அவர்களின் உறவுநிலை என்ன என்று யாரும் விசாரிக்கவில்லை. விசாரிக்க யாதவி விடவில்லை. கவலையோடு பார்த்த தெய்வானையிடம், “அவள் அவளின்ர அப்பாட்ட மட்டும் தான் குழந்தையா செல்லம் கொஞ்சுவாள் மாமி. மற்ற ஆக்களிட்ட பொறுப்பா பொறுமையா நடக்கத் தெரியும். அதைவிட மாமி, தகப்பனுக்காகத்தான் ஓம் எண்டு சொல்லியிருக்கிறாள். அவளுக்கே பிடிக்கக் கொஞ்ச நாள் ஆகவேணும் தானே. அதுக்கிடையில நாங்க மூக்கை நுழைச்சா ஒருவித எரிச்சல் வரப்பாக்கும். அதுவே வெறுப்பை உண்டாக்கிப்போடும். ஏற்கனவே சொன்னதுதான். சஞ்சயனும் நல்ல பிள்ளை. சஹியும் அப்பிடித்தான். அவேன்ர வாழ்க்கை கட்டாயம் நல்லா இருக்கும். அதுக்கு நாங்க கொஞ்சம் பொறுமையா இருந்தா சரி. நீங்க கவலைப்பட்டு உடம்பை கெடுக்காதீங்கோ! மாமா சுகமாகி வாற நேரம் நீங்க தெம்பா இருக்க வேண்டாமா?” என்ற மருமகளைக் கண் நிறையப் பார்த்தார் தெய்வானை.
யாதவியின் உதட்டினில் முறுவல் அரும்பிற்று. “அடிக்கடி இப்பிடித்தான் பாக்கிறீங்க. என்ன விசயம்?” என்றார் நேரடியாக.
இந்தக் குணம் தான் சஹானாவுக்கும். கோபத்தைக் காட்டமாட்டாளே தவிரக் கேட்க நினைப்பதைக் கேட்டுவிடுவாள்.
“அருமையான பிள்ளையம்மா நீ. உன்னைப்போய்.. என்னென்னவோ சொல்லி தள்ளி வச்சிட்டனே.” என்றார் குரல் கரகரக்க.
யாதவிக்கும் பதில் சொல்வது சிரமமாகிற்று. “விடுங்கோ மாமி. அதுதான் இப்ப எல்லாரும் சேர்ந்திட்டோம் தானே.” என்றார் சமாதானமாக.
“ஆனா போன காலம் திரும்பி வராதே பிள்ளை.” இதற்கு என்ன சொல்வது? சற்று அமைதியாக இருந்துவிட்டு, “உண்மைதான் மாமி. அதுக்காகக் கையில இருக்கிற காலத்தையும் அதை நினைச்சு வீணாக்கக் கூடாது எல்லோ!” என்றார்.
உண்மைதான் என்று கேட்டுக்கொண்டாலும் மகனோடான மருமகளோடான பேத்தியோடான எத்தனை வருடங்களை இழந்துவிட்டார் தெய்வானை. இன்னும் எத்தனை நாட்கள் அவர்களோடு வாழ்வதற்கு அவருக்கு விதித்திருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? அவர்களைப் பார்க்காதபோது மெய்யான கோபத்துடனும் வீராப்புடனும் தான் இருந்தார். கண்முன்னால் வைத்துப் பார்க்கப் பார்க்கத்தான், அதுவும் பிரதாபன் ஒரு நெகிழ்வுடன் அந்த வீட்டையும் தோட்டங்களையும் ஊரையும் கோயில் குளங்களையும் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்க்கையில் அவனையும் ஏங்க வைத்து நானும் தனித்திருந்து என்ன கண்டேன் என்று தனக்குள்ளேயே எண்ணியெண்ணி வருந்தினார் தெய்வானை ஆச்சி.
அவரின் அருகில் வந்து அமர்ந்தார் பிரதாபன். “அம்மா உன்ர சந்தோசத்தையே பறிச்சுப்போட்டன் என்ன?” என்றார் தெய்வானை கண்கள் கலங்க.
ஒன்றும் சொல்லாமல் அன்னையின் முதிர்ந்து சுருங்கி இருந்த கரத்தைப் பற்றினார் பிரதாபன். “இவ்வளவு காலமும் இந்தக் கைக்குத் துணையா பாதுகாப்பா என்ர கை நிக்கவே இல்லையே அம்மா?” என்றவரின் உதட்டினில் மிக வருத்தமான முறுவல் ஒன்று பூத்தது.
“பிரதியால என்ர வாழ்க்கை துலைஞ்சு போயிடுமோ எண்டு பயந்த நான் உங்களையும் அப்பாவையும் யோசிக்க மறந்திட்டன். என்னைப் பெத்து வளத்து ஆளாக்கி நீங்க கண்டது என்ன அம்மா? மகன் யாரையோ கூட்டிக்கொண்டு ஓடிப்போய்ட்டானாம் எண்டுறதுதானே. அதுக்குப் பிறகும் இத்தனை வருசம் என்ர மகளுக்காக யோசிச்ச நான் உங்களைப்பற்றியோ அப்பாவைப் பற்றியோ யோசிக்க மறந்திட்டன் தானே. யோசிச்சு இருந்தா வந்திருப்பன். வந்திருந்தா இவ்வளவு காலம் போயிருக்காது. இந்தக் கையும் துணைக்கு ஆளில்லாம தவிச்சிருக்காது.” என்றவர் தன கண்களில் அன்னையின் கையை வைத்து ஒற்றினார். அவர் நிமிர்ந்தபோது இமையோரங்கள் நனைந்திருந்தது. “உங்களிட்ட மன்னிப்பு கேக்காம செத்திருவனோ எண்டு பயந்தே போயிட்டன் அம்மா.” என்றபோது, துடித்துப்போனார் தெய்வானை.
“விசர் கதை கதைக்காம பேசாம இரப்பு. அதெல்லாம் முடிஞ்சுபோன விசயம். நீயும் திரும்பி வந்திட்டாய். போதாத குறைக்கு அருமையான மருமகள். தங்க விக்கிரகம் மாதிரி பேத்தி இருக்கிறாள். இன்னும் எனக்கு என்ன வேணும் சொல்லு? கதைச்சது காணும் எழும்பு. எழும்பி அங்க தேங்காய் ஏத்துறாங்கள். என்ன எண்டு போய்ப் பார். உடையவன் பாக்காட்டி ஒரு முழம் கட்டை. போ போ போய்ப்பார்!” என்று விரட்டியபடி எழுந்தவர் நின்று, “முதல் நீ சாப்பிட்டு குளுசை(மாத்திரை) போட்டியோ? அம்மாடி யாதவி இவனுக்கு மருந்து எல்லாம் பாத்து குடுத்தனியாம்மா?” என்று கேட்டுக்கொண்டு வீட்டுக்குள் நடந்தார்.
மகன் வருந்துவது பிடிக்கவில்லை. அதைவிட இதையெல்லாம் திரும்பத் திரும்பக் கதைத்து அவனுக்கு ஏதும் வந்துவிடுமோ என்று வேறு பயந்தார். எல்லாவற்றையும் விடத் தன் மடியில் மழலை மாறாமல் விளையாடி வளர்ந்த மகன் தலையெல்லாம் நரைத்து நிற்கும் காலத்தில் குழந்தையாக மாறி அவரிடம் மன்னிப்பை வேண்டி நின்றதிலேயே அன்னையின் மனம் கரைந்து போயிற்று. எனவே அதற்குமேல் அதைப்பற்றிப் பேசவிடாமல் துரத்திவிட்டார்.
உடலிலும் உள்ளத்திலும் புது உற்சாகமும் சந்தோசமும் பொங்க, வாழைத்தோட்டத்துக்குள் நுழைந்து அங்கு வேலை பார்த்தவர்களை விரட்டியவரின் குரலில் என்றுமில்லாத தெம்பு!
பனை எழுச்சி வாரம் நடந்துகொண்டிருந்தது. அழிந்துவரும் பனைகளைக் காப்பதும், அதுபற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்துவதும் தான் அதன் நோக்கம். பனை வளம் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு அவை தோட்டக்காணிகளாகவும், இருப்பிடங்களாகவும் மாற்றப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு ஊரின் இயற்கை வளம் அழியுமாயின் மறைமுகமாக அவ்வூர் சார்ந்த சமூக வரலாறுகளும் பண்பாடுகளும் அழியும் என்பதைத் துண்டுப் பிரசுரம் மூலமும் மக்களுக்குத் தெரிவித்தனர். எளிய மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கைவினைப் பொருட்களை வாங்கி அவர்கள் வாழ்வதற்கும் வழிசெய்ய வரும்படி கண்காட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
கடைசி நாளான அன்று கண்காட்சிக்கு சஹானாவை அழைத்துச் சென்றான் சஞ்சயன். பரந்த வெளி ஒன்றில் வட்ட வடிவில் கொட்டகைகள் அமைத்து வாயிலில் வரவேற்பு வளையம் உயரமாக அமைக்கப்பட்டுப் பனை எழுச்சி வாரம் என்று எழுதப்பட்டு இருந்தது.
ஆட்கள் போவதும் வருவதுமாக இருந்தாலும் நிறைந்து வழியவில்லை. இடப்பக்கத் தொடக்கத்திலேயே அலுவலகம் போலிருந்த குடிலுக்குள் நுழைந்தபடி, “அஞ்சு நிமிச வேலைதான். முடிச்சுக்கொண்டு சுத்திக் காட்டுறன்.” என்றான் அவளிடம்.
“வைஃபா சஞ்சயன்?” இவர்களைச் சோடியாகக் கண்டதும் அங்கிருந்த எல்லோரும் ஆவலாக வந்து விசாரித்தனர். அவனுடைய நண்பன் கார்மேகன் இவளைக் கண்டதுமே கன்னத்தைப் பொத்திப் பிடித்துக்கொண்டான். அடக்கமாட்டாமல் சிரித்தாள் சஹானா.
“உமக்குச் சிரிப்பு? அண்டைக்கு அவன் அடிச்சது இன்னும் நோகுது எனக்கு!” என்றான் அவன் பொய்யாக முறைத்துக்கொண்டு. “ஆனா சஹி, அந்தத் துள்ளு துள்ளினவன நீர் எப்பிடி அடக்கி வச்சிருக்கிறீர் எண்டுதான் எனக்கு விளங்கேல்ல!”