“கோபம் இல்லையே..” தேனூறும் அவளின் இதழ்களை அவன் விரல்கள் ஆசையோடு வருடிற்று.
“ம்ஹூம்!”
“இந்த மாற்றம் எப்ப இருந்து?”
“எனக்கே தெரியேல்ல!” என்றாள் அவள்.
“நான் உன்ன தேடி வந்ததாலையா?”
“இல்ல.. அதுக்கும் முதலே.” என்றவளின் பதிலில் முகம் மலர மீண்டும் அவளின் இதழ் நோக்கிக் குனிந்தான் அவன். மீண்டும் அவன் விடுவித்தபோது அவளுக்கு அவன் முகம் பார்க்க முடியவில்லை. கள்ளுண்ட வண்டைப்போன்று அவன் கண்களில் மிதமிஞ்சிய கிறக்கம்.
“என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?”
“இல்ல!” என்றுவிட்டு சிரிப்புடன் அவன் வயிற்றைக் கட்டிக்கொண்டாள் சஹானா.
அவனுக்கும் சிரிப்புத்தான் வந்தது. “உங்கட ஊர்ல பிடிக்காட்டித்தான் கட்டிப் பிடிப்பீங்களோ?”
“ஓம்! அப்பிடித்தான்!” குறும்புடன் சொன்னவளின் கை அவனுடைய காப்பை மேலும் கீழும் இழுத்து விளையாடியது.
“உங்களுக்கு இந்தக் காப்பு நிறையப் பிடிக்குமோ?”
“அதெல்லாம் ஒரு காலம்.”
“ஏன் இப்ப என்ன?”
“இப்ப எல்லாத்தையும் விட உன்னைத்தான் பிடிக்குது. இல்லாட்டி மொத்தக் குடும்பத்தையும் விட்டுட்டு உன்னைத் தேடி இங்க வருவனா?” என்றான் அவன் குறையாக.
அதுவரை அவளிடம் இருந்த மலர்ச்சி மங்கிப்போயிற்று. “அதுக்காகக் கவலை படுறீங்களா.” அவன் தன்னைத் தேடி வந்துவிட்டான் என்பதில் அவள் உள்ளம் இன்னுமே துள்ளி அடங்கவில்லை. அதையே அவன் கவலையாகச் சொன்னால்?
அவன் இல்லை என்று தலையசைத்தான். “உன்னட்ட வந்ததுக்காகக் கவலை படேல்ல. அவேய(அவர்களை) விட்டுட்டு வந்தது கவலையா இருக்கு.”
அதற்கு ஏதும் சொல்லாமல் அவளின் கை மட்டும் அவனுடைய காப்போடு விளையாடிக்கொண்டு இருந்தது. “அங்க இருக்கிறவரைக்கும் நீ இல்லாம என்ர வாழ்க்கையில எதுவுமே இல்லை எண்டு தெரிஞ்சது. அதுதான் வந்தனான். ஆனா, இங்க வந்தபிறகுதான் அவே இல்லாமையும் நான் இல்லை எண்டு விளங்குது. எனக்கு நீயும் வேணும் அவேயும் வேணும். என்ன செய்யப்போறன் எண்டு தெரியேல்ல.” என்றான் ஒரு பெரிய மூச்சை இழுத்துவிட்டபடி.
தன் குடும்பத்தின் அளவுக்குத் தன்னையும் அவன் நேசிக்கிறான் என்பதில் சஹானாவின் மனக்குறை போன இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. மனதில் மகிழ்ச்சி பொங்க, அவன் மார்புக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.
சற்றே தலையைத் தூக்கி அவளைப் பார்த்தான் சஞ்சயன்.
“என்னில இருந்த கோவம் போயிட்டா எண்டு கேட்டா பதில் இல்ல. பிடிச்சிருக்கா எண்டு கேட்டா இல்லை. பிறகு என்னத்துக்கு இதையெல்லாம் தாறாய்?” என்றான் அவன் கோபம் போன்று.
“அதுதான் எனக்கும் விளங்கேல்ல!” என்றாள் அவள். மெய்யாகவே அது அவளுக்கு விளங்க மறுத்தது. நடந்தவற்றை எல்லாம் மறந்துவிட்டாளா, மன்னித்து விட்டாளா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லுவாள். அதற்கென்று அவனை விட்டு விலகி நிற்கவும் முடியவில்லை. முடிந்தால் இன்னுமே அவனுக்குள் புகுந்துகொள்ள வேண்டும் போல்தான் இருந்தது.
ஆனால், அவன் அவளைப் புரிந்துகொண்டான். முதலில் அவன் மீது கோபம் மட்டுமே. இப்போது நேசமும் கோபமும் சேர்ந்து அவளை இரண்டு பக்கமும் இழுத்துக்கொண்டிருக்கிறது. இந்த குழப்ப நிலை அகன்று, அவனை விளங்கி, மன்னித்து, நேசத்தின் பக்கம் அவள் சாய்வதற்கு அவனைப்பற்றிய அனைத்தும் அவளுக்குத் தெரிய வேண்டும்.
அவனும் அவளோடு பேச என்றே வந்தவனாயிற்றே. பேசினான். தன் தாய் தகப்பனுக்குள் இருக்கிற விலகலைச் சொன்னான். தான் வளர்ந்த விதம் பற்றிச் சொன்னான். அதனால் அவளின் அப்பாவின் மீது கொண்ட கோபத்தைச் சொன்னான். எதிர்பாராமல் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தியத்தைச் சொன்னான். இப்படி எல்லாவற்றையும் அவன் பகிர்ந்துகொண்டபோது சஹானா அனைத்தையும் கேட்டுக்கொண்டாள். அதற்காக அவன் செய்தவற்றைச் சரி என்று சொல்லவும் முடியவில்லை. அவனுடைய நியாயங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனாலும் எதிர்வாதம் புரியப் போகவில்லை.
அதன் பிறகான நாட்கள் எப்படி என்றில்லாமல் சஞ்சயனுக்கு நகர்ந்தது. சஹானாவோடே அலுவலகம் செல்வான். அவர்கள் வேலை பார்க்க இவன் ஃபோனில் சஞ்சனா மூலம் ஊரில் தன் வேலைகளைப் பார்ப்பான். சமரனோடு பேசினான். கார்மேகனோடு தன் இளவல்களோடு என்று பொழுது ஓடியது. மத்தியான உணவுப் பொழுதுகள் சஹானா வீட்டில், நித்திலன் வீட்டில், ஏதாவது ரெஸ்டராண்டில் என்று பலமாதிரியும் கழிந்தது. மாலைப் பொழுதுகளில் கடற்கரைக்குச் சென்றனர், கானோ வலித்தனர், கப்பலில் பயணித்தனர், சைக்கிள் ஓடினர். இப்படி நாட்கள் இனிமையாகத்தான் கழிந்தது. இருந்தாலும் அந்த வாரத்தைக் கடத்துவதற்கே பெரும் பாடுபட்டுப் போனான் சஞ்சயன்.
ஒரு அறைதான் அவர்களின் அலுவலகம். சுற்றி வர ஷெல்புகள் போடப்பட்டு நடுவில் இரண்டு மேசைகளை ஒன்றாகச் சேர்த்துப்போட்டு, இரண்டு கணனித்திரைகளும் எதிரெதிரே இருக்க, ஒன்றில் நித்திலனும் மற்றையதில் சஹானாவும் அமர்ந்திருந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அவனுக்குப் புரியாத மொழியில் அவள் யார் யாருடனோ உரையாடும் அழகையும், மெல்லிய விரல்கள் விசைப்பலகையில் அனாயாசமாக விளையாடும் நளினத்தையும் தன்னை மறந்து ரசித்திருந்தான் சஞ்சயன்.
அதைக் கவனித்துவிட்டு, “உன்ர வைஃப் ஏன் விழுந்து விழுந்து வேலை செய்றாள் எண்டு தெரியுமா?” என்று கேட்டான் நித்திலன்.
“ஏன்?”
“அதை அவளிட்டயே கேள்!” என்று ஏவி விட்டுவிட்டான்.
அன்று இரவு, அதைக் கேட்டான் சஞ்சயன்.
“கடன் கட்டோணும்.”
“யாருக்குக் கடன்?” அவனுக்குக் கவலையாயிற்று. இங்கே அவனால் உண்டான பிரச்சனைகள் இன்னும் தீரவில்லையோ?
“நித்திக்கு..” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.
அவனுக்குப் புரியவில்லை. கேள்வியாகப் பார்க்க, “அம்மா தன்ர காரை வித்துத்தான் பேங்க் கடன் அடைச்சவா. நித்தி இங்க வந்ததும் அவன் சேர்த்து வச்சிருந்த காசையும் குடுத்து மிச்சத்துக்கு அவன்ர பெயர்லையே லோனும் போட்டு அம்மாக்கு இன்னொரு கார் வாங்கிக் குடுத்தவன். அந்தக் கடனை நான்தான் அடைக்கோணும்!”
சஞ்சயனுக்கு ஒரு மாதிரி ஆகிற்று. அங்கே அவன் எடுத்த பணம் இன்னும் அவனிடம் தான் இருக்கிறது. இவன் மறுக்க மறுக்க ராகவி இவனிடமே திருப்பிக் கொடுத்திருந்தார். பிரதாபனிடம் கொடுத்தபோது, அவரும், ‘இப்போதைக்கு உன்னட்டையே இருக்கட்டும். பிறகு வாங்குறன்’ என்றுவிட்டார். இலங்கையிலேயே இருக்க வருகிறபோது எடுத்துக்கொள்வாராக்கும் என்று அவனும் விட்டுவிட்டான்.