ஆதார சுதி 32(2)

“நீங்க என்னைத் தொட்டா நான் அவன் தொடுறதாத்தான் நினைப்பன்!” என்று ஆங்காரத்தோடு சொன்னபோது, திகைத்து, இனிமை நிறைந்த மெல்லிசை ஒன்று அறுந்து போனதுபோல் உணர்ந்தார் சிவானந்தன்.

“வார்த்தையை விடாத ரதி!” எழுந்த சினத்தை அடக்கி விரல் நீட்டி எச்சரித்தார்.

“அப்பிடித்தான் சொல்லுவன். அவன்தான் என்ர மனதில இருக்கிறான். நீங்க தொட்டா அவனைத்தான் நினைப்பன்!” மீண்டும் மீண்டும் பிரபாவதி அதையே சொன்னதும், மிருதுவான காதலன் மறைந்து மனிதமிருகம் உறுமிக்கொண்டு வந்து பாய்ந்தே விட்டிருந்தது.

“அவனையே நினையடி!” என்றவர், பிரபாவதி எது நடக்கக்கூடாது என்று எண்ணி அப்படிச் சொன்னாரோ அதை நடத்தி முடித்திருந்தார்.

காலையில் எழுகையில், ‘ச்சேய்! என்ன இப்படி நடந்துகொண்டோம்’ என்று தன்னையே வெறுப்பதும், இரவில் தன்னைப் புரியவைக்கவேண்டும் என்று அவர் மென்மையாக ஆரம்பிப்பதும் பிரபாவதியின் அடங்காத குணமும் வாயும் அதை நடக்கவிடாமல் செய்வதும் என்று அவர்களின் நாட்கள் நரகமாகவே மாறிப்போயிற்று.

“இன்னொருத்தனை காதலிக்கிறவளை தொட உனக்கு வெக்கமா இல்லையா?” என்பது, “உன்னை எனக்குப் பிடிக்கவே இல்லை.” என்று முகத்துக்கு நேராகவே உதாசீனம் செய்வது, “இதுக்கு எண்டே அலைவியாடா?” என்பது போன்ற மிகுந்த தரம் குறைந்த வார்த்தைகள் அவரை எந்தளவுக்குக் காயப்படுத்தியதோ அந்தளவுக்கு இரக்கமற்றவராகவும் மாற்றிப்போட்டது.

தான் சொன்னதைக் கேட்கவில்லையே என்கிற ஆங்காரம் பிரபாவதிக்கு. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்கிறாள் இல்லையே என்கிற கோபம் அவருக்கு. பகல் பொழுதுகளில் தனிமையில் அமர்ந்திருந்து தன்னையே வெறுக்க ஆரம்பித்தவர் மெல்ல மெல்ல இரவுகளிலும் பிரபாவதியை விட்டு விலகத் தொடங்கினார்.

சஞ்சயனை மனைவி சுமக்கிறாள் என்று தெரிந்தபிறகு முற்றிலுமாக விலகி நின்றார். அந்த விலகல் தான் நிதானிக்க வைத்தது. அவள்தான் அப்படியெல்லாம் கதைக்கிறாள் என்றால் நானும் இப்படியெல்லாம் நடந்திருக்கிறேனே என்று குன்ற வைத்தது. உயிராக நேசித்தோமே இப்படி வாழவா என்று மனதுக்குள் வெந்தே போனார். மகன் பிறக்கிறவரை மனைவிக்குப் பிடித்தவற்றைச் செய்து இணக்கமாக நடக்க முயன்றதும், பிள்ளையைச் சுமக்கும் சலுகையைப் பற்றிக்கொண்டு பிரபாவதி இன்னுமின்னும் அவரைக் கேவலப்படுத்தியதும் என்று அந்த ஒரு வருடத்தில் மனது விட்டே போயிற்று.

சஞ்சயன் பிறந்த பிறகும் பிரபாவதியைச் சிவானந்தன் நெருங்கவே இல்லை. அருகே போனாலே விசமென வார்த்தைகளைக் கொட்ட பிரபாவதி என்றைக்கும் யோசித்ததே இல்லை. அவளின் தரத்துக்குத் தன்னால் இறங்கமுடியாது என்று விலகியே வாழ்ந்தவரை, அதற்கும் சந்தேகப்பட்டு, ‘இரவு பகல் பாராம தோட்டத்திலேயே கிடக்கிறீங்க.. என்ன அங்க யாரையும் பாத்தாச்சு போல?’ என்று அவர் பிடித்த அடுத்தச் சண்டைதான் சஞ்சனா பிறக்க வழிவகுத்தது.

அதன் பிறகான நாட்களில் தன் இயல்பான சுபாவமே மாறிக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமலேயே மாறிப்போயிருந்தார் சிவானந்தன். மகளின் கதையைக் கேட்டு அவரை வெறுத்து ஒதுக்கிய மாமியார், எதிலும் பற்றற்றுப்போய் இருந்த மாமனார், தன் நிலையை யாரிடமும் வாய்விட்டுச் சொல்லமுடியாமல் போன கையறு நிலை, சற்றே நினைவு தெரியத் தொடங்கியதும் தாயின் ஓதலினால் தன்னை விட்டு விலகத் தொடங்கிய மகன் என்று அவரைச் சுற்றி எல்லாப் பக்கமும் தனிமையும் வெறுமையும் மட்டுமே! சஞ்சனா ஒருத்திதான் ஆறுதல்.

எப்படி இப்படி ஆனது என்று அவரே அறியார். ஏதோ உயிர் தானாகப் போகிறவரை வாழ்ந்து முடிப்போம் என்றுதான் தன் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறார். எல்லாம் மரத்துப்போன உணர்வு. அப்படி இல்லை; உனக்கு எதுவுமே மரத்துவிடவில்லை என்று காயம்பட்டுக் கதறிய இந்த நொடியில் உணர்ந்தவருக்கு நெஞ்சுக்குள் யாரோ எதையோ வைத்து அழுத்துவது போலிருக்க வேலியோரமாக நின்ற பூவரசம் மரத்தின் கீழே அமர்ந்துகொண்டார். மனைவி மகள் என்று பிரதாபன் வாழுகிற நிறைவான வாழ்க்கை வேறு அவரின் இழப்பைப் பலமடங்காகக் காட்டவும் தாங்கிக்கொள்ளவே முடியாமல் போயிற்று.

இரவு வீடு வந்த சிவானந்தனின் முகம் சரியே இல்லை. அதைக் கவனித்து, “என்னப்பா?” என்று சஞ்சனா கேட்டும் ஒன்றுமில்லை என்றுவிட்டு உணவையும் தவிர்த்துவிட்டு படுக்கைக்குச் சென்றார்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock