திருமணத்துக்கு ஒரு நாள் இருக்கையில் ரட்ணம் குடும்பமும் வந்து இறங்கினர். அவர்களை அழைத்துக்கொண்டு தங்களின் வீட்டுக்கு வந்திருந்தார் பிரதாபன். நடந்த தவறுகளுக்கு தெய்வானை அம்மா முறையாக மன்னிப்பைக் கேட்க, “அதெல்லாம் வேண்டாம் அம்மா. எங்கட சஹி வாழப்போற வீடு. அவள் சந்தோசமா இருந்தா போதும்!” என்று தடுத்தார் ரட்ணம்.
“இல்லையப்பு. நீயும் எனக்கு மகன் மாதிரித்தான். நான் சொல்லுறதை ஒரு நிமிசம் கேளு!” என்றவரின் பேச்சை அதற்குமேல் தடுக்க முடியவில்லை.
“சொல்லுங்கோ அம்மா.”
“அவன் செய்தது சரியான பிழை அப்பு. அப்பிடி நடந்து இருக்கவே கூடாது. என்னட்ட அதுக்கான எந்த நியாயமான விளக்கமும் இல்ல. அதால நான் உன்னட்ட மன்னிப்பு கேக்கிறன். அவனையும் எங்களையும் மன்னிச்சுக்கொள்ளு தம்பி!” என்று அவர் சொன்னபோது ரட்ணமும் நிவேதாவும் கண்கள் கலங்கிப் போயினர்.
“ஐயோ அம்மா. என்ன பேச்சு இது? மகன் மாதிரி எண்டு சொல்லிப்போட்டு என்னட்ட நீங்க மன்னிப்பு கேக்கிறதா? தயவுசெய்து இப்பிடியெல்லாம் கதைக்காதீங்கோ!” என்று தெய்வானையின் கையைப் பற்றிக்கொண்டார் ரட்ணம்.
தன்னுடைய கோபமும் ஆத்திரமும் அம்மம்மாவை எந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது என்று முகம் கருத்துப்போனான் சஞ்சயன். அவனும் அவர்களிடம் முறையாக மன்னிப்பை வேண்டினான்.
“தம்பி விடுங்கோ! அண்டைக்கு உங்கட மனநிலை என்ன எண்டு எனக்கு விளங்குது. செய்தது பிழை எண்டு உணர்ந்திட்டீங்க தானே. அந்தளவும் போதும். முடிஞ்சதை கதைக்கிறத விட்டுட்டு காலியாண வேலைகளை பாப்பம் வாங்க.” என்று பேச்சின் திசையையே மாற்றிவிட்டார் ரட்ணம்.
ஒருவழியாகச் சஞ்சயன் சஹானா திருமணம் நல்லபடியாக முடிந்தது. நித்திலன் மட்டும் வரவில்லை. ‘நீங்களும் மாமாவும் இல்லாம தொழிலை யார் பாக்கிறது?’ என்று சொல்லியிருந்தாலும் உண்மைக் காரணம் அதுவல்ல என்று சஹானாவுக்குத் தெரியும்.
அவள் இந்தத் திருமணத்துக்குச் சம்மதித்துவிட்ட கோபம். சஞ்சயனைக் கட்டாதே, அவன் முரடன், கோபக்காரன், உனக்குப் பொருத்தமில்லை என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை என்கிற ஆத்திரம்.
தாலியைக் கட்டியபிறகுதான் சஞ்சயன் ஆசுவாசமானான். அதுவரையில் அவன் அவனாக இல்லை. ஏதோ ஒரு பதட்டம். அவளோடான திருமணத்தைத் தன் மனது எந்தளவு தூரத்துக்கு எதிர்பார்த்திருக்கிறது என்பதை அந்த நொடியில் உணர்ந்தான்.
ஒருவழியாக இரவும் வந்தது. அவனுடைய அறைக்குள் நிலவும் வந்தது. தயக்கம் இல்லை; தலை குனிந்திருக்கவில்லை. கையில் பாலும் இல்லை. கட்டிலுக்குப் பக்கத்தில் பழமும் இல்லை. ஒரு பைஜாமா செட்டில் வந்து, “நானும் உங்கட பெட்ல படுக்கலாமா?” என்றாள் நேராக.
அதில் வந்த சிரிப்பை அடக்கப் பெரும் பிரயத்தனப் பட்டான் சஞ்சயன். “தாராளமா!” என்றான் தாராளமாக. குளித்திருந்தாலும் திருமணத்தின் சோபை முற்றிலும் நீங்கியிருக்காத முகம் மிகவுமே ஈர்த்தது. கண்கள் அவளிடமே ஓடியது. என்ன செய்கிறாள் என்று கவனிக்காததுபோல் கவனித்தான்.
கட்டிலில் அமர்ந்து தலையணையின் கீழ் கையோடு கொண்டுவந்த டார்ச் லைட்டை வைத்தாள்.
“அது என்னத்துக்கு?”
“இரவில பாத்ரூம் போகவேண்டி வந்தா.”
அந்தக்காலத்து வீடு. பாத்ரூம் வெளியில் தான் இருந்தது.
“தனியா போகாத. என்ன எழுப்பு.” என்றான் அவன். அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துக்கொண்டாள். பைஜாமா பொக்கெட்டில் இருந்து ஃபோனை எடுத்து, பார்க்கத் தொடங்கினாள்.
பயம், பதட்டம், நடுக்கம் எதுவுமே இல்லை. இயல்பாக இருந்து அவனை ஈர்த்துக்கொண்டிருந்தாள். பேச்சுக் கொடுக்க ஆவல் எழுந்தது. ஆனால் என்ன பேச?
தானும் சென்று தன் பக்கத்தில் சரிந்துகொண்டான். அவள் ஃபோனிலேயே கவனமாக இருந்தாள். வைத்துவிட்டுப் பேசாமல் தூங்கு என்று வாய் அதட்டப் பார்த்தது. ஆனாலும் பேசாமல் இருந்தான். பத்து நிமிடங்கள் கடந்தும் அவள் வைப்பதாக இல்லை என்றதும், “வச்சிட்டு படு சஹி!” என்று அவனுடைய வாய் அதட்டியே விட்டிருந்தது.
படக்கென்று நின்றுவிட்ட அவளின் விரல்கள் கடைசியாக என்னவோ அனுப்பிமுடித்தது. அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
எப்படியும் அவளுக்கு இந்த இருட்டுப் பயத்தைக் கொடுக்கும் என்று உணர்ந்து இரவு விளக்கை மட்டும் போட்டுவிட்டான் சஞ்சயன்.
தினமும் இதுதான் நடந்துகொண்டிருந்தது. உறங்குவதற்கு மட்டுமே அந்த அறைக்கு வந்துபோனாள் சஹானா. அதுவும் பெரியவர்களின் ஏற்பாட்டினால் மாத்திரமே என்று புரிந்தது. பெரிதாக முதலே திட்டமிடாத திருமணம் என்பதில் அவனும் வழமையான வேலைகளோடு, ரகுவரமூர்த்தியை வைத்தியரிடம் காட்ட அலைந்துகொண்டிருந்தான். அவர் இப்போதெல்லாம் தெளிவாகவே கண்களைத் திறந்து பார்த்தார். பேச்சுச் சற்றே சிரமம் என்றாலும் ஆட்களை இனம் கண்டு தலையை அசைப்பது, சிரிப்பது என்று பெருமளவில் முன்னேற்றம் தான். அதுவும் பிரதாபன் என்றால் போதும் அவரின் விழிகள் வேறு எங்கும் அசையவே அசையாது.
பிரதாபனும் தினமும் தந்தையோடு அமர்ந்து பேசினார். மன்னிப்பை வேண்டினார். உணவூட்டி விட்டார். உடல் துடைத்து உடை மாற்றிவிட்டார். “நீயே ஏலாதவன் பேசாம இரு.” என்று அதட்டிய அன்னையின் பேச்சை கேட்கவில்லை. முடிந்தவரை தந்தைக்கு உதவி செய்து தன் குற்ற உணர்ச்சியை போக்கிக்கொள்ள முயன்றுகொண்டு இருந்தார். தன் பக்கத்து அன்றைய நிலையை எடுத்துரைத்தார். கண் கலங்கினார். மன்னிப்பை வேண்டினார். “வி…டு தம்..பி. என..க்கு தெரி…யும்..” என்று அவரை ஒற்றை வார்த்தையில் தேற்றினார் ரகுவரமூர்த்தி.
சஞ்சயனுக்கு வழமையான தோட்ட வேலைகள், கூட்டங்களில் உரையாற்றுவது, கூடவே தூய்மையான யாழ்ப்பாணப் பணி என்று வீட்டில் இருக்கவே நேரமில்லை. இதில் எங்கே சஹானாவுடன் நேரம் செலவழிப்பது. அவள் வேறு இவனைத் தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தாள்.
நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே சொல்லி நடந்த திருமணம் என்பதில் தூரத்து உறவினர்கள் கேள்விப்பட்டு வருவது, விருந்துகளுக்கு அழைப்பது என்று பகல்கள் இவர்களின் வசத்திலேயே இல்லை. இரவுகள் அவளின் அருகாமையை ரகசியமாகச் சுகிப்பதிலேயே கழிந்தது.