அவள் சூடாக இருக்கிறாளாம். துரை கண்டு பிடிச்சிட்டாராம். ‘போடா! உன்ர சூட்டுக்கு கேக் அடிச்சு வச்சா நல்லா வெந்து வரும்.’ என்று பார்வையைத் திருப்பிக்கொண்டாள் அவள்.
சிரட்டையைக் கொண்டு அமைக்கப்பட்ட அழகிய பவுல் போன்ற கோப்பையில் வழுக்களும் ஐஸ் கட்டியும் போடப்பட்ட இளநீரை வாங்கி அவளிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு தான் ஒன்றைப் பருகினான் அவன்.
அவன் பார்வை தன்னில் இருப்பதை உணர்ந்தாள் சஹானா. திருமணத்தைப் பற்றிப் பேசுவானோ? கேட்டால் என்ன சொல்வது? அப்படி அவர்கள் இருவரும் அதைப்பற்றிப் பேசுவதே அவளுக்குப் பிடிக்கவில்லை. இதற்குள் அவள் நெட் கார்ட் போட்டதில் நித்திலன் மெசேஜ் செய்தவை வந்து விழுந்துகொண்டு இருந்தது. அவனைத் தவிர்க்க நல்ல வாய்ப்பாக எண்ணி, மேசையில் இருந்த ஃபோனை ஒற்றைக்கையால் பற்றிப் பதில் அனுப்பியவாறே இளநீரைப் பருகத் தொடங்கினாள்.
அது வசதியாகிவிட அவன் பார்வை அவள் மீதே படிந்து இருந்தது. இது வரைக்கும் அவளுக்கு என்னை பிடிக்கவில்லையாம் என்று கோபப்பட்டு, கவலைப்பட்டு, வருந்தி இருக்கிறானே தவிர எந்த இடத்திலும் எனக்கு அவளைப் பிடித்திருக்கிறதா என்று யோசித்ததே இல்லை. அதற்கு அவகாசமே தராமல் அவனைத் தன் அடிமையாக்கி இருந்தாள் அவள். இதெல்லாம் அவனை பொருட்டே கொள்ளால் எதிரில் நிற்கிறவளுக்குத் தெரியுமா என்ன?
இப்படி, தன் மனம் அவளின் காலடியில் கிடக்கிறது என்கிற நினைவே மனதெங்கும் ஒருவித உல்லாசத்தைப் பரப்பிவிட உதட்டு முறுவலை அடக்க முடியாமல் தன் காப்பினை மேலே இழுத்துவிட்டான்.
அங்கே, ஏதோ கோவிலுக்கு டிக்கட் விற்றுக்கொண்டு வந்தான் ஒரு பெடியன். இவனைக் கண்டுவிட்டு, “சஞ்சயன் அண்ணா. கோயில் டிக்கெட் ஒண்டு எடுங்கோவன்.” என்றான் உரிமையோடு.
“எவ்வளவடா?”
“குறைஞ்ச தொகை அம்பது ரூபா. நீங்க எவ்வளவும் எழுதலாம்.”
“சரி, ஒரு ஐநூறு போடு!” என்றவன் சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தான். போனை பாக்கெட்டில் சொருகிவிட்டு இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி நின்றாள் சஹானா.
அந்தப் பெடியன், விறுவிறு என்று சஞ்சயனின் முழுப்பெயர் விலாசம் எல்லாம் எழுதி டிக்கட்டினைக் கிழித்துக் கொடுத்தான். அப்படியே, “அக்கான்ர பெயரிலையும் ஒண்டு எடுங்கோவன் அண்ணா.” என்றான் ஆவலோடு.
அவன் தன்னிடம் இரண்டு டிக்கட்டுகளை விற்கத் திட்டம் போடுவதை உணர்ந்து, “நீ வலு(மிகுந்த) கெட்டிக்காரனடா!” என்று சிரித்துவிட்டு, “சரி அவளுக்கும் ஒரு ஐநூறு போடு!” என்றான்.
“அக்கான்ர பெயர்?” அவன் டிக்கட்டில் எழுத ஆயத்தமாகிக்கொண்டு அவளைப் பார்த்தான். “சஹானா சஞ்சயன்” என்றான் சஞ்சயன். கேட்டிருந்த இருவரில் யார் அதிகமாக அதிர்ந்தார் என்று கணிக்க முடியாதபடிக்கு இருவருமே அவனைத்தான் விழித்துப் பார்த்தனர்.
“என்னை என்னத்துக்குப் பாக்கிறாய்? எழுது!” அவர்களின் அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாதவன் போன்று பெடியனை அதட்டினான் அவன்.
அவனோ, அவளின் முழுப்பெயரை எழுதி சஞ்சயனின் விலாசத்தையே போட்டு டிக்கட்டை கிழித்துக் கொடுத்துவிட்டு, “கோயில் திருவிழா முடியிற வரைக்கும் டிக்கட்டை துளைச்சுப்போடாதீங்கோ அண்ணா. குலுக்கள் பரிசு நிறைய இருக்கு. முதலாவது பரிசு கார்.” என்றான்.
“விழுமா?” இலேசாகச் சிரித்தபடி கேட்டான் சஞ்சயன்.
“விழும் ஆனா விழாது!” என்றுவிட்டு அகன்றான் அவன்.
வண்டியை எடுத்தான் சஞ்சயன். அவள் ஏறப்போக, “அதென்ன அவ்வளவு அதிர்ச்சி?” என்றான் அவளிடம். அந்தப் பெடியன் அதிர்ந்ததிலாவது ஒரு அர்த்தம் இருக்கிறது. இவளுக்கு என்ன அதிர்ச்சி? இவள் சம்மதம் சொல்லித்தானே அங்கே கல்யாண வேலையெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது!
அப்போதும் அந்த அதிர்விலிருந்து நீங்காமல் பார்த்தாள் அவள். அது இன்னுமே சினமூட்டியது. “நீ சஹானா சஞ்சயன் தான்! விளங்கிச்சோ! ஏறு!” என்றான் கோபத்துடன்.
அவளின் மனதை அறிவதற்காகச் சும்மாதான் போட்டுப்பார்த்தான். அவள் அதிர்ந்த விதமே, தன்னோடான திருமணம் இன்னுமே அவள் மனதுக்குள் சென்று சேரவில்லை என்று தெரிந்துபோனதில் அவனுக்குள் அனல் அடிக்கத் தொடங்கிற்று!
அவள் ஒன்றும் சொல்லாமல் ஏறிக்கொள்ள அதற்கும் கோபம் வந்தது. ‘சும்மாவாவது தலையாட்டுறாளா பார். பூனைக்குட்டி மாதிரி பம்மினாலும் விருப்பமில்லாததைச் செய்யவே மாட்டாள்!’
“தோளை பிடி!” என்றான்.
அவள் கம்பியில் பிடித்திருக்க, “தோள பிடி சஹி!” என்றான் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அழுத்தி.
சொன்னதைச் செய் என்ற அந்தத் தொணி அவளைச் செய்ய வைத்தது. அவனுக்குள் புகைந்துகொண்டிருந்த காரணமில்லா கோபம் அவளின் விரல்கள் பட்டுத் தணிந்தது.
வீட்டு முற்றத்தில் கொண்டுவந்து இறக்கினான். விட்டால் போதும் என்று இறங்கி ஓடினாள் சஹானா.
‘ப்ச்! இந்தக் கோவத்தை வச்சுக்கொண்டு நான் படுறபாடு!’ சினத்துடன் காப்பை இழுத்துவிட்டான். அவசரமாக, “சஹி!” என்று அழைத்தான். வீட்டு வாசலில் கால் வைத்துவிட்டவள் திரும்பிப் பார்க்க, இங்க வா என்று தலையசைத்தான். திரும்பி வந்தவளிடம், “இனி மேலே போடுற சட்டையைக் கொஞ்சம் நீட்டா போடு.” என்றான்.
இதை எதற்குச் சொல்கிறான் என்று பார்த்தாள் சஹானா. அவளைப் பாராமல், “நீ கையத் தூக்கேக்க இடுப்புத் தெரியுது!” என்றவனை முறைத்துவிட்டுப் போனாள் அவள்.
அறைக்குள் புகுந்துகொண்ட சஹானா நித்திலனுக்கு அழைக்கவில்லை. அந்த ‘சஹானா சஞ்சயனே’ காதுக்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தது. கட்டிலில் விழுந்தவளுக்கு, மேலேறிய சட்டையும் அதற்கு அவன் சொன்னதும் நினைவு வர சிரிப்பும் சேர்ந்தே வந்தது.