இரவு, நன்றாக இருட்டியபிறகு வீடு வந்தவனின் முகமே சரியில்லை. இருண்டு, களைத்து, களையிழந்து யாரோ போலிருந்தான். பார்த்த சஞ்சனாவுக்கு மனது பாரமாயிற்று. என்ன நடந்திருந்தாலும் அண்ணாவுக்காக அவள் நின்றிருக்க வேண்டுமோ. அப்படி இருந்திருக்க மனதிலிருப்பதை அவளோடாயினும் பகிர்ந்திருப்பானே. குளித்துவிட்டு வந்தவனுக்கு வேகமாக ஓடிப்போய் உணவைப் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தாள்.
“என்ன புதுசா? வச்சிட்டுப் போ!” என்றான் எரிச்சலுடன்.
அதைப் பொருட்படுத்தாமல் அவள் நீட்டிக்கொண்டு இருக்க, முறைத்துவிட்டு எழுந்துபோனான் அவன். வேகமாகத் தட்டை மேசையில் வைத்துவிட்டு ஓடிவந்து அவனது கரத்தைப் பற்றி, “அண்ணா கோவப்படாதீங்கோ! வாங்கோ வந்து சாப்பிடுங்கோ!” என்றாள் கெஞ்சலாக.
“இவ்வளவு நாளும் வேண்டாத விருந்தாளிக்கு போட்டமாதிரி போட்டு வச்சிட்டு இண்டைக்கு மட்டும் என்ன பாசம் பொங்கிக்கொண்டு வருது?”
“அது கோவம் போயிட்டுது. அதுதான். நீங்க வாங்கோ சாப்பிட.” காரணத்தைச் சொல்லி அவன் காயத்தைக் கிளற விரும்பாமல் மேசையின் புறமாக இழுத்தாள்.
அசையாமல் நின்று, “அவள் என்னை வேண்டாம் எண்டு சொன்னதில உங்களுக்குப் பாசம் பொங்குது போல!” என்றான் நக்கலாக.
தமையனை முறைத்தாள் சஞ்சனா. “அந்தநேரம் நீங்க செய்தது எல்லாம் சரியான பிழை அண்ணா. அந்தக் கோபத்திலதான் கதைக்கேல்ல. அதுக்காக ஒருத்தி என்ர அண்ணாவை வேண்டாம் எண்டு சொல்லுவாளா? அவளுக்கு என்ர அண்ணாவைப்பற்றி என்ன தெரியுமாம்? நீங்க கிடைக்கிறதுக்கு அவள் குடுத்து வச்சிருக்கோணும். மாமா வரட்டும், கேக்கிறன் நான்!” என்று படபடத்தாள் அவள்.
“ஆளாளுக்கு எனக்காகக் கதைச்சு என்னைக் கேவலப்படுத்தினது எல்லாம் போதும்! நீங்க நீங்க உங்க உங்கட வேலைய மட்டும் பாருங்க!” என்றுவிட்டுப் போனான் அவன்.
வாசலில் அமர்ந்து எல்லாவற்றையும் கேட்டிருந்த தெய்வானைக்கு இது தனக்கானதுதான் என்று விளங்காமல் இருக்குமா என்ன? பேசாமல் இருந்து தன்னைத் தானே நொந்துகொண்டார்.
உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் முடங்கினான் சஞ்சயன். காயப்பட்டிருந்த மனத்துக்குத் தங்கையின் கோபம் இதம் சேர்த்தது. ஆனாலும், ‘நான் தூக்கி வளத்தவள் ஆறுமாதமா அவளுக்காக என்னோட கதைக்காம இருந்தவள் தானே..’ என்கிற கோபம் அவனை அவளோடு சமாதானமாக விடாமல் பிடித்துக்கொண்டது.
தான் மறுத்ததில் நிச்சயமாகச் சஞ்சனா கடுங்கோபத்தில் இருப்பாள் என்று சஹானாவுக்குத் தெரியும். கூடவே முகம் வாடி கண்கள் கலங்கி வெளியேறிய அப்பம்மாவும் கோபமாகச் சென்ற சஞ்சயனையும் நோட்டம் விட எண்ணி அடுத்தநாள் அகிலனையும் இழுத்துக்கொண்டு அவர்களின் வீட்டுக்கு வந்தாள். அவளின் அம்மா அப்பாவைக் காணவில்லை. யாரோ உறவு வீட்டுக்குப் போய்விட்டார்களாம். அவள் அவர்களை பார்ப்பதற்கே அப்பொய்மென்ட் வைக்கவேண்டும் போலும். அந்தளவில் கணவனும் மனைவியும் சோடியாக சொந்தம், சுற்றம் என்று ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
தெய்வானை ஆச்சி எதையும் காட்டிக்கொள்ளாமல், “வா குஞ்சு. வா ராசா.” என்று இருவரையும் பாசமாக வரவேற்றார். “காய்ச்சின இராசவள்ளிக் கிழங்கு கிடக்குது எல்லா பிள்ளை. கொஞ்சமா வாத்துக் குடு. உடம்புக்கு நல்லது.” என்று சஞ்சனாவிடம் சொல்லிவிட்டு, வாழைத் தோட்டத்துக்கு நடந்தார்.
ஓடிப்போய் அப்பப்பாவைப் பார்த்துக்கொண்டு வந்தாள் சஹானா. இப்போதெல்லாம் உறக்கத்துக்கான மருந்து இல்லாமலேயே இயல்பாகவே அவர் உறங்கி எழுகிறார். பேச்சுச் சிரமம்தான். விழித்திருக்கையில் ஆட்களைக் கண்டால் நன்றாகப் பார்த்துக்கொள்ளுவார். அவரின் ஒரே செய்கை விரல்களை அசைத்து அவர்களை அழைத்து அவர்களின் கரம் பற்றிக் கொள்வதுதான்.
அவள் எதிர்பார்த்தது போலவே சஞ்சனா முகத்தை நீட்டிக்கொண்டு வந்து இராசவள்ளிக் கிழங்குக் கஞ்சியை அவளின் முன்னால் டொங் என்று வைத்தாள். அகிலனுக்கு மட்டும் கையில் கொடுத்தாள். “பாருங்கோ அகில் மச்சான். இவ்வளவு நாளும் எனக்காக அந்தச் சிடு மூஞ்சியோட கதைக்காம இருந்தவள் இப்ப என்னோட கதைக்க மாட்டாளாம்.” வேண்டுமென்றே சீண்டினாள் சஹானா.
“அடியேய் மச்சாள்! தேவையில்லாம என்ர அண்ணாவை இழுக்காத, விளங்கிச்சோ! என்ர அண்ணாவை கட்டுறதுக்கும் குடுத்து வச்சிருக்கோணும். அந்தக் கொடுப்பினை இங்க சிலபேருக்கு இல்லை எண்டா அதுக்கு நாங்க என்ன செய்றது. நல்ல்ல்ல பொம்பிளையா பாத்து நான் என்ர அண்ணாக்கு கட்டி வைப்பன்.” ரோசத்துடன் சொன்னாள் அவள்.
“நல்ல்ல்ல பொம்பிளைய நல்ல்ல்ல்ல்ல ஆம்பிளைக்குத்தான் கட்டி வைக்கிறது. உன்ர அண்ணா எல்லாம் ஃபீலிங்ஸ்ஸே இல்லாத பிசாசு. அவரைக் கொண்டுபோய்ப் புளியமரத்தில கட்டிவிடு!” என்றாள் அவள். அகிலன் இராசவள்ளிக்கிழங்குக் கஞ்சிச் சட்டையை மீண்டும் மேசையில் வைத்துவிட்டுச் சிரிக்கவும் வெறியே வந்தது சஞ்சனாவுக்கு.
“உனக்கு ஆகத்தான் சேட்டை. என்ர அண்ணா உனக்குப் பேயாடி?” என்று கேட்டுக்கொண்டே சஹானாவைத் துரத்தத் தொடங்கினாள் சஞ்சனா.
“பின்ன வேற என்ன சொல்லுறது? பேஸ்புக்ல என்ன எழுதி வச்சிருக்கிறார் எண்டு பாத்தியா? இயற்கை என் நண்பன்! வாழ்க்கை எனது தத்துவாசிரியன்! வரலாறு எனது வழிகாட்டியாம். அவரைக் கட்டுறவள் எப்பிடி எழுதோணும் தெரியுமா? ‘பே என்ர பிரியன்! பெருச்சாளி என்ர பிள்ளை! நான் ஒரு பிசாசு’ எண்டுதான் எழுதவேணும். அதெல்லாம் என்னால ஏலாது. நீ உன்ர அண்ணாக்கு நல்ல பேயா பாத்துக் கட்டிவை. சந்தோசமா குடும்பம் நடத்தி பேயா பெத்துப்போடட்டும்!” என்றுவிட்டு, ஓடமுடியாமல் விழுந்து விழுந்து சிரிக்க, அவளைப் பிடித்து மொத்து மொத்தென்று மொத்தினாள் சஞ்சனா.
ஒருவழியாக அவள் அடித்தும் இவள் சிரித்தும் முடிக்க இருவரின் விழிகளும் முறைப்பும் சிரிப்புமாக மற்றவரில் மோதிக்கொண்டன. “மனதுக்குப் பிடிக்காம திருமணம் எப்பிடி செய்றது சஞ்சு?” என்றாள் சஹானா ஆழ்ந்த குரலில்.
சஞ்சனாவின் விழிகள் விரிந்தது. அதுதானே.. என்று ஓடும்போதே, அண்ணாவுக்கு இவளைப் பிடித்திருக்கிறதாமே என்கிற நினைவு வந்து அவளின் விழிகளைக் கரிக்கச் செய்தது. “என்ர அண்ணா நல்லவர்..” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.
‘அது உனக்கு..’ என்று உள்ளே ஓடினாலும் அதைச் சொல்லி அவளை நோகடிக்கப் பிடிக்காமல், “கல்யாணத்துக்கு அது மட்டும் காணாது தானே.” என்றாள் அப்போதும் இதமான குரலில்.
அவள் சொல்வது உண்மைதான். சரிதான். ஆனால் இதில் சிக்குண்டு இருப்பவன் அவளின் தமையன் அல்லவா. “நீ போ! என்னோட கதைக்காத!” என்றுவிட்டுப் போனவளும் அதற்குமேல் அதைப்பற்றி அவளிடம் பேசவில்லை.