அன்றுதான் பிரதாபனுக்கு சத்திர சிகிச்சை. அதில், காலையிலேயே எழுந்து தலைக்குக் குளித்துத் தெய்வத்திடம் சரணடைந்திருந்தார் யாதவி. மனமெங்கும் பரிதவிப்பு. வைத்தியர் பயமில்லை என்றார் தான். இதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம் தான். அதெல்லாம் யாருக்கோ நடக்கையில் தானே அப்படி எடுத்துக்கொள்ள முடிகிறது. நம் வீட்டில் நம் உயிரானவர்களுக்கு ஒன்று என்றால் இல்லாததை எல்லாம் நினைத்துக் கலங்கிவிடும் இந்த மனது. அப்படித்தான் கண்டதையும் நினைத்துத் தன்னையே வருத்திக்கொண்டு இருந்தார் யாதவி. நேரம் செல்லச் செல்ல அவரைச் சூழ்ந்திருந்த ஆழ்ந்த அமைதியும் அந்த ஆண்டவனிடம் மனதின் பரிதவிப்பை எல்லாம் கொட்டியதிலும் மனம் சற்றே ஒருமுகப்பட்டிருந்தது.
சஹானா இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவாள் என்பதில் அவளுக்காக வேக வேகமாகச் சமைக்கத் தொடங்கினார். ரட்ணம் குடும்பத்தினருக்கு நடந்தவை வேறு மனதில் வந்து வருத்தத்தைத் தோற்றுவித்தது. ஏனோ சஞ்சயனைக் காட்டிலும் அவனை அப்படி வளர்த்த பிரபாவதி மீதுதான் கோபம் உண்டாயிற்று.
இலங்கையில் இருந்து அழைப்பு வர, வீடியோகோலினை ஏற்றார்.
“என்னம்மா செய்றாய்?” யாதவி சமையலறையில் நிற்பதைக் கவனித்துக் கேட்டார் அரவிந்தன்.
“சஹிக்கு அண்ணா. லசானியா எண்டால் விரும்பிச் சாப்பிடுவாள். அதுதான் செய்துகொண்டு இருக்கிறன். பிள்ளை வந்ததும் சாப்பிட்டு அப்பிடியே இவரிட்ட போகத்தான் சரியா இருக்கும்.” என்றுவிட்டு, “நீங்க வீட்டுக்கு போயிட்டீங்க தானே?” என்று விசாரித்தார்.
“இப்பதானம்மா வந்தனாங்க.” என்றுவிட்டு, தெய்வானை ஆச்சி காத்திருப்பதில், “உன்னோட கதைக்க ஆர் வந்திருக்கினம் எண்டு பார்.” என்றவர் தன் கைபேசியினை தெய்வானை அம்மாவிடம் நீட்டினார்.
திரை முழுவதிலும் தெரிந்த முகத்தைக் கண்டு அப்படியே நின்றுவிட்டார் யாதவி.
‘மாமி…’ கைகள் வேலை நிறுத்தம் செய்தது. அவரின் சுகம் விசாரிப்பதா அல்லது அவரின் மகனின் நிலை பற்றிச் சொல்வதா ஒன்றுமே தெரிய மறுத்தது. அவருக்கு மருமகளாகி முப்பது வருடங்களாகிவிட்டது. ஆனால் இன்றுதான் மாமியாரும் மருமகளும் நேரடியாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.
மாமியாருக்கு மருமகளைப்போன்று எந்தத் தடுமாற்றமும் இருக்கவில்லை போலும். “எங்களை விட நீ முக்கியம் எண்டுதானே அவன் உனக்குப் பின்னால வந்தவன். அப்பிடி வந்தவனுக்கு இப்பிடி ஆகிற வரைக்கும் எங்க பாத்துக்கொண்டு இருந்தனி? இதுதானோ நீ அவனை பாத்த லட்சணம்?” அவரின் அதட்டலில் சட்டென்று சந்தோசப்பூக்கள் யாதவியின் விழிகளுக்குள் கண்ணீராக மின்னிற்று!
இந்த நேரம் இந்தப் பேச்சுத் தேவையா என்று மற்றவர்கள் அறியாமல் அம்மம்மாவை முறைத்தான் சஞ்சயன். “சும்மா கத்தாம எங்க அவர் எண்டு கேளுங்கோ!” அவரின் காதோரமாக மெல்லிய குரலில் அதட்டியபோதுதான் யாதவியின் பார்வை வட்டத்துக்குள் வந்தான் சஞ்சயன்.
பார்த்தவர் திகைத்துப்போனார். கைகால்களில் எல்லாம் ஒரு நடுக்கம். அப்படியே பிரதாபன்!
“எங்க அவன்? அவனோட கதைக்கேலாதோ?”
தெய்வானையின் கேள்வி யாதவியின் செவிகளில் விழவேயில்லை. சஞ்சயனிடமே கண்கள் நிலைத்தது. தன் வீட்டுக்கு முதன் முதலாக வந்த அந்தப் பிரதாபனை மீண்டும் பார்ப்பது போலிருந்தது. வார்த்தைகளில் வடிக்க முடியாத பிரியம் ஒன்று அவன் மீது பரவிப் படர்ந்தது. பிரதாபனின் நிழலைக்கூட வெறுக்கும் வல்லமையற்றவர். அவரின் சாயலை மட்டும் எப்படி வெறுப்பார்?
தெய்வானை ஆச்சிக்கு அவரின் நிலை விளங்க, “அவனையே என்னத்துக்கு பாக்கிறாய்? அவன்தான் இவ்வளவுக்கும் காரணம்!” என்றார்.
“மருமகனுக்கு மாமாட்ட இல்லாத உரிமையா மாமி?” ஒற்றைக் கேள்வியில் தன் மனதை உரைத்தார் யாதவி.
சஞ்சயனுக்கு ஒருமாதிரி ஆகிப்போயிற்று! கோபப்படுவார், கத்துவார், குற்றம் சாட்டுவார் என்றெல்லாம் நினைத்திருந்தான். அப்படியிருக்க அவர் சொன்னது?
பேச்சற்றுத் தானும் அவரையே பார்த்தான்.
மாமியார் கேட்கும் கேள்விகளுக்கு வாய் தன் பாட்டுக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாலும் யாதவியின் கண்கள் நொடிக்கொரு தடவை தன்னிடம் தாவுவதைக் கண்டு மெல்லிய தடுமாற்றம் அவனுக்குள். சங்கடத்தோடு தலையைக் கோதி மீசையை நீவி விட்டான்.
யாதவியின் முகத்தில் முறுவல் ஒன்று மலர்ந்தது. “உங்கட மாமாவும் இப்பிடித்தான் செய்வார்.” என்றார்.
‘என்ன செய்வார்’ புரியாமல் பார்த்தான் அவன். தலையைக் கோதி மீசையை நீவுவதுபோல் செய்து காட்டினார் யாதவி. சிறு கூச்சச் சிரிப்புடன் பார்வையை அகற்றியபோது சுற்றியிருந்தவர்களும் குறுகுறுப்புடன் தன்னையே பார்க்கவும், அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் எழுந்துகொண்டான்.
அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்பதுபோல் அங்கிருந்து நடந்தவனோடு சேர்ந்துகொண்டான் அகிலன். அன்று கசூரினா பீச்சில் இவனையும் வைத்துக்கொண்டு தானே அவளிடம் கடுமையைக் காட்டினான்.
“உனக்கு என்னில கோவம் இல்லையா?” அவன் முகம் பாராமல் கேட்டான்.
அகிலன் உடனேயே எதுவும் சொல்லிவிடவில்லை. இரு குடும்பங்களுக்கும் இடையிலான உறவு மெல்லச் சீராக ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் எதையும் யோசிக்காமல் பேசத் தயங்கினான்.
அவனை உணர்ந்தவனாக, “நான் தானே கேக்கிறன், சும்மா சொல்லு!” என்றான் சஞ்சயன்.
“என்ன இருந்தாலும் நீங்க நடந்தது பேசினது எல்லாமே அதிகப்படி. அவள் பாவம். உங்க யாரைப்பற்றியும் குறையா எங்களிட்ட கூட சொல்லமாட்டாள். அவளை நிறைய அழ வச்சிட்டீங்க.”
வேதனையோடு விழிகளை மூடினான் சஞ்சயன். ‘உங்கள நம்பினேனே மச்சான்! உங்கள மட்டும் தானே நம்பி வந்தனான்’ என்று கதறினாள் சஹானா. படக்கென்று விழிகளைத் திறந்தவனின் இதயத்தில் பெரும் பரிதவிப்பு!
‘உன்ர அண்ணாக்கு யார் தண்டனை கொடுப்பது’ என்று கேட்டாளே. இதோ தன் கண்ணீர் வழியும் கண்களால் உங்களை நம்பினேனே மச்சான் என்று கேட்டுக் கேட்டே அவனுக்குச் சவுக்கால் அடிக்கிறாளே. இது போதாதா? வாழும் காலம் வரைக்கும் வதைக்கப்போகிறாள். அது மட்டும் நன்றாகத் தெரிந்து போயிற்று அவனுக்கு!