அதுதானே? போயிருப்பாளா என்ன? சஞ்சயனைப் பார்க்க அவனும் அதே கேள்வியுடன் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். எல்லோரும் சுற்றியிருந்த வேளையில் தம்மிருவர் விழிகளும் சந்தித்துக்கொண்ட நொடியில் சஹானாவின் நெஞ்சு படபடக்கத் தொடங்க வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள். ஆளே வித்தியாசமாக இருந்தான். புதிதான ‘ஹேர் கட்’, நறுக்கி விடப்பட்ட அடர்ந்த மீசை, பளபளத்த கன்னம் என்று அவளை என்னவோ செய்தான்.
“அதுதான் வந்திட்டான் எல்லோ. போய் முகம் கழுவி உடுப்பை மாத்திக்கொண்டு வாம்மா! நீ வரட்டும் எண்டு இன்னும் ஒருத்தரும் சாப்பிடேல்லை!” என்றார் யாதவி.
“ஹாண்ட் பாக்கை தாடா!” அதற்குள் இருந்த அவளின் பர்ஸை நித்திலன் நோண்டிக்கொண்டு இருக்க எட்டிப் பறித்தாள்.
“சஞ்சுவையும் கூட்டிக்கொண்டு போம்மா! அவனும் குளிச்சு உடுப்பை மாத்தட்டும்.” என்றார் பிரதாபன்.
“வாங்கோ!” என்று அழைக்க, சோபாவில் இருந்து எழுந்தவனின் தோற்றம் முற்றிலும் புதிதாக இருந்தது. அங்கும் ஜீன்ஸ் அணிவான் தான். என்றாலும், சொக்ஸ் அணிந்த கால்கள், ஃபிட் ஜீன்ஸ், மெல்லிய கொட்டன் புல்லொவர். அணிந்து வந்திருந்த கருப்பு ஜக்கெட்டை கையில் பிடித்திருந்தான். அவனுடைய உயரத்துக்கும் உடற்கட்டுக்கும் இந்தத் தோற்றம் அப்படியே பொருந்திப்போனது.
மாடியில் இருந்த அவளின் அறைக்குள் நிதானமாக நுழைந்தான் சஞ்சயன். மேல்தட்டுப் பெண்ணொருத்தியின் அறையின் அத்தனை அம்சங்களோடும் அவளைப்போலவே அழகாகக் காட்சி தந்தது அறை. கட்டில், மேசை, ஜன்னல் கட்டு என்று ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பிங்க் வண்ண பொம்மைகள் சின்னச் சிரிப்பைத் தோற்றுவிக்கக் கேள்வியாக அவளை ஏறிட்டான். தன் அறையில் அவனைக் காண்பதில் மெல்லிய தடுமாற்றம் அவளுக்கு. “என்ன?” என்றாள் சமாளித்து.
“நானும் உன்ர பெட்ல படுக்கலாமா?”
“ஓம் தாராள..” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் கலகலவென்று சிரித்தாள். அன்று அவள் கேட்ட அதே கேள்வி. “இல்லை எண்டா என்ன செய்வீங்க?” குரலில் உற்சாகம் துள்ளி வழிந்தது.
மின்னும் விழிகளையும் சிரிக்கும் செவ்விதழ்களையும் விழிகள் தொட்டுவர, “இந்தக் குளிருக்க நிலத்தில படுக்கேலாது. வேற வழியில்லாம நீ நித்திரையான பிறகு களவா வந்து படுப்பன்.” இலேசாகச் சிரித்தபடி சொன்னான் அவன்.
“நான் முழிச்சு இருக்கேக்கையே நீங்க தாராளமா வந்து படுக்கலாம்.” என்றாள் அடக்கிய சிரிப்புடன்.
அவளிலேயே படிந்திருந்த அவன் பார்வையில் தடுமாறி, “பக்கத்து ரூம் தான் பாத்ரூம். உடுப்பு எடுத்துக்கொண்டு வாங்கோ. சுடுதண்ணி எப்பிடி செட் பண்ணுறது எண்டு காட்டுறன்.” என்றாள் அவனைப் பாராமல்.
தனக்குள் சிரித்தபடி மாற்றுடைகளோடு வந்தவனுக்குக் காட்டியும் கொடுத்தாள். “மேலயும் குட்டி பாத்ரூம் இருக்கு. ஸ்போர்ட்ஸ் ரூம், சுவாமி அறை எல்லாம் மேலதான். கீழயும் கெஸ்ட் பாத்ரூம் இருக்கு. எப்பவும் எதையும் நீங்க பாவிக்கலாம்.” என்று, பொறுப்பாகக் கூடுதல் தகவலும் வழங்கினாள்.
சஹானாவுக்கு அவளின் கட்டுப்பாட்டை மீறி மனம் சந்தோசத்தில் துள்ளுவது தெரியாமல் இல்லை. அவனின் மண் மீதான, மக்களின் மீதான, குடும்பத்தின் மீதான பற்றைப் பக்கத்தில் இருந்தே பார்த்தவளாயிற்றே. அவளிடமே, இங்க என்ன இல்லை எண்டு நான் வெளிநாட்டுக்கு வரவேண்டும் என்று திமிரோடு கேட்டவனாயிற்றே. அப்படியானவன் அவளுக்காக வந்திருக்கிறான் என்றால் சும்மாவா?
கீழே ஓடிப்போய் நித்திலனுக்கு நன்றாக நான்கு வைத்துவிட்டு நல்லபிள்ளையாக மேலே வந்து அமர்ந்துகொண்டாள். அவனுடைய உடைகளை வைத்து எடுப்பதற்கு ஏற்ப தன் கப்போர்ட்டில் இடம் ஒதுக்கினாள். மூன்று மாதங்களுக்கு அவளோடுதானே நிற்கப்போகிறான். இன்னொரு பெட்ஷீட் தலையணை எடுத்து அவன் படுப்பதற்காகக் கட்டிலில் அழகாக மடித்து வைத்தாள். சஞ்சயன் குளித்துவிட்டு வருவதற்குள் ஓடிப்போய் மேல் பாத்ரூமில் முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டாள்.
டிஸ்னி ‘மினி’யின் இரவு உடை அவளையும் ஒரு குட்டி மினியாகக் காட்டியது. வெளியே வந்த சஞ்சயனும் நைக் ஜொகிங் காற்சட்டைக்கு முழுக்கை டீஷர்ட் ஒன்று அணிந்திருந்தான். பாராமல் பார்த்துக்கொண்டவளை அவனுடைய தோற்றம் இப்போதும் கவர்ந்தது. அறைக்கு வந்து அணிந்திருந்த நகைகளைக் கழற்றினான். அவள் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “எல்லாம் அந்தக் கிழவின்ர வேலை!” என்றான் இலேசாகச் சிரித்தபடி.
கழுத்துச் செயின் கழுத்தோடு ஒட்டி நின்றதில், “கழட்டிவிடு சஹி.” என்றான் அவளிடம். நெருங்கி வந்து முயன்றவளுக்கு அவனுடைய உயரம் பெரும் தடையாக இருந்தது. “உங்களை ஆரு இவ்வளவு உயரத்துக்கு வளரச்சொன்னது?” என்றவளைத் தூக்குவோமா என்று அவனுக்குள் இருந்த சஹானா பித்தன் குதித்துக்கொண்டு வந்தான். கண்கள் சிரிப்பில் மின்ன அதைச் செய்யாமல் அவளின் கூடை நாற்காலியில் அவன் அமர கழற்றிக்கொடுத்தாள் சஹானா.
“எல்லாத்தையும் நீயே கவனமா எடுத்துவை!”
“மோதிரமும் வேண்டாமா?” என்றவளின் கேள்வி அதை அவன் அணிந்திருப்பதை அவள் விரும்புகிறாள் என்று உணர்த்த பேசாமல் கையை நீட்டினான். முகத்தில் மலர்ச்சியோடு ஓடிவந்து அவனின் விரல் பற்றி அணிவித்துவிட்டாள் சஹானா.
“ஒண்டுக்கு ரெண்டுதரம் என்னைக் கட்டியிருக்கிறாய்.” என்றான் இளமுறுவலுடன்.
இதை எதற்குச் சொன்னான் என்று புரியாதபோதும் அந்த முறுவல் அவளை என்னவோ செய்யப் பேசாமல் பார்வையைத் திருப்பிக்கொண்டு செயினையும் கைச்செயினையும் பக்குவமாக எடுத்துவைத்தாள்.
கீழே வந்து, உணவு முடிந்து சற்று நேரம் எல்லோருமாக அளவளாவி ரட்ணம் குடும்பத்தினர் விடைபெற்றதும், “நீங்களும் போய்ப் படுங்கோ பிள்ளைகள்.” என்று அவர்களை அனுப்பி வைத்தனர் பெரியவர்கள்.
கணவரின் முகத்தில் தெரிந்த சிந்தனை ரேகைகளைக் கவனித்துவிட்டு, “எந்தக் கோட்டைய பிடிக்க இந்த யோசனை பிரதாப்?” என்றபடி கட்டிலில் வந்து அமர்ந்தார் யாதவி.
“வேற யாரைப்பற்றி நான் யோசிக்க? எங்கட பிள்ளைகளைப் பற்றித்தான். அவன் வந்தது சஹிக்குச் சந்தோசம் போல. ஆனா, சஞ்சயன் இங்க நிறைய நாளைக்கு இருப்பான் எண்டு நினைக்கேல்ல.”
“இருக்கமாட்டான்!” என்றார் யாதவி இலகுவாக. “இருக்கவும் கூடாது பிரதாப். இது ரெண்டுபேரும் ஒருத்தரை மற்றவர் விளங்கிக்கொள்ள, சேர்ந்து முடிவெடுக்க நல்ல சந்தர்ப்பம். அதை முதல் செய்யட்டும். பிறகு யார் எங்க இருக்கிறது எண்டுற முடிவை ரெண்டுபேரும் சேர்ந்து எடுக்கட்டும். நான் சஞ்சயனை விளங்கி வச்சிருக்கிறது சரி எண்டால் அவன் மூண்டு மாதம் கூட இங்க நிக்கமாட்டான்.” என்று புன்னகைத்தார் யாதவி.
உச்சியில் இருந்து விழுகிற அருவி போன்ற ஆர்ப்பாட்டமாக அல்லாமல் மென்மையாக ஓடும் நதியினைப்போல நிதானமாகவும் நேர்த்தியாகவும் சிந்திக்கும் மனைவியின் செயல்கள் ஒவ்வொன்றுமே பிரதாபனை வசீகரிப்பவை. இன்றும் அவரின் பேச்சில் அதை உணர்ந்து, “நீ சொல்லுறதும் சரிதான்.” என்று முறுவலித்தார் மனிதர்.