்களா? அதாலதான் உங்கட இதயத்துக்கு அவ்வளவு பாரத்தையும் தாங்க முடியாம போனதா? உங்களுக்காக நான் எதுவும் செய்வேனே அப்பா. நான் போய் எங்கட சொந்தபந்தம் எல்லாரையும் சமாதானம் செய்து, அவைய(அவர்களை) உங்களோட கதைக்க வைக்கிறனா இல்லையா பாருங்கோ.’ கன்னங்களைக் கண்ணீர் நனைக்க மனதில் சொல்லிக்கொண்டாள்.


