“பிடிக்கேல்ல எண்டு சொன்னா என்ன செய்வீங்க? விவாக ரத்து தருவீங்களா?” வேண்டுமென்றே கேட்டாள்.
பட்டென்று வாயிலேயே ஒன்று போட்டான் அவன்.
“அவுச்..” என்று அவள் தடவ, “என்ன வார்த்தை எல்லாம் வாயில வருது உனக்கு? மாமா மாதிரி இருக்கிற என்ன உனக்குப் பிடிக்காம போகாது. ஆனாலும் பிடிவாதம். ஆனா, எனக்கு அந்தப் பிடிவாதம் தானே பிடிச்சிருக்கு. மனதை காட்டிக்கொள்ளக் கூடாது எண்டு இந்த மெழுகு பொம்மை நடத்திற நாடகத்தை ரசிக்கத்தான் மனம் சொல்லுது.” என்றவனை விழிகள் விரியப் பார்த்தாள் அவள்.
இவனுக்கு என்ன ஆயிற்று? இப்படியெல்லாம் பேசமாட்டானே. இவனுடைய அகராதியில் இதெல்லாம் சாமிக்குத்தமாயிற்றே. அவளின் பாவனையில் பற்கள் தெரிய முறுவலித்தான் அவன்.
“உனக்கு இன்னொரு விசயம் தெரியுமா? இந்தக் காதல், கலியாணம் எல்லாம் வேண்டவே வேண்டாம் எண்டு இருந்தனான். ஆனா, எப்பிடி என்ன எண்டு தெரியேல்ல. உன்னட்ட இந்தக் கப்பல் கவுந்திட்டுது.” என்றான் சிரித்துக்கொண்டு.
பெரிய கப்பல்! பெட்ரோல் ஊத்தி கொளுத்திவிடுறன்! உதட்டை வளைத்து, “ஆனா எனக்கு உங்களைப் பிடிக்கேல்லையே!” என்றாள் வீம்புடன்.
“பிடிக்காட்டி பிடிக்க வை. நான் வெள்ளையா பிறக்காதது என்ர தவறு கிடையாது. அதால என்னை மாத்தேலாது. நீதான் சமாளிக்கோணும். மிச்ச எல்லாத்தையும் நான் சமாளிக்கிறன்.” என்றான் அவன் அப்போதும் அசராமல்.
“என்ன மிச்சம்?”
“நீ!” என்றான் அவன் விரலை நீட்டி.
“ஓ.. என்ன நீங்க சமாளிப்பீங்களா? அதையும் பாக்கிறன்!” என்றுவிட்டுப் போனாள் அவள்.
‘இறங்கி வாறாளே இல்லையே..’ சிரிப்புடன் தலையைக் கோதிக்கொண்டான் அவன்.
வெளியே வந்தவளுக்கு மனம் புகைந்து கொண்டிருந்தது. என்னவோ உலகத்திலேயே இல்லாத நல்லவன் மாதிரி பேச்சு! இவன் தானே ஆரம்பத்தில் தேளாகக் கொட்டினான். வலிக்க வலிக்க அடித்தான். ஒரு சின்னப் பெண் என்றும் பாராமல் இழுத்துக்கொண்டு வந்து வெளியே வீசவில்லையா?
அங்கே சார்ஜில் போட்டிருந்த அவனது போனைக் கண்டதும் எடுத்துப் பார்த்தாள். அந்த அதி நல்லவன் எந்தப் பாஸ்வேட்டும் இல்லாமல் அதைத் திறந்த புத்தகமாக வைத்திருந்தான்.
விறு விறு என்று உள்ளே சென்று பனை கண்காட்சிக்குச் சென்றபோது நண்பர்களோடு எடுத்த போட்டோவில் இவளின் தோளைச் சுற்றி கையைப் போட்டிருக்கும் அவனையும் அவளையும் மட்டுமாக வெட்டி வாட்சப், வைபர், ஐஎம்ஓ என்று அனைத்திலும் டிபியாக மாற்றிவிட்டாள். போதாக்குறைக்கு முகப்புத்தகமும் சென்று அங்கும் மாத்தியதல்லாமல், “எனக்குக் கல்யாணம் முடிஞ்சுது. வாழ்த்துங்க பிளீஸ்” என்று தங்கிலீசில் அடித்து, திருமணப் படங்கள் நான்கைந்தையும், ‘பப்லிக்’கில் ஏற்றிவிட்டு நல்ல பிள்ளையாகச் சஞ்சனாவோடு வந்து அமர்ந்துகொண்டாள்.
அறையை விட்டு வந்து ஃபோனை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வண்டியில் புறப்பட்ட சஞ்சயன் அவர்களின் தெருவைத் தாண்டி இருக்க மாட்டான். டொங் டொங் என்று பலவகையான செய்திகள் வரும் ஓசைகள் கேட்டுக்கொண்டே இருந்தது. போதாக்குறைக்கு அழைப்புகள் வேறு.
‘என்னடா இது? ஒருநாளும் இல்லாத மாதிரி’ என்று எண்ணியபடி வண்டியை வீதியோரமாக நிறுத்திவிட்டு நண்பனின் அழைப்பை ஏற்றான்.
“என்னடா செய்து வச்சிருக்கிறாய்? அதுவும் தங்கிலீசில.” சமரனின் பேச்சு அடியும் புரியவில்லை நுனியும் புரியவில்லை.
“சொல்லுறத ஒழுங்கா சொல்லு. நான் என்ன செய்தனான்?”
“நீ முதல் உன்ர ஃபோன ஒழுங்கா பார். அப்பிடியே ஃபேஸ்புகையும் பார்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் சமரன்.
‘என்ன இவன்.. ஒண்டையும் ஒழுங்கா சொல்லாம..’ சினந்தபடி திறந்ததுதான் தெரியும். எல்லாப் பக்கமிருந்தும் மெசேஜ்கள் கொட்டிக் கிடந்தது.
‘அண்ணா செம ரொமாண்டிக்’
‘இனிய திருமண வாழ்த்துகள் அண்ணா!’
‘அருமை சகோதரம்’
‘உங்களுக்குள்ள இப்பிடி ஒரு லவ்வபில் போய் இருக்கிறதை மறைச்சிட்டீங்களே’
‘சகோதரம் நீங்க காதலில் விழுந்த கதையைச் சொல்லவே இல்ல’ இப்படி நிறைய வாட்சப் மெசெஜ்கள். என்னடா என்று போய்ப் பார்த்தால் டிபியில் அவனும் அவளும். போதாக்குறைக்கு, அவனின் எல்லா ஸ்டோரியிலும்,
சேலை ஓரம் வந்து ஆளை மோதியது
ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன் விரல்கள் நெஞ்சைத் தீண்டியது
ஆஹா என்ன இதமோ
சித்தம் கிலு கிலுக்க ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் அட ஆடை கலைந்தவுடன்
ஐயோ தெய்வப் பதமோ
ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா என்று காதல் பாட்டு வேறு ஓடிக்கொண்டிருந்தது.
முகமெல்லாம் சிவந்து மானமே போயிற்று அவனுக்கு. வேகமாக அதை அழித்தான். ஃபேஸ்புக் நோட்டிபிகேஷன்களும் தாறுமாறாக வருவது தெரிய கலக்கத்துடன் அங்கு ஓடினான். கடவுளே… பார்த்தவனுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
‘வாழ்த்துங்க பிளீஸ்’ ஆம். எவ்வளவு கேவலம்!
இவளை.. பல்லைக் கடித்தவன் வேறு வழியில்லாமல் எடிட் செய்து, “எங்கள் திருமணத்துக்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!” என்று மாற்றிவிட்டான். வேறு வழி?
லைக்கும் வாழ்த்தும் சிரிப்பும் கிண்டலும் கேலியும் என்று அவனுடைய முகப்புத்தகச் சுவர் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. ஒரு வாரத்துக்கு அந்தப் பக்கமே போகக் கூடாது என்று முடிவு கட்டிக்கொண்டவனுக்கு அவளின் சேட்டைக் குணத்தை எண்ணிச் சிரிப்புத்தான் வந்தது.
இரவு வந்து படுத்தவளிடம் ஃபோனை நீட்டினான். அவள் ஒன்றுமே தெரியாதவள் போன்று கேள்வியாகப் பார்க்க, “போஸ்ட் போட்டனி எல்லா. எல்லாருக்கும் நன்றி சொல்லு!” என்றான்.
அவள் சிரிப்பை அடக்குவது தெரிய, “நீ அவ்வளவு பெரிய சேட்டைக்காரியா? ம்? இவ்வளவு காலமும் கட்டிக்காத்த மானத்த ஒரே நிமிசத்தில வாங்கிட்டியே?” என்றான் சிரித்துக்கொண்டு.
ஃபோனை வாங்கிப் பார்க்க, அவனுக்கான லைக் மூன்று ஆயிரங்களைத் தாண்டி இருந்தது. வாழ்த்துகள் ஒரு தொகை. ஆள் கொஞ்சம் பெரிய ஆள் போலத்தான் இருக்கு. எல்லோருக்கும் பொதுவாக, ‘Thank u all’ என்று தானே போட்டுவிட்டுக் கொடுத்தாள்.
“இப்ப சந்தோசமா? கோவம் போச்சா?” என்றான்.
அவள் இல்லை என்று தலையாட்ட, “இன்னும் என்னடியப்பா செய்யப்போறாய்?” என்றான் ஆசையோடு. கோபிப்பான் என்றுதான் நினைத்திருந்தாள். இந்தச் சிரித்த முகத்தை வைத்த கண் எடுக்காமல் அவள் பார்த்திருக்க, அவளின் தலையைப் பிடித்துச் செல்லமாக ஆட்டிவிட்டு, “என்னையே என்னத்துக்குப் பாக்கிறாய்? படு!” என்றான்.
நிம்மதியாகக் கண்களை மூடிக்கொண்டாள் சஹானா.