“சும்மா வா போ எண்டே கதைங்கோ அண்ணா.” என்றுவிட்டு, “அண்டைக்கு அங்க என்னை வரச்சொல்லி சொன்னதே நீங்க தானே. இப்ப என்ன ஒண்டுமே தெரியாத ஆள் மாதிரி கதைக்கிறீங்க?” என்று, கண்களில் குறும்பு கொப்பளித்தாலும் மெய் போன்று சிரிக்காமல் சொன்னாள் சஹானா.
இருக்குமோ? சந்தேகத்துடன் சஞ்சயன் அவனைக் கூர்ந்து பார்க்க அரண்டுபோனான் அவன்.
“டேய்! இவள் உன்னை வெண்டவளா(வென்றவளாக) இருக்கிறாளடா! நான் மெசேஜ் குடுக்கவே இல்ல மச்சி!” என்றவனின் அலறலில் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கியிருந்தாள் சஹானா.
சஞ்சயனின் விழிகள் ஆசையோடு அவளிடம் படிந்தது. புது அழகில் தெரிந்தாள் அவனின் புத்தம் புது மனைவி.
“இவனுக்கு நீதானம்மா சரி! மனுசர ஒரு வேலை பாக்க விடாம கதைச்சே கொல்லுவான். இந்தா தோடம்பழ தண்ணி குடி!” கார்மேகனைக் கடிந்தபடி கொண்டுவந்து கொடுத்தான் சமரன்.
“நன்றி அண்ணா!” என்று பெற்றுக்கொண்டவளிடம், “இவ்வளவு நாளும் கல்யாணமே வேண்டாம் எண்டு இருந்தானம்மா. இப்பதான் மாட்டி இருக்கிறான். ரெண்டுபேரும் அருமையான சோடிப்பொருத்தம்!” என்றவனின் வார்த்தைகளில் நிமிர்ந்தவளின் விழிகள் இளம் முறுவலோடு தன்னையே பார்த்திருந்தவனின் விழிகளோடு கலந்து, தடுமாறி பின் வேகமாக விலகியது.
‘என்ன இப்பிடி பாக்கிறான்..’ அவளுக்குள் புதுக் குழப்பம். அதன்பிறகு அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள் சஹானா. அவளைக் கண்டுகொண்ட சஞ்சயன் தனக்குள் சிரித்துக்கொண்டான். தன் பார்வை அவளைத் தடுமாற வைப்பதில் மனதில் உல்லாசம் பொங்கிற்று.
ஒரு நாற்காலியை எடுத்து அவளுக்குப் போட்டான். “இதுல இருந்து குடி. இப்ப வாறன்!” என்றுவிட்டு உள்ளே சென்றவன், என்னவோ கணக்கு வழக்குகள் பார்ப்பது தெரிந்தது. கண்காட்சி பற்றிய அறிக்கை தயார் செய்வது குறித்தும் குறிப்புகள் கொடுத்துவிட்டு வந்தான்.
“டேய் மேகன், பின்னேரம் நானும் வருவன். பெடியலையும் வரச்சொல்லு. மிஞ்சி இருக்கிற எல்லாப் பொருளையும் கடைகளுக்கே போட்டுவிடுவம்.” என்றுவிட்டு வெளியே வந்தவன் ஒவ்வொரு கொட்டில்களாகக் கூட்டிக்கொண்டுபோய்க் காட்டினான்.
பனையோலையால் அமைக்கப்பட்ட குட்டிக் குட்டி கொட்டகைகள். அங்கே, நீத்துப்பெட்டிகள், காற்றாடிகள், குட்டிக் குட்டி வேலிகள், அந்தக்காலத்து மக்களின் வாழ்க்கை வடிவங்களைக் கூடப் பனை ஓலைகளைக் கொண்டு உருவங்களாக வடித்திருந்தனர். கோப்பைகள், தட்டுகள், இரவு விளக்குகள், பென்சில் பேனை தாங்கிகள், திறப்புக் கொலுவிகள் என்று பலதும் இருந்தது. கலைநயம் மிகுந்து அழகுடன் கண்களையும் மனதையும் பறித்தது. வீட்டு அலங்காரப் பொருட்கள், பலகாரங்கள் பரிமாறும் தட்டுகள் என்று நிறைய. சஹானாவுக்கு இவையெல்லாம் மிகுந்த ஆச்சரியத்தையும் சந்தோசத்தையும் கொடுத்தது. அத்தனையையும் வாங்க வேண்டும் போலிருக்க, பெரிதாக ஆட்கள் இல்லாத கண்காட்சி கண்ணை உறுத்த, “இதையெல்லாம் ஆக்கள் வாங்குவீனமா?” என்று மற்றவர்களுக்குக் கேட்காத குரலில் அவனிடம் வினவினாள்.
அவன் முகம் மெலிதாக வாடியது. “இல்ல. உண்மையைச் சொல்லப்போனா எங்கட ஆக்கள் திரும்பியே பாக்கிறேல்ல. இதை அழிய விடக்கூடாது எண்டு நினைக்கிற கொஞ்ச சனம்தான் வாங்குறது. ஆனா, கணவன் இல்லாத நிறையப் பெண்களுக்கு இதுதான் கைத்தொழில்.” என்றான், மனத்தைக் காட்டாத குரலில்.
“கவலைப்படாதீங்கோ. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறும்.” அவளுக்கும் அந்த நிலை மாறவேண்டும் என்று விருப்பம் இருந்ததில் மனதாரச் சொன்னாள்.
அவளின் மெய்யான பற்று அவனையும் தேற்றியது. “ம்.. மாறிக்கொண்டுதான் இருக்கு. முதல் வருசங்களோட ஒப்பிடேக்க இந்த வருசம் விற்பனை பரவாயில்ல. சனமும் ரெண்டு மடங்கு வந்தது.”
பனை ஓலையில் பின்னிய கூடைகள், தொப்பிகள் கிடந்த கடையில் அவளுக்கு ஒரு தொப்பி வாங்கிக் கொடுத்தான்.
“போடு! வெயில் படாது! வந்ததுக்கு நல்லா கறுத்திட்டாய்.” அவளும் மறுக்காமல் வாங்கி அணிந்துகொண்டாள்.
அவன் வாங்கிக்கொடுத்து அவள் அணிந்துகொண்டு, “நல்லாருக்கா?” என்று கேட்டதும், அவனும் அவளை ரசித்துப் பார்த்து நல்லாருக்கு என்பதாகத் தலை அசைத்ததும் அவனுக்குள் ஒரு இதம் சேர்த்தது.
அங்கிருந்த அம்மாவிடம் இரண்டு நார்களை வாங்கி அவரிடம் ஓலை பின்ன பழகி அந்த அரையும் குறையுமாக நின்ற நாரை கையிலேயே அவள் கொண்டு திரிந்தது சிரிப்பை வரவழைத்தது.
கிளியின் வடிவில் தொங்கிய திறப்பு கொழுவுகிற கோர்வைகள் இரண்டை எடுத்து, “இத வாங்கித் தாறீங்களா? எனக்கும் நித்திக்கும்” என்று கேட்டதுகூட அவனுக்குப் பிடித்திருந்தது. கூடவே, இது என்ன அது என்ன என்று இயல்பாக அவள் அவனுடைய தோளை உரசும் அண்மையில் நின்று விசாரித்தது மெல்லிய கூச்சத்தைப் பரப்பியது.
அங்கிருப்பவர்கள் எல்லோருமே பெரும்பாலும் தெரிந்தவர்கள். இந்தத் துறையில் சற்றே பெரிய பொறுப்பில் இருப்பவர்களும் கூட. அவர்களின் பார்வையில் பட்டால் அழகில்லையே என்று அவன் இடைவெளி விட்டு நிற்க, அதை அறியாமல் அவள் அவனை நெருங்கி நெருங்கி நிற்க தடுமாறிப்போனான் சஞ்சயன்.
அவனின் திணறலை உணர்ந்துகொண்டவராகக் கடைக்கார அம்மா பார்த்துச் சிரிக்கவும் அவனுக்குக் கூச்சமாகப் போயிற்று. சிரிப்புடன் பார்வையை அகற்றிக்கொண்டு கைக்காப்பினை இழுத்துவிட்டான்.
“வெளிநாட்டுல வளந்த பிள்ளையோ?”
“ம்.. ஹொலண்ட்!” இளம் முறுவலோடு பதிலிறுத்தான் அவன்.
பொருட்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவள் ஏன் கேட்டார் என்று வியப்புடன் பார்க்க, “அதுதான்! அச்சு வெள்ளைக்கார பொம்மை மாதிரியே இருக்கிறா!” என்றவரின் வார்த்தைகளில் அவன் பார்வை அவளில் சற்று அதிகமாகப் படிந்து பின் அவசரமாக விலகியது.
அவள் அணிந்திருந்த சிவப்பும் கறுப்பும் கட்டம் போட்ட பின்பக்கம் நிலம் வரையிலும் முன்பக்கம் சற்று மேலேறி முழங்கால் வரையிலும் நிற்கும் சட்டை எப்போதும்போலக் கையில்லாமல் இருந்து அவளின் நிறத்தை அப்படியே தூக்கிக் காட்டியது. விரித்துவிட்ட கூந்தலும் மிகையற்ற முக அலங்காரமும் வெகுவாகப் பொருந்தி அணிந்திருந்த தொப்பியும் சேர்ந்து அவன் கண்களுக்கு மிகுந்த அழகியாகத் தெரிந்தாள் சஹானா.
இது எதுவும் அறியாதவள் எல்லாவற்றையும் ஆசையாகப் பார்த்து முடித்தாள். எல்லாக் கொட்டகைகளையும் சுற்றியதும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான் சஞ்சயன்.