நொடி கூடத் தாமதிக்காமல் சஹானாவையும் அழைத்துக்கொண்டு ரட்ணம் குடும்பத்தினர் புறப்பட்டிருந்தனர். அவர்களை அனுப்பிவைப்பதற்காக அரவிந்தனும் அகிலனும் சென்றிருந்தனர். தனியே அமர்ந்து நடந்தவைகளை எண்ணிக் கவலையுற்றபடி அமர்ந்திருந்தார் ராகவி.
அப்போது, அங்கு வந்தான் சஞ்சயன்.
செய்வதை எல்லாம் அசராமல் செய்துவிட்டு இவன் எதற்கு இங்கே வந்து நிற்கிறான்? நெஞ்சுக்குள் வெறுப்பும் கோபமும் கனன்றது. ராகவி அவனை வா என்று வரவேற்கவுமில்லை. அமரச்சொல்லிச் சொல்லவும் இல்லை.
அவனுக்குள் ஒரு தயக்கம். இத்தனை நாட்களும் எங்காவது கண்டாலும் பொருட்படுத்தாமல் கடந்திருக்கிறான். அலட்சியம் செய்து இருக்கிறான். இன்றோ அவரிடம் பேச அவனே வந்திருக்கிறான். தயக்கத்தை உதறித் தானாகவே சென்று அவருக்கு எதிரில் அமர்ந்துகொண்டான்.
அப்போதும் அசையவில்லை ராகவி. வேறு வழியில்லை. அவனாகத்தான் ஆரம்பிக்க வேண்டும்.
“உங்கட மருமகள் அண்டைக்கு நிறையச் சொன்னவள். முதல் அதை நான் நம்பேல்ல; கோபத்தில கதைக்கிறாள் எண்டு நினைச்சன். ஆனா இப்ப..” என்றவனை முடிக்க விடாமல், “அதென்ன உங்கட மருமகள். நீரடிச்சு நீர் விலகாது தம்பி. சண்டை சச்சரவுகள் வாறதுதான். அதுக்காகச் சொந்தம் இல்லை எண்டு ஆகிடாது! விளங்கினதா?” என்றார் அதட்டலாக.
ஆரம்பமே பிழைத்துவிட மேலே எப்படித் தொடர்வது என்று தெரியாமல் திகைத்தான் சஞ்சயன்.
ராகவிக்கோ கோபம் அடங்கமாட்டேன் என்றது. ஒரு குடும்பத்தையே அடைத்துவைப்பதற்கு எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும்? “நீங்க கேக்க நினைக்கிறத உங்கட அம்மாட்டயே கேக்கவேண்டியது தானே!” என்றார் மீண்டும்.
“எனக்கு உங்கட பக்கமும் தெரியவேணும் எண்டு நினைச்சன்.”
“இத நீங்க கொஞ்ச நாளைக்கு முதல் செய்திருக்கலாம்!” பட்டென்று சொன்னார் அவர்.
சஞ்சயனுக்கும் மெல்லிய கோபம் உண்டாயிற்று! “நான் செய்தது பிழைதான். அது எனக்கு அதைச் செய்யேக்கையே தெரியும். அதுக்காக அவர் செய்தது எல்லாம் சரி எண்டு சொல்லுறீங்களா? அண்டைக்கு அவரின்ர வாழ்க்கை முக்கியம் எண்டு எங்களை எல்லாம் விட்டுட்டுப் போனார். இண்டைக்கு, அவரின்ர உயிருக்கு ஆபத்து எண்டதும் தானே அவரின்ர மகள் இங்க ஓடி வந்து சொந்தம் வேணும் எண்டு நிண்டவள். அப்பிடி ஒண்டு நடக்காட்டி வந்திருப்பாளா? இல்லை தானே. அப்ப அந்தக் கிழவனும் கிழவியும் தவிச்சுத் தவிச்சே போய்ச் சேர்ந்து இருப்பினம். அப்பிடியானவரைப் பற்றி நான் ஏன் விசாரிக்க?”
அவன் கூற்றில் நியாயம் இருந்ததில் அமைதி காத்தார் ராகவி. அதனால்தானே பிரதாபனுக்கு மாரடைப்பு வந்ததும்!
சஞ்சயனும் நிதானமாகப் பேச ஆரம்பித்தான். “யார்ல சரியோ பிழையோ எந்தத் தாய் தகப்பனுக்கும் மகன் ஒரு பொம்பிளையைக் கூட்டிக்கொண்டு ஓடிப்போய்ட்டானாம் எண்டுற விசயம் சந்தோசத்தைத் தராது. சாகிற வரைக்கும் வேதனையைத்தான் தரும். அதப்பாத்து வளந்தவன் நான். அதோட அம்மா…” என்றவனுக்கு என்ன இருந்தாலும் அன்னையைப்பற்றி அவரிடம் பேசப் பிடிக்கவில்லை.
கூடவே, ஒரு நாள் திடீரென்று மாயமாக மறைந்துபோன மகன் திரும்பி வந்து சேர்ந்து இருந்தால் கூட அந்தப் பேச்சு மழுங்கிப் போயிருக்குமாயிருக்கும். அவர் வராமலே விட்டதில் அவர்களின் மகன் ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்கிற பேச்சு இன்றுவரையிலும் நிலைத்துத்தானே போயிற்று. அது எத்தனை பெரிய துன்பம். அந்தக் கோபம் தானே தெய்வானை ஆச்சிக்கும். அவர் வரவில்லை என்பதன் இன்னொரு பொருள், நீங்கள் எனக்குத் தேவையே இல்லை என்பதும் தானே. அது ஒரு அன்னைக்கு எவ்வளவு பெரிய காயம்?
ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுவிட்டு, நிதானமாகப் பேசினான். “அந்தக் கோவம் தான் இதையெல்லாம் செய்ய வச்சது. அது பிழைதான். இவ்வளவு நாளும் நடந்த எல்லாத்துக்கும் அவர் மட்டும்தான் காரணம் எண்டு நினைச்சு இருந்தனான். ஆனா இப்ப அப்பிடி இல்லை எண்டு தெரியுது. உங்கட மருமகள்..” என்றபோது, திரும்பவும் அப்படித்தான் சொல்கிறாயா என்று அவர் பார்க்க, சொல்ல வந்ததை நிறுத்தி, “சொந்தம் எண்டுறதாலேயே உரிமையா உறவுமுறை வாயில வராது. அது மனதில இருந்து வரோணும்.” என்றான் அவரை நேராகப் பார்த்து.
அதற்குப்பிறகு அதைப்பற்றி அவர் பேசவில்லை. அதோடு, அன்றைய நாட்களில் என்ன நடந்தது என்று கேட்க வந்திருக்கிறான் என்று புரிந்தது. அவற்றையெல்லாம் ராகவி நினைத்துப்பார்க்கவே விரும்புவதில்லை. ஆனால், நடந்தது என்ன என்று முழுமையாகத் தெரிந்தால் தான் இந்த இளைய பிள்ளைகள் இனியாவது தங்கள் உறவை பலப்படுத்திக்கொள்வார்கள் என்று விளங்கிற்று.


