அன்னையிடம் நம்பிக்கை தரும் விதமாகப் பேசியிருந்தாலும் பிரதாபன் எதையும் அவசரமாகச் செய்துவிடவில்லை. மனைவியோடு அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். கூடவே அரவிந்தன் ராகவியோடும் பேசினார். சிவானந்தன் பிரபாவதி இருவரிடமும் தனிப்பட்ட முறையில் விசயத்தைச் சொன்னார். பிரபாவதிக்கு விருப்பமில்லைதான். ஆனால், மகனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது என்கிற உண்மை அவரின் வாயை அடைத்தது.
“ரெண்டுபேருக்கும் பிடிச்சிருந்தா மட்டும் கட்டிவை பிரபன். தயவுசெய்து பிடிக்காத ஆட்களை வாழ்க்கையில இணைச்சுப்போடாத. மற்றும்படி உனக்குச் சம்மந்தியாகிறதில எனக்குச் சந்தோசம் தான்.” என்று முடித்துக்கொண்டார் சிவானந்தன்.
பிரதாபன், தங்கையைப் பார்த்தார். கணவரின் பேச்சின் பொருளில் முகம் கருத்துவிடத் தமையனின் பார்வையைத் தவிர்த்தார் பிரபாவதி. மனம் கேட்காமல், “இன்னும் எவ்வளவு காலம் எங்களுக்கு இருக்கோ தெரியாது. அது வரைக்கும் அவனைக் கொஞ்சம் பாசத்தோட கவனி பிரதி.” என்று விட்டுப் போனார்.
அடுத்தகட்டமாக, ரட்ணத்துக்கு அழைத்து எல்லாவற்றையும் சொல்லி, உனக்கும் விருப்பமா என்று கேட்டுக்கொண்டார். அவர்களை உதறிவிட்டு எதையும் செய்ய முப்பது வருடத்து நட்புச் சம்மதிக்கவில்லை. கூடவே, சஹானாவுக்கும் அவர்களின் விருப்பம் நிச்சயம் முக்கியம். இப்படி எல்லோருடனும் கலந்து பேசி எல்லோருக்குமே இதனால் எந்தக் குறையும் இல்லை என்றபிறகே சஹானாவோடு பேசினார்.
அன்று, சஹானாவை அழைத்துக்கொண்டு நடக்க வந்திருந்தார் பிரதாபன்.
வந்ததில் இருந்து அவரிடம் பேச்சே இல்லை. வேறு நாட்களாக இருந்திருக்க, இளமைக்காலத்துக் கதைகளைப் பகிர்ந்துகொண்டே வந்திருப்பார். இன்று, ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக நெற்றி சுருங்கியிருந்தது. சஹானா திரும்பித் திரும்பிப் பார்த்தும் அவரின் மோனம் கலையவில்லை என்றதும், “என்னப்பா யோசிக்கிறீங்க? என்னட்ட ஏதாவது சொல்லோணுமா?” என்று இதமாக விசாரித்தாள்.
“ம்ம்.. சொல்லோணும் தான். அப்பா சொன்னா கேப்பியாம்மா?” மெல்லிய தயக்கத்துடன் வினவினார்.
அவள் சிரித்தாள். “இந்தக் கேள்வியே பிழை! என்ர அப்பாக்காக நான் என்னவும் செய்வன். அது அவருக்கும் தெரியும்.”
“என்னவும் செய்வியாம்மா?”
“செய்வன்.” முகத்திலிருந்த சிரிப்புக் கொஞ்சமும் குறையாமல் சொன்னாள்.
“சஞ்சயனையே கட்டு எண்டு சொன்னாலுமா?”
அவளின் சிரிப்பு மறைந்தது. அவரின் முகத்தில் பதட்டம். அவளுக்கு விருப்பம் இல்லாததைச் செய்யச் சொல்கிறோமே என்று நெஞ்சு பரிதவித்தது. அவளைப் பார்க்க முடியாமல் அவர் விழிகளை அகற்றப்போன அந்த நொடியில், “கட்டுறன் அப்பா!” என்றாள் அவரின் பெண். விலகப்போன விழிகள் விலகாமல் நின்றது. முகம் பூவாக மலர்ந்தது. கூடவே விழியோரம் மெலிதாகக் கசிய, “அப்பாவுக்காகவா செல்லம்?” என்றார்.
“எனக்காகவும் தான் அப்பா. என்ர அப்பாக்கு என்ர சந்தோசம் மட்டும் தான் முக்கியம் எண்டு எனக்குத் தெரியும். அவர் ஒரு விசயத்தை அதுவும் நான் விருப்பமில்லை எண்டு சொன்னதையே செய்யச் சொல்லிச் சொல்லுறார் எண்டா நிச்சயமா அதுக்குக் காரணம் இருக்கும். அதுல நான் நல்லாருப்பன் எண்டுற நம்பிக்கை இருக்கும்.” என்று விளக்கிவிட்டுப் புன்னகைத்தாள் மகள்.
நெகிழ்ந்துபோனார் பிரதாபன். “செல்லம்மா அது..” என்று விளக்கம் சொல்ல வந்தவரைச் சொல்ல விடவில்லை அவள்.
“நான் அவரைக் கட்டினா நீங்க சந்தோசப்படுவீங்களா?” அதுதான் முக்கியம் என்பதுபோல் கேட்டாள்.
அவரின் தலை ஆம் என்று ஆடியது. கூடவே, “நீயும் நல்லா இருப்பாய் செல்லம்.” என்றார்.
“அவ்வளவும் போதும். எனக்கு வேற எந்த விளக்கமும் வேண்டாம்.” என்று முடித்துக்கொன்டாள் அவள்.
மனம் நெகிழ மகளின் கையைப் பற்றியபடி சற்றுத் தூரம் நடந்தார். பின், தன்பாட்டுக்குப் பேசினார்.
“ரட்ணம் குடும்பத்துக்கு அவன் செய்தது பெரிய பிழைதான். ஆனாம்மா, அவன் ஏன் அதைச் செய்தவன் எண்டு யோசி. அதுக்கு அவன் மட்டும் தான் பொறுப்பாளியா எண்டும் யோசி. நீ உன்ர அப்பாக்காகக் கடல் தாண்டி வந்த மாதிரி அவன் தன்ர அம்மாவுக்காக அப்பிடி நடந்திருக்கிறான். அதுவும் என்னை வரவைக்க வேறு வழி கிடைக்கேல்ல எண்டுதான். அவனுக்காக வாதாடேல்ல நான். அதை மட்டும் வச்சு அவனை எடை போடாத எண்டுதான் சொல்லுறன். அப்பிடிப் பாத்தா நான் என்ர அம்மா அப்பாக்குச் செய்தது எவ்வளவு பெரிய பிழை சொல்லு?” என்றார்.
அப்படியெல்லாம் இல்லை என்று கண்மூடித்தனமாக அவள் வாதாடப் போகவில்லை. தந்தையின் மீது உயிரையே வைத்திருந்தாலும் அவளின் மனது நியாயமானது. அப்பாவைக் கண்டநொடியில் அப்பம்மா கதறியபோதே தந்தையின் தவறின் அளவை உணர்ந்துகொண்டிருந்தாள்.
கையோடு சஞ்சயனோடும் பேசினார் பிரதாபன். “இல்ல மாமா. இது வேண்டாம்!” என்று நின்றான் அவன். அவன் வாழ்வில் இனியொரு பெண் இல்லை. அவனை மறுத்து அவனுக்குள் இன்னும் ஆழமாக ஊடுருவிப்போயிருந்தாள் அவள். இருந்தாலுமே, மறுத்தான்.