அவளுக்கு தெய்வானை ஆச்சியையும் அவனையும் வைத்துக்கொண்டு அதைப்பற்றி விலாவாரியாகப் பேசப் பிடிக்கவில்லை. எனவே மீண்டும், “எனக்கு விருப்பம் இல்லையப்பா!” என்றாள் சற்றே அழுத்தி.
அதிலேயே அவளுக்கு இந்த விடயத்தில் முற்றிலும் சம்மதமில்லை என்று புரிந்துவிட, எல்லோரின் பார்வையும் ஒருவிதப் பதட்டத்துடன் அவன் மீது படிந்தது. அவமானத்தில் தாடை இறுக அதற்குமேல் அங்கே இருக்கப் பிடிக்காமல், “போவம் அம்மம்மா!” என்றான் இறுக்கமான குரலில்.
“கொஞ்சம் பொறு தம்பி. கதைக்க விடு.” என்றுவிட்டுப் பேத்தியிடம் திரும்பினார்.
“அவன் உன்ன நல்லா வச்சிருப்பான் குஞ்சு. நல்ல உழைப்பாளி. குடி, சிகரெட் எண்டு கெட்ட பழக்கம் ஒண்டும் இல்லை. முறையும் இருக்கு. பிறகும் ஏன் வேண்டாம் எண்டுறாய்?”
அவரின் கேள்வியில் அவளுக்குக் கோபம் வந்தது. “உங்களுக்குக் கெட்ட பழக்கம் எண்டா குடியும் சிகரெட்டும் மட்டும் தானா? ஒரு பொம்பிளைப் பிள்ளைய மோசமா கதைக்கிறது, தன்ர அம்மா அப்பான்ர வயசில இருக்கிற மனுசரை மரியாதை இல்லாம கதைக்கிறது எல்லாம் நல்ல பழக்கமோ? இரக்கம் இல்லாம கழுத்தைப் பிடிச்சு வெளில தள்ளுறது? வயசான ரெண்டுபேரை நாலு சுவருக்க அடைச்சு வைக்கிறது எவ்வளவு பெரிய பாவம்? கையைக் கட்டி காலை கட்டி வாயை அடைச்சு நித்திய வச்சிருந்தவர். அப்பிடியானவர நல்லவர் எண்டு எப்பிடிச் சொல்லுறீங்க? எனக்கு என்ர மாமா, மாமி, நித்திலன் மூண்டுபேரும் முக்கியம். அவேயே(அவர்களை) நோகடிச்ச ஒருத்தர் எனக்கு வேண்டாம்!”
முகத்துக்கு நேராகவே சொன்னவளின் பேச்சில் தெய்வானை ஆச்சி அதிர்ந்துபோனார். பக்கத்தில் இருந்தவனை அவரின் விழிகள் வேகமாகத் திரும்பிப் பார்த்தது. ‘கடவுளே.. இவனோட வந்து இதைப்பற்றிக் கதைச்சது பிழையா போச்சே’ இப்போதுதான் அதை உணர்ந்தார் அவர்.
“அப்பிடிச் சொல்லாதயடி குஞ்சு. அவன் கோபத்தில..” என்றவரின் கையை இறுக்கிப் பற்றினான் சஞ்சயன். பயந்துபோய்த் திரும்பிப் பார்த்தார் தெய்வானை. அவனுடைய உடல் கோபத்தில் நடுங்கிக்கொண்டு இருந்தது. அவரின் கையை விடாது பற்றியபடி எழுந்தான்.
“அம்மம்மா இதைப்பற்றிக் கதைக்கத்தான் வந்தவா எண்டு எனக்குத் தெரியாது மாமா. தெரிஞ்சிருந்தா கட்டாயம் தடுத்திருப்பன். உங்க எல்லாரையும் சங்கடப்படுத்தினத்துக்கு மன்னிச்சுக்கொள்ளுங்கோ!” என்று பிரதாபனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
செய்வதறியாமல் அங்கிருந்த எல்லோருமே திகைத்தனர். இப்படியாகும் என்று எதிர்பாராததில் பெரும் சங்கடமாயிற்று. “என்ன சஹி இது பழக்கம்? இப்பிடித்தான் முகத்துக்கு நேரா கதைக்கிறதா?” என்று கண்டித்தார் யாதவி.
அவன் அப்படி அப்பம்மாவை இழுத்துக்கொண்டு போனதிலேயே ஒருமாதிரியாகிப் போயிருந்தவள் அன்னையின் பேச்சில் அவரை முறைத்தாள். “அதால தானம்மா விருப்பம் இல்லை எண்டு மட்டும் முதல் சொன்னனான். நீங்க எல்லாரும் தான் ஏன் ஏன் எண்டு திரும்பத் திரும்பக் கேட்டு என்னைச் சொல்ல வச்சது. இல்லாட்டியும், பிழை இல்லை. அவேக்கும் அவே செய்தது என்ன எண்டு விளங்கத்தானே வேணும்.” என்றவளைக் கவலையோடு பார்த்தார் பிரதாபன்.
“உங்களுக்கு என்னைச் சொந்தத்துக்கக் கட்டிக்குடுக்க விருப்பம் எண்டு எனக்குத் தெரியும் அப்பா. அது எனக்கும் ஓகேதான். ஆனா வேற யாரையாவது பாருங்கோ. இவர் வேண்டாம்.” என்றுவிட்டுப் போனாள் அவள்.
சஞ்சயனின் வண்டி சீறிக்கொண்டு வந்து அவர்களின் வீட்டு வாசலில் நின்றது. “திரும்பவும் உங்கட பேரன கேவலப்படுத்தமாட்டீங்க எண்டு நம்புறன்!” தெய்வானையிடம் வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டுப் போனான் அவன்.
தோட்டத்துக்கு நேராகச்சென்று சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு மண்வெட்டியை எடுத்துத் தரையைக் கொத்தத் துவங்கினான். கண்மண் தெரியாத ஆத்திரம் முழுவதும் தரைக்குப் பாய்ந்தது. அவன் மண்வெட்டியை ஓங்கிய வேகத்தில் கையின் தசைக்கோளங்கள் புடைத்து அடங்கின. முதுகில் வியர்வை மணிமணியாகப் பூத்து வடியத் துவங்கியது! அப்போதும் அவன் வேகம் அடங்கவில்லை. நெற்றி வியர்வை வழிந்து வந்து மூக்கில் கூடு கட்டித் தரையை நனைக்க நனைக்கத் தரையைக் கண்டதுண்டமாக்கினான்.
‘நான் வேணாமாடி உனக்கு? அவ்வளவு கெட்டவனா நான்?’ அவள் மீதிருக்கும் கோபத்தை அவளிடம் காட்டும் தைரியமற்றுத் தன்னைத் தானே தண்டித்துத் தீர்த்துக்கொண்டிருந்தான்.
விழுவதே தெரியாமல் விழுந்து அவளுக்குள் கரைந்து தொலைந்துபோயிருக்கிறான் என்பதை அவளின் மறுப்பின் போதுதான் அவனே உணர்ந்தான். உணர்ந்த கணத்திலேயே நீ எனக்கு வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டாளே. அவமானமும் ஏமாற்றமும் சரிவிகிதத்தில் கலந்து நின்று அவனைப்போட்டு வதைத்தது. எவ்வளவு நேரம் கடந்ததோ, உள்ளத்தின் வலிக்குச் சமனாய் உடலும் சோரத் தொடங்கத்தான் அவன் வேகம் மெல்ல மெல்லக் குறைந்து நின்றுபோயிற்று. மண்வெட்டியைத் தூக்கி எறிந்துவிட்டு அந்தத் தரையிலேயே வானம் பார்த்து விழுந்தான். முற்றிலும் களைத்துப்போன உடம்பு பெரிய மூச்சுக்களாக இழுத்துவிட்டுத் தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்ள முயல, மூடிய விழிகளுக்குள் வந்துநின்று சிரித்தாள் அந்தக் கொடுமைக்காரி.
விசயம் அறிந்த பிரபாவதி கொதித்துப்போனார். “உங்களுக்கு நல்லா வேணும்! குப்பையில கிடக்கிறதுகள தூக்கி மெத்தையில் போட நினைச்சா இதுதான் நடக்கும்! எப்பிடி கேவலப்படுத்தி அனுப்பி இருக்கிறாள். முதல் யாரை யார் வேண்டாம் எண்டு சொல்லுறது? அவள் எல்லாம் என்ர மகனின்ர கால் தூசுக்கு வருவாளா? இந்த ஊர் முழுக்கச் சொத்து சுகத்தோட அவனுக்குப் பொம்பிளைகள் ரெடியா இருக்கிறாளவே! போயும் போயும்..” என்றவரைப் பேசவிடாமல்,
“ஊர் முழுக்கப் பொம்பிளைகள் இருந்தாலும் அவனுக்குப் பிடிச்ச பொம்பிளை எங்க இருக்கிறாள் எண்டு கண்ணைத் திறந்து பார். போ!” என்றுவிட்டுப் போனார் தெய்வானை.
அதுவரை துள்ளிக்கொண்டு நின்ற பிரபாவதி பேச்சு நின்றுவிட அதிர்வுடன் அன்னையைப் பார்த்தார். சஞ்சனாவுக்குமே இது புதுச் செய்தி. எப்போது எப்படி என்று மனம் குழம்பினாலும் அவளுக்குள் ஒரு சந்தோசம் பொங்கிக்கொண்டு வந்தது.
ஆனாலும் சஹானாவின் நிராகரிப்பு அவளுக்கும் கோபத்தை மூட்டியிருந்தது. ‘அப்பிடி என்ர அண்ணாவில என்ன குறையைக் கண்டவளாம். வரட்டும் கேக்கிறன்..’
அதன்பிறகு சஹானாவிடம் யாரும் அதைப்பற்றிப் பேசாதபோதும் களையிழந்து போயிருந்த அவர்களின் முகங்களைக் கண்டு, அப்படிப் பொதுவில் மறுத்திருக்க வேண்டாமோ என்று நினைத்தாள். சொல்லு சொல்லு என்று கேட்டால் அவளும் என்னதான் செய்வது?
பிரதாபனும் யாதவியும் அங்கே புறப்பட்டபோதும் இங்கேயே நின்றுகொண்டாள். ‘நான் கதைத்ததில் பிழை இல்லை’ என்று மனது உறுதியாகச் சொன்னபோதும் ஒருவிதச் சங்கடம் அங்குப் போகவிடாமல் தடுத்தது.