“நானும் உழைச்சு வாழுறவன் தான். அடுத்தவேன்ர காசு எனக்கும் தேவையில்லை.” என்றுவிட்டு, அவரோடு பணத்தையும் கொண்டுவந்து அறையிலேயே விட்டுவிட்டு, “கத்தி பிரச்சினை செய்யாட்டி நீங்க நிம்மதியா இருக்கலாம்.” என்றபடி, நிவேதாவின் கட்டுக்களையும் அவிழ்த்து விட்டுவிட்டுப் போனான்.
பின் எதற்கு இதையெல்லாம் செய்கிறான்? ரட்ணம் குழம்பி நின்றது அன்றுதான். அடுத்தநாள், பிரதாபனை இங்கே வரவழைக்கச் சொல்லி அவன் வற்புறுத்த அவர் ஒரே பிடியாக நின்று மறுத்தபோதுதான் பணச்சிக்கலை உருவாக்கி, பிரதாபனுக்குக் கிடுக்கிப்பிடி போட்டு அவரையும் இலங்கைக்கு இழுக்கத் திட்டம் போட்டிருக்கிறான் என்பதே அவருக்குப் புரிந்தது.
பணம் இலங்கையில் இருந்து எடுக்கப்படுவதை வங்கிக்கணக்குக் காட்டும். பணம் எடுக்கிறபோது ரட்ணத்தின் கைப்பேசிக்குச் செய்தி வந்து, அதை அவர் ஓகே செய்தால் மட்டுமே எடுக்கலாம் என்றும் தெரியும். ஆக, ரட்ணமும் பணமும் இலங்கையில் இருக்கிறது என்று ஊகித்து பிரதாபன் இலங்கை வருவார் என்பது அவனுடைய கணக்காக இருக்கிறது என்று பிடிப்பட்டபோது, வெள்ளை மனதுடன் விவரம் அறியக் கேட்கிறான் என்று அனைத்தையும் கவுட்டுக்கொட்டிய தன் முட்டாள் தனத்தை எண்ணியெண்ணி வருந்த மட்டுமே அவரால் முடிந்தது.
இந்த வயதிலும் விபரம் பத்தாமல் போயிற்றே!
ஆனால், அதன்பிறகு அவர் அசையவே இல்லை. நீ எத்தனை நாட்களுக்கு எங்களை அடைத்து வைத்தாலும் பிரதாபனை அழைக்கமாட்டேன் என்றுவிட்டார்.
அவரின் பிடிவாதம் தான் வென்றது. இதோ இன்று வெளியேயும் வந்தாயிற்று. என்ன நடப்பதை நம்ப முடியாத பிரம்மை இன்னும் அகலவேயில்லை.
ஆட்டோவில் வந்து இறங்கிய ரட்ணம் மாமாவையும் நிவேதா அத்தையையும் கண்டதும் திகைத்து நின்றுவிட்டாள் சஹானா. கனிந்தே இருக்கும் விழிகளோடு மாறாத பாசமும் மலர்ந்த சிரிப்புமாக இருந்தவர்களிடம் அதன் அடையாளங்களே இல்லை. விழியோரத்தில் கருமை படிந்து உடல் பாதியாகி இன்னுமே வயதாகி, விட்டால் ஒடிந்து விழுந்துவிடுவோம் என்பதுபோல் நடந்து வந்தவர்களைக் கண்கொண்டு காணமுடியவில்லை.
ஓடிப்போய்க் கட்டிக்கொள்ளும் உணர்வுகூட வராமல் கண்ணீர் சொரிய நின்றவளிடம் கலங்கிய விழிகளோடு வந்து சேர்ந்தனர் இருவரும். “சொறி அத்தை மாமா..” என்றவளுக்குப் பதிலிறுக்க முடியாமல் அவள் தலையை வருடிக்கொடுத்தார் நிவேதா.
“அம்மா!” அந்தக் குரலைக் கேட்டு விலுக்கென்று திரும்பிய நிவேதா, கண்முன்னால் நிற்பது மகன்தான் என்று நம்ப முடியாமல் நொடி திகைத்து, அவனின் அணைப்பில் மகன்தான் என்று உணர்ந்து, “கடவுளே.. இனி என்ர பிள்ளையைப் பாக்கவே மாட்டேனோ எண்டு துடிச்சுப் போனேனே..” என்று கதறியபோது, அங்கிருந்தவர்களுக்குத் தேற்றவே முடியாமல் போயிற்று.
————
வேட்டி சட்டையைக்கூட மாற்றாமல் அந்த ஹோட்டல் அறையில் அடைந்திருந்தான் சஞ்சயன். என்னதான் திட்டமிட்டுச் செயலாற்றியிருந்த போதிலும் அவர்களை விடுவித்தபிறகுதான் அவனும் தன்னுடைய மனச்சிறையிலிருந்து வெளிவந்து மூச்சுவிட்டான். தினமும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்திருந்த பிரதாபனின் பணத்தையும் கையோடு கொடுத்து சமரனையும் கூடவே அனுப்பிவிட்டிருந்தான்.
நித்திலன் அடங்காமல் நின்றதால் அவனது கையையும் வாயையும் கட்டவேண்டியதாகிப் போயிற்று. இவர்களைத் தினமும் அவனே வெளியே கூட்டிச் சென்று கூட்டி வந்தான்தான். தேவையான உணவு, உடை, மருந்துகள் என்று எல்லாம் குறையில்லாமல் செய்தான் தான். என்றாலும் தவறு தவறுதானே. அந்த அழுத்தங்கள் தான் அவ்வப்போது சஞ்சனாவிலும் அடிக்கடி சஹானாவிலும் பாய்ந்திருந்தது.
அன்னையின் முப்பது வருடத்துக் கண்ணீர், இன்றுவரையிலும் வார்த்தைகளாலும் செய்கைகளாலும் அம்மாவை வருத்தும் அப்பா, இதையெல்லாம் பார்த்துப் பார்த்து இந்த வயதிலும் துடிக்கும் அம்மம்மா, இப்படியான குடும்பச் சூழலில் வளர்ந்து திருமணம் என்றாலே வேண்டாம் என்று நிற்கும் தங்கை, இத்தனையையும் கண்முன்னால் கண்டும் எதையும் செய்ய முடியாத தன் கையாலாகாத தனம் என்று மனதுக்குள் ஓராயிரம் கொந்தளிப்பு!
இதற்கெல்லாம் காரணம், சுயநலத்தின் முழு வடிவமாகத் தன் வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கொண்டு ஓடிப்போன அந்த மனிதர்! அவரைத் தண்டிக்க வேண்டும்! செய்த தவறை உணரவைத்துத் தலைகுனிய வைக்கவேண்டும். ஆனால் எப்படி?
இப்படி, பிரதாபன் மீதிருந்த பெரும் கோபத்தைக் கொட்டித் தீர்த்துவிட முடியாமல் தனக்குள்ளேயே அழுத்திக்கொண்டு அலைந்துகொண்டிருந்தவன் ரட்ணத்தைப் பார்த்தபோது, அவரைத் தனக்கான துருப்புச் சீட்டாகத்தான் பார்த்தான். இத்தனை வருடங்கள் வராத பிரதாபன் இனியும் வரப் போவதில்லை. அவனுக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப்போவதும் இல்லை.
அப்படிச் சந்தர்ப்பம் கிடைத்த அந்த நொடியில் போட்ட திட்டங்கள்தான் அனைத்தும். ஒரு மகனாக, நாள்தோறும் அன்னையின் கண்ணீரையும் துன்பத்தையும் பார்த்துப்பார்த்துத் தனக்குள் துடித்துக்கொண்டிருந்தவன் அவருக்கு நியாயம் செய்ய நினைத்தான். ரட்ணத்தைத் தடுத்து வைத்துப் பணத்தை எடுக்கையில் பிரதாபன் தானாக வருவார் என்று எண்ணியிருக்க வந்ததோ நித்திலன். அவனை வெளியே விட்டால் இதுவரை அவன் செய்தவைகள் அனைத்தும் வீணாகப் போகும். அதில் அவனையும் அடைத்தான். பிறகாவது பிரதாபன் வருவார் என்று நினைக்க மீண்டும் வந்ததோ சஹானா.
இப்படி ஆரம்பித்துவிட்ட ஒரு செயலின் தொடராக அனைத்தும் நிகழ்ந்து, ஒரு கட்டத்தில் விருப்பு, வெறுப்பு, சரிபிழை என்பதையெல்லாம் தாண்டி காரியங்களைச் செய்யச் சூழ்நிலைகள் அவனைக் கட்டாயப்படுத்தியிருந்தது.
தான் செய்த காரியத்தின் வீரியம் அவனுக்குத் தெரியாமல் இல்லை. அதைக் காட்டிலும் அன்னையின் காயம் ஆழமானது என்கிற எண்ணம் இருக்கிறவரைக்கும் அவன் நிமிர்ந்துதான் இருந்தான். இன்று, தன்னால் அங்கே ஒரு உயிர் ஊசலாடிப் போயிற்று என்பது அவனை மிகவுமே உலுக்கிப்போட்டிருந்தது.
தன் கைகளுக்குள் அடங்காமல் நின்று கதறியவளே நினைவுகளில் நின்று அவனைக் கொன்றுகொண்டிருந்தாள். தலையைப்போட்டு உலுக்கியும் அதிலிருந்து வெளியே வரமுடியவில்லை. அவள் கோபித்து இருக்கலாம். அவனுக்கு இரண்டு அறை போட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு உன்னை நம்பி வந்தேனே நீ இப்படிச் செய்யலாமா என்று துடித்ததைத்தான் மறக்கவே முடியவில்லை.


