“நீ இன்னும் பதில் சொல்ல இல்ல! என்ன சொன்னவே?”
அவனுக்குச் சினம் பொங்கிற்று! “என்ன சொன்னா என்ன? உண்மையை சொல்லி இருப்பினம் எண்டு பயமா இருக்கோ?” என்றான் பட்டென்று.
சுருக்கங்கள் விழுந்திருந்த அந்த முகம் இன்னுமே சுருங்கிப் போயிற்று! அது அவனைப் பாதித்தது. இதற்குத்தானே எதையும் கதைக்காமல் எழுந்து வந்தான்.
“எனக்கு என்ர பிள்ளையைப் பாக்கோணும்! என்னை கூட்டிக்கொண்டு போ தம்பி!”
முதலை விட வேகமாகத் திரும்பி அவரை முறைத்தான். அடக்கவே முடியாமல் ஒரு கோபமும் சுர் என்று எழுந்தது.
“என்ன திடீர் பாசம்? அதுவும் ஓடிப்போனவர் மேல?”
“எனக்கு அவனை பாக்கோணும்! உன்னால கூட்டிக்கொண்டு போகேலுமா இல்லையா?”
கண்ணீர் இல்லை. கலக்கமில்லை. எதையும் காட்டிக்கொள்ளவும் இல்லை. ஆனால் மகனைப் பார்க்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். தானாடாவிட்டாலும் தசையாடுமாம்! தன்முன்னே அசையாமல் நின்று ஆடிக்கொண்டிருப்பவரைக் கண்டவனின் கோபம் கூட மட்டுப்பட்டது.
“அவருக்கு ஒண்டும் நடக்காது! சும்மா பயப்படாதீங்க!” ஒட்டாத குரலில் அதட்டினான்.
“எனக்கு பயம் எண்டு சொன்னனானே? என்னை கூட்டிக்கொண்டு போ எண்டுதான் சொல்லுறன்!” அவனுக்கு மேலால் நின்றார் அவர்.
பக்கத்திலா இருக்கிறார் கூட்டிக்கொண்டு போக? இதென்ன சிறுபிள்ளைப் பிடிவாதம்? இன்றைய நிலையில் ஃபோனில் கூட அவரோடு கதைக்க முடியாதே.
என்ன சொல்ல என்று தெரியாது அவன் நிற்க, “மாமா வெளிநாட்டில எல்லா அம்மம்மா இருக்கிறார். அவருக்குச் சுகமாகட்டும். பிறகு நாங்க வீடியோ கோல் போட்டுக் கதைக்கலாம். சரியா?” அதுவரை நேரமும் அவர்கள் பேசுவதைக் கேட்டிருந்த சஞ்சனா அவரைத் தோளோடு அணைத்து குழந்தைக்குச் சொல்வதுபோல் சொன்னாள்.
“அந்தக் கோல இப்ப போடுறதுக்கு என்ன உனக்கு? சும்மா கதைச்சுக்கொண்டு நிக்கிறாய்!” உடும்புப் பிடியாகத் தன் பிடியிலேயே நின்றவரைச் சஞ்சனாவினால் சமாளிக்க முடியவில்லை. ஆனாலும் தமையனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
“உங்கட அவசரத்துக்கு ஒண்டும் நடக்காது! கொஞ்சம் பொறுங்கோ, ஏற்பாடு செய்றன்!” தங்கையின் முகத்திருப்பலும் சேர்ந்துகொண்டதில் சிடுசிடுத்துவிட்டு மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றான் சஞ்சயன்.
இவர்கள் பேசிக்கொண்டதை எல்லாம் கேட்டிருந்த பிரபாவதிக்கு மனம் பொறுக்கவே இல்லை. அப்படி என்ன நடந்துவிட்டது என்று ஆளாளுக்குத் துள்ளுகிறார்களாம். மகன் செய்தது சரிதானே! இனி இந்தப் பக்கம் வருகிற தைரியம் அந்தக் கூட்டத்துக்கு வருமா என்ன?
குளித்துவிட்டு அவன் வந்தபோதும் அங்கேயேதான் பிடிவாதத்தோடு அமர்ந்திருந்தார் தெய்வானை. “அம்மம்மா!” என்றான் அதட்டலாக.
“நான் கேட்டதை செய்றதை விட்டுட்டு என்னத்துக்கு சும்மா கத்துறாய்?” என்று அவனுக்கு மேலாக அதட்டினார் அவர். ராகவியிடம் வாங்கி வந்த அகிலனின் இலக்கத்துக்கு அழைத்து, அவர்கள் சாவகச்சேரியை நெருங்கிவிட்டார்களா என்று தெரிந்துகொண்டு அவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
தடுத்துக்கொண்டு வந்து நின்றார் பிரபாவதி. “அந்தக் கேடுகெட்ட கூட்டத்துக்கு நீ படிப்பிச்சது தான் தம்பி சரியான பாடம். தைரியம் இருந்தா இனியும் இந்தப் பக்கம் வந்து பாக்கட்டும்..” என்றவரை முகம் இறுக கை நீட்டித் தடுத்தான் சஞ்சயன்.
“நீங்க செய்த எல்லா அநியாயமும் எனக்குத் தெரிஞ்சிட்டுது. ஆனாலும்
என்ர அம்மாவா போயிட்டீங்க. அதால வாயை மூடிக்கொண்டு இருக்கிறன். அதை சாட்டா வச்சு இனியும் ஏதாவது கதைச்சுக்கொண்டு வந்தீங்க..” என்றவன் மேலே பேசவில்லை. அவன் பார்த்துவிட்டுப் போன பார்வையிலேயே அப்படியே உடைந்துபோனார் பிரபாவதி. மகனா? அவரின் மகனா? நம்பவே முடியாமல் அரற்றினார். கண்ணில் அகப்பட்ட வேலையாட்கள் எல்லோரும் அவரின் பல்லுக்குள் அகப்பட்டு நெரிப்பட்டுக்கொண்டிருந்தனர்.
தங்கள் வீட்டு வாசலில் வந்திறங்கிய தெய்வானை ஆச்சியைக் கண்டதும் அரவிந்தன் குடும்பத்தினர் திகைத்துப் போயினர்.
“வாங்கோம்மா! வாங்கோ! ஏன் வாசல்லையே நிக்கிறீங்கள். வீட்டுக்க வாங்கோ.” வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அழைத்தார் ராகவி.
“இல்ல. இங்கேயே காத்தாட இருப்பம்.” முற்றத்தில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்துகொண்டார் தெய்வானை. வீடுவரை வந்தவருக்கு வீட்டுக்குள் வர விருப்பமில்லை என்று அதுவே சொல்லிற்று.
ராகவிக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. தேநீர் வேண்டுமா என்க எதுவுமே வேண்டாம் என்றுவிட்டார் தெய்வானை. அப்படியே விடாமல் செம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். விருப்பம் இல்லாமல் வாங்கிக்கொண்டு வந்த வேலையைக் கவனி என்று விழிகளாலேயே பேரனுக்கு ஆணையிட்டார் தெய்வானை.
“மாமாவோட கதைக்கப்போறன் எண்டு கேட்டவா அம்மம்மா. என்னட்ட நம்பர் இல்ல, அதுதான் கூட்டிக்கொண்டு வந்தனான்.” அரவிந்தனிடம் வந்த காரணத்தைச் சொன்னான் அவன்.
அகிலனிடம் கேட்டே நம்பரை வாங்கியிருக்க முடியும். ஆனாலும் அவரை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். மனைவி மூலம் காலையில் அவன் வந்து பேசிச் சென்றதையும் அறிந்து வைத்திருந்த அரவிந்தன் பேசாமல் தங்கைக்கு அழைத்தார்.