தன் மாமனைத் தானே கைப்பிடித்து இறக்கினான் சஞ்சயன். அவரின் பின்னால் யாதவி, சஞ்சனா என்று எல்லோரும் இறங்க, கடைசியில் யன்னல் இருக்கையைப் பிடித்திருந்த சஹானா அந்த வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அரவிந்தன் அகிலனோடு இடையில் இறங்கிக்கொண்டிருந்தார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொள்ளப் போகிறார்கள். கண்ணீர், கதறல், கோபம் என்று உணர்வுகள் பொங்கி வழிகிறபோது இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை.
சஹானாவுக்கு மனதுக்குள் நடந்தவை எல்லாம் முட்டி மோதியது! இதோ இந்த வாகனம் நிற்கும் இதே இடத்தில் தானே அவளைத் தூக்கி எறிந்தான். மன்னிக்க மாட்டார்களா மறக்க மாட்டார்களா ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்று தயங்கித் தயங்கி அந்த வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்த நாட்கள் அத்தனையும் கண்முன்னே மீள் ஒளிபரப்பாகவும் அப்படியே சிலையைப்போல் அமர்ந்திருந்தாள்.
அது வசதியாகிப் போய்விட அவளருகில் வந்து அமர்ந்தான் சஞ்சயன்.
வேகமாகத் திரும்பிப் பார்த்தாள் சஹானா. “சுகமா இருக்கிறியா?” என்றான்.
அவளின் பார்வை மாறவில்லை. “நடந்தத மறந்திட்டு இறங்கி வா!” என்று அழைத்தான்.
வந்தபோது விரட்டிவிட்டு இன்றைக்கு வா என்கிறானா? எவ்வளவு நெஞ்சழுத்தம் இவனுக்கு! அவளின் விழிகளில் கோபம் குடியேறியது. “உங்கட சொத்துப்பத்து எல்லாத்தையும் நல்ல இடமா பாத்து ஒளிச்சு வச்சிட்டிங்களா?” என்றாள் சினத்துடன். பழைய சஹியைப் பார்ப்பது போலிருக்க முறுவல் அரும்பிற்று அவனுக்கு. “உன்ர பெரிய மச்சான் கொஞ்சம் முரடன் தான். கோவக்காரன் தான். அதுல கொஞ்சம் கூடுதலா வாயை விட்டுட்டான் தான். எண்டாலும் என்ர குட்டி மச்சாள் மன்னிக்க மாட்டியா என்ன?” என்றான் சிரித்துக்கொண்டு.
சஹானாவுக்குப் பெரும் அதிர்ச்சி. இவனுக்குச் சிரிக்கத் தெரியுமா?
சஹானாவைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு சஞ்சனா வருவது தெரிந்தது. “அங்க வாறாள் பார் ஒருத்தி. அவள் உன்னால என்னோட கதைக்கிறதே இல்ல. அவளையும் கொஞ்சம் சமாதானப்படுத்திவிடு!” என்றுவிட்டு, “இனி எந்தக் காலத்திலையும் உன்ர நம்பிக்கையைப் பொய்யாக்க மாட்டன்! இறங்கி வா!” என்று, அவளின் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்துவிட்டு வேகமாக இறங்கிச் சென்றான் அவன்.
அவன் வந்தது, அருகில் அமர்ந்தது, பேசியது, கடைசியாகக் கையைப் பற்றியது என்று நடந்தவற்றை நம்ப முடியாமல் வேனுக்குள் ஏறி வந்த சஞ்சனாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள் சஹானா.
“என்ன மச்சி பே அடிச்சமாதிரி பாக்கிறாய். வா!” என்று அழைத்தாள் சஞ்சனா.
ஹொலண்ட் போனதில் இருந்து என்னோடு நீ ஏன் கதைக்கவில்லை என்று இதுவரை சஞ்சனா கேட்கவேயில்லை. வழமைபோன்று அன்பைப் பொழிந்தவளையே மலைப்புடன் பார்த்தாள் சஹானா.
சஞ்சனாவுக்கும் அது விளங்கிற்று! ஏற்கனவே அவர்களின் வீட்டினரால் போதும் போதும் என்கிற அளவுக்குக் காயப்பட்டுப் போனவள் திரும்பி வந்திருக்கிறாள். அவளிடம் என்னிடம் ஏன் கதைக்காமல் இருந்தாய் என்று கேட்டு அப்படி இருந்ததற்கான காரணத்தை நினைவூட்ட விரும்பாமலேயே அதைத் தவிர்த்துவிட்டிருந்தாள் சஞ்சனா. கூடவே அவளின் கோபத்தில் இருக்கிற நியாயமும் புரியாமல் இல்லையே. எனவே இப்போதும் எதையும் காட்டிக்கொள்ளாமல், “என்ன மச்சி? கீழ சீட்டோட ஒட்டிட்டுதா?” என்றாள் கண்ணில் சிரிப்புடன்.
“உன்ன..” என்று முறைத்தாலும் சிரிப்புடன் வாகனத்தைவிட்டு இறங்கினாள் சஹானா.
வந்து நின்ற வாகனம், அன்னையின் கதறல் என்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பிரபாவதியின் உள்ளத்திலும் பெரும் புயல் தான். அவரே எதிர்பாராத கண்ணீர் கன்னங்களை நனைத்தது. இருந்தும் பிடிவாதத்தோடு வீட்டுக்குளேயே இருந்தார். பழையதை எல்லாம் நினைவு படுத்திக்கொண்டாலும் போதியளவு கோபம் வர மறுத்தது. மாறாகக் கைகால்களில் ஒரு நடுக்கம். வருகிறவரை எப்படி எதிர்கொள்வது என்கிற தடுமாற்றம். ஆனால், பிரதாபனுக்கு அப்படி இல்லையே. தன் தங்கையைத் தானே தேடி வந்தார்.
விழிகள் கலங்க, “இந்த அண்ணாவை பாக்க வாசலுக்கு வரமாட்டியா பிரதி?” என்று வாஞ்சையோடு கேட்டார்.
அந்தப் ‘பிரதி’யில் அவருக்கும் கண்ணீர் பெருகிற்று! அதோடு, இளமை ததும்ப அன்று பார்த்த தமையன் இன்று தலை நரைத்து உடல் தளர்ந்து வயோதிபம் சற்றே ஆராதிக்க நின்றபோது வார்த்தைகள் வராமல் போயிற்று.
“அண்ணாவில இன்னும் கோவமாமா? மன்னிக்க மாட்டியா? ம்?” ஒரு கையால் அவரை அரவணைத்துக் கேட்டபோது, தன்னை அவரிடமிருந்து பறித்துக்கொண்டு ஓடிப்போனார் பிரபாவதி. கண்ணீர் பெருகி வழிந்தது.
“விடப்பு! கொஞ்ச நாள் போக எல்லாம் சரியாகும்! நீ வா. வந்து அப்பாவை பார். அந்தச் சீவன் நிறைய வருசமா உனக்காகக் காத்திருக்கு.” என்று மகனின் கரம்பற்றி அழைத்துக்கொண்டு போனார் தெய்வானை.
அவர் முன்னர் உபயோகித்த அதே அறையில் கட்டிலில் கிடந்த உருவத்தைக் கண்டவர் மீண்டும் உடைந்தார். ‘அப்பாவா இது?’ வயோதிபத்தின் உச்சத்தைத் தொட்டு வெறும் எலும்பும் தோலுமாக போர்வையோடு போர்வையாகக் கிடந்தார்.
அவர் துண்டை உதறித் தோளில் போட்டு நடக்கும் அழகே தனிதான். அப்படிப் பார்த்துப் பழகிய மனிதர் இன்று.. அவரின் தேகம் அழுகையில் குலுங்கியது. அவரைப் பெற்றபோது என்ன நினைத்திருப்பார்கள்? கடைசிக் காலத்தில் எங்களைப் பார்க்க மகன் இருக்கிறான் என்றுதானே? அதைச் செய்யத் தவறிவிட்டாரே! எதைக்கொண்டு கடந்துபோய்விட்ட காலத்தை மீட்பார். அவரிடம் எத்தனை விளக்கம் இருந்தாலும் தந்தைக்கு மகனாற்றியது பெரும் பிழை என்கிற ஒற்றை வரியில் மட்டுமே சுழன்றுகொண்டிருந்தது அந்த நொடிகள்.
“அப்பா… பிரபன் வந்திருக்கிறன் அப்பா..” கரம் பற்றி மகன் அழைத்த அழைப்பில் அவரின் தேகத்தில் ஒரு நடுக்கம் ஓடியது. பிரதாபன் அவரின் நெஞ்சை வருடிக்கொடுத்தார். கன்னத்தைத் தடவினார். கைகளை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு மனதார மன்னிப்பை வேண்டினார். வார்த்தைகள் உணர்த்தாத பாசத்தை மகனின் தொடுகை உணர்த்தியது போலும். அவரின் விரல்கள் மெல்லிய அசைவைக் காட்டியது.
விழுக்கென்று நிமிர்ந்து தந்தையைப் பார்த்தார் பிரதாபன்.
“தம்பி.. ஐயா… ராசா.. வந்திட்டியா..” அந்த வெறும் கூடு இவரைப் பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல் துடித்தது.
“ஓம் அப்பா. உங்கட மகன் வந்திட்டன். மனதை போட்டு அலட்டாதீங்கோ. நான் இங்கதான் இருக்கிறன். நீங்க சுகமாகி எழும்பி வாங்கோ பாப்பம்..” குரல் உடைய உடையப் படபடத்தார் பிரதாபன்.
“போ..யிடாத பிர..பன் போயி..டாத..” புலம்பியபடியே ஆழ்ந்த துயிலுக்குப் போனார் ரகுவரமூர்த்தி. தகப்பனின் கரத்தைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு குழுங்கினார் பிரதாபன். தெய்வானைக்கும் அழுகையை அடக்க முடியவில்லை. இத்தனை நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்த கணவர், பேத்தியின் குரலுக்கு அசைந்திருக்கிறார் மகனின் தொடுதலுக்குப் பேசி இருக்கிறார் என்றால் அவரின் ஆழ்மனது மகனுக்காக எப்படி ஏங்கி இருக்கிறது என்று வார்த்தைகளில் விளக்கவும் வேண்டுமோ?
ஆனால், அழுகிற மகனைக் கண்டு அன்னையின் மனம் பயந்தது. “போதும் தம்பி! அழுது உடம்புக்கு எதையும் இழுத்து வைக்காத. அதுதான் வந்திட்டாய் எல்லோ. எண்ணிப் பத்து நாளில பார் கொப்பர் என்னோட சண்டைக்கு வருவார்!” என்று அப்போதும் அவர்களை ஒருநிலைப் படுத்தியது தெய்வானை தான்.