ஆதார சுதி 3 – 2

“இதெல்லாம் இல்ல.” அவளைப்போலவே குடிப்பதைச் சைகையில் காட்டிவிட்டு, பொக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் காட்டினான். “இது மட்டும் தான். அதுவும் ஒரு நாளைக்கு ஒண்டு இல்லாட்டி ரெண்டுதான். இல்லாட்டி அப்பா பிடிச்சிடுவார். இண்டைக்கு முழுக்கப் பத்தவே இல்ல எண்டு மேல இப்பதான் வந்தன். அதுக்குள்ள நீங்க..”

“நீ எண்டே சொல்லுங்கோ.”

“நீ வந்திட்டாய். இந்தா..!” என்று அவள் புறமும் ஒன்றைப் பெட்டியிலிருந்து தள்ளியபடி நீட்டினான் அவன்.

“நோ! நோ! எனக்கு இந்தப் பழக்கமெல்லாம் இல்லை!” என்று மறுத்தாள் அவள்.

கண்களால் சிரித்தான் அவன்.

“பாத்தியா, நீ என்னை விசாரிச்சுக் கண்டு பிடிச்சதை நான் விசாரிக்காமையே பிடிச்சிட்டன்.”

“அடப்பாவி!” என்று சிரித்தவளுக்கு, அவனும் தங்களின் செட் தான் என்று கண்டதில் சந்தோசமாய்ப் போயிற்று.

“அங்க நித்தி எண்டு ஒரு தடிமாடு இருக்கிறான். எப்பயாவது பியர் அடிப்பான். ஒருநாளைக்கு ஒரு சிகரெட் மட்டும் தான். அதுவும் என்னட்டத்தான் இருக்கும். நான் தான் குடுப்பன். அவன்ர பொக்கெட்டுல இருந்தா மாமி செக் பண்ணி பிடிச்சிடுவா எண்டு நான் தான் வாங்குறது. என்ர ஹாண்ட்பாக்ல இன்னும் இருக்கு. தரவா?” நண்பனின் நினைவுகளைச் சுகமான சோகத்துடன் இரைமீட்டபடி வினவினாள்.

“வெளிநாட்டுச் சரக்க வேணாம் எண்டு சொல்லுவனா, யாருக்கும் தெரியாம கொண்டுவா.” ஆவலாகச் சொன்னான் அவன்.

பெட்டியோடு கொண்டுவந்து கொடுத்தாள். “பத்திப்போட்டு பெட்டியை மட்டும் தாங்கோ. அவன்ர நினைவா இதுதான் இருக்கு!” சொல்லும்போதே குரல் தேய்ந்துபோயிற்று!

“கவலைப்படாத. திரும்பி வருவான். நான் நினைக்கிறன், ரட்ணம் அங்கிளுக்கு என்னவோ பிரச்சனை போல. இவன் உதவிக்குப் போயிருப்பான் எண்டு.”

அவனுடைய ஊகத்தைக் கேட்டு அவள் முகம் பூவாய் மலர்ந்தது. “அதேதான் நானும் நினைச்சன். முக்கியமான காரணமில்லாம இப்பிடி நடக்கமாட்டான். மாமாவும் அப்பிடித்தான்.”

அப்படியே வீட்டு நினைவு வந்துவிட்டதில் யாதவிக்கு அழைக்கப் பார்க்க, அவளது நெதர்லாந்து சிம் இலங்கையில் வேலைசெய்ய மறுத்தது. அகிலனின் ஃபோனில் பேசினாள்.

“அப்பா உன்னைக் கேட்டவரம்மா. ‘நீங்க நித்திரையா இருக்கேக்க வந்திட்டுப் போய்ட்டாள்’ எண்டு சொன்னனான். முகம் வாடிப்போனார். இனி நீ வந்தா நித்திரையா இருந்தாலும் எழுப்பட்டாம் எண்டு சொன்னவர். நான் ஓம் எண்டு சொல்லிச் சமாளிச்சு விட்டிருக்கிறன்.” சொல்லும்போதே யாதவிக்குக் குரல் அடைத்துக்கொண்டது. கணவரும் முடியாமல் படுத்திருக்க, மகளும் அருகில் இல்லாமல் தனிமையில் வெந்துகொண்டிருந்தார்.

“தனிய இருக்கக் கவலையா இருக்காம்மா?” தாயின் நிலையை உணர்ந்து ஆதரவாகக் கேட்டாள் மகள்.

“பரவாயில்ல செல்லம்! அப்பாக்காகத்தானே. அங்கயும் சின்னப்பிள்ளை மாதிரி நடக்காம எல்லாரையும் சமாதானமாக்கி அப்பாவோட கதைக்க வைக்கவேணும் சஹி.” குருவியின் தலையில் பனங்காயை வைத்ததுபோலச் செல்ல மகளுக்குப் பெரும் பொறுப்பைக் கொடுக்கிறோம் என்று எண்ணினாலும், வேறு வழியும் இருக்கவில்லை.

“நீங்க ஒண்டுக்கும் கவலைப்படாதீங்கோ அம்மா. எல்லாரையும் அப்பாவோட கதைக்க வைக்காம வரமாட்டன்.” ஆறுதலாகப் பேசிவிட்டு வைத்தாள்.

“அகில், எனக்கு சிம் மாத்தவேணும். அப்பிடியே இந்த ஊரையும் ஒரு சுத்துச் சுத்திக்கொண்டு வருவமா?” ஆர்வமாகக் கேட்டாள் அவள்.

“ஓ..! வா போவம்!” என்று உற்சாகமாய் இரண்டடி எடுத்து வைத்தவன் நின்று, “ஆனா, தனித்தனி சைக்கிள்ல போவம்!” என்றான் சின்னச் சங்கடச் சிரிப்போடு.

அவனுடைய பைக் என்று கீழே ஒரு யமகாவைப் பார்த்திருந்தாள். பிறகு எதற்கு சைக்கிள்? அவள் கேள்வியாக ஏறிட, “என்ர பிரெண்ட்ஸ் யாராவது உன்ன ஏத்திக்கொண்டு போறதை பாத்தா என்னை ஓட்டித் தள்ளுவாங்கள். அதுதான்..” என்று அவன் இழுக்கவும், கிளுக் என்று சிரித்துவிட்டாள் சஹானா.

“அச்சோ…! என்ர மச்சான்ர வெக்கம் வடிவா இருக்கே!” என்றவளின் நகைப்பு அடங்குவதாயில்லை.

அவனுக்கு உண்மையிலேயே வெட்கம் வந்துவிடும் போலாயிற்று! “சிரிக்காதயடி!” என்று, மண்டையில் எட்டிக் குட்டிவிட்டுச் சொன்னான் அவன். அந்தச் செய்கை நித்திலனை நினைவூட்டியதில் அகிலனை இன்னுமே மனதுக்கு நெருக்கமாக உணர்ந்தவள் கட்டுப்பாடே இல்லாமல் அவனை வம்புக்கு இழுக்க கீழே இறங்கி ஓடிவிட்டான் அகிலன்.

“நான் போறதுக்கிடையில உங்கட பைக்லை வந்து எல்லாரிட்டையும் மாட்டி விடுறனா இல்லையா பாருங்கோ!”

“ஹா! நடக்கவே நடக்காது! ஊருக்க ஐயா பேரோடையும் புகழோடையும் வாழுறன்!” என்று ஷேர்ட் கொலரைத் தூக்கிவிட்டான் அகிலன்.

“அந்தப் பேரையும் புகழையும் நானும் ஒருக்கா பாக்கிறன்!”

வாயாடிக்கொண்டு வந்த இருவரும் சிம் மாற்றிக்கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு, அவன் அரவிந்தனின் பழைய சைக்கிளிலும் அவள் ராகவியின் சைக்கிளிலும் புறப்பட்டனர்.

புதிதாகப் போடப்பட்ட தார் வீதியில் கரையோரமாக ஓங்கி வளர்ந்த மரங்களும், சுகமாய் வீசிய காற்றும், மதில்களோடு கூடிய அழகழகான வீடுகளும், அதற்குள் இருந்து எட்டி வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மரங்களும், பறவைகளின் கத்தல்களும் என்று எல்லாமே அவளுக்குள் உற்சாகத்தைக் கிளப்பின.

சிம் மாற்றியதும் தாய்க்கு புது நம்பரை அனுப்பிவிட்டாள். திரும்பி வரும்போது, தகப்பனின் வீட்டைப் பார்க்கும் ஆவல் எழ, “அப்பம்மா வீட்டுக்கு எந்தப்பக்கம் போகவேணும் அகில் மச்சான்?” என்று விசாரித்தாள்.

“சும்மா பாத்துக்கொண்டு வருவமா? அடுத்ததா வாற ரோட்டுல திரும்பினா சரி.” என்று அவன் கேட்கவும், “ஓம் ஓம் வாங்கோ!” என்று பெரும் ஆர்வமாகப் புறப்பட்டாள்.

அது சற்றே உள் பாதை என்பதில் ஒருவரை மற்றவர் முந்துகிறோம் என்று போட்டி வைத்தபடி, அவன் முந்த பார்த்தால் இடிப்பது போல் கொண்டுபோய் இவள் தடுத்துக்கொண்டே இருக்க, “நெதர்லாந்துல பிறந்து வளந்திட்டு உள்ளூர் ரவுடி மாதிரி என்னெண்டு சைக்கிள் ஓடுறாய்?” என்று வியப்புடன் விசாரித்தான் அவன்.

“நெதர்லாந்திலையும் நாங்கள் சைக்கிள் ஓடுறது கூட மச்சான். இங்க மாதிரி இல்ல, சைக்கிளுக்கு என்றே ரோட்டுக்கு பக்கத்தில பாதை இருக்கும். பயமே இல்லாம ஓடலாம். நாங்க மூண்டுபேரும் எப்பவும் போவோம்! அந்த நாட்டு மக்களுமே காரை விடச் சைக்கிளைத்தான் கூட விரும்புறது. பாவிக்கிறது.” என்றவளுக்குத் தாய் தந்தையின் நினைவில் முகம் வாடிப்போயிற்று!

அந்த வினாடியைப் பயன்படுத்தி அவன் முந்திவிட்டு, திரும்பிப் பார்த்துக் கட்டை விரலை ஆட்டிக்காட்டவும், “விடமாட்டன்!” என்றபடி வேகமாய் மிதிக்கத் தொடங்கினாள் சஹானா.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock