“அங்க இருக்கு. பிறகு சாப்பிடுறன்.” என்றபடி அவரின் அருகிலேயே தளர்வாக அமர்ந்துகொண்டார்.
அன்றும் முதல் நாளும் யாதவிக்குச் சற்று அலைச்சல் தான். பிறந்தநாள் வேலையோடு பயணத்துக்குமான ஆயத்தங்களைச் செய்து நன்றாகவே களைத்துப் போயிருந்தார். தனக்காக மீண்டும் சமையலறை வரை போய்வருவதா என்று அவர் விட்டுவிட, “இத பிடி!” என்று தன் தட்டை அவரிடம் கொடுத்துவிட்டு எழுந்து போய் ஒரு கேக் தட்டை எடுத்துவந்து மனைவியிடம் நீட்டினார் பிரதாபன்.
சின்ன விசயம். ஆனால் அதற்குள் மறைந்துகிடந்த கணவன் மனைவிக்கான அன்பில் மலைத்துப்போனார் தெய்வானை. இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத ஆழமான அன்பை மகள் மருமகனிடம் கண்டதே இல்லை. அவர்களைப் பார்க்க பிரபாவதி ஒரு பக்கமும் சிவானந்தன் ஒரு பக்கமும் அமர்ந்திருந்தனர்.
‘இந்தப் பிள்ளை தன் வாழ்க்கையைத் தானேதான் கெடுத்துக்கொண்டிருக்கிறாள்.’ மகனையும் மருமகளையும் பார்க்கப் பார்க்கத்தான் அந்த உண்மை கசந்து வழித்துக்கொண்டு அவருக்குள் இறங்கியது.
“பிரிட்ஜிக்கையே வச்சிருந்து வெட்ட முதல் தான் வெளில எடுத்தது. கரையாம நல்லா இருக்கு என்ன?” கணவரிடம் பகிர்ந்தபடி யாதவி உண்டார்.
“ஓம் அம்மா! அங்கயவிட இங்க இன்னும் நல்லாருக்கு!” என்றபடி தகப்பனின் அருகில் அமர்ந்து அவருடையதில் அள்ளி தன் வாய்க்குள் போட்டாள் அவர்களின் அருமந்த புத்திரி.
தகப்பனும் மகள் எடுப்பதற்கு ஏதுவாகத் தட்டைப் பதித்துப் பிடிக்கத் தன்னுடையதைக் கையில் வைத்துக்கொண்டே அவருடையதை உள்ளுக்குத் தள்ளியவளைக் கண்டு, “அடியே மச்சி! மாமான்ரய பிடுங்காத! உனக்கும் தந்திருக்கு எல்லோ அத சாப்பிடு!” என்று அதட்டினாள் சஞ்சனா.
“அப்பாட்ட வாங்கிச் சாப்பிடுற கேக்குக்கு இருக்கிற ருசியே தனி மச்சி. அப்பிடித்தானேப்பா?” என்றுவிட்டு இன்னொருமுறை எடுத்துக்கொண்டாள் அவள்.
இதையெல்லாம் வெளி முற்றத்தில் அகிலனோடு இருந்த சஞ்சயன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். “இண்டைக்கு மாமாக்கு நாளைக்கு உங்களுக்கு அண்ணா. எதுக்கும் கவனமா இருங்கோ. இவள் ஜெகஜாலக் கில்லாடி!” என்று அறிவுறுத்தினான் அகிலன்.
சஞ்சயன் சிரித்தான். கேக் என்ன கேக்? அவன் தன்னையே இந்தா என்று கொடுத்துவிடத்தான் துடிக்கிறான். அந்த ராட்சசி தான் திரும்பியே பார்க்கிறாள் இல்லை. அதற்குமேல் கேக் உள்ளே நகரமாட்டேன் என்றாயிற்று சஞ்சயனுக்கு. அதை அவளுக்கு எப்படிக் கொடுக்கலாம் என்று காத்திருக்க, அவனுக்கு உதவி செய்வது போல் பின் வீட்டில் இருக்கும் பெரிய சித்தி தன் குடும்பத்துடன் வந்தார்.
அவர்களைப் பார்த்துவிட்டு யாதவியும் பிரதாபனும் வெளியே வர, எழுந்து சென்று அங்கிருந்த ஜூஸினைப் பருகுவதுபோல் காட்டிவிட்டு அவளின் அருகில் அமர்ந்துகொண்டான் சஞ்சயன்.
மனதோ அவள் தன்னுடையதையும் உரிமையாக எடுக்கிறாளா என்று அவதானிக்க ஆரம்பித்தது. தட்டை வேறு பதித்துப் பிடித்துக்கொண்டான்.
அவளுக்குக் கண் ஓடியதுதான். ஆனால் அவனுடையதை எப்படி எடுப்பது? நல்லபிள்ளையாகத் தன்னதை மட்டுமே சாப்பிட்டாள். சஞ்சயனுக்கு இப்போது அவளுக்குக் கொடுக்காமல் சாப்பிட முடியவில்லை. பேசாமல் முள்ளுக்கரண்டியில் கேக் துண்டினை ஏந்தி அவளின் உதட்டருகில் கொண்டு போனான். வியப்புடன் அவள் பார்க்க ஒன்றும் சொல்லவில்லை. வாங்கு என்று கண்ணாலும் காட்டவுமில்லை. பார்த்திருந்தான். அவள் மெதுவாக வாயைத் திறந்து வாங்கினாள். அவன் சாப்பிடாமல் அவளுக்கே கொடுக்க, “நீங்க சாப்பிடுங்க!” என்றாள் மெல்லிய குரலில்.
“நீ தந்தா சாப்பிடுவன்.”
‘நானா?’ நெஞ்சினில் ஒருவிதச் சிலிர்ப்பு. அது உடல் முழுவதுக்கும் பரவக் கேக்கில் பார்வையைப் பதித்துச் சாப்பிட்டாள். அவனுடைய பார்வை இவளிடம் இருந்து, நீ தருவதைச் சாப்பிடுவதற்காக நான் காத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் முடியவில்லை. அங்கிருந்து எழுந்து போனாள். அப்படியே சுருண்டுபோயிற்று அவன் மனது. உன்னை ஏற்க நான் தயாராயில்லை என்று அவளும் எத்தனை தடவைதான் சொல்லுவாள். வெட்கமே இல்லாமல் திரும்பத் திரும்ப அவளின் காலடிக்கு ஓடுவதும் அவள் எட்டி உதைப்பதும் என்று தன் நிலையைத் தானே வெறுத்தான் சஞ்சயன்.
——————
அவள் புறப்படுகிற நாளும் விடிந்தேபோயிற்று. சஞ்சயன் இரும்புக் குண்டென கனத்த மனதுடன் தனக்குள் வெந்துகொண்டிருந்தான். தனிமையில் பேச வாய்ப்பே இல்லை. அவளின் அருகில் சென்று நிற்க கூட முடியாமல் வீடு முழுக்க உறவுகள். வெறுத்தே போயிற்று அவனுக்கு. இந்த மனிதர்களுக்கு அறிவே இல்லையா? மனைவி கணவனைப் பிரிந்து போகப்போகிறாள். கொஞ்சம் தனிமை கொடுப்போம் என்று நினைக்கிறார்களா. இவளாவது யோசிக்கிறாளா? ஒரு பார்வை? ஒரு சிரிப்பு? கவனமா இருங்கோ என்று ஒரு தலையசைப்பு? எதுவுமில்லை. சஞ்சனாவோடும் அகிலனோடும் பாசப்பயிறு வளர்த்துக்கொண்டு இருக்கிறாள்.
ஒருவித அழுத்தம் தாக்க தன்னைச் சமாளிக்க முடியாமல் அறைக்குள் சென்று முடங்கினான். இப்போதாவது வருவாளா? அவளுக்கு நான் அங்கே இல்லை என்பதே தெரியாதா இருக்கும்! விரக்தியோடு எண்ணிக்கொண்டான்.
உண்மையில் சஹானா அவனைக் கவனிக்கவில்லைதான். ஆனால், சஞ்சயனின் உயிர் காதலன் அல்லவோ அகிலன். அவன் விழிகள் இவனை வட்டமடித்துக்கொண்டேதான் இருந்தது. முகம் சுருங்க அறைக்குள் போனவன் திரும்ப வராததைக் கவனித்துவிட்டு, “அண்ணாட்ட போயிட்டு வாறன் எண்டு சொன்னியா?” என்று சஹானாவின் காதுக்குள் கிசுகிசுத்தான்.
அவன் கேட்பதன் பொருள் விளங்காமல் பார்த்தாள் சஹானா. அவள் போகிறாள் என்று ஊருக்கே தெரியும். அவனுக்கு மட்டும் தெரியாமலா இருக்கும்? இதில் பிரத்தியேகமாகச் சொல்ல என்ன இருக்கிறது?
“என்ன சஹி நீ? அம்மா அப்பா மாதிரி ஒரு வாழ்க்கை வாழவேணும் எண்டு ஆசைப்பட்டா மட்டும் காணாது. அதுக்கான முயற்சியும் எடுக்கோணும். இப்பிடித்தான் மாமா என்ன ஆனாலும் பரவாயில்லை எண்டு அத்தை அக்கறையில்லாம நிப்பாவா?”
அவனின் கேள்வியில் அவளுக்குள் குழப்பம். என்ன செய்யவேண்டும் என்கிறான்?
“போய் போய்ட்டுவாறன் எண்டு சொல்லிப்போட்டு வா.”
அவனைத் தேடி வந்தாள் சஹானா. அவனது அறையில் தான் நின்றிருந்தான். காப்பை உயர்த்தி விட்டான். பிடரிக் கேசத்தைக் கோதிவிட்டான். நிதானமற்ற பதட்டமான அவனின் உடல்மொழி அகிலன் சொன்னது உண்மைதான் என்று சொல்லிற்று. ஆனாலும், அவனிடம் என்ன பேசுவது என்று ஒன்றும் புரியாமல், அகிலன் சொல்லித் தந்தத்தையே சொல்கிறவளாக, “போய்ட்டுவாறன்.” என்று வாசலில் நின்றபடியே சொன்னாள்.
வேகமாகத் திரும்பினான் சஞ்சயன். வாசலில் அவளைக் கண்டதும் அதுவரை அழுத்திக்கொண்டிருந்த பாரம் அகன்று போயிற்று. ஆனாலும் கொஞ்ச நேரத்தில் போய்விடுவாளே. அவளின் பிரிவு இப்படி உயிரை வதைக்கும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. தன்னைச் சுற்றியிருக்கும் வெற்றிடம் முழுவதிலும் காற்றில்லாததுபோன்று தவித்தான். பிரிவுத் துயரை அவளிடம் காட்டாதிருக்க முயன்படி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
சஹானாவுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவன் கண்களில் இருந்த தவிப்பா வலியா ஏதோ ஒன்று அவளின் மனதைப் பிசைந்தது. ‘அம்மா அப்பா மாதிரி ஒரு வாழ்க்கை’ என்று அகிலன் சொன்னதும் சேர, “ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்க? உடம்புக்கு ஏதுமா?” என்று கேட்டுக்கொண்டு வந்தாள்.
“கதவப் பூட்டிப்போட்டு வா” என்றான் அவன்.
சொன்னதைச் செய்துவிட்டு வந்து கேள்வியோடு நோக்கியவளைக் கண்டு மெல்லிய முறுவல் எழ, “என்ன பார்வை?” என்றான்.
“நீங்களும் தான் என்னைப் பாக்கிறீங்க?”