பிரதாபன் குடும்பத்தினர் வந்து ஒரு வாரமாயிற்று. திருமணப்பேச்சு ஆரம்பித்த இடத்திலேயே நின்றுவிட்டதில் எல்லோருக்குமே ஒருவிதச் சங்கடம். சிவானந்தன் அதைப்பற்றி எதுவுமே விசாரிக்கவில்லை என்பது பிரதாபனை உறுத்தியது. பிரபாவதியாவது போகிற போக்கில், ‘என்ர மகனுக்கு இண்டைக்கு நல்ல சீதனத்தோட வந்து கேட்டுப்போட்டு போறாங்கள்!’ என்று மறைமுகமாகத் தாக்கிவிட்டுப் போனார்.
ஏனடா இப்படி இருக்கிறாய் என்று சிவானந்தனைக் கேட்போம் என்று பார்த்தால் தனியாக அகப்படாமலேயே தப்பித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் இருக்கையில் வந்திருந்து பேசுவது, சற்று நேரத்திலேயே, ‘விடிய வேலை இருக்கு’ என்றுவிட்டு அறைக்குள் முடங்கிக்கொள்வது என்று விளையாட்டுக் காட்டிக்கொண்டே இருந்தார். பிரதாபனைப் பார்க்க, பேச என்று ஆட்களும் வந்துகொண்டே இருப்பதில் ஒரு தனிமையான பொழுது அகப்படவேயில்லை.
இப்படியே போனால் இது சரியாக வராது என்று தெரிந்து, அன்று மாலையே சிவானந்தனைத் தேடிக்கொண்டு தோட்டத்துக்கே வந்தார் பிரதாபன். முதலில் திகைத்தாலும் சமாளித்து, “உடம்பு இருக்கிற நிலைக்கு இங்க வரைக்கும் ஏனடா வந்தனி?” என்று கடிந்துகொண்டார்.
“எனக்கு ஒண்டுமில்லை! நான் நல்லாத்தான் இருக்கிறன். இப்பிடி சும்மா கதைச்சு கதைச்சு என்னை வருத்தக்காரனா ஆக்காம பேசாம இரு!” யாரைப் பார்த்தாலும் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, அங்க போகாதே, நேரத்துக்குப் படு, மாத்திரையை விழுங்கு என்று குழந்தையைத் தாங்குவதுபோல் தாங்கினால் அவரும் என்னதான் செய்வார்.
கச்சானுக்கு(நிலக்கடலைக்கு) மண் அணைத்துக்கொண்டிருந்தார் சிவானந்தன். அதைப் பார்த்ததும் அந்தநாள் நினைவுகள் வந்தது. “இங்க கொண்டுவாடா நான் செய்றன்!” என்று ஆர்வமாகக் கேட்டார் பிரதாபன்.
“டேய்! விடு! பேசாம அந்தப் பக்கமா ஒதுங்கி நில்லு!” என்று அதட்டினார் சிவானந்தன்.
“என்னவோ தோட்டத்தைப்பற்றி எனக்கு ஒண்டுமே தெரியாத மாதிரிச் சொல்லுறாய். கொண்டுவா இங்க! நீ என்ன அணைப்பு அணைக்கிறாய். மண்ணை நல்லா இழுத்துவிடு!” அவரிடமிருந்து கை அலவாங்கினைப் பிடுங்கி, மண்ணை அணைத்தவருக்கு மூன்றாவது செடியிலேயே மூச்சு வாங்கியது.
“என்னவோ பெருசா கதை அளந்தாய். இப்ப என்ன இடையில நிக்குது?” என்று கேலி செய்துவிட்டு, “எழும்பி வா இந்தப் பக்கம்.” என்று கைகொடுத்துத் தூக்கிவிட்டார்.
“வயசு போயிட்டுது மச்சான். முந்தி மாதிரி குனிஞ்சு நிமிர முடியேல்ல!” என்றபடி, இளைப்பாற என்று அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் கீழே இருவரும் அமர்ந்துகொண்டனர்.
பச்சையாய் பசுமையாய் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பயிரிடப்பட்டிருந்த கச்சான் மனதை நிறைக்க நண்பனைப் பார்த்தார் பிரதாபன். “அம்மா கலியாணம் பேசினத்தைப்பற்றி நீ ஒண்டும் சொல்லேல்ல.” பேச்சை மெல்ல ஆரம்பித்தார்.
“நான் என்ன சொல்லக் கிடக்கு? ரெண்டுபேருக்கும் பிடிச்சா கட்டி வைக்கிறதுதானே.” என்றார் அக்கறையற்று.
என்னவோ யாருக்கோ பேசிய திருமணம் போன்று பதில் சொன்னவரை கொஞ்ச நேரம் யோசனையோடு பார்த்துவிட்டு, “ஏன் மச்சான் இப்பிடி மாறிப்போய்ட்டாய்?” என்றார் ஆழ்ந்த குரலில்.
அதுவரை முகத்தில் இருந்த சிரிப்பு மறைய, “என்னத்த மாறக்கிடக்கு? எப்பவும் போலத்தான்.” என்றார், எங்கோ பார்வையைப் பதித்து.
மறுப்பாகத் தலையை அசைத்தார் பிரதாபன். “உன்னைப்பற்றித் தெரியாத ஆக்களிட்ட இந்தக் கதையச் சொல்லு. என்னட்ட இல்ல. நான் சொல்லாம போனது உனக்குக் கோவம். அதைவிட, என்ர மனுசின்ர ஆக்களோட உன்னால எண்டைக்கும் பழகிறது கஷ்ட்டம் எண்டு விலகியே இருந்தாய் எண்டு தெரியும்.” எனும்போதே, “விடு பிரதாப்! இப்ப எதுக்குத் தேவையில்லாம பழசை எல்லாம் கதைக்கிறாய்?” என்று அவசரமாகத் தடுத்தார் சிவானந்தன்.
“நீ நல்லா இருந்திருந்தா நான் ஏனடா கதைக்கப்போறன்?”
“இப்ப என்ன குறையக் கண்டியாம்? மனுசி பிள்ளைகள் எண்டு நல்லாத்தான் இருக்கிறன்.”
“ஓமோம்! நீ எவ்வளவு அமோகமா வாழுறாய் எண்டு பாக்கவே தெரியுது!” சினத்துடன் மொழிந்துவிட்டு, “பிரதி ஒரு பக்கம் நீ ஒரு பக்கம் எண்டு என்னடா இது?” என்றார் கவலையோடு.
அதற்குமேல் அடக்கச் சிவானந்தனால் முடியவில்லை. பதில் சொல்லவே முடியாத கேள்விகளாகக் கேட்டு அவர் குடைந்தது சினத்தை உருவாக்க, “என்ன சொல்லச் சொல்லுறாய்? உன்ர தங்கச்சிக்கு என்னைப் பிடிக்கேல்லையாம். இண்டைக்கு நேற்று இல்ல கட்டின நாளில இருந்து!” என்று படபடத்தவர், அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் எழுந்து நடந்தார்.
அறுபது வயதாகிறது. இந்தளவு காலத்தில் என்னத்தை வாழ்ந்தேன் என்று நினைத்துப்பார்த்தால் வெறுமை மட்டும் தான் தெரிந்தது. வெளியில் இருந்து பாக்கிறவர்களுக்கு அவரைப் பொல்லாதவராகத்தான் தெரியும். பெற்ற மகனுக்குக் கூட அப்படித்தானே. அவரின் மனதின் ஓலத்தை அறிந்தவர் எவரும் இல்லை.
அவரின் அம்மாவுக்கே தகப்பன் ஸ்தானத்தில் நின்று மணமுடித்துக் கொடுத்த பெரிய மாமாவின் மகளின் பின்னால் அலைந்து காதலைச் சொல்லும் தைரியம் இல்லாமல் நெஞ்சுக்குள்ளேயே பொத்திவைத்துக்கொண்டு அலைந்தவருக்கு, பிரதாபன் வாக்கு வாங்கியபோது பெரும் புதையல் கிடைத்துவிட்ட சந்தோசம் தான். யாரும் அறியாமல் பெரிய மாமா வந்து, ‘என் மகளை மணந்துகொள்’ என்று கேட்டபோதும் அப்படித்தான். ஆசையாசையாக முறைப்படி பெண் கேட்டு மணந்துகொண்டார்.
திருமண இரவில் தன் மனத்தைச் சொல்லும் ஆவலோடு மனைவியானவளை அணைத்தபடி, “ரதி..” என்று ஆரம்பித்த நொடியிலேயே பெரும் சினத்துடன் அவரின் கையை உதறிவிட்டு எழுந்து நின்றார் பிரபாவதி.