அப்போதைக்கு அதுவே நிம்மதியைத் தர மனைவியை நேசத்துடன் நோக்கியது அவரின் விழிகள். தானும் இல்லாமல் நண்பனின் குடும்பமும் இல்லாமல் மகளையும் வைத்துக்கொண்டு என்ன பாடு பட்டிருப்பாள் என்று அவருக்கா விளங்காது?
இரண்டரக் கலந்துகிடக்கும் இதயங்கள் அல்லவா. ஒன்று என்ன நினைக்கிறது என்று மற்றதுக்குச் சொல்லியா விளங்கவேண்டும்? கணவரின் எண்ணம் உணர்ந்து ஒன்றுமில்லை என்பதாக கசிந்திருந்த விழிகளை மூடித் திறந்துவிட்டு முறுவலித்தார் யாதவி.
இரண்டு வாரங்களின் பின்னர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் பிரதாபன். அதன் பிறகுதான், நடந்த விடயங்கள் தேவையான அளவில் அவரைப் பெரிதாகப் பாதிக்காத முறையில் பகிரப்பட்டது. கேட்கக் கேட்க மலைத்தே போனார் மனிதர்.
கண்கள் பனிக்கப் பெண்ணை உச்சி முகர்ந்து, “அப்பாக்காகவா செல்லம்?” என்று உருகியவரிடம் கண்களில் குறும்பு மின்ன, “ம்ஹூம்!” என்று தலையசைத்து மறுத்தாள் அவள்.
“பின்ன?”
அவரின் காதருகில் நெருங்கி மிகுந்த ரகசியமாக, “என்ர மச்சான்மாரை சைட் அடிக்கப் போனனான்.” என்றாள் நகைக்கும் குரலில்.
மெல்ல நகைத்தாலும் பெற்றவருக்குத் தெரியாதா தன் பெண்ணைப் பற்றி? தோளில் சாய்த்து தலையை வருடிக்கொடுத்தார்.
“கவலையா இல்லையாடா? உன்ர மச்சான் உன்னோட நிறையச் சண்டை பிடிச்சவனாமே.” வாஞ்சையோடு கேட்டவரின் மனக்கவலையை உணர்ந்து தனக்குள் சிரித்துக்கொண்டாள் பெண்.
“நான் திருப்பிக்கொடுக்காம வந்திருப்பன் எண்டு நினைக்கிறீங்களா அப்பா?” அவளின் கேள்வியில் சந்தோசமாக நகைத்தார் பிரதாபன்.
“மிஸ்டர் பிரதாபன்! கதைச்சது சிரிச்சது எல்லாம் போதும். ஓகே! கொஞ்சம் கெதியா உடம்பைத் தேத்திற வழிய பாருங்கோ! அங்க உங்கட சொந்தக்காரர் உங்களோட கதைக்கிறதுக்குக் காத்துக்கொண்டு இருக்கினம்!” என்றுவிட்டுப்போனாள் அவள்.
‘உங்கட சொந்தக்காரர்’ சுருக்கென்று குத்தியது அந்த வார்த்தை. அவர்களை விலக்கி வைக்கிறாளா என்ன? புருவங்கள் சுருங்க அமர்ந்திருந்தவரிடம் கையில் பானத்துடன் வந்தார் யாதவி. “என்னவாம் உங்கட மகள்?” அதை அவருக்கு அருந்த கொடுத்தவாறே கேட்டார்.
“என்ர சொந்தக்காரர் என்னோட கதைக்கிறதுக்கு ஆவலா இருக்கினமாம்.” என்றார் மனைவியின் முகத்திலேயே பார்வையைப் பதித்து.
யாதவிக்கும் புரிந்தது. தெய்வானை ஆச்சி அழுது, மன்னிப்புக் கேட்டுக்கூட கதைக்க மறுத்துவிட்ட மகளின் கோபத்தை அவரும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். கணவரின் கையை அழுத்திக்கொடுத்தார். “சரியோ பிழையோ சந்தோசமா இருந்த ஒரு குடும்பம் நிறையத் துன்பங்களை அனுபவிக்க நானும் நீங்களும் காரணமாயிட்டோம். அதை எங்கட மகள் சரியாக்க முயற்சி செய்திருக்கிறாள். அவள் நிறையக் காயப்பட்டிருந்தாலும் முடிவு நல்லதாத்தான் வந்திருக்கு. அந்தளவோட இதைக் கடந்து போவோம். கொஞ்ச நாளில சஹியும் சரியாகிடுவாள். உங்கட மகளுக்கும் உங்களை மாதிரி கோவத்தைப் பிடிச்சு வச்சிருக்கத் தெரியாது.” என்று முறுவலித்தார்.
பிரதாபனுக்கும் மனைவி சொல்வது புரிந்தது. தலையாட்டிக் கேட்டுக்கொண்டார்.
“அம்மாவோட கதைப்பமோ யது?”
கலக்கத்துடன் கணவரை நோக்கினார் யாதவி. அன்னையோடு சமாதானமாகியாயிற்று என்று தெரிந்த நாளிலிருந்து அவர்களோடு பேசுவதற்கு ஆவலாக ஏங்கிக்கொண்டு இருக்கிறார் என்று தெரியும். தெய்வானையும் தினமும் எடுத்துக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார். யாதவிதான் இருவரையும் கதைக்க விடவில்லை. கணவருக்கு மீண்டும் எதுவும் ஆகிவிடுமோ என்று மிகவுமே பயந்தார். இன்னுமே நன்றாகத் தேறிய பிறகு வைத்தியரிடமும் ஒருவார்த்தை கேட்டுவிட்டுக் கதைக்கலாமே என்பது அவருக்கு.
“நீங்க நிதானமா கதைப்பீங்களோ? இதயத்துக்கு நிறைய அழுத்தம் குடுக்கவேண்டாம் எண்டு டொக்டர் சொன்னவர் எல்லோ.” அவருக்கே மாமியாரை முதன் முதலில் பார்த்தபோது கைகால்கள் எல்லாம் நடுங்கி கண்ணீர் கூட வந்ததே. அப்படியிருக்கப் பிரதாபனுக்கு?
“எத்தனை வருசத்துக்குப் பிறகு கதைக்கப்போறன். அதால முதல் கொஞ்சம் அப்பிடித்தான் இருக்கும். ஆனா யது, இவ்வளவு காலம் பொறுத்தாச்சு இனியும் பொறுக்கேலாமா இருக்கு.” என்றார் சிறுகுழந்தை போன்று.
அடுத்த வினாடியே சஞ்சயனுக்கு அழைப்பை ஏற்படுத்தியிருந்தார் யாதவி.
திரையில் தன் தாயைப் பார்த்த பிரதாபனுக்குக் கண்ணீர் பெருகி வழிந்தது. அவரின் நினைவில் இருப்பதெல்லாம் முப்பது வருடத்துக்கு முந்தைய இளம் அன்னை. ஆனால், இன்றைக்கோ இளைத்து, கருத்து, தோள்கள் சுருங்கி கடவுளே… “அம்மா..” என்றார் தழுதழுத்து.
அங்கே தெய்வானையின் நிலையும் அதேதான். மகனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்கிற பயத்தில், அழவும் முடியவில்லை ஆத்திரப்படவும் முடியவில்லை. “அப்பு.. பிரவன்.. ராசா.. நல்லா இருக்கிறியா?” தாய் என்கிறவளுக்கு மட்டும் எப்போதுமே பிள்ளைகளின் நலன்தானே முக்கியம்.
“எனக்கு என்னம்மா? உங்களை எல்லாம் விட்டுப்போட்டு வந்து நல்லா இருக்கிறன்.” என்ற மகனின் பேச்சில் அவருக்கும் கண்ணீர் பொலபொல என்று கொட்டியது. சேலைத் தலைப்பால் வேகமாகத் துடைத்துக்கொண்டு, “இப்ப என்னத்துக்கு அழுறாய்? சும்மா இரு. எங்கட குடும்பத்தைப் போட்டு ஆட்டின எல்லாத் துன்பமும் முடிஞ்சுது. எங்க உன்ர மனுசி? மருந்து மாத்திரை எல்லாம் மறக்காம தந்தவளோ? குடு அவளிட்ட கேக்கிறன்!” என்றவர் அதற்குமேல் தன் மகனை அழவிடவே இல்லை. ஒரே அதட்டலும் உருட்டலும் தான். நீ அது செய்யவேணும் இது செய்ய வேணும் என்று மகனுக்கு அவரும் ஒரு வைத்தியராக மாறிப்போனார். அந்த வயதிலும் அவருக்கிருந்த ஆளுமையைக் கண்டு யாதவியே மலைத்துப்போனார்.
தோற்றம், செய்கை, உடல் மொழி அனைத்திலும் தன்னைக் கொண்டே இருந்த சஞ்சயனைக் கண்டு அதிசயித்துப்போனார் பிரதாபன். அவராக அவனைக் கூப்பிட்டு வைத்துப் பேசினாலும் சம்பிரதாய நலன் விசாரிப்பைத் தாண்டிப் போகமுடியாமல் திணறினான் அவன்.
அதுவும், சத்திர சிகிச்சையின் தாக்கத்தில் இருந்து முற்றிலும் வெளிவராமல் கட்டிலில் இருக்கிற அந்த மனிதரைப் பார்க்கிற பொழுதுகளில் எல்லாம் ஐயோ என்ன வேலை பார்த்திருக்கிறோம் என்கிற மனதின் ஓலத்தை அடக்க முடிவதே இல்லை.
ஆறுமாதம் கழிந்ததும், “வந்திட்டு போ தம்பி. பாக்கவேணும் மாதிரிக் கிடக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு நானும் உயிரோட இருப்பனோ ஆருக்குத் தெரியும் சொல்லு? அப்பா வேற உன்னத்தான் கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்.” என்ற அன்னையின் வார்த்தையில் பயணத்துக்கு ஆயத்தமானார் பிரதாபன்.
“நான் ஏற்கனவே போயிட்டு வந்திட்டன் தானேப்பா. நீங்களும் அம்மாவும் மட்டும் போயிட்டு வாங்கோ. நான் மாமா வீட்டுல இருப்பன்.” என்று, தன் விரல் நகங்களை ஆராய்ந்தபடி சொன்னாள் சஹானா.
அவளின் தலையை வருடிக்கொடுத்தார் பிரதாபன். வேறு எதுவும் பேசவில்லை. நெஞ்சுக்குள் எதுவோ அடைக்க மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் சஹானா. “உன்ன இங்க தனியா விட்டுட்டு அப்பா அங்க போவன் எண்டு நினைக்கிறியா செல்லம்?” என்று கனிவுடன் கேட்டார் பிரதாபன்.
அதற்குமேல் முடியாமல், “அப்பா!” என்று அவரின் தோளில் சாய்ந்து விம்மினாள் பெண்.