அடுத்தநாள் காலை, தினமும் கிழக்கு வெளுக்க முதலே தோட்டத்துக்குப் புறப்படுகிற மனிதர் மூச்சுப் பேச்சில்லாமல் அருகில் கிடக்கவும் பயந்துபோன பிரபாவதி அலறியதில் பதறியடித்துக்கொண்டு மொத்தக் குடும்பமும் ஓடிவந்தது.
எப்போதுமே அவர் உறங்குவது மெத்தையற்ற மரக்கட்டிலில் தான். அந்தப் பெரிய உருவம் மலைபோல் வெறும் சாரத்துடன் வாயைப் பிளந்துகொண்டு மல்லாந்து கிடந்த கோலத்தில் சஞ்சயன் நடுங்கியே போனான். ‘அப்பா…’ மனம் அலற அவரைத் தூக்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினான்.
உடனேயே தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட, மொத்தக் குடும்பமும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே காத்திருந்தனர். தெய்வானை ஆச்சிக்கு மனது தாங்கவே இல்லை. சோதனைகளும் துன்பங்களும் அவரின் குடும்பத்தையே பிடித்து ஆட்டுகிறதே! ராகவியும் யாதவியுமாக அவரைத் தாங்கிக்கொண்டனர்.
“மாமாக்கு ஒண்டும் நடக்காது மச்சி. பயப்பிடாத!” அழுதுகொண்டிருந்த சஞ்சனாவைத் தன் தோளில் சாய்த்துத் தேற்றிக்கொண்டிருந்தாள் சஹானா.
பிரபாவதியை யாரும் நெருங்கவில்லை. கல்லாக இறுகிப்போய் நின்றார்.
கைகளால் தலையைத் தாங்கிக்கொண்டு தரையைப் பார்த்தபடி இருந்த சஞ்சயனின் விழிகளுக்குள் அசைவற்றுக் கிடந்த தகப்பனின் கோலம்தான் கிடந்து வதைத்தது.
அவரைக் கவனித்திருக்க வேண்டும், அவரோடு பேசியிருக்க வேண்டும், அவருக்கு ஆறுதலாகவேனும் நடந்திருக்க வேண்டும். அவரைப் பற்றி அறிந்துகொண்ட பிறகும் கவனிக்காமல் விட்டுவிட்டானே. தப்பித்தவறி ஏதும் நடந்துவிட்டால்? கடவுளே.. அந்த நினைவிலேயே அவன் உடல் சிலிர்த்து நடுங்கியது. “கவலைப்படாத! ஒண்டும் நடக்காது!” அவனருகில் அமர்ந்திருந்த அரவிந்தன் அவனைத் தேற்றினார். அகிலன் கண்ணீரும் கவலையுமாக இருக்கிறவர்களுக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டான்.
பிரதாபனுக்குத் தன்னால் தானோ, தான் நேற்று பேசியதால் தானோ என்று மிகுந்த வருத்தமாயிற்று. பழைய காயத்தைக் கீறி விட்டேனோ! மனைவி தன்னோடு இணக்கமாக இல்லை என்பது எத்தனை தூரத்துக்கு வருத்தியிருந்தால் மூச்சுப் பேச்சற்றுப் போகிற நிலைக்குப் போயிருப்பான்? அப்போதும் துளி கண்ணீர் இல்லாமல் கல்லைப்போல் நின்ற தங்கையின் நெஞ்சழுத்தம் மிகுந்த சினத்தைக் கொடுக்க எழுந்து அவரிடம் சென்றார்.
“அவன் உன்ன விரும்பித்தான் கட்டினவன். அது உனக்கும் தெரியும். ஆனாலும் என்ன வாழ்க்கை வாழுறியல்? அவன்ர உயிரை பறிச்ச பிறகுதான் நீ சந்தோசமா இருப்பியா? இல்ல இப்பிடியே விட்டுக்குடுக்காம வாழ்ந்து அப்பிடி என்ன சந்தோசத்தைக் காணப்போறாய்? சின்ன வயசில பிழை விட்டா மன்னிக்கலாம். வயசுக்கோளாறு, வாழ்க்கை அனுபவமில்லை எண்டு சொல்லலாம். ஆனா இப்பவும் நீ அப்பிடியே இருக்கிறாய் பார்.. உன்னையெல்லாம்…” வெறுப்புடன் மொழிந்துவிட்டு அங்கிருந்து வெளியே நடந்தார் பிரதாபன்.
இப்படி அதுவும் பிரதாபன் வெடிப்பார் என்று அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. எல்லோரின் விழிகளும் திகைப்புடன் பிரபாவதியின் மீது படிந்தது. அப்போது வைத்தியர் வெளியே வர எல்லோரும் அவரிடம் ஓடினர். “ஹார்ட் அட்டாக் மாதிரித் தெரிய இல்ல. மன அழுத்தம் தான். எதுக்கும் 24 மணித்தியாலம் போகட்டும்.” என்றார் அவர்.
“பயம்.. பயப்படத் தேவையில்லையோ டொக்டர்?” பதட்டத்துடன் கேட்டார் தெய்வானை.
“இப்போதைக்கு எல்லாம் நோர்மலாத்தான் இருக்கம்மா. எதுக்கும் நாளைக்கு வரைக்கும் பொறுங்கோவன்.” என்றுவிட்டுப் போனார் அவர்.
ஒருவர் மட்டும் நிற்கலாம் என்று சொல்லப்பட்டதில் மற்றவர்களை அனுப்பிவிட்டுத் தான் நின்றுகொண்டான் சஞ்சயன். எப்போதும் அதட்டலும் உருட்டலுமாக அதிகாரம் செய்கிறவன் இறுகிப்போய் அமர்ந்திருந்த காட்சி சஹானாவின் மனதைப் பிசைந்தது. இதையெல்லாம் அவளும் அனுபவித்தவள் தானே. அவன் வேதனை புரிந்தது. தன்னை அறியாமல், அவனருகில் சென்று, “கவலைப்படாதீங்கோ மாமாக்கு ஒண்டும் நடக்காது!” என்றாள் இதமாக.
விழிகளில் வெறுமையோடு அவளை நிமிர்ந்து பார்த்தான் சஞ்சயன். பாசமும் கனிவுமாக அவனை வருடிய அந்த விழிகளில் அவன் மனது தொலைய ஆரம்பித்தது. என்னவோ தனக்கான ஆறுதல் அவளிடம் மட்டுமே இருப்பது போலிருந்தது. சஹானாவுக்கு அதற்குமேல் அவனிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனவே, “போயிட்டு வாறன்.” என்று நகர, அவளின் கையைப் பற்றினான் அவன்.
“என்னோட இரு. போகாத.” என்றான் தவிப்புடன்.
ஒருவர் தானே நிற்கலாம் என்றார்கள் என்று தயங்கினாலும், அவன் அப்படிக் கேட்டபிறகு போக மனமற்று அவனருகில் தானும் அமர்ந்துகொண்டாள் சஹானா. அவளைக் காணவில்லை என்று தேடிவந்த அகிலனிடம், “நானும் நிக்கிறன் மச்சான். அம்மாட்ட சொல்லிவிடுங்கோ.” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவனுக்கு அவள் தன்னோடு இருக்கிறாள் என்பதே ஒரு பலத்தைக் கொடுத்தது. “இதுவரைக்கும் அவரை நான் அப்பா எண்டு கூப்பிட்டதே இல்ல.” என்றான் திடீர் என்று. திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள் சஹானா. அவன் இன்னுமே தலையைக் கைகளில் தாங்கித் தரையைப் பார்த்தபடிதான் இருந்தான்.
அது எப்படி அப்பாவை அப்பா என்று அழைக்காமல் இருப்பது? அவள் கிரகித்துக்கொள்ள முடியாத செய்தியாக இருந்தது அது.
“மூச்சுப் பேச்சில்லாம கிடந்தவர பாத்ததும் உயிர் போயிட்டுதோ எண்டு ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டன்.” என்றவனுக்குக் கைகள் அப்போதும் நடுங்கியது. “அவருக்கு நல்ல மகனா நான் நடந்ததே இல்ல. உண்மை தெரியாம நிறையக் கேவலப்படுத்திப்போட்டன். மதிச்சதும் இல்ல.”
செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்போது துடிக்கிறவனைப் பார்க்க இரக்கம் சுரந்தது. ஆறுதலாக அவன் கையைப் பற்றி, “சும்மா கண்டதையும் யோசிக்காதீங்கோ. அவருக்கு நீங்க மகன். நீங்க என்னதான் சண்டை பிடிச்சாலும் அப்பாக்களுக்குப் பிள்ளைகளில இருக்கிற பாசம் எண்டைக்குமே குறையாது. கவலைப்படாதீங்கோ!” அவளின் மென்மையான ஆறுதலில் நிமிர்ந்து அமர்ந்தான் அவன்.
தன் மனதில் கிடந்து அரிக்கும் வேதனைகளை எல்லாம் அவளின் காலடியில் கொட்டிவிட நினைத்தான். அப்படி மனம் திறந்து பேசிப் பழக்கமில்லாததில் வார்த்தைகள் வெளிவர மறுத்தன. “உனக்கு உன்ர அப்பா எண்டா நிறையப் பிடிக்கும் தானே. அண்டைக்கு ஒரு வார்த்த யோசிக்காம நான் சொன்னதுக்கு எப்பிடி துடிச்சாய். அப்பிடி எனக்கெல்லாம் இருந்ததே இல்ல.” என்றான் கசப்புடன்.
சிறு புன்னகையுடன் அப்படியல்ல என்று மறுத்துத் தலையசைத்தாள் அவள். “பாசம் இல்லாமையா இப்ப இப்பிடித் துடிக்கிறீங்க. பாசம் எப்பவும் இருந்திருக்கு. அதை நீங்களே இவ்வளவு நாளும் உணரேல்ல எண்டு சொல்லுங்கோ.” என்று சொன்னவளை நன்றாகத் திரும்பிப் பார்த்தான் சஞ்சயன். உண்மைதானே! இல்லாமல் அவன் மனது கிடந்து இப்படித் துடிக்குமா என்ன?
அவளின் கைக்குள் தான் இன்னுமே அவனது கை இருந்தது. அதைத் தானும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டு, “உனக்குத் தெரியாது, இந்த நிமிசம் நீ எனக்கு எவ்வளவு பெரிய ஆறுதலை தந்திருக்கிறாய் எண்டு. இப்பிடியே என்னோடயே இருந்திடேன்!” என்றான் தன்னுடைய ஆழ்ந்த குரலில்.
சஹானாவுக்குத் திகைப்பு. அவனே இப்படிக் கேட்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்தும், தன் பதிலைச் சொல்லி அவனை இன்னுமே வருத்த விரும்பாமல், “இந்த நேரம் நாங்க இதைப்பற்றிக் கதைக்க வேண்டாமே.” என்றாள் மெல்ல.
சற்று நேரம் அவளையே பார்த்தவனும் அதற்குமேல் அதைப்பற்றிப் பேசவில்லை. அவளும் பேசவில்லை. ஆனால், அவனுடனேயே இருந்தாள். நர்ஸ் வந்து என்ன இது இருவர் இருக்கிறீர்கள் என்றபோதும், “அவரின்ர அப்பா. அதுதான் அவருக்கு ஆறுதலுக்கு நான் இருக்கிறன். உங்களுக்குச் சிரமம் தரமாட்டேன் அக்கா.” என்று அவரைச் சமாளித்தாள்.
மத்தியானம் பிரதாபன், அரவிந்தன், அகிலன் மூவரும் வந்தபோதும் கடையில் போய் அவசரமாகக் கொறித்துவிட்டு வந்தானே தவிர, சஞ்சயன் அங்கிருந்து அசையவே இல்லை. அவர்கள் புறப்பட்டபோது, “நானும் போகவா?” என்றாள் தயக்கத்துடன்.
அவன் தலையை அசைத்தான்.
“இருக்கிறது எண்டாலும் இருக்கிறன்.” எதுவுமே கதைக்காமல் அமைதியாகவே இருந்தவனை விட்டுவிட்டுப் போகவும் மனதில்லை.