இதுதான் வீடு என்று அகிலன் காட்டிய வீட்டைப் பார்த்ததும் அவளால் நகர முடியவில்லை. எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று தெரியாத அளவில் அந்தக் காணியின் எல்லைகள் விரிந்து பரந்திருக்க, தென்னை, மா, பலா, வேம்பு என்று என்னென்னவோ மரங்கள் சூழ்ந்திருக்க, ஒரு பக்கமாக மாடுகள் நடமாடின. இன்னொரு பக்கம் கோழி குஞ்சுகளோடு சுற்றிக்கொண்டிருந்தது. கிணற்றின் அருகே ஆட்டுக்கொட்டகை என்று இயற்கையோடு இயைந்து வாழும் நிலத்தில் நட்ட நடுவில் பழமையைப் பறைசாற்றியபடி கம்பீரமாய் நின்றது வீடு. பார்த்தகணம் பாசம் பொங்கக் கண்கள் கலங்கிப் போயிற்று!
அப்பாவின் சந்தோசம் இந்த வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறதோ?
“இங்கதான் அப்பா பிறந்தது வளந்தது எல்லாம் என்ன?” குரல் நெகிழக் கேட்டவளுக்கு அங்கே போகவேண்டும் போல் நெஞ்சம் பரபரத்தது.
சின்னப்பிள்ளையாகத் தத்தித் தவழ்ந்த அப்பா, பள்ளிக்கூடம் போகும் சிறுவனாய் அப்பா, வாலிபம் நிறைந்த அப்பா, கம்பீரம் ததும்பும் இளைஞனாய் அப்பா என்று கற்பனையில் பல அப்பாக்களைக் கண்டவள் உணர்வுகளின் மேலீட்டில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
“மாமா பிறந்தது வளர்ந்தது மட்டுமில்ல. அத்தையைச் சைட் அடிச்சதும் இந்த வீட்டுல இருந்துதான்.” சிரிப்புடன் அவன் சொன்னபோது, அந்த வீட்டுக்குள் இருந்து ஒருவன் வெளியே வந்தான்.
உயரமாய், திடகாத்திரமாய் வேகநடையில் வந்தவனைக் கண்டு விழிகள் தெறித்துவிடுமளவுக்கு விரிய அப்படியே நின்றுவிட்டாள் சஹானா. ‘நிச்சயம் இது பெரிய மச்சான் தான்!’ மனம் அடித்துச் சொன்னது. அது மாத்திரமல்லாமல், நாம் பிறக்கமுதல் நம் அப்பா எப்படி இருந்திருப்பார் என்று கண்முன்னே கண்டால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தான் அவன். ஆர்வமாய் மொய்த்தது அவளின் விழிகள். ஓடிப்போய் இறுக்கமாக அணைத்துக்கொள்ள வேண்டும் போலொரு உந்துதல் கிளம்பிற்று!
அவனுக்குப் பின்னாலேயே ஒரு மத்திய வயது பெண்ணும், அழகான இளம் பெண் ஒருத்தியும் வந்தனர்.
“அவர்தான் சஞ்சயன் அண்ணா. அந்த ஆன்ட்டி உன்ர அப்பாட தங்கச்சி. அது அவாட மகள், சஞ்சனா.” பெயரளவில் மாத்திரமே அறிந்து வைத்திருந்தவர்களை இப்போதுதான் நேரில் காண்கிறாள். கண்கள் அவர்களையே மொய்த்தது.
ஏதோ துரோகம் செய்ததாக அப்பா சொன்ன பிரபாவதி அத்தை!
அவளின் அத்தை!
சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு உள்ளே ஓடினாள். அதை எதிர்பாராத அகிலன் அவசரமாக, “சஹி நில்லு!” என்று தடுக்கமுதல் காரியம் கைமீறிப் போயிருந்தது.
இளம் பெண்ணொருத்தி, இந்த நாட்டில் பிறந்திருக்க வாய்ப்பேயில்லை என்று அப்பட்டமாகச் சொல்லும் சாயலோடு ஆவலில் கண்கள் மின்ன ஓடி வருவதைக் கண்டுவிட்டு மூவருமே நின்றுவிட்டனர்.
“அத்தை..” என்று ஓடிப்போய் அவரை இறுக்கிக் கட்டிக்கொண்டாள் சஹானா. அவரிடம் அப்பாவின் வாசத்தைத் தேடியவளுக்குச் சந்தோசமும் அழுகையும் பொங்கிக்கொண்டு வந்தது.
“அத்தை.. அத்தை..” அழுத்தமாய்க் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“யாரம்மா நீ?” புன்னகை அரும்பினாலும் அவளை அளவிட்டபடி கன்னத்தைத் துடைத்துக்கொண்டு கேட்டார் அவர்.
“நான் சஹானா அத்தை. உங்கட மருமகள். உங்கட அண்ணான்ர மகள்.” உற்சாகமாய்ச் சொன்னவளைக்கண்டு அங்கிருந்த இளம் பெண்ணின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவளையும் அணைத்துக்கொண்டாள்.
“நீங்க என்ர மச்சாள். நானும் உங்களுக்கு மச்சாள்.” உறவிடம் தன் உறவைச் சொன்னாள்.
அவள் அவள் வசமாயில்லை. அளவில்லாத ஆனந்தத்தில் தடுமாறிக்கொண்டிருந்தாள். அப்பப்பா! அவளுக்கு எத்தனை சொந்தங்கள்! அவளுக்குச் சிலிர்த்தது. சந்தோசத்தில் கண்களைக் கண்ணீர் நனைத்தது.
ஆனால், பிரபாவதியோ, மகளை அணைத்திருந்தவளைப் பிடித்து ஒரே தள்ளில் தள்ளிவிட்டார். “யாரடா இது புதுசா எண்டு பாத்தா அண்ணாட மகளாம்! அண்ணா எண்டு ஒருத்தன் எனக்கு இல்லவே இல்லை. இதுல நீ எங்க இருந்து வந்தனீ? அத்தை சொத்தை எண்டு சொன்னியோ(சொன்னாயே?) வெளுத்துப் போடுவன்! ஒழுக்கம் கெட்டவள் பெத்த மகளுக்கு நான் அத்தையோ?” ஆங்காரமாய்க் கத்தியவரைக் கண்டு திகைத்து விழித்தாள் சஹானா.
சொந்தம் கூடி அவளைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் என்றல்லவா வந்தாள். பாசத்தை மட்டுமே எதிர்பார்த்து வந்தவள் அவரின் உதாசீனத்தில் கண்கள் கலங்க, ‘என்ர மச்சானாவது என்னோட கதைக்க மாட்டாரா..’ என்கிற எதிர்பார்ப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
பார்த்தவள் திடுக்கிட்டாள்.
அந்தளவில் வெறுப்பைத் தேக்கியபடி நெருப்பை உமிழ்ந்தன அவன் விழிகள். “பொம்பிளை மாதிரி தான் அங்க ஒளிஞ்சு இருந்துகொண்டு உன்னைச் சமாதானத்துக்கு அனுப்பி இருக்கோ அந்தாள்? உங்களுக்கெல்லாம் ரோச மானம் இல்ல? வெக்கம் கெட்ட ஜென்மங்கள்!” வார்த்தைகளைக் கடினமாய் உமிழ்ந்தான் அவன்.
“இவளவைக்கு எங்கயடா வெக்கம் மானம் ரோசமெல்லாம் இருக்கும்? எவன எப்பிடி வலைபோட்டுப் பிடிக்கலாம் எண்டு அலையுற கூட்டம். இவளும் உன்ன பிடிக்க வந்திருப்பாளா இருக்கும். தாய்க்காரி சொல்லி அனுப்பியிருப்பாள்!” அவர் பங்குக்குத் தூற்றினார் பிரபாவதி.
அவர் சொன்னதன் பொருளே விளங்காமல் விழித்துக்கொண்டு நின்றாள் சஹானா.
“ச்சீ! அதுக்கெல்லாம் இந்தக்கூட்டம் வேற ஆக்களைப் பாக்கவேணும் அம்மா!” அவளைக் கேவலமாய் நோக்கி அவன் சொன்னபோது, பொருள் முற்றிலும் புரியாதபோதும் அவனது பார்வையிலேயே மிகுந்த அவமானமாக உணர்ந்தாள் சஹானா.
சட்டென்று உறுமினான் அவன். “இங்க பார்! இது காலம் காலமா மானம் மரியாதையோட வாழுற குடும்பம். தப்பிப் பிறந்து இந்த வீட்டு மரியாதைய குழிதோண்டிப் புதைச்சுப்போட்டு போன வெக்கம் கெட்ட மனுசனுக்கும் இந்த வீட்டில இடமில்லை. அந்தாள் பெத்த உனக்கும் இடமில்லை. சும்மா அத்தை ஆட்டுக்குட்டி எண்டு சொல்லிக்கொண்டு திரும்பவும் இங்க வந்த.. திரும்பிப் போறதுக்குக் கால் இருக்காது! ஒழுங்கா போய்ச் சேருற ஆசை இருந்தா இந்த நிமிசமே அந்த ஆளை மாதிரி ஓடிப்போயிடு!” அவனின் கடுமையில் நடுங்கியது அவளின் மேனி.
“உன்ர அம்மா மாதிரியே இங்க எவனையாவது பிடிக்க வந்தியா இல்ல.. சொத்துப்பத்து சேர்த்து வச்சிருப்பீனம், பறிச்சுக்கொண்டு போகலாம் எண்டு வந்தியா?” ஆவேசமாகப் கேட்டார் பிரபாவதி.
கண்ணில் நீருடன் அவளின் தலை மறுப்பாக ஆடிற்று. அதை நம்ப அவர்கள் தயாராகவே இல்லை. “பின்ன வேற என்னத்துக்கு எண்டு நினைக்கிறீங்க அம்மா!” எள்ளலாய்ச் சொன்னான் அவன்.
சும்மாவே ஆடும் பிரபாவதிக்கு உடுக்கும் அடித்தால் என்னாகும்? “இங்க நாங்க கஷ்டப்பட்டுக் கட்டிக்காக்க சொத்து வேணுமாமோ சொத்து? எங்க கேக்கட்டும் பாப்பம், விளக்குமாத்தால சாத்தி அனுப்புறன்!”
“இன்னும் ஏன் நிக்கிறாய்? போ வெளியில!” அவனின் உறுமலில், கடலின் கோரத்தாண்டவத்துக்குள் குட்டிப் படகொன்று சிக்கிக்கொண்டதைப்போன்று அவளின் தேகம் நடுங்கிற்று!
ஆனாலும் தைரியத்தைத் திரட்டி, “இல்ல மச்சான்! அப்பாக்கு..” என்று அவள் ஆரம்பிக்க முதலே, “ஏய்! யார் யாருக்கடி மச்சான்?” என்று, நொடியில் அவளின் கழுத்தைப் பற்றியிருந்தான் சஞ்சயன்.
“ஐயோ.. சஹி!” பயந்துபோய் உள்ளே ஓடிவரப் பார்த்த அகிலனைக் கண்டு பிரபாவதிக்கு இன்னும் சினம் ஏறியது. “அங்கேயே நில்லடா! இந்தக் காணிக்கக் கால வச்சியோ நடக்கிறதே வேற!” என்றார் உரத்தகுரலில்.
அப்படியே நின்றுவிட்டான் அகிலன். “சஹி வா!” பதட்டத்துடன் கூவினான்.
எங்கே வருவது? தினவெடுத்துச் சீறிக்கொண்டிருந்த சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மானாகிப்போயிருந்தாள். கழுத்து வலியில் உயிர்போக, “விடுங்கோ..” என்று உலர்ந்துவிட்ட உதடுகளை அசைத்தவளின் கண்ணீர் துளிகள் அவன் கரத்தில் விழுந்து சிதறியது.
“நான் உனக்கு மச்சானா? ஓடிப்போன பரதேசிகளுக்குப் பிறந்த நீ எனக்கு மச்சாளா? மச்சான் கச்சான் எண்டு பல்லைக்காட்டிக்கொண்டு வந்தியோ.. நடக்கிறதே வேற! உன்ர இந்த விளையாட்ட எல்லாம் அங்க நிக்கிறவனோட வச்சுக்கொள்!” என்று உறுமியவன் தள்ளிவிட, பின்னால் நின்ற அவனுடைய தங்கையோடு மோதி விழப்பார்த்தாள் சஹானா.
அவளைப் பற்றி நிற்கவைத்தாள் அந்தப் பெண். தடுமாறி, சமாளித்து நின்றவளுக்குக் கழுத்து வலியில் உயிர்போனது.
என்ன நடந்தாலும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு இப்படியே போகமுடியாதே. அப்பா.. உள்ளம் துடிக்க, “அப்பப்பா எங்க? நான் அவரோட கதைக்கவேணும்.” என்று வீட்டின் புறம் எட்டிப் பார்த்தபடி ஓரடி எடுத்து வைக்கப்பார்த்தாள்.
பார்த்தாள்! அவ்வளவுதான்.
அவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீட்டுக்குள் நுழையப்பார்த்தவளின் செயல் அங்கிருந்தவனின் கொஞ்ச நஞ்ச நிதானத்தையும் பறித்துக்கொண்டது. அவளின் மணிக்கட்டை இரும்பெனப் பற்றி தர தரவென்று இழுத்துப்போய் வெளியே வீசினான்.
“விடுங்கோ மச்சான்!” என்று கெஞ்சியதை அவன் காதிலும் விழுத்தவில்லை.
“இனியும் இந்தப்பக்கம் உன்ன பாத்தன்!” விரலை ஆட்டி எச்சரித்துவிட்டு, பிடுங்கி எறிந்த பூவைப்போல தரையில் கிடந்தவளைத் திரும்பியும் பாராது சென்று பைக்கில் ஏறி அதை உதைத்துக் கிளப்பினான்.
அதிர்ச்சியில் விரிந்த விழிகள் அசையவும் மறுக்க, சிந்தனா சக்தியையே இழந்துபோய் அப்படியே கிடந்தவளை நோக்கிச் சீறிக்கொண்டு வந்தது அவனது வண்டி. அவள் நகரவேண்டும். இல்லாவிட்டால் அவள்மேல் ஏற்றாமல் அவன் வெளியேற முடியாது என்கிற நிலை.
அவனோ வேகத்தைக் குறைக்கவேயில்லை. அவளுக்கோ நகரவேண்டும் என்கிற உணர்வேயில்லை. அகிலனுக்கு ஒருமுறை இதயம் நின்று துடித்தது. நெஞ்சு தடதடக்க, ஓடிப்போய் அவளை இழுத்தான். கொஞ்சம் கூட வேகம் குறையாமல் சீறிக்கொண்டு பாய்ந்து போயிற்று அவனது வண்டி.
“சஹி எழும்பு!” அசைவே இல்லாமல் அப்படியே கிடந்தவளைக் கண்டு திகிலாயிற்று அகிலனுக்கு. நிலத்தில் இருந்த கற்கள் தேகத்தில் பல இடங்களில் ஆழமாகவே பதம் பார்த்திருக்க, அதைவிட ஆழமாய் மனது காயப்பட்டிருந்தது.
அவன் சிரமத்துடன் தூக்கவும், “உன்ர கொப்பன் என்ன முதல் சறுக்கிப்போட்டுது எண்டு இப்ப ஏதும் பிளான் பண்ணுறானோ? உன்னையும் சேத்து அனுப்பி வச்சிருக்கிறான். சொந்தம் எண்டு ஒருத்தர் இல்லாத அநாதைக் கூட்டம் இங்க வந்து ஒட்டிக்கொள்ள நினைச்சீங்களோ? கடைசிவந்தாலும் நடக்காது எண்டு அவனிட்ட சொல்லிவை! போறவன் யார் எண்டு தெரியுமா? என்ர மகன். மொத்தக் குடும்பத்தையும் வெட்டிப் புதைச்சுப்போடுவான்!” அகங்காரமாய்ச் சீறிவிட்டுத் திரும்பியவர் அங்கு நின்றிருந்த சிவானந்தனைக் கண்டு திடுக்கிட்டார்.
‘இந்த மனுசன் எப்ப வந்தது?’ பிரபாவதிக்குக் கைகால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கிற்று!
“ஆர் இது?” சஹானாவையும் அகிலனையும் பார்த்துக் கேட்டவரின் விழிகளில் கோபச் சிவப்பு!
வேகமாகச் சமாளித்து, “ஆர் எண்டு எனக்கு என்ன தெரியும். கழிசடை கூட்டம். நீங்க வாங்கோ? என்ன நேரத்துக்கு வந்திட்டீங்க?” அவசரமாகத் திரும்பிக் கண்ணசைவில் உணர்த்த முதலே, “அப்பா அது பிரதாபன் மாமாவின்ர மகளாம். மற்றவர் யார் எண்டு தெரியாது. ஆனா இங்க கண்டு இருக்கிறன்.” என்று, அதிர்ச்சி அகலாமலேயே சொன்னாள் அவர்களின் பெண் சஞ்சனா.
அது போதுமே சிவானந்தனுக்கு. பிரதாபனின் மகள் யாருடன் வருவாள் என்று விளங்காதா? நெருப்புப் பார்வையால் மனைவியைப் பொசுக்கினார். பிரபாவதிக்கு வியர்க்கத் துவங்கிற்று!
“எங்களுக்குத்தான் தெரியாம இருக்கும். உன்ர அம்மாக்குக் கட்டாயம் தெரிஞ்சிருக்கும்.” சொல்லிவிட்டு விறுவிறு என்று உள்ளே அவர் சென்றுவிட, “வாயை வச்சுக்கொண்டு சும்மா இருக்க மாட்டியா!” என்று மகளிடம் சீறிவிட்டுக் கணவரிடம் விரைந்தார் பிரபாவதி.
“மறக்க முடியேல்ல போல..” அணிந்திருந்த சட்டையைக் கழற்றித் தாங்கியில் கொழுவிக்கொண்டு இருந்தவர் பிரபாவதி அறைக்குள் வந்ததும் ஏளனத்துடன் கேட்டார்.
முகத்தைக் கல்லுமாதிரி வைத்துக்கொண்டு நின்றார் பிரபாவதி.
“வேறேதும் பிளானோட அவன் வந்தா அதுக்கு இசையிற பிளான் உனக்கு இருக்கோ?”
“விசர் கதை கதைக்காதீங்கோ!” சீறினார் பிரபாவதி.
“விசர் கதை கதைக்கிறது நானோ நீயோ? ரெண்டு பிள்ளைகள் பிறந்து அதுகளுக்குக் கட்டிக் குடுக்கிற காலத்திலையும் பழசை மறக்காம கதைக்கிற நீயெல்லாம் என்ன பொம்பிளை? அதைவிடச் சின்னப் பெடியன் அவனிட்ட என்ன கதைக்கிறாய்?” அடிக்குரலில் சீறியவரைக் கண்டு நடுக்கம் பிறந்தது பிரபாவதிக்கு.
எல்லாம் அவனால்! கடுத்த மனதைக் காட்டாமல், “உங்களுக்கும் நான் பொம்பிளையா எண்டுற சந்தேகம் இப்பதானே வந்திருக்கு?” நக்கலாய்ச் சொல்லிமுடிக்க முதலே, அவரின் கன்னத்தைப் பதம் பாத்திருந்தது சிவானந்தனின் கரம்.
“உன்ர கேடுகெட்ட குணத்தை மாத்து எண்டு சொன்னா, என்னையே கேள்வி கேப்பியா நீ? முதல் ஒரு பக்குவப்பட்ட பொம்பிளையா நடக்கப் பழகு!” என்று, அன்று சிவானந்தன் ஆடித் தீர்த்துவிட்ட ஆட்டத்தில் ஏனடா வாயைத் திறந்தோம் என்று ஆகிப்போயிற்று பிரபாவதிக்கு.
‘இப்பிடி என்ர வாழ்க்கையை அழிச்ச உன்ர குடும்பத்தை நிம்மதியா இருக்க விடமாட்டன்!’ அவரது வன்மம் இன்னுமே கூடிப்போக, அதை யார்மூலம் நிறைவேற்றலாம் என்று அவருக்கா தெரியாது.