பிரதாபனுக்கு இனி இங்கே வந்துவிடத்தான் விருப்பம். இருந்தாலும் தொழிலில் அவர் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்கள் இரண்டு வருடங்கள், ஐந்து வருடங்கள் என்று நீண்ட காலத்துக்கானவை. அவற்றையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு வந்துவிடமுடியாது. வாங்கிப்போட்டிருந்த சொத்துப்பத்துக்களுக்கு ஒரு வழி பார்க்கவேண்டும். இதில் ரட்ணமும் நண்பரோடு தானும் நாட்டுக்கே வந்துவிடப் பிரியப்படுவதில், அவர்கள் நிரந்தரமாக இங்கேயே வந்து சேர்வதற்கு நிச்சயம் சில வருடங்கள் பிடிக்கலாம். அதுவரை அவளைப் பிரிந்திருக்கும் வலு அவனிடம் இல்லவே இல்லை.
அதில், அவனால் திடமாக மறுக்க முடியவில்லை. மனம் அந்தளவுக்கு அவளைத் தேடியது. அந்த அமைதியே பேரனின் மனத்தைச் சொல்ல, அடுத்தநாளே பிரதாபனிடம் சொல்லிவிட்டார் தெய்வானை. அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. “அதுக்கு என்னம்மா? உடனேயே ஏற்பாடு செய்றன்!” என்றவர் சஞ்சயனோடும் தன் சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டபோது நித்திலனைப் பேசச் சொன்னான்.
பேசுவானா தனக்கு அழைப்பானா என்கிற கேள்வி இருந்தாலும் பேசுவான் என்கிற நம்பிக்கை இருந்தது. அதேபோல அவனும் அழைத்தான்.
“வணக்கம்! நான் நித்திலன் கதைக்கிறன்!”
“வணக்கம்!” என்ற சஞ்சயனுக்கு, அவன் சொன்ன வணக்கத்தில் இருந்த திமிர் மிகவுமே பிடித்திருந்தது.
அதன்பிறகு நித்திலனிடம் இருந்து சத்தமே இல்லை. நீதானே அழைக்கச் சொன்னாய். நான் அழைத்துவிட்டேன். நீ பேசு என்பது போலிருந்தது அவனின் அமைதி.
சஞ்சயனும் முகம் பார்த்து மனதிலிருந்து பேச விரும்பினான். எனவே முதல் வேலையாக வீடியோகோலை போட்டான். அவன் ஏற்கவில்லை என்றதும் விடாமல் மீண்டும் மீண்டும் போட்டான். நான்காவது முறையாக ஏற்றவனின் முகத்தில் இருந்த இறுக்கம் சஞ்சயனை வேதனை கொள்ள வைத்தது.
முதன் முதலாக ஊருக்கு வந்தவனைத் தான் அடைத்து வைத்ததும், வாயும் கையும் கட்டப்பட்ட நிலையில் காரணம் அறியாது அவன் விழித்த காட்சியும் நினைவில் வர, எவ்வளவு மோசமான காரியத்தைச் செய்திருக்கிறோம் என்று எண்ணி வெட்கினான். அவன் முகம் பார்க்க முடியாமல் திணறிவிட்டு, “உனக்கு நான் செய்த பிழைக்கு என்னை மன்னிச்சுக்கொள்!” என்றான் ஆழ்ந்த குரலில்.
நித்திலனின் விழிகளில் திகைப்பு. ஒன்றும் சொல்லாமல் இவனையே பார்த்தான். சஞ்சயனும் மன்னிப்புக் கேட்க நினைக்கவில்லை. அவனின் சிந்தை முழுவதிலும் இருந்தவள் சஹானா. அவளிடம் வருவதற்கான செலவை நானே ஏற்கிறேன் என்பதை மாமாவிடம் சொல்ல முடியாமல் தான் இவனிடம் சொல்ல நினைத்தான். ஆனால், இவன் முகத்தைப் பார்த்ததும் தானாக வந்து விழுந்திருந்தது அந்த மன்னிப்பு.
“செய்றதை எல்லாம் செய்துபோட்டு நீ மன்னிப்புக் கேட்டா நான் மன்னிக்கவேணுமா?” என்றான் அவன்.
“என்ன செய்தா மன்னிப்பாய் எண்டு சொல்லு செய்றன்.” என்றவனை இன்னுமே சினம் பொங்கப் பார்த்தான் நித்திலன்.
“ஊரைவிட்டே ஓடு எண்டு சொன்னா ஓடிடுவியா? இல்ல சஹானாவை மறந்திடு எண்டு சொல்லவா? இல்ல சொத்துப்பத்துக்காகத்தான் அவள் வந்தவள் எண்டு சொன்னியாமே, அதையெல்லாம் என்ர பெயருக்கு மாத்து எண்டு சொன்னா செய்வியா? என்னவோ பெரிய இவன் மாதிரி சொல்லு செய்வன் எண்டு சொல்லுறாய்?” என்று சினத்துடன் சீறினான் அவன்.
சஞ்சயனால் பதிலே சொல்ல முடியவில்லை. அவனையே பார்த்திருந்தான்.
“இல்ல.. நீ என்ர குடும்பத்துக்குச் செய்ததுக்குப் பழி தீக்கிறன் எண்டு நானும் ஏதாவது உன்ர குடும்பத்துக்குச் செய்யவா? எனக்குத்தான், நியாயமான காரணங்கள் நிறைய இருக்கே.” என்றான் நக்கலாக.
சஞ்சயனின் முகம் கறுத்தது. உண்மைதானே..
“இல்ல நீ இதையெல்லாம் பிழை எண்டு தெரியாம அறியாம செய்தியா உன்னை நான் மன்னிக்க?” அவனது எந்தக் கேள்விக்கும் சஞ்சயனிடம் பதில் இல்லை.
“உன்ர வீட்டு ஆட்களுக்கு மட்டும் தான் ரத்தமும் சதையும் இருக்கு. அவேக்கு மட்டும் தான் வலிக்கும் எண்டு நினைச்சியா? சொல்லு, என்னத்துக்கு என்னை எடுக்கச் சொன்னனீ?” என்றான் அவனோடு பேசப் பிடிக்காத குரலில்.
எதற்கு எடுத்தோம் என்பதே மறந்து மரத்துப்போனது போன்ற நிலை. மனம் குத்தியது. அவன் முகம் பார்த்துப் பேச முடியவில்லை.
“ஒண்டுமில்ல.. சும்மாதான். உன்னட்ட மன்னிப்பு கேக்க நினைச்சன். அதுதான்.. உனக்கும் உன்ர அம்மா அப்பாக்கும் நான் செய்தது பெரிய பிழைதான். நீ கேட்ட எந்தக் கேள்விக்கும் என்னட்ட நியாயமான பதில் இல்ல. தயவுசெய்து மன்னிச்சுக்கொள்!” என்று அவன் முறைப்படி கேட்ட மன்னிப்பே என்னவோ சரியில்லை என்று உணர்த்தியது நித்திலனுக்கு.
“என்ன விசயம்?” என்றான் நேரடியாக.
ஒன்றும் சொல்லாமல் நின்றான் சஞ்சயன்.
“சஹியோட கதைக்கோணுமா?”
“அவளைப் பாக்கோணும்.” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.
அப்படிச் சொன்னவனை நம்பமுடியாமல் கூர்ந்தான் நித்திலன். சிங்கம் போன்று உறுமிக்கொண்டு நின்றவன் இன்றைக்கு அலைபாய்ந்த மனதோடு சஹானாவைப் பார்ப்பதற்கு ஏங்கி நின்ற காட்சி ஏதோ ஒருவிதத்தில் நித்திலனின் மனதின் இறுக்கத்தைச் சற்றே தளர்த்தியது.
“நீ கோவமா இருக்கிறியாம் எண்டு கேள்விப்பட்டன்.” என்றான் வேண்டுமென்றே. அப்படிச் சொன்னவனை முறைத்தான் சஞ்சயன். அந்த விசரி இவனிடம் எல்லாவற்றையும் ஒப்பித்திருக்கிறாள்.
“எனக்கு அவளைப் பாக்கோணும். மாமாட்ட சொல்லி ஸ்பொன்சருக்கு அலுவல் பார். அவரை அலைய வைக்காத. செலவு என்ர பொறுப்பு. இத சொல்லத்தான் உன்னோட கதைக்கோணும் எண்டு சொன்னனான்.” முழுக்க நனைந்த பிறகு எதற்கு முக்காடு என்று முழுவதுமாக ஒப்பித்தான் சஞ்சயன்.
கேட்ட நித்திலனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. டிக்கட் காசு மாத்திரமே லட்சத்தில் வரும். என்றாலும், அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகக் காசைத் தண்ணீராகச் செலவழிக்க ஆள் தயார். இந்தக் காதலுக்கு மரியாதை செய்யச் சொல்லி மனது உந்தியது. “சரி!” என்றான் சுருக்கமாக.
சஞ்சயன் இதை எதிர்பார்க்கவில்லை. அவனையே பார்த்தான். இவன் உண்மையாகவே ஆம் என்கிறானா அல்லது கோபத்தில் விளையாடுகிறானா என்று உள்ளே ஓடியது. நித்திலனுக்குப் புரிந்தாலும் விளக்கப் போகவில்லை. ‘இப்பிடி யோசிச்சே மண்டையை உடைடா’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டு விட்டுவிட்டான்.