இதுதான் வீடு என்று அகிலன் காட்டிய வீட்டைப் பார்த்ததும் அவளால் நகர முடியவில்லை. எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று தெரியாத அளவில் அந்தக் காணியின் எல்லைகள் விரிந்து பரந்திருக்க, தென்னை, மா, பலா, வேம்பு என்று என்னென்னவோ மரங்கள் சூழ்ந்திருக்க, ஒரு பக்கமாக மாடுகள் நடமாடின. இன்னொரு பக்கம் கோழி குஞ்சுகளோடு சுற்றிக்கொண்டிருந்தது. கிணற்றின் அருகே ஆட்டுக்கொட்டகை என்று இயற்கையோடு இயைந்து வாழும் நிலத்தில் நட்ட நடுவில் பழமையைப் பறைசாற்றியபடி கம்பீரமாய் நின்றது வீடு. பார்த்தகணம் பாசம் பொங்கக் கண்கள் கலங்கிப் போயிற்று!
அப்பாவின் சந்தோசம் இந்த வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறதோ?
“இங்கதான் அப்பா பிறந்தது வளந்தது எல்லாம் என்ன?” குரல் நெகிழக் கேட்டவளுக்கு அங்கே போகவேண்டும் போல் நெஞ்சம் பரபரத்தது.
சின்னப்பிள்ளையாகத் தத்தித் தவழ்ந்த அப்பா, பள்ளிக்கூடம் போகும் சிறுவனாய் அப்பா, வாலிபம் நிறைந்த அப்பா, கம்பீரம் ததும்பும் இளைஞனாய் அப்பா என்று கற்பனையில் பல அப்பாக்களைக் கண்டவள் உணர்வுகளின் மேலீட்டில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
“மாமா பிறந்தது வளர்ந்தது மட்டுமில்ல. அத்தையைச் சைட் அடிச்சதும் இந்த வீட்டுல இருந்துதான்.” சிரிப்புடன் அவன் சொன்னபோது, அந்த வீட்டுக்குள் இருந்து ஒருவன் வெளியே வந்தான்.
உயரமாய், திடகாத்திரமாய் வேகநடையில் வந்தவனைக் கண்டு விழிகள் தெறித்துவிடுமளவுக்கு விரிய அப்படியே நின்றுவிட்டாள் சஹானா. ‘நிச்சயம் இது பெரிய மச்சான் தான்!’ மனம் அடித்துச் சொன்னது. அது மாத்திரமல்லாமல், நாம் பிறக்கமுதல் நம் அப்பா எப்படி இருந்திருப்பார் என்று கண்முன்னே கண்டால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தான் அவன். ஆர்வமாய் மொய்த்தது அவளின் விழிகள். ஓடிப்போய் இறுக்கமாக அணைத்துக்கொள்ள வேண்டும் போலொரு உந்துதல் கிளம்பிற்று!
அவனுக்குப் பின்னாலேயே ஒரு மத்திய வயது பெண்ணும், அழகான இளம் பெண் ஒருத்தியும் வந்தனர்.
“அவர்தான் சஞ்சயன் அண்ணா. அந்த ஆன்ட்டி உன்ர அப்பாட தங்கச்சி. அது அவாட மகள், சஞ்சனா.” பெயரளவில் மாத்திரமே அறிந்து வைத்திருந்தவர்களை இப்போதுதான் நேரில் காண்கிறாள். கண்கள் அவர்களையே மொய்த்தது.
ஏதோ துரோகம் செய்ததாக அப்பா சொன்ன பிரபாவதி அத்தை!
அவளின் அத்தை!
சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு உள்ளே ஓடினாள். அதை எதிர்பாராத அகிலன் அவசரமாக, “சஹி நில்லு!” என்று தடுக்கமுதல் காரியம் கைமீறிப் போயிருந்தது.
இளம் பெண்ணொருத்தி, இந்த நாட்டில் பிறந்திருக்க வாய்ப்பேயில்லை என்று அப்பட்டமாகச் சொல்லும் சாயலோடு ஆவலில் கண்கள் மின்ன ஓடி வருவதைக் கண்டுவிட்டு மூவருமே நின்றுவிட்டனர்.
“அத்தை..” என்று ஓடிப்போய் அவரை இறுக்கிக் கட்டிக்கொண்டாள் சஹானா. அவரிடம் அப்பாவின் வாசத்தைத் தேடியவளுக்குச் சந்தோசமும் அழுகையும் பொங்கிக்கொண்டு வந்தது.
“அத்தை.. அத்தை..” அழுத்தமாய்க் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“யாரம்மா நீ?” புன்னகை அரும்பினாலும் அவளை அளவிட்டபடி கன்னத்தைத் துடைத்துக்கொண்டு கேட்டார் அவர்.
“நான் சஹானா அத்தை. உங்கட மருமகள். உங்கட அண்ணான்ர மகள்.” உற்சாகமாய்ச் சொன்னவளைக்கண்டு அங்கிருந்த இளம் பெண்ணின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவளையும் அணைத்துக்கொண்டாள்.
“நீங்க என்ர மச்சாள். நானும் உங்களுக்கு மச்சாள்.” உறவிடம் தன் உறவைச் சொன்னாள்.
அவள் அவள் வசமாயில்லை. அளவில்லாத ஆனந்தத்தில் தடுமாறிக்கொண்டிருந்தாள். அப்பப்பா! அவளுக்கு எத்தனை சொந்தங்கள்! அவளுக்குச் சிலிர்த்தது. சந்தோசத்தில் கண்களைக் கண்ணீர் நனைத்தது.
ஆனால், பிரபாவதியோ, மகளை அணைத்திருந்தவளைப் பிடித்து ஒரே தள்ளில் தள்ளிவிட்டார். “யாரடா இது புதுசா எண்டு பாத்தா அண்ணாட மகளாம்! அண்ணா எண்டு ஒருத்தன் எனக்கு இல்லவே இல்லை. இதுல நீ எங்க இருந்து வந்தனீ? அத்தை சொத்தை எண்டு சொன்னியோ(சொன்னாயே?) வெளுத்துப் போடுவன்! ஒழுக்கம் கெட்டவள் பெத்த மகளுக்கு நான் அத்தையோ?” ஆங்காரமாய்க் கத்தியவரைக் கண்டு திகைத்து விழித்தாள் சஹானா.
சொந்தம் கூடி அவளைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் என்றல்லவா வந்தாள். பாசத்தை மட்டுமே எதிர்பார்த்து வந்தவள் அவரின் உதாசீனத்தில் கண்கள் கலங்க, ‘என்ர மச்சானாவது என்னோட கதைக்க மாட்டாரா..’ என்கிற எதிர்பார்ப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
பார்த்தவள் திடுக்கிட்டாள்.
அந்தளவில் வெறுப்பைத் தேக்கியபடி நெருப்பை உமிழ்ந்தன அவன் விழிகள். “பொம்பிளை மாதிரி தான் அங்க ஒளிஞ்சு இருந்துகொண்டு உன்னைச் சமாதானத்துக்கு அனுப்பி இருக்கோ அந்தாள்? உங்களுக்கெல்லாம் ரோச மானம் இல்ல? வெக்கம் கெட்ட ஜென்மங்கள்!” வார்த்தைகளைக் கடினமாய் உமிழ்ந்தான் அவன்.
“இவளவைக்கு எங்கயடா வெக்கம் மானம் ரோசமெல்லாம் இருக்கும்? எவன எப்பிடி வலைபோட்டுப் பிடிக்கலாம் எண்டு அலையுற கூட்டம். இவளும் உன்ன பிடிக்க வந்திருப்பாளா இருக்கும். தாய்க்காரி சொல்லி அனுப்பியிருப்பாள்!” அவர் பங்குக்குத் தூற்றினார் பிரபாவதி.
அவர் சொன்னதன் பொருளே விளங்காமல் விழித்துக்கொண்டு நின்றாள் சஹானா.
“ச்சீ! அதுக்கெல்லாம் இந்தக்கூட்டம் வேற ஆக்களைப் பாக்கவேணும் அம்மா!” அவளைக் கேவலமாய் நோக்கி அவன் சொன்னபோது, பொருள் முற்றிலும் புரியாதபோதும் அவனது பார்வையிலேயே மிகுந்த அவமானமாக உணர்ந்தாள் சஹானா.
சட்டென்று உறுமினான் அவன். “இங்க பார்! இது காலம் காலமா மானம் மரியாதையோட வாழுற குடும்பம். தப்பிப் பிறந்து இந்த வீட்டு மரியாதைய குழிதோண்டிப் புதைச்சுப்போட்டு போன வெக்கம் கெட்ட மனுசனுக்கும் இந்த வீட்டில இடமில்லை. அந்தாள் பெத்த உனக்கும் இடமில்லை. சும்மா அத்தை ஆட்டுக்குட்டி எண்டு சொல்லிக்கொண்டு திரும்பவும் இங்க வந்த.. திரும்பிப் போறதுக்குக் கால் இருக்காது! ஒழுங்கா போய்ச் சேருற ஆசை இருந்தா இந்த நிமிசமே அந்த ஆளை மாதிரி ஓடிப்போயிடு!” அவனின் கடுமையில் நடுங்கியது அவளின் மேனி.


