பயணம் மீண்டும் ஆரம்பித்தது. பின் சீட் கேங்கினை அடக்குவார் இல்லை. ஒரே பேச்சும் சிரிப்பும் பிடுங்குப்பாடும் தான். கண்ணாடி வழியாக அவ்வப்போது பார்த்துக்கொண்டு வந்தான் சஞ்சயன்.
ஒருவழியாக வாகனம் வவுனியாவைத் தொட்டு ஓமந்தையைக் கடந்து மாங்குளம், முறிகண்டி, கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு, வட்டக்கச்சி, முகமாலை, கொடிகாமம், புத்தூர் சந்தி, சங்கத்தானை, மீசாலை என்று ஊர்கள் அவர்களைக் கடந்து ஓடி சாவகச்சேரியை எட்டியபோது பிரதாபன் பரபரப்புற்றுப் போனார்.
யன்னலை நன்றாகத் திறந்துவிட்டார். சிறுவனைப் போன்று தலையை வெளியே விட்டுத் தன் ஊரினையே கண்ணிமைக்காமல் பார்த்தார். “பிரதாப்! ஆறுதலா எல்லாம் பாக்கத்தானே போறோம். தலையை உள்ளுக்கு எடுங்கோ!” என்று யாதவி சொன்னது அவரின் காதில் விழவேயில்லை. விழிகள் அங்குமிங்கும் தாவித்தாவி தான் பிறந்த நிலத்தை நலன் விசாரித்துக்கொண்டது. நடக்குமா நடக்காதா என்று ஏங்கிய நிமிடத்துளிகள். ஆசைதீர அனுபவித்துக்கொண்டார்.
தந்தையின் பரப்பரப்பைக் கண்டு நெஞ்சு அடைத்துக்கொள்ள விழியாகற்றாமல் அவரையே பார்த்திருந்தாள் சஹானா. இதற்காகத்தானே பாடுபட்டாள். இந்த நிமிடங்களை அப்பாவுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்றுதானே எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள்.
வாகனம், பிரதான வீதியில் இருந்து பிரிந்து அகன்ற உள்வீதிக்குள் நுழைந்து மணல் வீதியில் ஊர்ந்து அவர்களின் வீட்டின் முன்னே சென்று நின்றது.
கண்களில் நீர் பூத்துவிட அசைவற்றுப்போய் அப்படியே அமர்ந்திருந்தார் பிரதாபன். அவர் விட்டுவிட்டுப் போனது போலவே அப்படியே அவருக்காகக் காத்திருந்தது அவரின் வீடு. தன் கரங்கள் இரண்டையும் விரித்து வா என்று அழைப்பது போலிருக்க நரைத்த மீசையில் வந்து விழுந்தது ஒரு துளிக் கண்ணீர்.
வீட்டின் வாசலிலேயே தவமிருந்தார் தெய்வானை. ‘அவனைக் கண்டதும் அழக்கூடாது’ என்று நினைத்துவைத்தது எல்லாம் மறந்துபோயிற்று! அடிவயிற்றிலிருந்து பெரும் துயர் ஒன்று கதறலாக வெடித்தது. “என்ன பெத்த ராசா! தலைச்சம் பிள்ளையா ஆம்பிளை பிள்ளை வேணுமெண்டு நல்லூரானுக்கு விரதமிருந்து பெத்தனே. இந்த அம்மாவை விட்டுட்டு போக உனக்கு எப்படியடா மனம் வந்தது?” என்றபடி ஓடிவந்தார்.
அந்த முதிய கால்களுக்கு எங்கிருந்துதான் அத்தனை பலம் வந்ததோ. ஓடிவந்து திறந்த வாகனத்தின் கதவு வழியே ஏறி மகனைக் கட்டிக்கொண்டு கதறினார்.
“தவமா தவமிருந்து உன்ன பெத்தனே.. இந்த அம்மா உயிரோட இருக்கிறாளா இல்லையா எண்டு கூட நீ பாக்கேல்லையே.. அந்த மனுசன் நீ வருவாய் நீ வருவாய் எண்டு பாத்து பாத்தே படுத்திட்டாரே.. உன்ர மனசு என்ன கல்லா.. ஏனடா போனனீ? எங்களை எல்லாம் விட்டுட்டு ஏன் போனனீ?” மகனைப்போட்டு உலுக்கினார் தெய்வானை.
என்ன பதிலைச் சொல்வார் இந்தக் கேள்விக்கு? ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம். அவரின் பக்கம் உண்மை இருக்கலாம். அன்னையின் வயிற்றுக் காந்தலுக்கு எது நிகராகிவிடும்? பிரதாபனின் தேகம் குலுங்கியது. கண்ணீரைத் தவிர வேறு எதையும் அவராலும் பதிலாக்க முடியவில்லை.
“அழாதீங்கோம்மா. நான் செய்தது பிழைதான். அம்மா அழாதீங்கோம்மா!”
“இல்ல.. என்னை அழவிடு! நான் அழவேணும்! முப்பது வருசத்து சுமையடா. உன்ர காலடிலதான் இறக்கவேணும்! என்ன விடு!” ஆவேசம் வந்தவரைப் போன்று அவரைக் கட்டிக்கொண்டு பெருங்குரலில் கதறித் தீர்த்தார் தெய்வானை.
பாத்திருந்த எல்லோரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது. சஞ்சயன் வேகமாக முதுகு காட்டித் திரும்பிக்கொண்டான்.
சஹானா இதைச் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அவரின் ஆங்காரம் கொண்ட கோபத்துக்குள் இப்படியொரு தாய்ப்பாசம் நீறு பூத்த நெருப்பாய் மறைந்து கிடந்ததை அவதானிக்கவே இல்லை. அப்பாவின் தவறின் அளவும் புரிந்தாற்போலாயிற்று. அவளின் கண்களிலும் கண்ணீர் ஆறாகப் பெருகி வழிந்தது.
தாய்க்கும் மகனுக்கும் இடையில் யாருமே போகவில்லை. இருவரும் அழுது தீர்த்தனர். “அழாதீங்கோ அம்மா. உங்கள இப்பிடி பாக்கிறதுக்கே உயிரை இழுத்துப் பிடிச்சுக்கொண்டு வந்தனான்?” மகனின் கேள்வியில் அன்னை துடித்துப்போனார்.
அதுவரை நேரமும் மகன் சொல்லாமல் கொள்ளாமல் தங்களை எல்லாம் அம்போ என்று விட்டுவிட்டுப் போனான் என்பதிலேயே நின்ற தாய்மனம் அப்போதுதான் அவன் பெரும் கண்டத்திலிருந்து தப்பி வந்திருக்கிறான் என்பதில் வந்து நின்றது. “அப்பிடிச் சொல்லாத! உனக்கு ஒண்டும் நடக்காது. நான் கும்பிட்ட நல்லூரான் என்னைக் கைவிடான்! உனக்கும் ஒண்டுமில்ல தானே. நல்லாருக்கிறாய் தானே?” மகனின் கன்னம் வருடிக் கேட்டார். தாயின் கண்கள் நொடியில் மகனின் தேகம் முழுவதையும் ஆராய்ந்தது.
மீண்டும் கண்ணீர் பெருகிற்று பிரதாபனுக்கு.
“என்னய்யா ஆளே மாறிப்போய்ட்டாய்? ஏன் இப்பிடி உடைஞ்சு போயிருக்கிறாய்.” என்று வாஞ்சையோடு கேட்டார் தெய்வானை.
பிரதாபன் கண்ணீருடன் சிரித்தார். “உங்கட மகன் கிழவன் அம்மா. அறுபது வயசாகுது எல்லோ..”
“உனக்கு என்ன விசரோ? கிழவி நான் கம்பு மாதிரி நிக்கிறன். நீ கிழவனோ? இந்தக் காலத்தில அறுபது எல்லாம் ஒரு வயசே?” அடாவடி தெய்வானை திரும்பிக் கொண்டிருந்தார்.
“என்ர பிள்ளையைத் திரும்பவும் என்னட்ட கொண்டுவந்து தந்திட்டாயம்மா.” யாதவியையும் அணைத்துக்கொண்டார் தெய்வானை. அவருக்கு மகனைக் கண்டதில் மற்ற எல்லோருமே மறந்து போயிருந்தனர்.
யாதவிக்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை. “எண்டைக்கும் அவர் உங்கட மகன் தான் மாமி. நாங்க செய்த பிழைக்கு நீங்க எங்களை மன்னிச்சதே பெருசு.” என்று அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டவரின் விழிகளிலும் கண்ணீர் தான்.
“நீயும் அழாத பிள்ளை! என்னவோ எல்லாம் அவன் செயல். இதெல்லாம் நடக்கவேணும் எண்டு இருந்திருக்குப் போல!” அவர் தேறிக்கொண்டார் என்று பேச்சுச் சொல்ல, தன் கண்களை மற்றவர்கள் அறியாமல் துடைத்துக்கொண்டு திரும்பினான் சஞ்சயன்.
அவன் விழிகள் தானாக சஹானாவை நோக்கி ‘பாத்தியா?’ என்று கேட்டது. வழிந்த கண்ணீரைத் துடைத்துத் துடைத்து சிவந்த முகமும் கலங்கிய கண்களுமாக அவளும் அவனைத்தான் பார்த்தாள். அந்த முகம், தன் கைகளுக்குள் அவள் கதறிய நாளை நினைவூட்ட, செய்கையால் கண்ணைத் துடை என்றான். அவள் ஒருவித மோனநிலையில் அசைவில்லாமல் இருக்க, ‘துடையடி!’ என்று பார்வையால் அதட்டினான்.
அவளும் வேகமாகத் துடைத்துக்கொள்ளவும்தான் இவன் நிதானத்துக்கு வந்தான். என்னவோ அவளின் அழுத முகத்தைக் கண்டாலே மனதும் உடலும் பதறியது!
தெய்வானையைப் பார்க்காமல், “பாத்தீங்களா மாமி? தன்ர மகன் வந்ததும் மலை மாதிரி கண்ணுக்கு முன்னால நிக்கிற பேரனை இந்தக் கிழவிக்குத் தெரியாம போச்சுது! சுயநலம் பிடிச்ச மனுசர். இவ்வளவு நாளும் பாசம் மாதிரி நடிச்சிருக்கிறா!” என்று யாதவியை வைத்து அவரை வம்புக்கு இழுத்தான்.
“போடா டேய்! முதல் அவன் எனக்கு மகன். அதுக்குப் பிறகுதான் நீ பேரன், விளங்கிச்சோ? தலை இருக்கேக்க வால் ஆடக்கூடாது! தள்ளு!” என்றவர் தான் இறங்கி, “நீ பாத்து இறங்கப்பு!” என்று மகனுக்குக் கையைக் கொடுத்தார்.
பார்த்திருந்த எல்லோருக்கும் சிரிப்பும் சந்தோசமும்.
“இவா பெரிய பொடி பில்டர்! மாமாவை இறக்கப் போறாவாம். வாங்க இந்தப் பக்கம்!” என்றவன் அவரை ஒரே தூக்காகத் தூக்கி அந்தப் பக்கம் விட்டான். தெய்வானை அம்மா பயந்துபோய் அலறியதில் எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தனர். நொடியில் சூழ்நிலை கலகலப்புக்கு மாறியது.


