ஆதார சுதி 38(3)

“பாத்தா? நீயும் பாப்பியா?” புருவங்களை உயர்த்திக் கேட்டான் அவன்.

“பாத்தா பாக்கத்தானே வேணும்.”

“ஓ..” என்றவனின் கைகள் முதன் முதலாக அவளின் இடையோடு கோர்த்துத் தன்னை நோக்கி வளைத்தது. மெல்லிய அதிர்வுடன் அவனது புஜங்கள் இரண்டையும் பற்றித் தன்னை நிலைப்படுத்தினாள் அவள். என்ன செய்கிறாய் புதிதாக? என்று அவளின் விரிந்த விழிகள் கேள்வி கேட்டது. கண்களில் சிரிப்புடன், “இப்ப என்ன?” என்று மீண்டும் புருவங்களை உயர்த்தினான் அவன்.

ஒன்றுமில்லை என்று வேகமாகத் தலையை அசைத்தாள் சஹானா. பழக்கமில்லாத நெருக்கத்தில் நெளிந்தபடி, “போகோணும்.” என்றாள்.

“நானும் நீயும் மனுசனும் மனுசியும். உனக்கு அது தெரியுமோ?” என்றான் சிறு சிரிப்புடன்.

அவளின் முகம் கூச்சத்தில் சிவப்பது அப்படியே தெரிந்தது. “என்னடி இப்பிடிச் சிவக்கிறாய்?” மோகம் பிறக்க அவளின் மூக்கு நுனியில் முத்தமிட்டான். அவளின் விழிகள் இன்னுமே விரிந்தது. சஞ்சயன் தன் கட்டுப்பாட்டை இழந்துகொண்டிருந்தான். ஆசையோடு தன் உதடுகளை அவளின் நெற்றியில் அழுத்தமாகப் பதித்து எடுத்தான். அணைப்பு இன்னுமே இறுகிப்போயிற்று.

கண்கள் நான்கும் ஒன்றோடு ஒன்று கலக்க, கீற்றாக முறுவலித்தபடி அந்த விழிகளின் மீதும் உதடுகளை ஒற்றி எடுத்தான். மூக்கோடு மூக்கை உரசினான். அதில் அவள் மூக்கினைச் சுருக்கினாள். அது நெஞ்சை அள்ள ஒரு வேகத்துடன் தன் உதடுகளை அவளின் கன்னக் கதுப்பில் புதைத்தான். பஞ்சைப்போன்ற மென்மையில் அவன் மனம் கிறங்கியது. அனிச்சையாய் விலக முயன்றவளை விடவில்லை.

மெல்ல தோள்களை வருடியவனின் விரல்கள் என்ன மாயம் செய்ததோ, விழிகள் அதுபாட்டுக்கு மூடிக்கொள்ள அவனின் உதட்டின் உஷ்ணத்தை உணரமுயன்றுகொண்டிருந்தாள் சஹானா. அவனது அணைப்பு இறுகியது. அவள் அவன் கைகளுக்குள் அடங்கினாள். அதை உணர்ந்தவனின் உதடுகள் மற்ற கன்னத்திலும் பதிந்தது. மறுப்பில்லாதவளின் சம்மதம் நிறைவைக் கொடுக்க அவளின் தலையைத் தன் மார்போடு சேர்த்துக்கொண்டவனின் விழிகளும் மூடிற்று!

என்னவோ வாழ்க்கையில் இதைவிட வேறொன்றும் வேண்டாம் போன்றொரு எண்ணம். கண்களை மூடி அவளை உள்ளுணர்வுகளால் உணர்ந்துகொண்டிருந்தான். அவனுடைய அணைப்பும், கைகளில் இருந்த மெல்லிய நடுக்கமும் அவன் தனக்குள் எதற்கோ போராடுகிறான் என்று விளங்க அவனிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ளாமல் முகத்தை மட்டும் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்தான். தன் முகம் நோக்கிய அவளின் இதழ்களில் அவன் விழிகள் தேங்கிற்று. பார்வை மாறிற்று.

“கிஸ் பண்ணவா?” என்றான் கிசுகிசுப்பாக.

இவ்வளவு நேரமும் என்ன செய்தானாம்?

“இங்க..” என்று, தன் பெரு விரலால்(கட்டை விரல்) அவளின் இதழ்களைத் தடவிக் காட்டினான். அவளின் தேகமெங்கும் புதுவித உணர்வுகள் பாய்ந்தன. வேகமாக மறுத்துத் தலையை அசைத்தாள்.

அவன் கண்கள் சிரித்தது. “வேண்டாமா?” என்றபடி அவளின் முகம் நோக்கிக் குனிந்தான்.

அவள் மீண்டும் மறுத்தாள். இதழ்கள் மெல்ல சிரிப்பில் விரிந்தன.

“ஓ.. வேண்டாமா?” என்றபடி இன்னும் நெருங்கினான். அவனது அடர்ந்த மீசை அவளின் உதட்டோரம் உரசிற்று. வேகமாக முகத்தை அவன் மார்பில் மறைத்துக்கொண்டாள் சஹானா. அவன் வாய்விட்டுச் சிரித்தான். அவளின் ஒரு கை அவனின் மார்புச் சட்டையைப் பற்றி இழுத்தது.

அவளின் அந்த இசைவில் தன்னிடம் வந்துவிடுவாள் என்று தோன்றிய நம்பிக்கையில் அவனுடைய தவிப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல அடங்கின. அப்படியே சற்று நேரம் அவளைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தான். “நேரம் ஆகேல்லையா?” என்று இப்போது அவன் கேட்டான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் அவன் முகம் பார்த்தாள். அன்றொருநாள் விரட்டி அடித்தவன் இன்று அவளுக்காகத் துடிக்கும் அதிசயத்தை உள்வாங்கிக்கொண்டு இருந்தாள். “கவனமா போய்ட்டு வா.” கரகரத்த குரலைச் செருமிச் சீர் செய்துகொண்டு சொன்னான் அவன்.

அவள் சரி என்று தலையசைத்தாள்.

“என்ன மறந்திட மாட்டியே?”

இப்படி வேண்டி நிற்பது அவனுடைய இயல்பு அல்ல. பிறகும் ஏன் கேட்கிறான்? அவளுக்குள் கேள்வி எழுந்தாலும் இல்லை என்று தலையசைத்தாள்

“கெதியா வந்திடு!”

மேலும் கீழுமாகத் தலையை அசைத்துவைத்தாள்.

இப்படியான எதையும் அவள் அவனிடம் சொல்லவில்லை. அவனைப்போல அவள் தவிக்கவில்லை. அதுவரை இருந்த இதம் குறைவது போலிருக்க, அது பிடிக்காமல், “சரி போ!” என்று அவளை விட்டான்.

விட்டால் போதும் என்று அவள் ஓடிய வேகம் வருத்தமான முறுவலைத் தோற்றுவித்தாலும், அவள் தந்துவிட்டுப் போன அருகாமை அதைத் தேற்ற வல்லதாய் இருந்தது.

‘அவள் அப்பிடியே இருக்கிறாள். நீ மட்டும் எப்பிடியடா இப்பிடி மாறிப்போனாய்?’ அவனுக்கு விளங்கவே இல்லை. ஒருவிதாமாகத் தன்னைத் தேற்றிக்கொண்டு வெளியே வந்தவனை, “எங்க தம்பி அதுக்கிடையில போய்ட்டாய்? வாவா, வந்து இந்தப் பெட்டி நிறை(வெய்ட்) சரியா இருக்கா எண்டு பார். ரெண்டுகிலோ கோப்பித்தூள் வச்சனான்.” என்று அழைத்தார் தெய்வானை. ஒன்றும் சொல்லாமல் நிறை பார்த்துக்கொடுத்தான் அவன்.

பயணம் தொடங்கிற்று. “உயிரை பிடிச்சுக்கொண்டு இருப்பனய்யா. வந்து சேர்ந்திடு.” கண்ணீருடன் மகன், மருமகள், பேரப்பிள்ளையை உச்சி முகர்ந்து அனுப்பிவைத்தார் தெய்வானை. பிரதாபனும் இங்கேயே வந்துவிடுவதாகச் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். விமான நிலையத்தில் வைத்து விடைபெறுகிற கடைசி நொடிகளில் என்ன முயன்றும் தடுக்க முடியாமல் ஏதாவது சொல்லு என்றபடி அவன் விழிகள் அவளிடமே தங்கிற்று.

ஒரு முறை அணைத்துக் கவனமா போயிட்டு வா என்று சொல்ல ஒரு நொடித் தனிமை கிடைக்காதா என்று இருந்தது. புறப்படுகிற இரண்டு குடும்பங்கள், அவர்களை வழியனுப்ப வந்த அரவிந்தன் குடும்பம். கூடவே சஞ்சனா இவர்களுக்கு மத்தியில் அந்தத் தனிமை கிடைக்கவே இல்லை. பார்வையால் மட்டுமே அவளோடு கலக்க முடிந்திருக்க, புறப்படுகிற நொடியில் மெல்லத் தலையசைத்து விடைபெற்றாள் சஹானா. அதுவே நெஞ்சுக்குள் இருந்து பெரும் துக்கத்தைப் பொங்கிவரச் செய்யத் தானும் தலையை மட்டும் அசைத்தான் அவன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock