சஹானாவின் கட்டிலில், தலையணையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கால் நீட்டி இலகுவாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான் சஞ்சயன். கிட்டத்தட்ட அரை நாளுக்கு மேலாக அமர்ந்தே வந்தது உடலில் ஒருவித அலுப்பைத் தந்திருந்தாலும் உறக்கம் வரவில்லை. ‘அம்மம்மா வெளில சொல்லாம தனக்குள்ளேயே அழுவா. சஞ்சுக்கு எதைச் சொல்லவும் நான் வேணும். அம்மா அதிரடி எண்டாலும் நான் இருக்கிறன் எண்டுறதுதான் அவவின்ர தைரியமே. இத்தனை நாட்களாக வெறுத்த மனிதனை நேசிக்கும் நேரம் இங்கே வந்து நிற்கிறேனே’ என்று அவன் மனம் ஊரைத்தான் சுற்றியது.
சஹானா வந்தாள். அவன் பார்வை அவளிடம் திரும்பிற்று. பொறுப்பாக அவனுக்குத் தண்ணீர் கொண்டுவந்து பக்கத்தில் வைத்தாள். கதவைச் சாற்றி விளக்கை அணைத்து விடிவிளக்கைப் போட்டுவிட்டு வந்து அவனைப் பார்த்தாற்போல் கட்டிலில் சம்மணம் கட்டி அமர்ந்துகொண்டாள். அவளின் செய்கை அவனோடு பேசப் பிரியப்படுகிறாள் என்று சொல்லிற்று.
இதழோரம் முறுவல் மலர அவளைப் பார்த்தான் சஞ்சயன். அவள் மீதிருந்த கோபதாபங்கள் எல்லாம் எங்கே என்றே தெரியவில்லை. அந்தளவு தூரத்துக்கு அவனைப் பலகீனப்படுத்தி வைத்திருக்கிறாள் அவள். ஆனாலும், இவ்வளவு தூரம் அவன் வந்திருக்கிறான். மிகுதித் தூரத்துக்காவது அவள் வரவேண்டும் என்று அமைதி காத்தான்.
நிறையப் பேச விருப்பம். என்ன பேசுவது என்ற தயக்கம். விரல்களையும் அதில் பூசியிருந்த நகச்சாயத்தையும் ஆராய்ந்தாள் சஹானா.
“சொல்லு!” என்றான் இளம் முறுவலோடு
“அகில் சொன்னவன்தான். ஆனா.. எனக்கு விருப்பம் இல்லாட்டி ஆர் சொல்லி இருந்தாலும் வந்திருக்க மாட்டன்.” இப்போதும் விரல்கள் மீதே பார்வை இருக்க மெல்லச் சொன்னாள்.
ஆக, அன்றைய அவனது கோபம் எதற்காக என்று அவளுக்குப் புரிந்திருந்தது. அது அவளைப் பாதித்தும் இருக்கிறது. இத்தனை நாட்களில் அதைப்பற்றி யோசித்தும் இருக்கிறாள். அவனது முறுவல் சற்றே விரிந்தது.
“சரி! இத நீ அண்டைக்கே எனக்கு எடுத்துச் சொல்லி இருக்கலாமே?”
இப்போது வேகமாக நிமிர்ந்து அவனை முறைத்தாள் அவள். “நீங்க ஏன் ஃபோன் கட் பண்ணினீங்க? கதைச்சுக்கொண்டு இருக்கேக்க கட் செய்றது என்ன பழக்கம்? அந்தக் கோபத்தில தான் திரும்ப எடுக்கேல்ல!” அவள் பதில் சொன்ன வேகத்தில் இப்போதும் அவளுக்கு அந்தக் கோபம் இருப்பது புரிய, “சரி, இனி அப்பிடிச் செய்யேல்ல!” என்றான் விரிந்த சிரிப்புடன்.
இப்படித் தன் பிழையை ஒத்துக்கொள்வான் என்று எதிர்பாராதவள் விழிகளை விரிக்க, “கிட்ட வா!” என்றான். அவளும் நகர்ந்துவர அவளைச் சுற்றிக் கையைப் போட்டு அவளைத் தன் தோள் வளைவுக்குள் கொண்டுவந்தான்.
இதை எதிர்பாராதவள் வியப்புடன் அவனை நோக்கினாள்.
“என்ன? வேண்டாமா? பிடிக்கேல்லையா?”
அவள் ஒன்றும் சொல்லாமல் அவன் கைக்குள் வாகாக அடங்கிப் பிடித்திருக்கிறது என்று காட்டினாள். அவன் முகம் மலர்ந்தது.
“உனக்கு நான் இங்க வாறது விருப்பமா இருந்ததா?”
ஆம் என்று அவள் தலையசைக்க, “அதை ஏன் நீ என்னட்ட கேக்கேல்லை(கேட்கவில்லை)?” என்றான்.
அவளின் விருப்பத்தைச் சொல்கிற அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கம் இருக்கவில்லை. அப்படியே சொன்னாலும் வருவான் என்று நினைக்கவில்லை. கூடவே, அவன் மீதான கோபமும் அவளோடுதானே தொங்கிக்கொண்டு திரிந்தது. பிறகு எப்படிக் கேட்பது? ஒன்றும் சொல்லாது அவள் அவனையே பார்க்க, அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான். “இனி என்ன எண்டாலும் என்னட்ட கேக்கோணும். விளங்கிச்சோ?” என்றான்.
அவள் தலையை ஆட்டினாள். “நான் வந்தது சந்தோசமா?” என்றான். கண்ணும் முகமும் மலர ஆம் என்பதாக வேகமாகத் தலையை ஆட்டினாள் சஹானா.
“என்னில இருந்த கோவம் போயிட்டுதா?”
அதற்கு மட்டும் பதில் சொல்லாமல் அவனைப் பார்ப்பதையும் தவிர்த்தாள். அவனுக்கும் விளங்கிற்று. ஒன்றும் சொல்லாமல் மெல்ல அவளின் கரத்தை மென்மையாகப் பற்றி, அவளின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்து விளையாடினான். அதுவே, அவளுக்குள் என்னென்னவோ செய்தது. உரிமையோடு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவளின் தோளை வளைத்திருந்த கரத்தின் அழுத்தம் கூடிற்று.
அவனோடு கதைக்காமல் இருந்தாலும் அவனை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள் என்று விளங்கிற்று.
சஹானாவுக்குத் தன்னை நினைத்தே ஆச்சரியம். இப்படி மாறிப்போனாளே. இல்லாமல், வரப்போகிறான் என்றதும் ரகசியமாக மகிழ்ந்து, வந்துவிட்டான் என்றதும் துள்ளி, இதோ அவன் தோளில் தானாகவே சாய்ந்துகொள்ள முடியுமா என்ன? அவனுடைய தொடுகை வேறு புதிதாக இல்லாமல் கதகதப்பாக இருக்கிறதே!
எவ்வளவு நேரம் கடந்ததோ. “நித்திரை வருது” மெல்லச் சொன்னாள் சஹானா.
“என்ன.. ஓ சரிசரி படு!” நினைவு கலைந்து அவளை விட்டவன் தானும் அப்படியே சரிந்தான்.
போர்வையை இழுத்துக்கொண்டு அவனின் கைவளைவிலேயே தலையை வைத்து நெருங்கிப் படுத்தாள் அவள். வியப்புடன் திரும்பிப் பார்த்தான் அவன். சிறு சிரிப்புடன், “பிடிக்கேல்லையா?” என்றாள் அவள் இப்போது.
அவன் முறுவல் விரிந்தது. “ஃபிரியா தந்தாலும் வேண்டாம் எண்டு சொன்னாய்.”
“பிறகும் தந்தா என்ன செய்ய? வச்சிருக்க வேண்டியதுதான்!” என்றுவிட்டு நகைத்தாள் அவள்.
“என்னை பாடா படுத்திப்போட்டு உனக்குச் சிரிப்பு?” என்றபடி திரும்பி அவளை மென்மையாகத் தன்னோடு வளைத்தான் அவன். படபடப்புடன் அவள் பார்க்க இதழ்கள் நோக்கிக் குனிந்தான். சஹானாவின் விழிகள் மூடிக்கொண்டது. கடந்துபோன நொடித்துளிகள் அவளைச் சுக மயக்கத்தில் ஆழ்த்தின! அவன் விலகியபோது சுகமயக்கத்தில் விழிகளை மூடிக்கொண்டாள் சஹானா.