ஓடிவந்து, “பாருங்க அம்மம்மா உங்கட மகளை. அப்பாக்கு ஒரு சாப்பாடு போட்டுக் குடுக்கேல்ல. அவர் சாப்பிடாம போய்ட்டார். அத்தைய பாத்தீங்க தானே. மாமாவை எப்பிடி கவனிக்கிறா எண்டு. மாமாக்கும் அத்தை எண்டால் அவ்வளவு பாசம். எங்கட வீட்டுல மட்டும் தான் எப்ப பாத்தாலும் சண்டையும் சச்சரவும். எனக்குச் சாகவேணும் போலக் கிடக்கு!” எனவும் துடித்துப்போனார் தெய்வானை.
“என்ன குஞ்சு கதபேச்சு இது? எல்லா வீட்டிலையும் தான் சண்டையும் சச்சரவும் இருக்கு. வீட்டுக்கு வீடு வாசப்படி. அப்ப எல்லாரும் சாகிறதா? நீ அழாத!” என்று தேற்றியவரின் விழிகள் பெற்ற மகளைச் சுட்டுப் பொசுக்கியது.
“ஆனா எனக்கு எல்லாத்தையும் நினைக்க அப்பிடித்தான் இருக்கு. சஹிக்கும் எனக்கும் ஒரே வயசுதான் அம்மம்மா. மாமாக்கும் அத்தைக்கும் அவள் எவ்வளவு செல்லம் எண்டு பாத்தீங்க தானே. ஆனா எனக்கு..” என்றவளிடம், “இதென்ன கதை? அவளுக்கு அவளின்ர அம்மாவும் அப்பாவும் மட்டும்தான். உனக்கு அப்பிடியா? நான் இருக்கிறன், தாத்தா இருக்கிறார். அண்ணா இருக்கிறான். எங்க எல்லாருக்கும் நீதானே செல்லம். இந்த வீட்டு ராசாத்தி நீ. இப்பிடி அழுறதா? நாலுபேர் வந்து போற நேரம். பாத்தா பிழையா கதைப்பினம். கண்ணைத் துடை!” என்று மெல்லத் தேற்றி அனுப்பி வைத்தார்.
பிரபாவதிக்குமே மகளின் பேச்சு மிகுந்த அதிர்ச்சிதான். ஆனாலும் கூடவே பிறந்த அகங்காரமும், தான் என்ற பிடிவாதமும் வீம்பும் அசையவிடாமல் நிற்கச் செய்தது.
வெறுப்புடன் பிரபாவதியை நோக்கி, “பெத்த பிள்ளையே இப்பிடி கேக்கிற அளவுக்கு வச்சிருக்கிறாய் எண்டால் நீ என்ன தாய் எண்டு நீயே யோசி. ஆனா, இனி நானோ உன்ர அப்பாவோ உனக்காக நிக்க மாட்டோம். இனி எங்களுக்கு உன்னைவிடப் பேரப்பிள்ளைகளின்ர வாழ்க்கையும் சந்தோசமும் தான் முக்கியம். உனக்கு எண்டு யாரையாவது நீதான் தேடிக்கொள்ள வேணும். இல்லையோ வயசு போன காலத்தில எல்லாரும் இருந்தும் அநாதையா நிப்பாய்.” என்றுவிட்டுப் போனார் தெய்வானை.
பிரபாவதியின் நெஞ்சு ஒருமுறை குலுங்கிற்று. அநாதை என்ற அந்த வார்த்தை ஆழமாகக் குத்திவிட விலுக்கென்று நிமிர்ந்து அன்னையைப் பார்க்க அவரோ போய்விட்டிருந்தார். அவர்களுக்குத் தான் முக்கியம் இல்லை என்று சொல்லிவிட்டாரே. ஆத்திரமும் அழுகையும் பொங்கிக்கொண்டு வர அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டார்.
முகம் கழுவி உடைமாற்றிக்கொண்டு வந்த சஞ்சனா, அப்பாவுக்குச் சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டாள்.
இவ்வளவுக்குப் பிறகும் இந்த எண்ணம் கட்டிய மனைவிக்கு வரவில்லையே? மகளைப் பிழையாக வளர்த்துவிட்டோமோ என்று அந்த வயதிலும் எண்ணி வேதனையுற்றார் தெய்வானை.
தோட்டத்துக்குச் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்த சஞ்சனாவின் மனம் பெரும் துக்கத்தைச் சுமந்திருந்தது. சஹானாவின் குடும்பத்தை, அவர்களுக்குள் இருக்கிற பாசப்பிணைப்பைப் பார்க்கிறவரை தன் வீட்டின் வெறுமையை அவள் பெரிதாக உணர்ந்ததும் இல்லை; கவனித்ததும் இல்லை. அவர்களைப் பார்த்தபோதுதான் தாங்கள் எவ்வளவை இழந்திருக்கிறோம் என்று புரிந்தது. அன்னையிடம் தான் பேசியவை அதிகப்படி என்று தெரியும். இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டாள்.
அங்கே, இரவு காவலுக்குப் போகிறவர்களுக்காகவும் வெயிலில் ஆறி இருக்க நினைப்பவர்களுக்காகவும் என்று பாவல்கொடியின் அருகே இருந்த ஓலைக் குடிசையில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார் சிவானந்தன்.
முகட்டை வெறித்துக்கொண்டிருந்தவர் மகளைக் கண்டதும் எழுந்து அமர்ந்தார்.
“வாங்கப்பா சாப்பிட!” எதுவுமே நடவாதவள் போன்று அவருக்கு எடுத்து வைத்தாள். மோட்டாரில் இருந்து குழாய் வழியே வயலுக்குப் பாய்ந்துகொண்டிருந்த தண்ணீரில் செம்பைக் கழுவி சில்லென்ற நீரைப் பிடித்துக்கொண்டுவந்து வைத்துவிட்டு அமர்ந்தவளிடம், “ஏனம்மா தேவையில்லாமல் அம்மாவோட சண்டை பிடிக்கிறாய்?” என்றார் கவலையோடு.
“விடுங்கப்பா. அதெல்லாம் ஒண்டும் இல்ல. நீங்க சாப்பிடுங்க!” என்றவள் அதற்குமேல் அதைப்பற்றிக் கதைக்கவில்லை. மாமன், மாமி, மனைவி, இரண்டு மக்கள் என்று எல்லோரும் தன்னைச் சுற்றி இருந்தும் யாருமில்லாதவர் போன்று இங்கே ஓலைக் குடிலில் தனியாகச் சாப்பிடும் அப்பாவைப் பார்க்கையில் கண்கள் கலங்கி மூக்கு நுனி சூடாகிற்று அவளுக்கு. அடக்கிக்கொண்டாள். அவர் சாப்பிட்டதும் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
———————
சஹானா நித்திலனிடம் வந்திருந்தாள். முகமெல்லாம் சோர்ந்து இருந்தது. ஒன்றுமே கதைக்காமல் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“என்ன?” அவளின் செய்கை உண்டாக்கிய சிரிப்புடன் கேட்டான் அவன்.
ஒன்றுமில்லை என்பதாகத் தலையசைத்தாள் அவள்.
“சொல்லு சஹி!” என்று அதட்டியபிறகுதான் வாயைத் திறந்தாள்.
“எல்லாரும் என்னைப் பேசிப்போட்டாங்கள்.”
“ஏன் என்னவாம் அவனுக்கு? இதுக்குத்தான் அவனைக் கட்டாத எண்டு சொன்னனான். கேட்டியா நீ?” என்று பாய்ந்தான் அவன். பேசினார்கள் என்றதுமே அவனுக்குச் சஞ்சயன் மாத்திரம் தான் நினைவில் வந்தான்.
“ப்ச் அவரில்ல.. ஆனா அவராலதான்.” என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்னாள்.
“உன்ர விருப்பம் கேட்டுத்தான் கலியாணம் நடந்தது. ஓம் எண்டு சொன்னவள் அதுக்கு ஏற்ற மாதிரித்தான் நடக்கோணும்!”
அவள் பதில் இல்லாமல் இருக்க, “நீ முதல் அவனுக்கு எடுத்துக் கதை!” என்றான் நித்திலன். அவனுக்குச் சஞ்சயனின் மனநிலையை அறியவேண்டி இருந்தது. முதலில் தயங்கினாலும் இவனின் தூண்டுதலில் அழைத்தாள் சஹானா.
இவ்வளவு நாட்களும் எடுக்கமாட்டாளா என்று ஏங்கிய சஞ்சயனின் மனது அவள் அழைத்தபோது நீ எடுத்ததும் நான் கதைக்கோணுமா என்று கோபம் கொண்டது. ‘நான் ஒண்டும் நீ எப்ப எடுப்பாய் எண்டு ஏங்கிக் கிடக்கேல்ல!’ என்று காட்ட நினைத்தான். சஹி என்று அவளுடைய பெயர் வந்து வந்து போகப் பார்த்துக்கொண்டே இருந்தான். மூன்று தடவைகள் அழைத்துப்பார்த்துவிட்டு விட்டுவிட்டாள்.
வெளிநாட்டு நாகரீகம்! அதுதான் மூன்று தடவைக்குமேல் அழைக்க விடவில்லை போலும். இந்த நாசூக்கும் நாகரீகமும் யாருக்கு வேண்டும்? நான் எடுக்கும் வரை விடாமல் அழைத்து என்னை ஒருவழி செய்யடி என்று கத்தியது மனது! அது நடக்காமல் போனதில் உதட்டோரம் வளைய ஒருவித வெறுப்பா வேதனையா என்று பிரித்தறிய முடியாத நிலையில் இருந்தான் சஞ்சயன். இவ்வளவு நாளும் கதைக்கவில்லையே என்கிற கோபம். இப்போது எதற்கு எடுத்தாளாம் என்கிற வீம்பு. அவள் தேடி எடுத்தும் கதைக்காமல் விட்டுவிட்டோமே என்கிற சினம் என்று அவன் அவனாக இல்லை. மெல்லக் கொல்லும் விசம்போல் அவள் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பித்தனாக்கிக்கொண்டிருந்தாள்.
நித்திலனுக்கு அவனது கோபம் புரிந்தது. அதன் பொருளும் புரிந்தது. இத்தனை நாட்களாக அவனுக்குள்ளும் ஒரு கோபம் கனன்றுகொண்டு இருந்ததில் தான் பேசாமல் இருந்தான். கல்யாணம் ஆகியும் தனியாவே இருடா என்று பலமுறை நினைத்திருக்கிறான். அவன் அங்கே இவளின் அழைப்புக்காகக் காத்திருக்கிறான் என்கிற செய்தி ஏதோ ஒரு வகையில் இவனின் கோபத்தை ஆற்றியது. எனவே, “இண்டைக்கு எப்பிடியும் அவனோட கதைச்சிப்போட்டு என்ன சொன்னவன் எண்டு எனக்குச் சொல்லோணும் நீ!” என்றான் சஹானாவிடம்.