அடுத்தநாள் சமரன் மத்தியான சாப்பாட்டுக்கு அழைத்திருந்தான். டவுனுக்குப் போனவனின் கண்களில் கடையில் தொங்கிக்கொண்டு இருந்த ஒரு பாவாடை சட்டை கண்ணில் பட்டது. பச்சை நிற முழு நீளப் பாவாடையின் விளிம்பில் மயில்கள் நடனமாடின. அதே மயில் நிறத்தில் அவன் போடாதே என்று சொன்ன குட்டி அளவிலான பிளவுஸ்; கைகள் இல்லாமல் கழுத்தைச் சுற்றியும் மயில்கள் நின்றிருந்தது. அந்தக் குட்டிப் பூனைக்கு இது அம்சமாக இருக்கும் என்று மனது சொல்லிவிட வேறு எண்ணமே இல்லாமல் வாங்கிக்கொண்டான்.
கண்காட்சியில் வைத்து அவள் இயல்பாகப் பேசியதும், அவனின் கைகளைப் பிடித்துக்கொண்டு முதுகின் பின்னால் ஒளிந்துகொண்டதும், தன் ஃபோனில் செய்த சேட்டையும் வாங்கிக்கொடுக்கச் சொல்லி உந்தியது.
வீட்டுக்கு வந்து, “விருந்துக்குப் போறதுக்குப் போட.” என்று அவளிடம் கொடுத்தான்.
கொடுத்த நிமிடத்திலிருந்து அவன் அவனாக இல்லை. போடுவாளா போடுவாளா என்று மனது கேட்டுக்கொண்டே இருந்தது. இது ஒருவிதமான ஆழம் பார்த்தல். அன்பைச் சொல்லல். மன்னிப்பை வேண்டல். அவளின் மனநிலையை அறியும் முயற்சி என்று எப்படியும் எடுக்கலாம்.
தான் கொடுத்த உடையை அவள் அணிந்து வந்தால் தன்னை ஏற்றுக்கொண்டாள், மன்னித்துவிட்டாள் என்று முடிவெடுக்கக் காத்திருந்தான். அதை உணர்ந்துகொள்கிற அளவுக்கு அவன் அவளுக்குள் வந்திருக்கவில்லை. அதில், அவனின் எதிர்பார்ப்பை உணராமல் வேறு அணிந்துகொண்டு வந்தாள் சஹானா.
இருந்த சந்தோசம் அப்படியே வடிந்து போயிற்று அவனுக்கு.
“அதை ஏன் போடேல்ல?”
“எனக்கு இதத்தான் போட விருப்பமா இருந்தது.”
ஏமாற்றம் தான். அதைக் காட்டிக்கொள்ளாமல், “இதுவும் உனக்கு வடிவாத்தான் இருக்கு.” என்றான்.
“நன்றி!”
‘போடி நீயும் உன்ர நன்றியும்’ கோபம் தான் வந்தது அவனுக்கு.
மற்றும்படி, மெய்யாகவே அவள் அணிகிற ஆடை எல்லாமே அவளைக் குட்டிப் பூவைப்போல மாற்றிவிட்டு அவனை வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தது. இன்றைக்கும் விரித்துவிட்ட கூந்தல் தான். அதில் இடப்பக்கமிருந்து மேலாகக் கொஞ்ச முடியை எடுத்து வலப்பக்கமாக ஒரு ‘போ’ வடிவிலான கிளிப்பில் அடக்கி விட்டிருந்தாள். அந்த ‘போ’ அவன் கண்களைக் குத்திக்கொன்டே இருந்தது.
விருந்து நன்றாகவே கழிந்தது. எல்லோரும் நின்று போட்டோவும் எடுத்துக்கொண்டனர். “நீயும் சந்தோசமா இருந்து அவனையும் சந்தோசமா வச்சிருக்க வேணும்மா. சரியோ பிழையோ இவ்வளவு காலமும் நிறையக் காயங்களைச் சுமந்து வாழ்ந்திட்டான். இனியாவது அவன் நல்லா வாழுறதை நான் பாக்கோணும். கோவக்காரன் எண்டாலும் அநியாயத்துக்கு நல்லவன்!” என்று நண்பனின் தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பிவைத்தான் சமரன்.
அறைக்குள் வந்ததும் அவர்கள் தந்த பரிசினைக் காட்டி, “பிரி என்ன இருக்கு எண்டு பாப்பம்.” என்றான் சஞ்சயன்.
அவளும் பிரித்தாள். சிரட்டை மற்றும் பனை மட்டைகளைக் கொண்டு உருவாக்கப் பட்ட ஒரு சுவர் மணிக்கூடு. இதய வடிவிலான மணிக்கூட்டின் மேலே இரண்டு கிளிகள் ஒரு கிளையில் சோடியாக நின்றிருக்க, மணிக்கூட்டுக்குள் திருமணத்தில் நிற்கும் இவர்களின் போட்டோ ஒட்டப் பட்டிருந்தது.
“இதுல என்னவோ எழுதி இருக்கு.” அவள் சொன்னபோதுதான் கவனித்தான். இவர்களின் போட்டோ அருகே மணிக்கூட்டுக் கம்பிகள் பொருத்தப்பட்ட பலகையிலேயே எழுத்துகள் செதுக்கப்பட்டு இருந்தது.
நண்பன் தனக்காகவே பிரத்தியேகமாகச் செய்யச் சொல்லியிருக்கிறான் என்று தெரிந்தது.
“தமிழ் வாசிக்கத் தெரியாதா?”
“ம்ஹூம்! கதைக்க மட்டும் தான் தெரியும்!”
தமிழ் தமிழ் எண்டு சாகிறவனுக்குத் தமிழே வாசிக்கத் தெரியாத மனுசி. அவனுக்கே அவனை நினைத்துச் சிரிப்பு வந்தது.
“இதயங்கள் இணைந்து
இல்லறம் இனித்து
செல்வங்கள்..” என்றவனின் வார்த்தைகள் நின்று போயிற்று!
‘ராஸ்கல்!’ அடைப்புக் குறிக்குள் ‘பிள்ளைகள்’ என்று போட்டு பெருகட்டும் என்று எழுதியிருந்தான் அவன்.
தடுமாறி அவன் வாசித்து முடிக்க, “அப்பிடி எண்டா என்ன?” என்றாள் அவள்.
நன்றாகத் தமிழ் பேசினாலும் கவிதைத் தமிழ் விளங்க சற்றே சிரமப்படுகிறாள் என்று புரிந்தது. ஆனால், இல்லறத்தை எப்படி விளக்க? அவன் சொன்ன செல்வம் பெருகுவதை எப்படிச் சொல்ல? தடுமாறி, “எங்க ரெண்டுபேரின்ர இதயமும் சேர்ந்து பிள்ளை குட்டி எண்டு நல்லா வாழட்டாம்.” என்றான் அவளின் முகம் பாராமல்.
“அதுக்கு ஏன் நீங்க வெக்கப்படுறீங்க?”
“என்னது?” என்று அதிர்ந்து திரும்பியவனுக்கு அவளின் முகமே பார்க்க முடியவில்லை.
‘கேவலப்படுத்திப் போட்டாளே!’
“விசர் கதை கதைக்காம அதைக் கவனமா எடுத்துவை!” அதட்டிவிட்டு அறையை விட்டு ஓடியே போனான் அவன்.
சஹானாவின் முகம் முழுக்கச் சிரிப்புப் படர்ந்தது.
தெய்வானை ஆச்சி வேண்டுதல் வைத்தது போலவே ஒரு வெள்ளிக்கிழமை சுட்டிபுரம் அம்மனுக்கு மொத்தக் குடும்பமும் சென்று பொங்கல் வைத்து அம்மனைக் கும்பிட்டுவிட்டு வந்தார்கள். வீட்டின் பெரிய மனுசியாக அரவிந்தன் குடும்பத்தையும் அவர் அழைத்ததில் மனம் நெகிழ நன்றி சொன்னார் யாதவி.
பிரபாவதியும் இருப்பதால் தமையனை அங்கு வரும்படி அழைக்க யாதவிக்கு முடிவதில்லை. ஒரு சங்கடம். அதேபோல அரவிந்தனும் தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர்த்து வருவதும் இல்லை. அதனாலேயே பிரதாபனும் உறங்குவது அரவிந்தன் வீட்டில் என்றால் பொழுதைக் கழிப்பது தன் வீட்டில் என்பதுபோல் பார்த்துக்கொள்வார். மருமகளின் நன்றி எதற்கு என்று அறிந்து, “நீயும் இனி எதுக்காகவும் அந்தக் குடும்பத்தைத் தவிர்க்காத. அவேயும் எங்கட சொந்தம் தான்!” என்றுவிட்டுப் போனார் அவர்.
மொத்தக் குடும்பமும் மனம் நிறையச் சுவாமி கும்பிட்டு அங்கேயே அமர்ந்திருந்து பொங்கல் உண்டு சிரித்துக் கதைத்துவிட்டுப் புறப்பட்டனர். ரகுவரமூர்த்தியையும் வாகனம் பிடித்து அழைத்து வந்திருந்தான் சஞ்சயன். ஆனந்தக் கண்ணீர் வழியத் தன் மொத்தக் குடும்பத்தையும் பார்த்து மகிழ்ந்தார் அவர்.
அன்று சஞ்சனாவின் பிறந்தநாள். அதைக் கொண்டாடும் வழக்கமெல்லாம் அவர்களின் வீட்டில் இதுவரை இருந்தது இல்லை. அடுத்தநாள் பிரதாபன் குடும்பம் ஹொலாண்டுக்கு புறப்படுவதால் உறவினர்களுக்கு ஒரு விருந்து கொடுக்க அதைப் பயன்படுத்திக்கொண்டனர்.
மத்தியானம் இரண்டு ஆடு அடித்து, கூடவே கோழி மச்சம் சாப்பிடாதவர்களுக்கு மரக்கறி என்று வீடே கலைகட்டியிருந்தது. மாலை கேக் வெட்டினாள் சஞ்சனா. பிறந்தநாள் கேக் மட்டுமே எல்லோருக்கும் போதாது என்பதால் வேறு கேக்குகளும் வாங்கி இருந்தார் யாதவி. அதை வெட்டி எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.
வந்திருந்தவர்களைக் கவனித்து முடித்துக் கடைசியாகக் கணவருக்கும் தனக்கும் எடுத்துக்கொண்டு வந்தவர் அங்கிருந்த பக்கத்துவீட்டுச் சின்னப்பெண்ணைக் கண்டதும் தன் தட்டினை அவளிடம் கொடுத்துவிட்டு கணவருக்கும் கொடுக்க, “உனக்கு?” என்றார் பிரதாபன்.