கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது. அரவிந்தன், சஞ்சயன், அகிலன், சஞ்சனா நால்வரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, பிரதாபனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கோச்சிப்பெட்டி போன்ற குட்டி வாகனம் ஒன்று அவர்கள் மூவரையும் சுமந்து வந்தது.
வாகனம் நின்றதும் ஓடிப்போய் சஹியைக் கட்டிக்கொண்டாள் சஞ்சனா. இறங்கக்கூட விடவில்லை. “மச்சி வாவாவா! எப்பிடி இருக்கிறாய்? வாங்கோ மாமி!” என்று ஆர்ப்பரித்துவிட்டு, “மாமா..” என்று தொண்டை அடைக்கப் பிரதாபனின் பக்கம் ஓடிப்போனாள்.
நீண்ட பயணத்தின் காரணமாக உடலிலும் முகத்திலும் களைப்புத் தெரிந்தாலும் உயிர்ப்புடன் ஒளிர்ந்த பிரதாபனின் விழிகள் மெல்லிய நீர் கசிவுடன் தன் தங்கையின் மகளை வாரி அணைத்தது. உச்சி முகர்ந்து, “சுகமா இருக்கிறியாம்மா?” என்று நலம் விசாரித்துக்கொண்டார். அதற்குள் ஓடிவந்த அகிலன், “மாமா நீங்க என்னைக் கட்டிப்பிடிக்கேல்ல!” என்றபடி சஞ்சனாவை இழுத்து இந்தப் பக்கம் விட்டுவிட்டு அவரின் கைகளுக்குள் தான் புகுந்துகொண்டான்.
“மாமா! நான்தானே உங்கட ஒரே ஒரு மருமகள்! நீங்க என்னோடதான் கதைக்கோணும்!” என்று சிணுங்கினாள் சஞ்சனா.
“ஏய் போடி! அவர் என்ர அப்பா!” என்றபடி அவர்கள் இருவரையும் தள்ளி விட்டுவிட்டு அவரின் கைகளுக்குள் தான் புகுந்துகொண்டாள் சஹானா.
இத்தனை நாட்களும் சஞ்சனாவோடு கதைப்பதையும் தவிர்த்திருந்தாள் சஹானா. கோபிப்பாள், சண்டை பிடிப்பாள் என்று எண்ணியிருக்க எந்த மாற்றமும் இல்லாத சஞ்சனாவின் செயல்கள் அவளையும் அவர்களோடு சேர்ந்துகொள்ளச் செய்தது.
“அவர் என்ர மாமா..”
“அவர் என்ர அப்பா..”
“நோ.. நான் அவரின்ர குட்டி மருமகன்!”
“நீ குட்டியாடா? காண்டாமிருகம்!”
“உன்ர தொல்லை தாங்காமத்தான் அவர் அங்க இருந்து இங்க வந்ததே. இங்கயும் அவரைக் கொடுமை செய்யாத!” என்று எப்போதும்போல அவளின் மண்டையில் குட்டினான் அகிலன்.
யார் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்கிற பெரும் போராட்டம் அவர்களுக்குள் நடந்துகொண்டிருந்தது. இந்த அன்புச் சாரலை சிரிப்பும் கண்ணீருமாகத் திகட்டத் திகட்ட அனுபவித்தார் பிரதாபன்.
அரவிந்தனுக்கோ பேச்சு வரவில்லை. தினமும் வீடியோ கோலில் பார்க்கிறார்கள் தான். பேசுகிறார்கள் தான். இருவீட்டு நிகழ்வுகளும் மற்றவருக்கு ஒன்றுவிடாமல் தெரியும் தான். என்றாலும் நேரில் பார்க்கையில் பொங்கும் உணர்வுகளுக்கும் பாசத்துக்கும் எல்லையே இல்லாமல் போயிற்று! ஒன்றும் பேசாமல் கூடப்பிறந்தவரை ஒரு கையால் அரவணைத்துக்கொண்டார்.
அன்னையின் சூட்டை அண்ணரில் உணர்ந்தாரோ, “அண்ணா!” என்று உடைந்தார் யாதவி. இத்தனை நாட்களும் பொறுப்பான குடும்பத் தலைவியாகக் குடும்பத்தைத் தாங்கி நின்றவர் அண்ணனின் கைக்குள் நிற்கையில் அவரின் குட்டித் தங்கையாக மாறிப்போனார். அதுவரை அடக்கிவைத்திருந்த துக்கமும் துன்பமும் அண்ணனின் கைகளுக்குள் பெருகித் தெரிந்து கண்ணீராகக் கரைந்தது. அரவிந்தனின் நிலையும் அதேதான். அடைத்த தொண்டைக்குழியில் இருந்து வார்த்தைகள் வராது என்று தெரிந்து தலையை மட்டும் வருடிக்கொடுத்தார்.
தன்னைச் சுற்றி நின்ற உறவுகளையும் அவர்களுக்குள் இனிதாக இழையோடிக்கொண்டிருந்த அன்பினையும் கண்டு மனம் நிறைந்து தளும்பியது பிரதாபனுக்கு. வாழ்க்கையில் இப்படி ஒரு சமயம் அமையவே அமையாதா என்று உள்ளுக்குள் மிகவும் ஏங்கிப் போயிருந்தவர் அல்லவா. ஏக்கம் தீர அவர்களைப் பார்த்தபடியே இருந்தார்.
சின்னவர்களின் விளையாட்டில் பெரியவனைக் கவனிக்க முடியாமல் போனது. அவன் விலகியே நின்றான். இருந்தாலும் இன்னும் இருபத்தியைந்து வருடங்கள் கழித்து நீ இப்படித்தான் இருப்பாய் என்று சொல்லிக்கொண்டிருந்த பிரதாபன் அவனுக்குள் பெரும் தாக்கத்தை உண்டாக்கினார். இங்கிருந்த நாட்களில் விடாமல் தன்னையே தொடர்ந்த சஹானாவின் பார்வையின் பொருளும் மிக நன்றாகப் புரிந்தது. இது எல்லாமே மனதில் ஒரு இறுக்கத்தை உருவாக்க, பொறுப்பாக வாகனத்தில் இருந்து அவர்களின் பெட்டிகளை இறக்கிக்கொண்டு இருந்தான்.
சற்று நேரத்தில் அவரின் பார்வை தன்னைக் கவனிப்பதை உணர்ந்து அவரைப் பார்த்தான். வா என்பதாகப் பிரதாபனின் தலை அசைந்தது. இரண்டு எட்டில் அவரை அணுகினான். “ஒரு பிரச்சனையும் இல்லை தானே மாமா?” என்றவனுக்கு வழமையான அழுத்தத்தோடு வார்த்தைகள் வர மறுத்தன. அவரைக் குறித்து அவன் விட்ட வார்த்தைகள் நிறையவாயிற்றே!
“சுகமா இருக்கிறியாப்பு?” அவனின் கையைப் பற்றிக்கொண்டு மிகுந்த ஆதூரத்துடன் கேட்டார் பிரதாபன்.
“எனக்கென்ன மாமா. நல்லாத்தான் இருக்கிறன்!” கசப்புடன் சொன்னான்.
அதற்குள் தன்னைத் தேற்றிக்கொண்டிருந்த யாதவியும் வந்து அவன் முதுகை வருடிக்கொடுத்து, “உன்ன பாத்தது நல்ல சந்தோசமப்பு!” என்றார் பிரியத்துடன்.
பிரதாபனாவது இரத்த பந்தம். கூடப்பிறந்தவளின் மகன் என்கிற பாசம். ஆனால் இந்தப் பெண்மணி? குற்றக் குறுகுறுப்பற்று அவர்களின் முகம் பார்க்க மிகவுமே சிரமப்பட்டான் சஞ்சயன்.
சஹானாவுக்கு நடப்பது ஒன்றும் பிடிக்கவில்லை. “வெளிக்கிடுவோம் மாமா. அப்பாக்குக் கொஞ்சம் வெளிக்காத்துப் பட்டா நல்லம்!” என்று, அவனைப் பொருட்படுத்தாமல் அரவிந்தனிடம் சொன்னாள்.
அப்போதுதான் அவளிடம் திரும்பினான் சஞ்சயன். அவ்வளவு நேரமும் அவளை விடப் பிரதாபனை எதிர்கொள்வது பெரிதாக இருந்ததிலும் அவனின் சிந்தை முழுவதையும் அவரே பிடித்திருந்தார்.
இப்போது அவளிடம் குவிந்த பார்வையை விலக்க முடியவில்லை. தீராத தாகம் ஒன்று எழுந்து வந்து அவன் விழிகளை அவளிடமே பிடித்துவைத்தது. ஏன் இப்படிப் பார்க்கிறோம் என்று அவனுக்கே புரியவில்லை.
எல்லோரும் வாகனத்தில் புறப்பட்டு விமான நிலையத்துப் பரபரப்பை விட்டு வெளியே வந்து, கொழும்பினைக் கடந்ததும் ஒரு தேநீர் கடையோராம் நிறுத்தினான். எல்லோருக்கும் இஞ்சித் தேனீருக்குச் சொல்லிவிட்டு, “கொஞ்சத் தூரம் நடக்கப் போறீங்களா மாமா? நிறைய நேரம் இருந்து வந்ததுக்கு நல்லாருக்கும்.” என்று கேட்டு பிரதாபனை அழைத்துக்கொண்டு நடந்தான்.
யாதவியின் விழிகள் அவரை அறியாமலேயே சஞ்சயனைக் கவனித்து எடை போட்டுக்கொண்டே இருந்தது. அவன் செய்தவைகள் அவனை ஆராய வைத்தது. தேவையற்ற அலட்டல்கள் இல்லை. தான் மிகச்சிறந்த நல்லவன் என்று காட்டிக்கொள்ள முனையவுமில்லை. சற்றே இறுக்கமானவன் தான் என்று அவனுடைய செயல்களே எடுத்துரைத்தது. இப்படிக் கவனித்துக்கொள்கிற இவனா சத்தமே இல்லாமல் அவர்களைப்போட்டுப் பந்தாடினான் என்று நம்ப முடியவில்லை.
நடந்துகொண்டிருந்த இருவருக்குள்ளும் பெருத்த மௌனம் வியாபித்திருந்தது. சஞ்சயனுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும். அவருக்குத் தன் மீது கோபமில்லையா என்று தெரியவேண்டும். ஆனால் அதை எப்படி ஆரம்பிப்பது?
அவனுக்கு இருந்த தயக்கங்கள் எதுவும் பிரதாபனுக்கு இல்லை. “இந்த மண்ணில இப்பிடி நடப்பன் எண்டு நினைக்கேல்ல அப்பு.” விழிகள் தன்னைச் சுற்றியிருக்கும் தாய்ப்பூமியின் மீது ஆவலுடன் படியச் சொன்னார்.
“மனமே இல்லாமத்தான் இங்க இருந்து போனனான். கொஞ்சக் காலத்தில திரும்பி வந்திட வேணும் எண்டுறதுதான் பிளான். நினைக்கிறதெல்லாம் எங்க நடக்குது?” பெருமூச்சு ஒன்றினை அடிவயிற்றிலிருந்து வெளியேற்றியவருக்கு இப்பவாவது வர முடிந்ததே என்கிற பெரும் நிம்மதி.