வீடு வந்தவளைப் பிடித்துக்கொண்டாள் சஞ்சனா.
“எனக்கு எங்க தொப்பி?”
அப்போதுதான் அவளுக்கும் ஒன்று வாங்கவில்லையே என்று புத்தியில் பட்டது சஹானாவுக்கு.
“இது உன்ர அண்ணாதான் வாங்கித் தந்தவர்.”
“அதென்ன என்ர அண்ணா? உன்ர மனுசன் எண்டு சொல்லு! பாத்தியா அகில் அண்ணா. ஒரு கல்யாணம் முடிஞ்சதும் எப்பிடி கஞ்சப் பிசுநாரியா மாறிட்டாள் எண்டு. இருநூறு ரூபா வருமாடி இந்தத் தொப்பி. அதைக்கூட உனக்கு வாங்கித்தர மனசில்லை! நீயெல்லாம் எனக்கு அண்ணி.” அவளை விடுவதாக இல்லை அவள்.
“ஐயோ மச்சி! எனக்கு உன்ன நினைவு வரேல்ல!” தெரியாமல் வாயை விட்டு அதற்கும் வாங்கிக் கட்டிக்கொண்டாள்.
இதில் அகிலன் வேறு, அவளின் கையில் கிடந்த கீ செயின்களைப் பார்த்துவிட்டு, “பார்பார்! தனக்கும் தன்ர நண்பனுக்கும் மட்டும் வாங்கி இருக்கிறாள். என்னை யோசிக்கவே இல்ல தானே. நீங்க எப்ப இருந்து அண்ணா இந்தளவுக்கு மோசமான ஆளா மாறினீங்க? இவளை கட்டின பிறகா?” என்று சஞ்சயனையும் வம்புக்கு இழுத்தான்.
‘அடேய்! அவள் எனக்கும் வாங்கித் தரேல்லயடா’ அதை வெளியில் சொல்லாமல் அவர்களிடம் மாட்டிக்கொண்டு அவள் படுகிற பாட்டை ரசித்திருந்தான் அவன். கூடவே தங்கை அவளை அவனின் மனுசி என்று குறிப்பிட்டது வேறு இனித்துக்கொண்டு இறங்கிற்று!
“ஒரு தொப்பிக்கே இந்தப்பாடு. நாளைக்கு இவள் எல்லாம் ஒரு குண்டுமணி தங்கம் வாங்கித் தருவாள் எண்டு நினைக்கிறியா அகில் அண்ணா? இனி என்ர அண்ணா எனக்கு இல்ல.. ஐயோ கடவுளே..” பொய்யாக மூக்கை உறுஞ்சியவளை அதற்குமேல் பொறுக்க முடியாமல், “அடியேய் மச்சி! இனி ஏதாவது சொன்னியோ குரல்வளையைக் கடிப்பன் சொல்லிப்போட்டன்!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுக் கோபத்துடன் சஞ்சயனிடம் வந்தாள். “ஒரு ஆயிரம் ரூபா தாங்கோ, இந்த ரெண்டு மாட்டுக்கும் குடுக்க.” என்றாள்.
தன்னிடமா கேட்கிறாள். விழிகள் வியப்பில் விரிந்தாலும் உள்ளே மனம் துள்ள பர்ஸை எடுத்துக் கொடுத்தான் அவன்.
அதிலிருந்து பணத்தை எடுத்துவிட்டு பர்ஸை அவனிடமே திருப்பிக் கொடுத்தாள். சஞ்சனாவின் கையில் அதைப் பொத்தி, “போய் வாங்கு போ! அப்பிடியே அவனுக்கும் வாங்கிக் குடு!” என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு.
அதற்குப் பிறகுதான் அடங்கினாள் சஞ்சனா. சிரிப்புடன் அங்கிருந்து எழுந்து போனான் சஞ்சயன்.
‘அப்பிடியே கடிச்சு சாப்பிட வேணும் மாதிரி நல்ல வடிவா இருக்கிறாள்!’ தன் மனம் தன் இணையை நோக்கி எந்தப் பாதையில் பயணிக்கிறது என்று உணர்ந்தவனுக்கு உதட்டில் பூத்துவிட்ட உல்லாசச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
இங்கே கிடைத்த ஆயிரம் ரூபாவில் பெரிய மிக்ஸர் பாக்கெட்டும் வனிலா ஐஸ் கிறீமும் வாங்கி மூவருமாகக் கொட்டமடித்தனர். அப்போதுதான் முகப்புத்தகத்தில் சஞ்சயன் பதிவேற்றியிருந்த ஒரு வீடியோவைக் காட்டினான் அகிலன்.
அன்று நடந்த வானொலி திறப்பு விழா. “வந்தாரை வாழவைக்கும் வன்னிப் பூமியிலிருந்து பேசுகிற நான் சாவகச்சேரி சஞ்சயன்” என்று ஆரம்பித்திருந்தான் அவன். புதிதாக ஆரம்பிக்கிற நண்பனை வாழ்த்திவிட்டு வானொலிகள் தூய தமிழைப் பேச மறுக்கிறார்கள், ஆங்கில மோகத்தில் அலைக்கழிகிறார்கள், உச்சரிப்பு சுத்தமாகவே இல்லை என்று அங்கும் மிகக் கடுமையாக மற்ற வானொலிகளைச் சாடி இருந்தான் அவன்.
கேட்டிருந்த சஹானாவுக்கோ பெரும் சிரிப்பு.
“இவரை யாருமே அடிக்கேல்லையா? எங்க போனாலும் குற்றமும் குறையும் தான் சொல்லுறார்”
“அவரை அடிக்க யாரால ஏலும் எண்டு நினைக்கிறாய். மண்வெட்டி பிடிக்கிற கை. வாறவன் தாங்கமாட்டான்.” சஞ்சனா சொன்னது என்னவோ உண்மைதான். அவளின் கை அதுபாட்டுக்கு கழுத்தைத் தடவியது.
அங்கே சஞ்சயன் நெருப்புப் பறக்கப் பேசிக்கொண்டிருந்தான். அங்கிருப்பவன் சோழத்தமிழன் இங்கிருப்பவன் ஈழத்தமிழன் என்றான். மீன்பாடும் தேன் நாடாம் மட்டு நகர் தமிழுக்கு ஒரு சிறப்பு, வந்தாரை வாழவைக்கும் வன்னித் தமிழுக்கு ஒரு சிறப்பு, யாழ் குடா நாட்டுத் தமிழுக்கு ஒரு சிறப்பு, மலையகத் தமிழுக்கு ஒரு சிறப்பு என்று நிறையச் சொன்னான்.
“தமிழின் குழந்தைகள் எல்லோருமே அன்னைக்குப் பெருமை சேர்க்க வேண்டுமே தவிர, சிறுமை சேர்க்கக் கூடாது. நண்பன் என் நம்பிக்கையைக் காப்பாற்றுவான் என்று நம்புகிறேன்.” என்று இவன் முடித்தபோது பார்த்திருந்தவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“அடப்பாவி ஏன்டா வானொலி ஆரம்பிச்சாய்? போயும் போயும் எதுக்கடா இவரைக் கூப்பிட்டாய். இனி நீ ரேடியோ நடத்தின மாதிரித்தான்.” என்று சொல்லிச் சிரித்தவளை அடிக்கத் துரத்தினாள் சஞ்சனா.
“உனக்கு என்ர அண்ணா எண்டா ஆக நக்கலும் நையாண்டியும்!”
வீட்டையே சுற்றிச்சுற்றி ஓடியவள் குளித்துவிட்டு வந்த சஞ்சயனிடம் ஓடிவந்து, “என்னைக் காப்பாத்துங்கோ! மச்சி அடிக்க வாறாள்!” என்று அவனின் பின்னால் ஒளிந்துகொண்டாள்.
“அண்ணா! அவள் உங்களைப்பற்றி என்ன சொன்னவள் எண்டு தெரியாம காப்பாத்தாதீங்கோ!” என்று எச்சரித்தவளிடம், “விடு. விளையாட்டுக்கு எதையாவது கதைச்சிருப்பாள்!” என்று தடுத்தான் அவன்.
என்னவோ இன்றைய மனநிலையில் அவனைப்பற்றி அவள் என்ன சொல்லியிருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றியது அவனுக்கு.
“இல்லை! இண்டைக்கு அவளுக்கு ரெண்டு குடுக்காம விடமாட்டன்!” என்றவளிடம் இருந்து தன்னவளைக் காப்பாற்றுவதற்குள் பெரும் பாடுபட்டுப்போனான் அவன்.
கடைசியில் தமயனைத் தாண்டிப் போகமுடியாமல், “மாட்டடி மகளே உனக்கு இருக்கு!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போனாள் சஞ்சனா.
சிறு சிரிப்புடன் திரும்பினால் அவள் இருந்த சுவடே இல்லை. அந்தப் பக்கத்தால் ஓடிப்போயிருந்தாள். இலேசாகச் சிரித்துக்கொண்டான் அவன்.
வெளியே செல்லத் தயாராகிக் கண்ணாடி முன் நின்றவனுக்கு, தான் அவளுக்குப் பொருத்தமா என்கிற பெரும் சந்தேகம் எழுந்தது. நல்ல உயரத்தில் அதற்கேற்ற திடகாத்திரமான உடலுடன் இருந்தாலுமே அந்த நாட்டின் வெயிலைப் பறைசாற்றும் கருமை நிறம்தான் கண்ணைக் குத்தியது.
‘இனி வெயிலுக்கத் திரியக்கூடாது. திரிஞ்சாலும் தொப்பி போடோணும்.’ அப்படியே போன வருடம் கொளுத்தும் வெயிலில் நன்றாகவே கறுத்துப் போயிருந்தவனைக் கவனித்துவிட்டு சஞ்சனா வாங்கிக்கொடுத்த கிறீமை தேடி எடுத்து முகத்தில் பூசினான்.
‘சஞ்சு கண்டாளோ ஓட்டியே தள்ளுவாள்..’ என்று அவன் நினைத்து முடிக்க முதலே, “என்ன அண்ணா? மச்சி மாதிரி வெள்ளை ஆகலாம் எண்டு பாக்கிறீங்களோ?” என்று கேட்டுக்கொண்டு வந்தாள் சஞ்சனா.
அவளை வால் பிடித்துக்கொண்டு வந்த சஹானா அவர்கள் இருவரையும் குறுகுறு என்று பார்த்தாள். அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, “உன்ர மச்சி மாதிரி தலைகீழா நிண்டாலும் மாறேலாது. கொஞ்சம் அவளின்ர நிறத்துக்குப் பொருந்துற மாதிரியாவது வரப்பாக்கிறன்.” என்றான் அவன்.
“பாத்தியா அண்ணி? இன்னும் கொஞ்ச நாள்ல அண்ணாவும் வெள்ளையா வந்திடுவான்.” அண்ணி என்றால் அடிக்க வருவாள் என்று தெரிந்தே சீண்டினாள் சஞ்சனா.
அந்தக் கடுப்பில், “உன்ர அண்ணா எல்லாம் வெள்ளை அடிச்சாலும் அதுக்கால தெரியிற கருப்பு. அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை!” என்றாள் அவள்.
“போடி! ஆகத்தான் என்ர அண்ணாவை குறை சொல்லுறாய்! உனக்குப் பிறக்கிற பிள்ளை எல்லாம் அட்டைக் கரியா பிறக்கோணும்!” என்று சாபம் கொடுத்துவிட்டுப் போனாள் அவள்.
“கருப்பா பிறக்கிறது எல்லாம் உனக்கு வெள்ளையா பிறக்கிறது மட்டும் தான் எனக்கு!” என்றபடி அவளுக்கு வால்பிடிக்கப் பார்த்தவளை சத்தமே இல்லாமல் அறைக்குள் கொண்டுவந்து கதவடைத்தான் சஞ்சயன்.
“அந்தக் கருப்பு விசயம்.. கஷ்டமா இருக்கா என்ன? பிடிக்கேல்லையா?” அவளின் கையில் தான் அணிவித்துவிட்ட திருமண மோதிரத்தைப் பிடித்துச் சுழற்றியபடி கேட்டான்.
நிறத்தைக் கேட்கிறானா அவனைக் கேட்கிறானா? அவன் மீதான பாசம் அவன் வெள்ளையா கருப்பா என்று பார்த்தோ, அழகனா அழகற்றவனா என்று தெரிந்தோ நல்லவனா கெட்டவனா என்று ஆராய்ந்தோ உண்டானதல்ல. அவளுடைய மச்சான் என்பதில் உண்டானது. அந்தப் பிரியம் நிறம் பார்க்குமா என்ன? வெறுப்பு.. ம்ஹூம்!
ஆனால், அவன் விட்ட வார்த்தைகள்? அதை நினைக்கையில் இதோ இப்போதும் அவளின் நெஞ்சு குலுங்கிற்றே! ரட்ணம் மாமா குடும்பத்துக்கு அவன் செய்தவைகள்? இதையெல்லாம் பிடித்துக்கொண்டு தொங்கவேண்டாம் என்று புத்திக்குப் புரிந்தாலும் மனது ஒட்டாமல் விலகியே நின்றது.