அவன் வீட்டுக்குச் சென்றபோது மொத்தக் குடும்பமும் வீட்டு முற்றத்தில் அவனுக்காகக் காத்திருந்தது.
சிவானந்தனின் முகத்தில் மிகுந்த கோபம்! சிவப்பேறிப் போயிருந்த விழிகள் அவனைக் கூறு போடுவது புறக்கண்ணில் தெரிய, மெல்லிய தடுமாற்றம் அவனுக்குள்.
வேகமாகச் சமாளித்துக்கொண்டு தானும் சென்று அமர்ந்துகொண்டான். செய்தது பிழைதான். அதற்கென்று ஓடி ஒளியவா முடியும்! எது வந்தாலும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்!
ஒவ்வொருவரின் மனதிலும் கேட்க ஓராயிரம் விடயங்கள் பொங்கிக்கொண்டு வந்தன. ஆனாலும், யாரும் எதையும் பட்டென்று கேட்டுவிடவில்லை. கனத்த அமைதியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
தகப்பனைப் பாராததுபோல் பார்த்தான். எப்போதும்போல உணர்வுகளைக் காட்டாத இறுக்கமான முகம். என்ன நினைக்கிறார், அவருக்குள் என்ன ஓடுகிறது ஒன்றும் புரியவில்லை. இப்படி எல்லாக் கதவுகளையும் சாற்றிவைத்திருந்தால் உள்ளே இருப்பது யாருக்குத்தான் தெரியும்? ஆனால், இந்த மனிதருக்குள்ளும் ரகசியங்கள் புதைந்து கிடக்கிறது! அவரும் காட்டிக்கொள்ளவில்லை அவர்களும் கண்டுபிடிக்கவில்லை. மனதில் ஒருவிதப் பாரம் அழுத்த கைக் காப்பை மேலே இழுத்துவிட்டான்.
சில வினாடிகள் கடந்திருந்தது.
சிவானந்தனின் பொறுமை அந்தளவில் முடிந்திருக்க வேண்டும்! “அடிச்சுத் திருத்துற வயசு உனக்கும் இல்ல எனக்கும் இல்ல. இல்லையோ நீ செய்த காரியத்துக்கு உன்ர தோள உரிச்சிருப்பன். என்னோட சண்டைக்கு நிண்டாலும் பொறுப்பும் பொறுமையும் இருக்கும் எண்டு நினைச்சன். ஆனா இவ்வளவு பெரிய பிழையைச் செய்வாய் எண்டு நினைக்கவே இல்ல!” என்றபோது என்ன முயன்றும் முடியாமல் அவன் முகம் கன்றிப்போயிற்று.
மற்றைய நாட்களாக இருந்திருக்க அவருக்கு மேலால் பதில் சொல்லியிருப்பான். இன்று அவன் அறிந்துகொண்டவைகள் வாயைக் கட்டிப்போட்டது.
“உன்ன சொல்லியும் குற்றம் இல்ல. சின்ன வயசில இருந்தே கொஞ்சம் கொஞ்சமா நஞ்ச ஊட்டி வளத்த இந்த வீட்டுப் பொம்பிளைகளைச் சொல்லோணும்!” என்றவரிடம், “செய்தது நான்! தேவையில்லாம அவேய இழுக்காதீங்க!” என்றான் பட்டென்று.
“வேற யாரையாடா இழுக்கிறது? வாழ்க்கையில ஒருக்கா பிழை விடலாம் ரெண்டு தரம் பிழை விடலாம். வாழ்க்கையையே பிழையா வாழுறேல்ல. இங்க நிம்மதியா வாழ விடாதுகள் எண்டு தெரிஞ்சுதான் அவன் கண்காணாத தேசம் போனவன். அங்கயும் அவனை வாழவிடமாட்டன் எண்டு நிக்கிற உங்களை எல்லாம் என்ன செய்றது?” வெறுப்புடன் அவர் மொழிந்தபோது அவனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“இப்ப என்ன சொல்லுறீங்க? அவர் நிம்மதியா வாழவேணும் எண்டுறதுக்காக பெத்த தாய் தகப்பனைப் பற்றிக் கவலைப்படாம விட்டுட்டுப் போனது சரி எண்டா? நான் செய்தது பிழைதான். ஆனா அது நடந்ததாலதான் அவரின்ர மகளாவது இங்க வந்தவள். இல்லாட்டி வந்தே இருக்கமாட்டாள்.” என்று, அவனும் ஆத்திரப்பட்டான்.
“எப்பிடி வருவான்? முப்பது வருசம் கழிச்சும் மறக்காம அடுத்த தலைமுறைக்கும் வஞ்சத்தை ஊட்டிவிட்டிருக்கிற இந்த வீட்டுக்கு அவன் எப்பிடியடா வருவான்? அவன்ர நண்பனுக்கே இந்தக் கதி எண்டா அவனுக்கு என்ன செய்திருப்பாய்? முதல் அவனுக்கும் உனக்கும் என்ன பிரச்சினை? அவன் உனக்கு என்ன செய்தவன்? இந்த வீட்டு பொம்பிளைகளின்ர கதையை மட்டும் கேட்டு நடந்த நீயெல்லாம் என்னத்த படிச்சு கிழிச்சனி?” தகப்பனின் சீற்றத்தில் தனக்குள் இறுகினான் சஞ்சயன்.
“பொறுப்பில்லாம நடக்க அவனை என்ன உன்னமாதிரி சிந்திக்காம செயல்படுறவன் எண்டு நினைச்சியா? அவன் தன்ர பொறுப்பை என்னட்ட தந்திட்டுத்தான் போனவன். தன்ர குடும்பம் இனி என்ர பொறுப்பு எண்டு சொல்லிப்போட்டுப் போனவன். அவனுக்காகவும் உள்ளுக்க படுத்திருக்கிறாரே ஒரு மனுசன் அவருக்காகவும் தான் நீங்க செய்ற எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு இன்னும் இந்த வீட்டுல இருக்கிறன்!” என்றவர் விருட்டென்று எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வேகமாக வெளியேறினார்.
தெய்வானை அம்மாவோ திகைத்துப்போய்ப் போகிற மருமகனையே பார்த்திருந்தார். எண்பது வயதாகப்போகிற கிழட்டுக் கட்டை அவரே நன்றாக இருக்கையில் மகனுக்கு மாரடைப்பாம், அவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இருக்கிறானாம் என்பது அவரை உலுக்கிவிட்டிருந்தது. இன்றோ அவன் தங்களைக் கைவிட்டுவிடவில்லை என்று அறிந்தது அவரின் அசையாத திட மனதையே அசைத்துப் பார்த்தது. சஞ்சயனுக்கும் இது அதிர்ச்சிதான். அவர் தன் தங்கையை மாத்திரமல்ல பெற்றவர்களையும் கைவிட்டு விடவில்லை என்று அறிந்தவனுக்குக் கண்முன்னே இருக்கும் பெண்கள் மீதுதான் அடக்கமுடியாத சினம் பொங்கிற்று!
வேகமாக எழுந்து அங்கிருந்து போனான். அறைக்குள் புகுந்ததும் முதல் நாளிலிருந்து போட்டிருந்த சட்டையைக் கழற்றி எறிந்தான். கையில் அணிந்திருந்த தடிமனான வெள்ளிக் காப்பை மேலும் கீழுமாக உருவிவிட்டபடி நடந்துகொண்டிருந்தவனின் மனது கொந்தளித்துக் கொண்டிருந்தது. பிடரியை அழுத்தித் தேய்த்துவிட்டான். கோபமா சினமா வெறுப்பா சொல்லத் தெரியவில்லை. இதையெல்லாம் வாயைத்திறந்து கொட்டிவிட முடியாத நிலைவேறு அறுத்தது.
யாரிடம் கோபித்து என்ன வரப்போகிறது? அதுதான் எல்லாம் நடந்து முடிந்துவிட்டதே! அதோடு, ராகவி சொன்னதுபோல் இதையெல்லாம் கேட்டுக்கொண்டுபோய் சரி யார்மீது பிழை யார்மீது என்று நிறுவுவதால் என்ன நன்மை விளைந்துவிடும். இரு கூறுகளாகப் பிளந்து நிற்பது ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஆயிற்றே!
அவனின் சிந்தனையைக் கலைப்பதுபோல் அந்தத் தாயே வந்துநின்றார்.
“அங்க போனியோ?”
அவரின் கேள்வியில் திரும்பிப் பார்த்தான். கோபம் தான் வந்தது. இவராவது உண்மையைச் சொல்லி அவனை நல்வழிப் படுத்தியிருக்க வேண்டாமா? ப்ச்! நண்பன் முதல் கூடப்பிறந்தவள் வரை அவ்வளவு சொல்லியும் கேட்காமல் திமிரெடுத்து ஆடிவிட்டு இன்று இவரில் பழியைப் போட்டு என்ன பலன்?
அவர் அவனின் அம்மம்மா. வயதானவர். அவர் செய்த தவறையும் சேர்த்து சரி செய்ய வேண்டியது அவன் கடமை என்று ஓடும்போதே இப்படி ஏன் மாமாவின் விடயத்தில் சிந்திக்காமல் போனோம் என்று மனம் சுட்டது! பெரும் தவறுதான்! என்ன கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்கிறான்.


